Friday 24 July 2009

சில்வண்டுகள் - 8

உடலிலும் முகத்திலும் தீப்புண்களுடன் கதவை திறந்து நின்ற வயதானவரைக் கண்டதும் சுகுமாரன் பயந்தேவிட்டான். அம்மா எனும் அலறல் சத்தத்தை கைகளால் வாய் மூடி அடக்கி வைத்தான். உடல் நடுங்கியது. முகத்தை மூதாட்டிப்பக்கம் திருப்பிக்கொண்டான். மூதாட்டி அப்பாடா என தனது பயம் போக்கினாள். அந்த வயதானவர் மூதாட்டியை நோக்கி வந்தார். சில புண்கள் ஆறியும் சில புண்கள் ஆறாமலும் இருந்தது.

''யாரது இது'' என்றார்.

''வெளியூர்காரன்'' என பதில் சொன்னார் மூதாட்டி.

வயதானவர் பேசியபோது அவருக்கு உடலில் வலி இருப்பது தெரிந்தது. பேசுவதற்கு மிகவும் திண்டாடினார். சாப்பிட ஏதாவது வேண்டும் என சைகையாலே கேட்டார். மூதாட்டியும் நீர் போல கொண்டு வந்து தந்தார். அதை பருகிய வயதானவர் திரும்பவும் அந்த அறைக்குள்ளே சென்றார். குறை ஆடை உடுத்திய அவரது உடலில் எங்கும் தீப்புண்களே ஆடையாகி இருந்தன. பயம் நீங்காமல் சுகுமாரன் அமர்ந்து இருந்தான். அறைக்குச் சென்ற வயதானவர் சுகுமாரனை கைகாட்டி அழைத்தார். மூதாட்டியும் போ சத்தம் போட்டுராதே என சொன்னார்.

சுகுமாரன் அறைக்குள் சென்றான். ஒரு மூலையில் சாம்பலும் அறையின் சுவரெல்லாம் கருப்பு வண்ணமும் படிந்து இருந்தது. வயதானவரின் கண்களில் நீர் கசிவதைக் கண்டான் சுகுமாரன். சாம்பலை எடுத்து உடலில் பூசிக்கொண்டார் அவர். பூசிக்கொண்டபோதே தனது விரலை வாயின் மேல் வைத்து மெளனமாக இருக்கச் சொன்னார். நடுக்கத்தில் உறைந்து போனான் சுகுமாரன். அறையில் சில மூலிகைகள் இருந்தன. படுக்கை ஒன்று போடப்பட்டு இருந்தது. வயதானவர் அந்த அறையிலிருந்து செல்லும் மற்ற அறையின் கதவைத் திறந்தார். மிகவும் இருட்டாக இருந்தது. அந்த அறை மிகவும் ஒடுக்கமாகவும் இருந்தது. அறையைத் திறந்த அந்த வயதானவர் சுகுமாரனை அங்கே நிறுத்திவிட்டு மூதாட்டியை அழைத்து வந்தார்.

அருகே வந்த மூதாட்டி சுகுமாரனிடம் ஒரு கதவைக் காட்டி ''உள்ளே தான் சட்டை போட்ட ஜகநாதன் இருக்கான், நீ பொறுமையா இருந்தா அவன் உன்னை ஒன்னும் செய்யமாட்டான், சத்தம் போடாம உள்ளே போய் அவனைப் பார்த்துட்டு வா'' என சுகுமாரனை போகச் சொன்னார். சுகுமாரன் தைரியத்துடன் கதவைத் திறந்தான். உள்ளே வெளிச்சம் தெரிந்தது. ஒவ்வொரு படியிலும் கால் வைத்து இறங்கினான். இறங்கிக்கொண்டே இருந்தான். ஒருவர் மட்டுமே செல்லும்படி வழியானது அமைந்து இருந்தது. பல படிகள் தாண்டி கடைசி படியில் கால் வைத்து குனிந்து பார்த்தான். ஆடைகள் அணிந்து ஆபரணங்கள் அணிந்து தலைமுடியை நேர்த்தியாக கட்டி வைத்திருந்த அதே இளைஞனைக் கண்டான்.

அருகில் சென்று அமர்ந்தான். கண்கள் மூடினான் சுகுமாரன். தியான நிலையில் தன்னை இருத்திக்கொண்டான். கண்களில் தாயும் தந்தையும் வந்து போயினர். ஒவ்வொரு நிகழ்வும் அவனது நினைவில் வந்து ஆடியது. ஏதாவது ஒரு நிகழ்வில் மனதை நிறுத்திக்கொள்ள முயற்சித்தான். ஆனால் மரணித்துப்போன பெற்றோரின் நினைவு அவனை மிகவும் சோர்வாக்கியது. ஆனால் அமைதியாகவே இருந்தான் சுகுமாரன். இவ்வாறு அமர்ந்திருந்த சில விநாடிகளில் ஜகநாதன் கண்கள் திறந்தார். அருகில் கண்கள் மூடி அமர்ந்து இருந்த சுகுமாரனை நோக்கினார். அவனது கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருப்பதைக் கண்டவர் கண்களைத் துடைத்துவிட்டார். விழித்த சுகுமாரன் ஜகநாதனை வணங்கினான்.

''என்ன விசயமாக உள்ளே வந்தாய்'' என ஜகநாதன் கேட்டதும் சுகுமாரன் பதட்டமடைந்தான். ''என்ன விசயமாக உள்ளே வந்தாய்?'' என அமைதியாகவேக் கேட்டார். ''என் அம்மா என் அப்பா என் தங்கை'' என ஒவ்வொரு வார்த்தையாக சொன்னான் சுகுமாரன். மெளனமாக அமர்ந்து இருந்தார் ஜகநாதன். ''அவங்க இறந்துட்டாங்க, அதுக்கு உங்க அண்ணன் தான் காரணம், கேட்டேன் என் பின்னால வராதேனு சொல்லிட்டார்'' என வியர்வை வழிந்தோட சொன்னான் சுகுமாரன். ஜகநாதன் ஏதும் பேசவில்லை. ''நீங்க கூட அதிகாரிகளை எரிச்சீங்க, தாத்தா சாம்பல் காட்டினார்'' என சொன்னான் சுகுமாரன்.

எழுந்து நின்றார் ஜகநாதன். ''வா மேலே போகலாம்'' என அழைத்தார். சுகுமாரன் பயந்துகொண்டே ஜகநாதன் பின்னால் நடந்தான். சூரியன் அந்த அறைக்குள் பல துவாரங்கள் வழியாக வந்து கொண்டிருப்பதை அப்பொழுதுதான் கண்டான் சுகுமாரன். மேலே வந்ததும் மூதாட்டியிடம் ''அம்மா இப்போ எங்கே தெரியுமா?'' என்றார். ''வெளியே போனா இன்னும் வரலை'' என சொன்னார் மூதாட்டி. ''எரிச்சிட்டான் ஜகநாதன்'' என அமைதியாகவே சொன்னார். ''என் பையனை உயிரோட அவ எரிச்சபோது நீ உள்ளேயே இருந்துட்ட, அவர் எரிஞ்சது தெரிஞ்சு நீ வரலை, இவ எரிஞ்சு தெரிஞ்சு நீ வரலை, இதோ காப்பாத்த போய் உடம்பெல்லாம் புண்ணா இருக்கு, அவ கூப்பிட்டானு நீயும் வெளியே வந்து அப்பாவி சனங்களை எரிச்சி வீட்டுக்கு முன்னால சாம்பலாக்கி இருக்க இனி நமக்கு யாரு சோறுக்கு வழி பண்ணுவா, அவளும் போய்ட்டாளே'' என மூதாட்டி சொன்னதும் ''இதோ அமைதியாவே இருக்கான் இவன், வெளியேயும் அமைதியா இருக்கான், உள்ளேயும் அமைதியா இருக்கான்'' என சுகுமாரனை நோக்கி கைகாட்டினார் ஜகநாதன். மூதாட்டி அமைதியானாள்.

சுகுமாரனை அழைத்துக்கொண்டு ஜகநாதன் வெளியே நடக்கலானார். ஜகநாதனை வழியில் பார்த்த அடுத்த நிமிடம் ஊரெல்லாம் நிசப்தத்தில் ஆழ்ந்தது. காய்த்ரி தனது வீட்டிலிருந்து சுகுமாரன் ஜகநாதனுடன் செல்வதைப் பார்த்தார். ஊரின் எல்லைக்குச் சென்றார் ஜகநாதன். தாய் சாம்பலான இடத்தில் சென்று நின்றார். சுகுமாரன் ஜகநாதன் கண்கள் மூடுவதைக் கண்டான். உயிர்த்தெழுந்தார் தாய். உடல் உதறியது சுகுமாரனுக்கு.

''என்னை நீ காப்பாத்திட்டிடே ஜகநாதா, நான் போட்ட சத்தம் உன் காதுல விழுந்ததாடா'' என தாய் உறக்கத்தில் இருந்து எழுந்ததுபோல் சொன்னதும் சுகுமாரனின் கண்களை நம்ப இயலவில்லை. பயந்துகொண்டே ஜகநாதனிடம் கேட்டான். ''சாம்பல் கரைஞ்சி இருந்தா, தொலைஞ்சி இருந்தா நீங்க இப்படி செய்ய இயலுமா?'' எனக் கேட்டதும் ''உன் தாய் தந்தையர் உயிரோடு வேண்டுமா'' என்றார் ஜகநாதன். சுகுமாரன் ஆமாமாம் என வேகமாகத் தலையாட்டினான்.

''ஜகநாதா என்னடா உன் கோபம் எங்கடா போச்சு, இவனை ஏண்டா இன்னும் உயிரோட விட்டுருக்க, யாருடா இவன்?'' என மோகனவள்ளி சொன்னதும் ''இவன் உள்ளேயும் வெளியேயும் அமைதியாகவே இருக்கிறான்'' என ஜகநாதன் சொன்னதும் மோகனவள்ளி சுகுமாரனை பளார் பளார் என அறைய ஆரம்பித்தார். அடி வாங்கிக் கொண்டே சுகுமாரன் 'அடிக்காதீங்கம்மா, என்னை அடிக்காதீங்கம்மா' என நின்ற இடத்திலே நின்றான். ஓடவும் இல்லை, தடுக்கவும் இல்லை. மதியூர் மண் வேலை செய்ய ஆரம்பித்தது. ஜகநாதன் 'இந்த உலகத்துல அமைதியே சொரூபமா இருக்கற மனுசங்க இருக்காங்க'' என சொல்லிவிட்டு வீடு நோக்கி நடந்தார். சுகுமாரனை எட்டி உதைத்தார் மோகனவள்ளி. தள்ளி விழுந்த சுகுமாரனைத் தொட்டுத் தூக்கினார் ஜகநாதன். தாயை நோக்கி வேண்டாம் என்பது போல் பார்த்தார்.

(தொடரும்)

2 comments:

Tamil Baby Names said...

உங்களின் வலைப்பூ நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்.\

Tamil Boy baby Names

Radhakrishnan said...

மிக்க நன்றி