Saturday 4 July 2009

கேள்வியும் பதிலும் 11

11) ‘ஞானப்பறவை’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். உங்கள் கருத்துப்படி ஞானம் என்றால் என்ன? அதற்கும் பறவைக்கும் என்ன சம்பந்தம்? கொஞ்சம் விளக்க முடியுமா?

ஞானப்பறவை அடைமொழியின் பின்னணி கூறுகிறேன் இது எனக்குத் தெரிந்தவரை. என்னை ஞானப்பறவை என அன்பு அண்ணன் ஏஆர்ஆர் அவர்கள் அழைத்தபோது அச்சமும் கலக்கமும் ஆச்சர்யமும் அடைந்தேன், அந்த அச்சம் இன்றும் உண்டு என்பதுதான் உண்மை. அவர் ஒரு கேள்வி கேட்டு இருந்தார், எப்படி மனிதர்கள் மிகவும் ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கிறார்கள் மற்றும் பணம் உடையவர்கள் மருத்துவ வசதி கொண்டு வாழ்ந்தும், வசதி இல்லாதவர்கள் கஷ்டப்பட்டும் இருக்கிறார்கள் என, இதற்கு என்ன காரணம் என்பது போன்று அமைந்த கேள்வி என நினைக்கின்றேன். அதற்கு நான் பின்னூட்டம் இட்டிருந்தேன், அவரது பின்னூட்டம் வந்து இருந்தது, கடைசியாக அவரை அரங்கநாதனை ஸ்ரீரங்கம் சென்று கண்டு வாருங்கள் என்றது போன்ற பதிவும் இட்டேன் என ஞாபகம். அதற்குப் பின்னர் ஒரு கவிதையில் இறைவனை எழுதி இருந்தேன், அதற்கு பின்னூட்டம் இட்டிருந்தார் அந்த பின்னூட்டம் பின்னர் ஞானப்பறவையானேன். அண்ணன் பார்வையில் இது மட்டுமல்லாது வேறு முக்கிய காரணங்களும் உண்டு என்பதை உணர்வேன், ஆனால் அதற்கெல்லாம் எனக்கு தகுதியில்லை என்பதை நான் நன்கு அறிவேன். தாய் தன் குழந்தையை எப்படி இல்லாத ஒன்றையும் இணைத்து கொஞ்சுவார்களோ, அதுபோன்று நான் கொஞ்சப்படுகின்றேன் என்பதே உண்மை.

கேள்விக்கான பதில், ஞானம் என்றால் ஒன்றை கற்றுத் தெளிவதோடு மட்டுமல்லாமல் கற்றுக்கொள்ளாமல் கூட தெளிவது. இறைவனை யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை, யாரும் கற்றுக்கொள்ளவும் வேண்டியதில்லை. தெளிவாய் ஒன்று மனதில், எண்ணத்தில் இறைவனைப் பற்றி இருக்கும் அந்த தெளிவுதான் ஞானம். அதனையே செயல்பாடுகளுக்கும் பொருத்திக்கொள்ளலாம். எந்த ஒரு செயலிலும் மிகவும் தெளிவான எண்ணமும் அதனால் பிறருக்கு தீங்கு வாரா வண்ணம் செயல்படுதலும் அந்த செயலிற்கான ஞானம் என கொள்ளலாம். ஆக ஞானம் என்பது பிற உயிர்களுக்கு நன்மையாய் இருப்பது. ஞானம் பலவகைப்படும் அதில் கேள்வி ஞானம் மிகவும் முக்கியம். அஞ்ஞானம், மெஞ்ஞானம், விஞ்ஞானம் என அடுக்கலாம். ஆனால் இவையாவும் ஞானம் மட்டுமே. அறிவில்லாத ஒன்றில் தெளிவு அஞ்ஞானம், காணா அறிவில் ஒரு தெளிவு மெஞ்ஞானம், கண்டு தெளிந்து தெளிந்து நெளியும் தெளிவு விஞ்ஞானம் என வகைப்படுத்திக் கொண்டே செல்லலாம்.

