Thursday 2 July 2009

கேள்வியும் பதிலும் - 5

5) தாங்கள் செய்து வந்த ஆய்வில் மிகப் பெரிய தவறு செய்துவிட்டீர்கள். ஆனால், தற்பொழுது அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இச்சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் தவறை நீங்களே சென்று ஒப்புக் கொள்வீர்களா இல்லை எதுவுமே நடவாதது போல் இருப்பீர்களா?

தவறுகள் நடக்கும்போதெல்லாம் நானே சென்று இப்படி செய்தேன் இப்படி ஆகிவிட்டது என ஒப்புக் கொண்டு இருக்கிறேன். மிகப்பெரிய தவறு நடந்தாலும் அதையேதான் செய்வேன். எதுவும் நடவாததுபோல் இருக்கவும் முடியாது.

பல ஆராய்ச்சிக்கூடங்களில் எதுவுமே சாதாரணமாக செய்வதில்லை, ஒரு விசயத்தை பலமுறை செய்து ஊர்ஜிதப்படுத்திய பின்னர்தான் முடிவினைச் சொல்கிறோம். ஆதலினால் தவறாக வந்த முடிவுகளையும் இணைத்துவிடுகிறோம். ஆனால் அது குறித்த ஒரு ஆராய்ச்சிகட்டுரை வெளி வருகிறது எனில் இந்த விசயங்கள் மூடி மறைக்கப்பட்டுவிடும். ஆனால் 80 சதவிகிதம் மேல் செயல்முறைகள் சரியாக இருந்தால் அன்றி அதனை வெளியிடுவதில்லை. எல்லாம் சரியாய் அமைவது என்பது மிகவும் அரிதாக நடக்கும்.

ஆராய்ச்சிதனை ஒவ்வொரு முறையும் பிற குழுக்களிடம் பேசும்போது தவறினை எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். நாம் எண்ணாத விசயங்கள் எல்லாம் அவர்கள் எண்ணத்தில் ஓடும், நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

முடிந்தவரை தவறுகளை தவிர்த்தால் நலம் பயக்கும். இப்படி தவறுதலாக மருந்து ஒன்றை உருவாக்கி அதனை சோதனை செய்தால் பலருடைய உயிர் கேள்விக்குறியாகிறது என்பது உண்மை.

கேள்விகளுக்கு நன்றி.

(தொடரும்)

No comments: