Monday 6 July 2009

சில்வண்டுகள் - 2

கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது காடு. எரிகின்ற காட்டினை எரிச்சல் நிறைந்த கண்களுடன் சில சிங்கநேரி கிராம வாசிகள் கண்டுவிட்டனர். காடு பற்றி எரிகிறதே என கூச்சலிட்டுக்கொண்டு காட்டை நோக்கி ஓட ஆரம்பித்தனர். அதற்குள் காடு முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. காவல்துறை அதிகாரிகளும், வனத்துறை அதிகாரிகளும் அங்கே வந்து சேர்ந்தனர். தீயணைப்பு படையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். சற்று நேரத்திற்கெல்லாம் அத்தனை பெரிய காடு சாம்பலாகி இருந்தது.

இந்த கொடுமையை யார் செய்தார்கள் என கிராமவாசிகளிடம் அதிகாரிகள் விசாரித்ததில் இது காட்டுத் தீயாக இருக்கக்கூடும் என்று மட்டுமே கிராமத்து நபர்கள் சொன்னார்கள். அந்த காட்டை மட்டுமே அழித்த தீ அடங்கி இருந்தது. இந்த காடு அழிந்ததில் வனத்துறை அதிகாரிகளுக்கு உள்ளூர சந்தோசமாக இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள். மொத்தக்காடும் அழிந்து போனது சாதாரண காரியமாகத் தெரியவில்லை என கிராமத்து மக்கள் பேசிக்கொண்டார்கள். பெரிய காடாக இருந்த பகுதி வெறுமையாக காட்சி தந்து கொண்டிருந்தது.

இனியும் கிழக்கே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் அவர். இருட்டத் தொடங்கியது. கிழக்கே தென்பட்ட கிராமத்துக்குள் சென்றவர் அந்த கிராமத்துக் கோவில் ஒன்றில் நுழைந்தார். கருவறை இல்லாத மண்டபம் அது, கதவும் இல்லாத கோவில் அது. கோவிலில் வைக்கப்பட்ட சிலைக்கு மட்டும் மேடை இருந்தது. சிலை என சொல்ல முடியாதவண்ணம் வெறும் கல்லாக மட்டுமே இருந்தது. மஞ்சள் துணி சுற்றிக் கட்டப்பட்டு இருந்தது. அரிவாள் அருகில் இருந்தது. இரண்டு தூண்களுக்கு மத்தியில் மணிகள் கட்டப்பட்டு இருந்தது. அந்த சிலைக்கு அருகில் சென்று இவர் அமர்ந்தார். கண்களை மூடினார்.

பொழுது விடிந்தது. மதியூர் கிராமத்து மக்கள் தோட்ட வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். அப்பொழுது இந்த கோவிலின் வழியாக வந்த சிலர் உள்ளே சிலைக்கு அருகில் ஒருவர் அமர்ந்து இருப்பதைக் கண்டார்கள்.

''முனீஸ்வரர் கோவிலுக்குள்ள யாரோ இருக்காங்க''

''வா யாருனு போய்ப் பார்க்கலாம்''

''ஊருல ஆட்களைக் கூட்டி வந்துரலாம்''

''நீ சொல்றது சரிதான், ஆட்களை கூட்டி வந்துரலாம்''

வெளியில் நின்று பேசியவர்கள் ஊருக்குள் ஓடினார்கள். ஊரில் இருந்த நபர்கள் பலரை அழைத்துக்கொண்டு கோவிலின் வாசல் வந்து நின்றார்கள். அந்த கோவிலுக்கென இருக்கும் பூசாரி உள்ளே நுழைந்தார். அருகில் சென்று இவரைக் கண்டதும் பூசாரி பயம் கொண்டார். ஆனால் அவரோ கண்களை மூடியவண்ணமே அமர்ந்து இருந்தார். அவரது தோளைத்தொட்டு யார் நீங்க? என்றார் பூசாரி. ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்தார் அவர். உடலெல்லாம் கருநிற ரோமங்கள். ஆடையைத் தழுவாத உடல். பூசாரிக்கு பயம் அதிகரித்தது.

உள்ளே சென்ற பூசாரி வெளியில் வந்து தண்ணீர் எடுத்துச் சென்று அவரது முகத்தில் தெளித்தார். அவர் விழித்தார். பூசாரியை நோக்கினார். பூசாரி பயந்துகொண்டே பேசினார்.

''யார் நீங்க, இப்படி உள்ளே வந்து உட்கார்ந்து இருக்கறது தெய்வ குத்தம்''

கிராமத்து மக்களின் சலசலப்பு அடங்கி இருந்தது. அவர் பூசாரியை பார்த்த வண்ணமே அமர்ந்து இருந்தார்.

''எழுந்து வெளியே வாங்க''

அவர் மீண்டும் கண்களை மூடினார். பூசாரிக்கு கோபம் வந்தது. அவரை நோக்கி சத்தம் போட்டார்.

''சொல்லிக்கிட்டே இருக்கேன், இப்படியே உட்கார்ந்து இருந்தா எப்படி, எழுந்து வராட்டி உங்களை தூக்கி வெளியே போட்டுருவேன்''

கண்கள் திறக்காமல் அப்படியேதான் அவர் அமர்ந்து இருந்தார். கிராமத்து மக்கள் அவரை வெளியே இழுத்துப் போடச் சொன்னார்கள். பூசாரி அவரது தலையைப் பிடித்து ஆட்டினார். அவர் கைகளை வீசிய வண்ணம் எழுந்து நின்றார். அவர் கைகள் வீசி எழுந்து நின்றபோது பூசாரியின் மேல் அடி விழுந்தது. பூசாரி அந்த மேடையிலிருந்து தள்ளி கீழே விழுந்தார். கிராமத்து மக்கள் அவரை நோக்கி ஓடி வந்தார்கள். அவர் கோபத்துடன் அனைவரையும் பார்த்தார். மேடையைவிட்டு கீழே இறங்கியவர் அவர்களை விலக்கிக்கொண்டு வடக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தார். சிலர் கற்கள் கொண்டு அவர் மேல் எரிய ஆரம்பித்தார்கள். ஒரு சிலர் ஓடிச்சென்று அவரை உதைத்தார்கள். அப்படியே நின்றவர் உதைத்த ஒருவன் கழுத்தைப் பிடித்து திருகினார். அவர் அருகில் சென்று உதைத்தவர்கள் அப்படியே பதைபதைத்து நின்றார்கள்.

அதற்குள் கிராமத்தில் இருந்த ஒருவர் பக்கத்து ஊரில் இருந்த காவல் அதிகாரியுடன் சிலரை அழைத்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். காவல் அதிகாரி இவரிடம் வந்தார். திருகிய கழுத்தில் இருந்து தனது கையை எடுத்தார் அவர். அவன் பொத்தென கீழே விழுந்தான். உயிர் துடித்தது. காவல் அதிகாரி கோபமாக அவரைப் பிடித்து இழுத்தார். அவரை இழுத்த மறுகணத்தில் காவல் அதிகாரியின் உடல் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. கிராமத்து மக்கள் அரண்டு ஓடினார்கள். காவல் அதிகாரியுடன் உடன் வந்தவர்கள் பயத்துடன் பின்வாங்கினார்கள். உடல் வெந்தது. கிராமத்துக்குள் ஒவ்வொரு தெருவாகச் சுற்றிச் சுற்றி வந்தார் அவர். அன்றைய மதியமே கிராம மக்கள் ஒவ்வொருவராக கீழே விழத் தொடங்கினார்கள். ஆடுகளும் மாடுகளும் கோழிகளும் சாவில் சிக்கிக்கொண்டன. வடக்கு நோக்கி நடக்கலானார் அவர்.

யார்தான் இவர்?

(தொடரும்)

No comments: