Saturday 4 July 2009

கடவுளை கடவுளாக!

ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா! வைச் சேர்ந்த நண்பர்கள் இலண்டனில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவிலிருந்து இங்கே வந்து வேலைப்பார்ப்பவர்கள்தான் எனினும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் ஈடுபாடு கொண்டு வாரத்தில் ஒருநாள் பகவத் கீதை படிப்பதும், நீதி சொல்வதும் என சமூகத்திற்கு தொண்டாற்றி வருகிறார்கள்.

சென்ற வருடம் அக்டோபர் மாதம் 13ம் தேதியிலிருந்து நவம்பர் 13ம் தேதி வரை சிறப்பு மாதமாகக் கொண்டாடினார்கள். விருப்பப்பட்டு அழைப்பவர்களின் வீடுகளுக்குச் சென்று ஒன்றரை மணி நேரம் பஜனையும், தீப ஒளியும் ஏற்றிக் கொண்டாடுவார்கள்.

இப்படி ஒருமுறை அவர்கள் ஒரு வீட்டில் செய்து கொண்டிருக்க அங்கே கடைசியில் சென்ற நான் அமைதியாக இருந்துவிட்டு 'எல்லாமே கடவுள்' இதில் என்ன பாரபட்சம் வேண்டி இருக்கிறது என்று கேட்டுவிட்டேன். அமைதியாகவே இருந்திருக்கலாம் நான்!

''அது எப்படி எல்லாமே கடவுள் ஆகும்? ஒருவன் மாட்டினை வெட்டினால் அவன் எப்படி கடவுள் ஆவான், அவன் பொல்லாதவன்'' என்றார். அதற்கும் நான் பேசாமல் இருந்து இருக்கலாம், நானோ ''அவனைப் பொறுத்தவரை அவன் நல்லவன், அவன் மாட்டினை வெட்டுகிறான் என்பதற்காக தீயவன் என எப்படி கருதலாம்'' என சொன்னேன்.

அதற்கு அவர் ''உங்கள் மேல் ஒரு நாற்காலியைப் போடுகிறேன், வலிக்கிறதா இல்லையா என சொல்லுங்கள்'' என்றார். நானோ ''எனக்கு வலிக்காது, ஏனெனில் ஆன்மாவுக்கு வலி இல்லையல்லவா'' என்றேன். ஒரு கணம் சிந்தித்தார். அவர் அமைதியாய் இருக்க நான் தொடர்ந்தேன்.

''இப்படித்தானே நீங்கள் சொல்லி வருகிறீர்கள், ஆன்மாவை எதுவும் செய்ய முடியாது, ஆன்மா துன்பப்படாது, வீணாக உடலைப்பற்றி கவலைப்படுகிறோம், இதுதானே உங்கள் மூலக்கருத்து. அப்படியிருக்க அந்த மாட்டினை வெட்டியவன் ஆன்மாவோ, அந்த மாட்டின் ஆன்மாவோ பாதிக்கப்படுவதில்லை தானே'' என்றேன்.

''அதற்கு அவர் நீங்கள் சாமான்ய நிலையில் இருந்து பேசுங்கள், நீங்கள் பேசும் அந்த உயர்வுக்கு வேண்டுமெனில் எல்லாமே கடவுள் என்பது சரியாகப்படும்'' என்றார். எனக்கு ஏன் பேசினோம் என்றாகிவிட்டது. ஏனெனில் என்னைப் பொருத்தவரை 'கடவுளைப் பற்றி யாரும், எவருக்கும் விளக்கம் சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை'

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பற்றி பிரசாரம் செய்பவர்களிடம் இப்படி சொன்னது எவ்வளவு மடத்தனம் என எனக்குப் புரிய வெகுநேரமாகியது. ஆனால் எனக்கோ கிருஷ்ணன் எனில் கொள்ளைப்பிரியம். ஆனால் கிருஷ்ணன் தான் எல்லாம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. கடவுள் எல்லாமாக இருப்பார், நாம் எல்லாமாக இருக்க முடியுமா என்ன? அதுபோலத்தான் கிருஷ்ணனும். அவர்களை வருத்தப்பட வைத்துவிட்டோமோ என மனம் வருந்தி எனது நுனிப்புல் புத்தகம் ஒன்றைத் தருவதாகச் சொன்னேன். இனிமேல் இப்படியெல்லாம் பிறரை நிந்தனை செய்து பேசக்கூடாது என எனது சின்ன புத்திக்குச் சொல்லிக்கொண்டேன்.

