Friday 3 July 2009

கேள்வியும் பதிலும் - 10

10. வருங்கால சந்ததிகள் நம் பண்பாட்டை கட்டி காப்பாற்றுவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

நமது பண்பாடு, கலாச்சாரம் என்றெல்லாம் எனக்கு எதுவென்று உண்மையிலே தெரியாது, எல்லாம் கேள்விப்பட்டதுதான். இந்தியா பண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் மிகவும் சிறந்த பெயர் போன நாடு என்ன சொல்லக் கேள்விப்பட்டு இருக்கையில், குழாயடிச் சண்டை பார்த்திருக்கிறேன். ஒரு குடம் தண்ணீர் முன்னே பிடித்தால் என்ன பின்னே பிடித்தால் என்ன? இரண்டாவது குடத்திற்கு தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் முதல் குடத்தின் தண்ணீர் பாதியை பகிர்ந்து கொண்டுவிட்டால்தான் என்ன? நினைத்து நினைத்து நிம்மதி தொலைத்த காலங்கள் அதிகம். நிம்மதி தொலைத்தோமே அறியாமையில் என இன்றைய அறியாமை நிம்மதியாய் இருக்கிறது.

விருந்தோம்பல் என சொல்லி வைத்துக் கொண்டு தொலைக்காட்சியை விரும்பி பார்ப்பதன் இரகசியம் என்ன? ஒருவர் அவரது நண்பரது வீட்டிற்குச் சென்றாராம் ,வாங்க உட்காருங்க தொலைக்காட்சி பாருங்க என்றாராம் அந்த நண்பர். உடனே வந்தவர் எனது வீட்டில் தொலைக்காட்சி இருக்கிறது என எழுந்து சென்றுவிட்டாராம். விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத்தான் என சொல்லி வைத்ததன் நோக்கம் என்ன விருந்தோம்பலுக்குப் பெயர் போன பூமியில்.

காலம் மாறிக்கொண்டே வருகிறது, மாற்றங்கள் மிகவும் அத்தியாவசியமாகிவிட்டன. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் நமது நாட்டின் கலாச்சாரம் என சொல்ல வருகிறீர்களா? இசை நாடகம் நாட்டியம் கலாச்சார கலைகள் என சொல்ல வருகிறீர்களா? ஒரு நிமிடம் யோசியுங்கள். மாபெரும் இதிகாசங்கள் எனப் போற்றப்படும் இராமாயணத்திலும் சரி மஹாபாரதத்திலும் சரி இதனை ஒழுங்காக வலியுறுத்தவில்லை. பிறர்மனை கள்வர்கள் பற்றி பேசியது. ஐவருக்கு ஒருத்தி என்று ஏடாகூடாமாக விளக்கியது. உற்ற உறவினர்களை கொல்வது தர்மம் என ஒவ்வாத அதர்மம் பேசியது. ஆக இதிகாச காலங்களே கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் விலைக்கு விற்றுவிட்டது. நம்மில் எத்தனை பேர் நமது கலைகளை நமது குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறோம், அட நாம்தான் கற்று வைத்து இருக்கிறோம். ஓரொண்ணா ஒன்னு தான் நமது கலை.

இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் வந்தது அந்த திரைப்படம் கிராமத்தின் நிதர்சனம் எடுத்துக் காட்டியது. கிராமத்தில் வாழும் மனிதர்கள் சண்டையில் திட்டிக் கொள்ளும் வாசகங்கள் எது தெரியுமா? உறவு முறைகளை கொச்சைப்படுத்துவதுதான். உடனே திருவள்ளுவர் எனக்கு ஞாபகத்திற்கு வருவார் கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்பார். சரி இதனையெல்லாம் விட்டுவிடுகிறேன். இன்னலோடு இன்பமாக வாழ்வதுதானே வாழ்க்கை. திருவள்ளுவர் கூட தனது திருக்குறளில் எல்லா விதமான தவறு பற்றி எழுதி இதெல்லாம் கூடாது என்பார் கூடா நட்பு என சொல்வார். அந்த கால கட்டத்திலும் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் என்னவென்று புரியவில்லை. இளங்கோ அடிகள் என்ன சொன்னார் சிலப்பதிகாரத்தில்? திணற அடிக்கிறது ஐம்பெரும் காவியங்கள். பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் என்ன நடக்கிறது? நமது நாட்டின் பாரளுமன்ற வளாகத்தில் சென்ற ஆண்டு உள்ளே அமர்ந்துவிட்டு வெளியில் வந்த எனது மனநிலை என்ன தெரியுமா? இவர்களெல்லாம் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதுதான். வந்தார்கள், கூச்சலிட்டார்கள் வெளியே சென்று விட்டார்கள். இட நெருக்கடி, இட ஒதுக்கீடு, நிம்மதி இல்லாத உணர்வு, வீட்டின் கதவை திறந்து வைத்துச் செல்ல முடியாத நிலை கொண்டுள்ள நாடு கற்றுத் தந்த பண்பாடு தான் என்ன? இது இப்படித்தான் இருக்கும், வருங்கால சந்ததி இந்தியர்களாக பல காலங்கள் இருப்பார்கள். உங்கள் உணர்வுகளை நோகடித்து இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் எனக்கு நமது நாட்டின் பண்பாடும் தெரியாது, கலாச்சாரமும் தெரியாது.

வருங்கால சந்ததிக்கு என்ன பண்பாடு கலாச்சாரம் சொல்லித் தர முடியும்? என்றால் பிறரது உணர்வுகளை மதிக்கும் உண்மையான பண்பாட்டினையும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுத்து வரலாம். அது மட்டுமே இந்த உலகத்தினருக்கு வேண்டிய பண்பாடும் கலாச்சாரமும். அதை அவர்கள் கட்டிக் காத்து வந்தால் உலகம் அமைதி பெறும்.

இது ஆதங்கப்பட்டோ நமது நாட்டினை தாக்கியோ எழுதப்பட்டது அல்ல. இது ஒரு அறியாமையில் இருப்பவனின் அ எழுத்து, அவ்வளவே. கற்று தெளிந்து கொள்ளும் முன்னர் கேள்விகளுக்கு பதில் தருவது என்பது சற்று கடினமே என இந்த ஐந்து கேள்விகளும் எனக்கு உணர்த்தியது.

2 comments:

Thekkikattan|தெகா said...

என்றால் பிறரது உணர்வுகளை மதிக்கும் உண்மையான பண்பாட்டினையும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுத்து வரலாம்.//

எவ்வளவு தொலைவில் உள்ளோம், இந்தக் கலாச்சாரத்தை நமதாக்கிக் கொள்ள... :-))

Radhakrishnan said...

மிக்க நன்றி தெகா அவர்களே.

பல வேளைகளில் பேசவும், எழுதவும் மட்டுமே இத்தகைய கலாச்சாரங்கள் பெரிதும் உதவியாக இருக்கும். அத்தகைய கலாச்சாரம் ஒரு கனவு, ஒரு கானல் நீர்.