Friday 31 July 2009

எதுங்க மகிழ்ச்சியான வாழ்க்கை? - 2

எப்படி மகிழ்ச்சியாய் இருப்பது எனும் சிந்தனையிலேயே பலரின் பொழுதுகள் கவலையாகவேப் போகிறது. இணையதளங்களில், வலைப்பூக்களில் எல்லாம் பார்த்தீர்களேயானால் மகிழ்ச்சியாய் இருக்க முப்பது வழிகள் என வரிசையாகச் சொல்லப்பட்டு இருக்கும். அதைப் படிப்பவர்கள் மனதில் 'அடப்பாவிகளா, இத்தனையும் எப்படி ஞாபகம் வைச்சிட்டு செய்றது' என்கிற கவலைப் பிறக்கும்.

நாம் என வரும்போதே நமது உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பகைவர்கள், நம் மண், நம் தேசம், எதிர் மண், எதிர் தேசம் என எல்லாமே அடங்கிவிடும். ஒரு விசயம் நடப்பது குறித்து 'எனக்கென்ன வந்துவிட்டது' என வாய் சொல்லும்; ஆனால் மனம் அதனையேச் சுற்றிக்கொண்டு வரும்.

'கவலை இல்லாத மனிதன்' எனும் திரைப்படத்தை எடுத்துவிட்டு, அந்த திரைப்படம் படுதோல்வி அடைந்துவிட்டதால் கண்ணதாசன் அந்த கவலையிலிருந்து மீள பலநாட்கள் ஆகிவிட்டது எனக் குறிப்பிட்டு இருந்ததைப் படித்தபோது கவலையில்லாமல் இருக்க வேண்டும் எனும் முனைப்பே பலருக்கு கவலையைத் தந்துவிடுகிறது போலத் தெரிகிறது.

ஒருவரிடம் சென்று உங்களுக்கு வியாதி இருக்கிறதா எனக் கேட்டார் ஒரு நபர். அதற்கு ஆம் எனக்கு வியாதி இருக்கிறது எனச் சிரித்துக் கொண்டேச் சொன்னார் அவர். என்னது வியாதி இருக்கிறது எனச் சிரித்துக் கொண்டேச் சொல்கிறீர்கள், வியாதி வந்தால் விரைவில் செத்துப் போவீர்களே என கவலையுடன் அந்த நபர் சொல்ல, வியாதியில்லாதவனும்தான் விரைவாகச் செத்துப் போகிறான் எனச் சிரித்தார் அவர்.

பிறக்கும்போதே எப்படியும் ஒருநாளேனும் ஒருநாள் இறந்துவிடுவோம் என்கிற அடிப்படை உணர்வு கூட இல்லாமல் எப்படி மனிதர்களால் வாழ முடிகிறது. அடிப்படை உணர்வும் உண்டு, அதற்கான கவலையும் உண்டு.

தங்களது வாழ்க்கையினை ஒரு தினமேனும் வெறுக்காத மனிதர்கள் என இந்த உலகில் இருக்கவே இயலாது. 'என்னது இப்படியொரு அற்பத்தனமான விசயத்துக்காக உயிரைப் போக்கிட்டார்' என அசாத்தியமாகப் பேசும் மனிதர்கள் அதே அற்பத்தனமான விசயத்துக்காகக் கவலைப்படாமல் இருப்பதில்லை.

'வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதல் தருவேன்' என்கிற வாசகத்தைப் பார்க்கும்போதெல்லாம், நமது துன்பத்திற்கு நாமே காரணம் என்கிற எண்ணம் ஏன் மனிதர்களுக்கு இல்லாமல் போனது, பிறிதொருவர் தீர்த்து வைப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஏன் ஏற்பட்டது. ''சாய்வதற்கு ஒரு தோள்/தோழன்/தோழி வேண்டும்'' என்கிற மனப்பக்குவம் உடையவர்களாகவே மனிதர்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கினார்கள். அங்கேதான் மகிழ்ச்சியைத் தொலைக்கவும் செய்தார்கள்.

6 comments:

யாரோ ஒருவர் said...

கவலைக்கு நம்ம தான் காரணம்,அத தீர்த்து வைக்க ஆள் தேடி நடப்பவன் முட்டாள்

Radhakrishnan said...

நமது கவலைகளுக்கு நாமே காரணமாக இருந்தாலும் அதற்குரிய காரணிகளைக் கண்டறிந்துத் தீர்த்து வைக்க சில விசயங்களை நாம் நாடுவது என்பது தவிர்க்க இயலாதது. மிக்க நன்றி திருமதி.ஜெயசீலன் அவர்களே.

"உழவன்" "Uzhavan" said...

புல் தடுக்கி விழுந்து செத்தவன் கதையும் உள்ளது. பல மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து பிழைத்த கதையும் உள்ளது.
மொத்தத்தில் மகிழ்ச்சி நமக்குள்தான் இருக்கிறது. நல்ல மகிழ்வைத் தரும் பதிவு.

Radhakrishnan said...

ஆம், மிக்க நன்றி உழவன் அவர்களே.

கிரி said...

சார் ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க..உங்கள் பெரும்பாலான கருத்துக்களுடன் என் கருத்துக்களும் ஒத்து போகிறது.

Radhakrishnan said...

மிகவும் மகிழ்வாக இருக்கிறது கிரி அவர்களே. மிக்க நன்றி.