Friday 31 July 2009

கவிதை காலப்போக்கில் இலக்கணங்களை இழந்துவிடுமா?

கவிதைக்கான இலக்கணங்கள் என்ன எனத் தெளிந்துகொண்டால் இழப்பும், இழப்பாகாது இருப்பதும் அறியத்தகும். 'வெறும் வார்த்தைகள்' என தமிழ் இலக்கணம் ஏதும் அறியாமல், தெரிந்து கொள்ளவும் முயற்சிக்காமல் ஒரு கவிதைப் புத்தகம் வெளியிடும் நிலைக்கு வந்துவிட்ட எனக்கு இந்தக் கேள்வியைப் பார்த்ததும் கவிதை என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திற்கும் புதிய இலக்கணங்களை வரையறுத்துக் கொண்டது என சொல்லத் தோன்றுகிறது, ஆனால் அது ஒப்புக்கொள்ளக் கூடிய விசயமல்ல.

வாழ்க்கை என்றால் இப்படித்தான் என ஒரு இலக்கணம் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கணம் வைத்துக்கொண்டு வாழ்வதைப் போல கவிதைக்கு என இலக்கணங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கணம் என ஆகிப்போனதில் அதிசயமில்லை. ஆனால் உண்மையிலேயே கவிதைக்கு இலக்கணம் அவசியமா? அவசியம், அநாவசியம் என்பது எழுதுபவரைப் பொருத்து அமைகிறது எனும் நிலைக்கு கவிதைத் தள்ளப்பட்டுவிட்டது. மருத்துவர் தொழிலை ஒரு பொறியியல் படித்தவர் செய்வது போல! எவர் எத்தொழில் வேண்டுமெனில் செய்யலாம் எனில் எதற்கு முறையான படிப்பு என வந்தது? இது இருக்கட்டும்.

கவிதை என்றால் என்ன எனக் கேட்டால்

நீ பேசும் வார்த்தையெல்லாம் கவிதை - அட
நீ பேசாத வார்த்தைகளும் கவிதை

என எழுதும் வல்லமையை கவிதை என்று சொல்லிக்கொண்டால் எல்லாமே கவிதைதான்! எல்லாமே கவிதை எனும்போது அதற்கு ஏது இலக்கணம்!

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை கவிதைக்கான இலக்கணம் என்று கூறி

உள்ளத் துள்ளது கவிதை
இன்ப உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில்
உண்மை தெரிந்துரைப்பது கவிதை

என பாடியிருப்பது பலருக்குத் தெரிந்திருந்தால் தாங்கள் எழுதும் பலவிசயங்களை கவிதை எனச் சொல்லமாட்டார்கள். எழுத்துக்கும் வார்த்தைக்கும் இலக்கணம் உண்டு அதுபோல கவிதைக்கும் இருக்கிறது. 'நாளை நான் சாப்பிட்டேன்' எனச் சொன்னால் ''நாளை நான் சாப்பிடுவேன்' எனச் சொல்லித் திருத்தலாம். கவிதையில் எது சரி, எது சரியில்லை என யார் சொல்லித் திருத்துவது.

செய்யுள் வடிவாக இருந்த தமிழ் மொழிக்கு தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என இலக்கணம் வகுத்தது. 'யாப்பெருங்கலக் காரிகை' கவிதைக்குரிய இலக்கணம் பற்றி எடுத்தியம்புகிறது. எதுகை, மோனை, சீர், அணி, அடி, தொடை, தளை, குற்றியலுகரம், குற்றியலிகரம், அளபெடை என பலவகையான விசயங்களை அறிந்து வைத்துக்கொண்டே கவிதை எழுத வேண்டுமெனில் இவையெல்லாம் இல்லாது எழுதப்பட்டவைகள் எல்லாம் வெறும் வார்த்தைகளே எனத் தைரியமாகச் சொல்லலாம்! கவிதையில் இனிமையைத் தருவது எதுகையும் மோனையும் எனச் சொல்வார்கள். எதுகையையும் மோனையையும் மட்டுமே வைத்து எழுதப்பட்டவை இலக்கணம் உள்ள கவிதை என்பது எப்படி சொல்ல இயலும்.

அறிஞர் அண்ணா எழுத ஆரம்பித்துச் சொல்கிறார்

பாடுகிறான் அண்ணன் ஓர் கவிதை என்று
பரிவாலே எண்ணிடாதீர் உடன் பிறந்தாரே!
சீர் அறியேன், அணி அறியேன், சிந்தை உந்தும்
செய்தி தனைத் தெரிவித்தேன்; ஆசையாலே.

இதுதான் உண்மை. தமிழ் இலக்கணம் ஏந்தி வருவதே கவிதை. ஆனால் நாங்கள் எழுதுவது கவிதை இல்லை, எழுதுவது புதுக்கவிதை எனச் சொல்லி எழுதினார்கள்.

//'கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளத் தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா? அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர். ( அல்குர்ஆன், 26:224-226)//

//கவிதையில் உண்மை இருக்க வேண்டும். கவிதை என்ற பெயரில் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டுப் பொய்யையும் புனைச் சுருட்டையும் சேர்த்து இட்டுக்கட்டக்கூடாது. கவிதையின் இலக்கணம் அதன் ஒவ்வொரு வாசகத்திலும் உண்மை பொதிந்திருக்க வேண்டும். இதையே இஸ்லாம் விரும்புகின்றது. புனைவுக் கவிதைகளில் எந்நேரமும் மூழ்கிக் கிடக்கும் கவிஞனின் வயிறு கவிதையால் நிறைந்திருப்பதைவிட சீழ் சலத்தால் நிறைந்திருப்பது எவ்வளவோ மேல் என்ற கருத்தைச் சொல்லிக் கண்டிக்கிறது இஸ்லாம். அவ்வாறான கவிதைகளையும், கவிஞர்களையும் விட்டு மக்கள் விலகிக்கொள்ள வேண்டும்'' நன்றி: சத்தியமார்க்கம் இணையதளம்.//

//கவிதை, மனிதர்களுடைய வாழ்வில் ஏற்படும் இன்ப, துன்பங்களையும் அனுபவங்களையும் நன்கு எடுத்துக்காட்டுகின்றது; மேற்கண்ட அனுபவத்தால் ஏற்படும் சுவைகளையும் உண்மையான உணர்ச்சியோடும், இயல்பான தன்மையோடும் எடுத்து இயம்புகின்றது. எனவே கவிதையில் கருத்து, கருத்துக்கு உயிரூட்டும் உணர்ச்சி, கற்பனைச் செழுமை, பொருள் புலப்பாடுக்குரிய ஏற்ற வடிவம் ஆகிய நான்கும் இன்றியமையாதவைகளாகும். நன்றி: (டாக்டர்.சி.பாலசுப்பிரமணியன்)//

//சோகமோ, வீரமோ, காமமோ, காதலோ, எந்த உணர்ச்சியாக இருந்த போதிலும் கூட அது நல்ல உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு, வார்த்தைகளால் வடிவமைப்பதுதான் கவிதை. எனக்கு தெரிந்து கவிதைக்கு இலக்கணம் வரையறுக்கப்படக்கூடாது. கவிதைக்கு இலக்கணமே இல்லை என்கிற போது, கவிதை என்பதற்கு என்ன இலக்கணம் என்று கேட்பது இன்னும் பிற்போக்காக அமையும். எனவே கவிதை என்பது காலந்தோறும் மாறிக் கொண்டே வருகிற விஷயம். நன்றி: வைரமுத்து//

காலப்போக்கில் கவிதைக்கு இலக்கணமே தேவையில்லை என சமுதாயம் அறிவுறுத்தப்பட்டது. உண்மையில் கவிதை தமிழ் இலக்கண வடிவத்தைத் தொலைக்கவில்லை. இழக்கப் போவதுவமில்லை. எழுதுபவர்கள் இழந்துவிட்டார்கள், தொலைத்துவிட்டார்கள். கற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். கவிதை எழுதத் தெரியாது போனார்கள். எனவே இவர்கள் எழுதுவதை இனிமேலாவது கவிதை எனச் சொல்லாமல் இருந்தாலே போதும். ஆக இழப்பு நமக்குத்தானேயன்றி தமிழ் கவிதைக்கு அல்ல. மேலும் செய்யுள், பா போன்றவை கவிதை வடிவம் கொண்டதாக கருதுபவர்களும் உண்டு. செய்யுள் பா போன்றவைகள் கவிதைக்கான இலக்கணம் இருந்ததை மறுக்க இயலாது. இது தமிழ் மொழிக்கும் பொருந்தும்.

பல விசயங்களைத் தொலைத்து நிற்கும் சமுதாயமாகவே எல்லா விசயங்களிலும் மாற்றம் என மாறிக்கொண்டேயிருக்கிறோம். இந்த மாற்றம் அழிவின் பாதைக்கா? ஆக்கப் பாதைக்கா? என்பதை நாளைய சமூகம் குறித்துக்கொள்ளட்டும்!


2 comments:

க.பாலாசி said...

//இன்ப உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில்
உண்மை தெரிந்துரைப்பது கவிதை//

நன்றாக உள்ளது தங்களின் பதிவிடல். எடுத்துக்காட்டுக்களும் அருமை. வாழ்த்துக்கள்.

பாசமுடன்
க. பாலாஜி

Radhakrishnan said...

மிக்க நன்றி பாலாஜி அவர்களே.