Wednesday 22 July 2009

ஆசைப்பட்டேன் - 1

மண்ணாசை
பெண்ணாசை
பொன்னாசை

இந்த மூன்று ஆசைகளில் குறைந்தபட்சம் ஏதாவது ஒன்று இல்லாமல் எந்த ஒரு மனிதனும் இருக்கவே முடியாது என்பார்கள்.

'ஆடையில்லாத மனிதன் அரை மனிதன்
ஆசையில்லாத மனிதன் குறை மனிதன்'

'ஆசைப்படு ஆனால் அவதிப்படாதே'

இறந்தகால ஆசை
நிகழ்கால ஆசை
எதிர்கால ஆசை

சின்னஞ்சிறு வயதில் வந்த ஆசைகள் இப்பொழுது இறந்தகால ஆசைகள் ஆனால் அவை இறவா ஆசைகள் என சொல்லலாம். அவைகளை எப்பொழுது வேண்டுமென்றாலும் நாம் முயன்றால் உயிர்ப்பித்துக் கொள்ளலாம். சில விதிவிலக்குகள் தவிர்க்கமுடியாதவை.

இப்பொழுது நினைத்துக்கொண்டிருக்கும் ஆசைகள் நிகழ்கால ஆசைகள். இவை நிழலாய் தொடரும், திடீரென மறையும் ஆனால் இறவாத் தன்மை கொண்டவை.

எதிர்கால ஆசைகள் என்பவை நம்மை கூறு போடுபவை. இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என இப்பொழுதே காசு பணம் சேர்க்க வைத்து நிகழ்காலத்தை கொள்ளையடிப்பவை இந்த ஆசைகள்.

ஆசை மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு மனிதனிடம் ஆசையைப் பட்டியலிடு எனச் சொன்னால் அவனுக்கு ஆசையைப் பட்டியலிட இந்த பிறவி மட்டும் போதாது என்பான் ஒரு கவிஞன்.

ஒரு துறவி எலியை விரட்ட பூனை பிடித்து குடும்பஸ்தனான கதையை சொல்லி வைத்ததே மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள் என எச்சரிக்கையை நமக்குத் தரத்தான்.

நிராசை
பேராசை
நியாய ஆசை

எந்த ஒரு ஆசையாய் இருந்தாலும் தனக்கு மட்டுமல்லாது உலக மக்களுக்கும் உதவும்படியாக இருக்கும் ஆசைதான் மிகச் சிறந்த ஆசை.

'பேராசை பெரு நஷ்டம்'

பேராசைப்படுவதில் தவறில்லை! ஆனால் நியாயமான பேராசைகள் கூட நஷ்டத்தில் தான் முடிகிறது என எண்ணும்போது பேராசை பெரு நஷ்டமாகவே இருக்கிறது. நிறைவேறாத ஆசைகள் மனதை வாட்டம் அடையச் செய்கின்றன. ஆனால் மனிதன் மிகவும் கவனமாகவே இருக்கிறான், அந்த ஆசையை உதறிவிட்டு வேறொரு ஆசையை எடுத்துக்கொள்கிறான். இதைத்தானே சந்தர்ப்பம்தனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என சொல்கிறார்கள். நியாயமான ஆசைகள் நியாயமாகவே இருக்க முடியும்.

'ஆசை என்பதின் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே'

இது ஒரு கவிஞனின் ஆதங்கம். இன்று பணத்தை மையப்படுத்தியே பல ஆசைகள் எழத் தொடங்கிவிட்டன. இந்த ஆசை மனிதனை உற்சாக மட்டும் படுத்தவில்லை, மனிதத்தையே கொன்று போடத் தொடங்கி நிறைய வருடங்கள் ஆகிவிட்டது.

'அவனன்றி எதுவும் அசையாது என்பதே
ஆசையின்றி எதுவும் அசையாது எனச் சொல்லத்தான்'

என் ஆசைகள் தொடரும்.

7 comments:

Thekkikattan|தெகா said...

எதிர்கால ஆசைகள் என்பவை நம்மை கூறு போடுபவை. இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என இப்பொழுதே காசு பணம் சேர்க்க வைத்து நிகழ்காலத்தை கொள்ளையடிப்பவை இந்த ஆசைகள்.//

இதனை மட்டும் கொஞ்சம் கட்டுக்குள் வைக்கும் சூத்திரம் அறிந்துவிட்டால் எல்லா நிகழ்கால நிகழ்வுகளுமே ஆழமாக அனுபவிக்கும் ஒன்றாக அமைந்துவிடுமல்லவா?

Radhakrishnan said...

மிகவும் சரியே தெகா அவர்களே, ஆனாலும் நம்மால் அப்படி இருக்க இயலுவதில்லை என்பதே நிதர்சனம், :)என்னைப் பொருத்தவரை.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

நிகழ்காலத்தில்... said...

மிகவும் சரியே தெகா அவர்களே, ஆனாலும் நம்மால் அப்படி இருக்க இயலுவதில்லை என்பதே நிதர்சனம், :)

இப்ப சரி :))

நிகழ்காலத்தில்... said...

\\மனிதத்தையே கொன்று போடத் தொடங்கி நிறைய வருடங்கள் ஆகிவிட்டது.\\

மீள முடியாத இடத்தில் இருக்கிறோம் :((

Robin said...

யாரும் ஆசைப்படக்கூடாது என்று புத்தர் ஆசைப்பட்டார் - எங்கேயோ படித்தது.
ஆசை நியாயமானதாகவும் அளவோடும் இருக்கவேண்டும் எனபதுதான் என் கருத்து. ஆசையே இல்லாவிட்டால் உலகம் தேக்க நிலையை அடைந்து விடும்.

Radhakrishnan said...

மிக்க நன்றி சிவா மற்றும் ராபின் அவர்களே.