இந்த ஞானத்திற்கும் பறவைக்கும் ஒரு சம்பந்தம் இருப்பதாய் நான் சம்பந்தபடுத்திக் கொண்டு சொல்கிறேன். கருடர் எனப்படும் பறவையானது, சீதை தூக்கிச் செல்லப்படும்போது அந்த தீமையை தடுக்கும்பொருட்டு தாக்கப்பட்டு, இராமருக்கு யார் சீதையை தூக்கிச் சென்றது என்ற அரும்பெரும் தகவலை தந்து இராமர் என்னும் கடவுள் அவதாரத்திற்கு உதவியதால் அந்த கருடர் கருடாழ்வார் எனப் போற்றப்படும் அளவிற்கு உயர்ந்தது. இதில் என்ன விசேஷம் என்றால் நம்மை எடுத்துக் கொள்வோம், எத்தனை தீமையும், கொடுஞ்செயலும் இவ்வுலகில் நடக்கிறது அதனை பார்த்துவிட்டு நாம் எத்தனை மெத்தனமாக கண்டபின்னர் காணாதது போல் வாழ்கிறோம், ஆனால் அந்த தீமைகளை நினைத்து வருந்துகிறோம் இப்படி வருந்துவதின் மூலம் இவ்விசயத்தில் நமக்கு ஒரு தெளிவில்லை என்பது புலப்படுகிறது, ஆனால் அந்த பறவையின் பார்வையில் இராவணர் செய்தது தீமை எனப்பட்டது, அது தீமை என்னும் தெளிவு பிறந்ததும் அதனை தடுத்து நிறுத்திட முயற்சி செய்தது, தவறு என்ற தெளிவு கிடைத்ததும் அதனை வெறுமனே பார்க்காமல் தவறை திருத்திட போராடியதால் அந்த பார்வை ஞானப்பார்வையானது அந்த பறவை ஞானப்பறவையானது. சிறுவயதில் கருடர் பார்வை என்மேல் படாதா என்று வானை நோக்கிய காலங்கள் ஞாபகம் வருகிறது. அப்படி வந்து அதன் பார்வையில் பட்ட தினங்கள் கண்டு மகிழ்ந்து இருக்கிறேன். விரல் நகத்தில் முட்டை போடும் பறவைக்காக ஏங்கிய காலமும் உண்டு. சுதந்திர வாழ்க்கை கொள்ளும் பறவைகள் ஞானம் உடையவைதான். ஆக இப்படி தெரியாத ஒன்றினைப் பற்றி தெரிந்தது போல எழுதும் தெளிவு கூட ஒருவகை ஞானம்தான். மன்னிப்பீராக.

2 comments:

கோவி.கண்ணன் said...

//இந்த ஞானத்திற்கும் பறவைக்கும் ஒரு சம்பந்தம் இருப்பதாய் நான் சம்பந்தபடுத்திக் கொண்டு சொல்கிறேன். கருடர் எனப்படும் பறவையானது, சீதை தூக்கிச் செல்லப்படும்போது அந்த தீமையை தடுக்கும்பொருட்டு தாக்கப்பட்டு, இராமருக்கு யார் சீதையை தூக்கிச் சென்றது என்ற அரும்பெரும் தகவலை தந்து இராமர் என்னும் கடவுள் அவதாரத்திற்கு உதவியதால் அந்த கருடர் கருடாழ்வார் எனப் போற்றப்படும் அளவிற்கு உயர்ந்தது. //

மிகவும் சிறப்பான இடுகை

ஞானம் என்பது அறிவு, அறிவைப் பெற்றவர்கள் தெளிவானவர்கள், தெளிவுடன் சுதந்திரமும் இருந்தால் அவர்களால் உலகினருக்கு நன்மை செய்வதில் தடை ஏதுமில்லை. மனிதர்களை விட பறவைகள் சுதந்திரமானவை, அறிவு பெற்ற மனிதனை உயர்த்திச் சொல்லவும் அவன் சுதந்திரமானவன் என்பதற்காக ஞானப் பறவை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

Radhakrishnan said...

//அறிவு பெற்ற மனிதனை உயர்த்திச் சொல்லவும் அவன் சுதந்திரமானவன் என்பதற்காக ஞானப் பறவை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்//

நிதர்சனமான உண்மை, மிக்க நன்றி கோவியாரே.