நாங்கள் அழைப்பு வைக்க ஒரு வாரம் கழித்து எனது வீட்டுக்கு வந்தார்கள். பொதுவாக பணத்திற்காக பல காரியம் செய்வார்கள், ஆனால் பக்தி பரப்புவதே எங்கள் நோக்கம் என இவர்களின் செய்கை எனக்கு சற்று வியப்பைத் தந்தது. முழு முதற்கடவுள் நாராயணனே என்றார்கள். ம்ம் என்றுதான் சொல்ல முடிந்தது. விநாயகர் அல்லவா என ஒருவர் கேட்டு வைக்க அதற்கு விளக்கமும் வந்தது. பார்வதியால் உருவாக்கப்பட்டவரே விநாயகர் எனவே முழுமுதற்கடவுள் அல்ல என்றார்கள். சரிதான்!

அப்பொழுதுதான் இரண்டு விசயங்கள் சொன்னார்கள். ஒன்று நீல் ஆம்ஸ்ட்ராங் பற்றியது. மற்றொன்று நியூட்டன் பற்றியது.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் - இவர் நிலவில் சென்று கால் தடம் பதிக்கவேயில்லையாம். அவர் பேட்டியின்போது கண்கள் கலங்கி பேசினாராம். மேலும் அமெரிக்க கொடி அசைந்ததாம். நிலவில் காற்றில்லையென்கிறீர்கள் எப்படி கொடி அசையும்? மனிதனால் எல்லா இடங்களுக்கும் செல்ல இயலாது. அது இறைவன் ஒருவனாலேயே முடியும் என்றார்கள்.

நியூட்டன் - இவரது நண்பர் ஒருமுறை நியூட்டனிடம் கடவுள் இல்லை, எல்லாம் இயற்கையாய் வந்தது என்றாராம். அப்பொழுது நியூட்டன் அவரது நண்பரை ஒருநாள் வீட்டிற்கு வரச் சொல்லி இருந்தாராம். வீட்டுக்கு வந்த நபர் நியூட்டனின் அறையில் இருந்த சூரிய மற்றும் கோள்கள் அமைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து இது யார் செய்தார்கள் என்றாராம். அதற்கு நியூட்டன் தானாக வந்தது என்றாராம். அது எப்படி தானாக வரும், நிச்சயம் நீங்களோ அல்லது வேறு யாரோ செய்து இருப்பார்கள் என்றாராம். அதற்கு நியூட்டன் இதை ஒருவர் படைத்திருப்பார் என நீங்கள் நம்பும்போது இந்த மொத்த பிரபஞ்சத்தையும் ஒருவர் படைத்திருக்க வேண்டும் அல்லவா? அவர்தான் கடவுள் என்றாராம் நியூட்டன். ந்ல்லவேளை கடவுளை எவர் படைத்தார் என எவரும் கேட்கவில்லை, நான் உட்பட.

இந்த இரண்டு விசயங்களும் என்னை யோசிக்க வைத்தன, கடவுளுக்கு இப்படியெல்லாம் விளக்கம் ஏன் தேவைப்பட வேண்டும் என்றுதான். ஆனால் இம்முறை நான் பாடம் கற்றுக்கொண்டேன். மறுப்பு எதுவும் பேசவில்லை. எனது நுனிப்புல் புத்தகம் எடுத்துக் கொடுத்தேன்.

அதில் வரும் முதல் கவிதையைக் கைகாட்டினேன்.

''நீ என் மிகஅருகினில் இருப்பினும்
உன்னை என்னுள் உணராதவரை
உன்னை தேடுதல் ஒரு தேவை''

எழுதிய எனக்கு இன்னமும் இந்த கவிதைக்கான அர்த்தம் முழுமையடைந்ததாக தெரியவில்லை. மிகச்சரி என வந்த அந்த நபர் சொன்னார்.

அவர்களுக்கு விடை தந்து அனுப்புகையில் ''வருவாய் வருவாய் வருவாய் கண்ணா வருவாய்' எனும் பாடலை இசைக்கவிட்டேன். மனம் மகிழ்ந்து இருப்பார்கள் என மிகச் சாதாரண மனிதனாய் தெரிந்தேன். அடுத்தவர்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என நாம் நடந்து கொள்ளும் முறைகளும் செயல்களும் என்னை பலமுறை யோசிக்க வைத்து இருக்கிறது.

எனது மகனின் பிறந்தநாளை அவர்கள் அழைப்பை ஏற்று அவர்கள் அழைத்த இடத்துக்குச் சென்று கொண்டாடினோம்.

கேக்கில் வைக்கப்பட்ட மெழுகுவர்த்தியை ஊதுவதற்குப் பதிலாக காகிதம் வீசி அணைத்தார்கள். ஏன் எனக் கேட்டேன். எச்சில் பண்டம் பிறருக்குத் தருவது கூடாது என்றார்கள். வெங்காயம் பூண்டு இல்லாமல் வைக்கப்பட்ட குருமா அத்தனை சுவையாக இருந்தது. அட என்றேன். இது பிரசாதம் என்றார்கள். நாம் நடந்து கொள்ளும் முறையில் தான் வாழ்க்கை சுவையாக இருக்கிறது என்றார்கள்.

மிக நல்ல நண்பர்களுடன் கிடைத்த இந்த பக்தி மனதிற்கு இதமாக இருந்தது. ஏனோ கடவுளை கடவுளாக மட்டுமேப் பார்க்க வேண்டும் என்றுதான் மனம் எப்பொழுதும் நினைக்கிறது.

4 comments:

ஆ.ஞானசேகரன் said...

// ந்ல்லவேளை கடவுளை எவர் படைத்தார் என எவரும் கேட்கவில்லை, நான் உட்பட. //

இதில் என்ன சந்தேகம் கடவுளை மனிதன் படைத்தான்...

நீங்கள் ஏதோ சொல்லவந்ததை சொல்லாமல் விட்டுவிட்டதாக கட்டுரை முடிகின்றது..
நல்ல பகிர்வு பாராட்டுகள் நண்பரே

Radhakrishnan said...

மிக்க நன்றி நண்பரே.

மனிதன் படைத்தவையெல்லாம் இங்கிருப்பவைகளை கொண்டுதான் படைக்கப்பட்டது, அதாவது அவனது சிந்தனையில் எழுந்த விசயங்கள் எனச் சொல்லலாம். ஒவ்வொன்றுக்கும் வடிவம் கொடுத்துத் தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவே அதைப் பயன்படுத்தினான். இதை நாம் எதிர்ப்பதில்லை.

அதைப்போலவே கடவுளும் மனிதனால் படைக்கப்பட்டிருப்பின், அவனதுத் தேவைக்கு ஏற்ப வடிவம் கொடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். மேலும் ஒன்றிலிருந்துதான் ஒன்றை மனிதனால் படைக்க முடியும். எனவே ஏதோ ஒன்று அவனை கடவுளைப் படைக்க வேண்டும் என உணர்த்தியிருக்கிறது.

அறிவியல் ஆய்வாளர் ஒருவர் 'கடவுளை நம்புவோர்க்கு' மூளையின் ஒருபகுதியில் ஒரு புள்ளி இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்.

ஆனால் எனக்கு பல விசயங்களில் அத்தனை தெளிவு இருப்பதில்லை என்பது என்னவோ உண்மை.

கோவி.கண்ணன் said...

// ''வருவாய் வருவாய் வருவாய் கண்ணா வருவாய்'//

ஆமாம் 'வருவாய்' இல்லை என்றால் யாருக்கும் வாழ்க்கை இல்லை :) அதனால் தான் கண்ணனை இரைந்த்து கேட்கிறார்கள் போலும் !

படைப்புக் குறித்த உங்கள் சிந்தனைகளுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா பாருங்கள்.

http://govikannan.blogspot.com/2009/03/1.html
http://govikannan.blogspot.com/2009/04/2.html

Radhakrishnan said...

//ஆமாம் 'வருவாய்' இல்லை என்றால் யாருக்கும் வாழ்க்கை இல்லை :) அதனால் தான் கண்ணனை இரைந்த்து கேட்கிறார்கள் போலும் !//

ஹா ஹா, மிகவும் இரசித்தேன். வருவாய் என்பது அவனிடத்து அன்பு வைத்தால் அவசியமில்லை, ஆகவே நீ எனதருகில் வரவேண்டும் என பக்தியின் உச்சத்தில் பாடுவதுதான் அது, இருப்பினும் நிகழ்நிலையை அழகாகச் சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி கோவியாரே.

நிச்சயம் தங்களின் பல பதிவுகளை விரைவில் படிப்பேன், இந்த பதிவுகளுடன் சேர்த்து.