Sunday 5 July 2009

பொழுதுபோக்கும் நேரம் கொல்லும்?

எனது அக்காவின் கணவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, எனது அக்கா மகளிடம் அவளது ஆசிரியர்கள் அனைவரும் தங்களது விருப்பப் பாடங்களையே மேல்படிப்புக்கு எடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். பன்னிரண்டாவதுக்கு நிலையான படிப்பில் ஐந்து பாடங்கள் மட்டுமே எடுக்க இயலும், பத்தாவதுக்கு நிலையான படிப்பில் அவள் எடுத்துப் படித்தப் பாடங்களோ பதின்மூன்று.

அவள் அனைத்துப்பாடங்களிலும் மிகவும் திறமை உடையவள். அவள் வரைந்த படத்தை அலங்காரம் செய்து எனது வீட்டில் கூட மாட்டி வைத்திருக்கிறேன். அவளது வரையும் கலையைப் பாராட்டி அதை பல இடங்களுக்கு அவளது ஆசிரியர் அனுப்பியும் வைத்துக்கொண்டிருக்கிறார்.

இது குறித்து பேசிய என் மாமா, இப்படி எல்லாரும் படிக்கச் சொன்னால் எதைப் படிப்பது, எல்லாம் படித்து ஒன்றுமில்லாமல் வீணாகப் போவதற்காக இப்படிச் சொல்கிறார்கள் என்றார். விருப்பப் பாடங்களை எடுத்துக்கொள்ளட்டும் என்றேன், ஆம் அதைத்தான் செய்து இருக்கிறாள் என்றார்.

வரைவது நன்றாக வருகிறது அதை விருப்பப் பாடமாக ஏன் எடுக்கவில்லை என ஆசிரியர் கேட்டாராம். நான் சொன்னேன் அதைப் பொழுதுபோக்காக வைத்துக் கொள்ளலாம் என!

பொழுதுபோக்குனு எதைச் செஞ்சாலும் அது பின்னாடி நம்ம நேரத்தைக் கொல்லும், அதுவே முக்கியமாப் போயிரும் எனச் சொன்னார்! அட, என மனம் சொல்லியது.

எத்தனை பதிவர்கள்/இடுகையாளர்கள் பொழுதுபோக்கு என எழுதத் தொடங்கி இன்று முழு நேரத்தையும் எழுதுவதில் செலவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என உங்களுக்குள் கேட்டுக்கொண்டால் பொழுதுபோக்கு நேரம் கொல்கிறதா, என்ன?
பலர் எழுத்தாளர்களாகப் பரிணாமித்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் எது முக்கியம் என நினைத்துச் செய்து வந்தீர்களோ அது முக்கியத்துவம் இழந்து கொண்டிருப்பதை நீங்கள் கவனித்தது உண்டா?

ஏனோ அவர் சொன்னதில் ஓரளவு உண்மை இருப்பதாகவே எனக்குப் பட்டது. நான் அடிப்படையில் எழுத்தாளர் இல்லை, ஒரு ஆய்வாளர்! எழுத்தாளராகும் எண்ணமெல்லாம் எதுவும் இல்லை! அதனால் பல காலங்களுக்கு எழுத்தைத் தள்ளிப்போடுவதும் அவ்வப்போது எழுதுவதும் நடந்து வருகிறது. உங்களுக்கு எப்படியோ?!

செய்யும் செயலில் பிரபலமடைவதைப் பொருத்து அந்த செயலுக்கு நீங்கள் உங்களை விருத்தி செய்துகொள்வதுதான் உண்மையான முன்னேற்றம், வெற்றி எனச் சொல்லலாமா?!


3 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்களுடைய இந்தப் பதிவை நான் ரசித்துப் படித்தேன். இந்த மாதிரி பாடம் தெரிந்து எடுக்கும் விடயம் மிகவும் இக்கட்டானது. எனது மகளுடன் பாடசாலையில் ஆசிரியர்களைச் சந்திக்கச் சென்றபோது, அவர்கள் ஒரு அறிவுரை சொன்னார்கள். '' தயவு செய்து எந்த அறிவுரையும் சொல்லாமல் , பிள்ளைகளை முடிவெடுக்க விடுங்கள் '' அதன் பின்னர் நான் வாயைத் திறக்கவேயில்லை.
அவள் தேர்ந்தெடுத்த பாடங்கள் நன்று தான் ஆனால் அவளும் graphic design இல வியக்கத் தக்க வேலைப் பாடுகள் செய்து ஆசிரியர்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தாள். ஏனோ அந்தப் பாடத்தை அவள் தெரிந்து கொள்ள வில்லை.

Radhakrishnan said...

நீங்கள் சொல்வது உண்மைதான், பிள்ளைகளுக்கு எது விருப்பமோ அதை அவர்களைச் செய்யவிடுவதால் அவர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்வார்கள், ஆனாலும் குழப்பம் தரும் சில நேரங்களில் அவர்களுக்கு வழிநடத்துதல் தேவைப்படுகிறது. தங்களுக்கு எனது நன்றிகளும் வணக்கங்களும்.