Sunday 5 July 2009

பகுத்தறிவு ஒரு மூடப் பழக்கவழக்கம்.

இந்த இடுகையை இடும் முன்னர், அதற்குத் தலைப்பைத் தரும் முன்னர் பகுத்தறிவுடன் தான் செயல்பட்டேனா என்றால் ஆம் என அடித்துச் சொல்லமுடியும், அதே வேளையில் சிலர் கோபம் கொள்ளக்கூடும் என்கிற மனச் சிந்தனையும் எழுந்தது என்பதை மறுக்கவும் முடியாது. ஒரு விசயம்தனை படிப்பவர்களின் மனதில் தலைப்பினைப் பார்த்ததும், ஒருவித மனோநிலைக்கு வாசிப்பவர்கள் தள்ளப்படுகிறார்கள். அதனால்தான் நாளிதழ்களில், வார இதழ்களில், மாத இதழ்களில் நமது வலைப்பூக்களிலும் மிகவும் கவர்ச்சிகரமானத் தலைப்பினை வைப்பார்கள்.

‘பகுத்தறிவு பக்தி தரும்’ என்கிற கட்டுரையானது தட்ஸ்தமிழ் என்கிற இணையதளத்தில் வெளியாகி இருந்தது. அதாவது பகுத்தறிவு என்பது எதையும் பகுத்தறிந்து கொள்ளும் அறிவு எனப்படும். இந்தக் கட்டுரையைப் படித்ததும் எனக்குள் எழுந்தது கேள்விதான் பகுத்தறிவும் ஒரு மூடப்பழக்கமோ என!

மூடப்பழக்கவழக்கங்களாகக் கருதப்படும் பல விசயங்களுக்கு தற்போது அறிவியல் விளக்கங்களும் தரப்பட்டு வருகின்றன, அதாவது நமது முன்னோர்கள் சொன்ன விசயங்களைத் தெளிவாக, நேரடியாக சொல்லாமல் ஒரு பொருளின் மேல் விசயத்தை ஏற்றிச் சொல்லிவிட்டார்கள் என்பது இவர்களின் வாதம். மேலும் எங்கே நேரடியாகச் சொன்னால் கேட்கமாட்டார்கள் என்கிற நினைப்பும், பயமுறுத்தினால் ஓரளவுக்குப் பணிந்து நடப்பார்கள் என்கிற மூடத்தனமான நம்பிக்கை தான் அது, அதனாலேயே அதை மூடப் பழக்க வழக்கங்கள் என பகுத்தறிந்து, அறிவுடையோர்கள் சொல்லி வருகிறார்கள்.

‘கடவுளின் துகள்’ எனப் பெயரிடப்பட்டு தற்போது தடைப்பட்டிருக்கும் ஆராய்ச்சியை அறியாதவர்கள் வெகுசிலரே எனலாம். இயற்கையை கடவுள் எனச் சொல்கிறார்கள், நம் கண்ணுக்குத் தெரியாத ஒரு மாபெரும் சக்தி இருக்கிறது என்பதையும் கடவுள் எனச் சொல்கிறார்கள். இவ்வாறு பகுத்தறிந்து இவை மனித சமுதாயம் கொள்ளும் நம்பிக்கைகள் என கடவுளைப் பற்றி அதுகுறித்து தெளிவடைந்த அறிவுடையோர்கள் சொல்லி வருகிறார்கள்.

இன்றைய அறிவியல் உலகில், மருந்து, பிளாசிபோ எனக் கொடுத்தே மருந்தின் தன்மையை நிர்ணயிக்கிறார்கள். பிளாசிபோவினால் சிலர் குணமடைந்ததாகவும் காட்டுகிறார்கள். ஆனால் இதற்கு வெவ்வேறு காரணங்கள் உண்டு என வேறு கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன். இப்போது பிளாசிபோ நோய் தீர்க்கும் என நம்பி அதைப் பின்பற்றினால் அது மூடப்பழக்க வழக்கம் ஆகிவிடும்தான்! அதைப்போலவே ‘கடா வெட்டுதல், பூக்குழி இறங்குதல், சட்டி எடுத்தல், அபிஷேகம் செய்தல்’ எனச் சம்பிரதாயச் சடங்குகள் மூடப் பழக்க வழக்கங்களாகவேக் கருதப்படுகின்றன, இவைகள் கடுமையாக எதிர்க்கப்படுகின்றன. ஆனாலும் பலர் இதனைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதையெல்லாம் அவர்கள் புறக்கணிப்பதாகவே இல்லை.

பால் குடங்களும், காவடிகளும், தனிமனிதனின் நம்பிக்கைகள் சாகாதவரை தொடர்ந்து கொண்டேயிருக்கும். இவர்கள் திருந்த வேண்டியதில்லை, இதைக்கண்டு எந்த ஒரு மனிதரும் வருந்த வேண்டியதுமில்லைதான். ஆனால் இதெல்லாம் தவறு என ஒருவரின் கண்ணுக்குப் படும்போது அவர் சும்மா இருக்க முடிவதில்லை. அதைச் சுட்டிக்காட்டும் நிலைக்கும், அதை எதிர்த்துப் போராடும் நிலைக்கும் தள்ளப்படுகிறார். அதன் காரணமாக 'பகுத்தறிவாளர்கள்' 'நாத்திகர்கள்' எனும் அடையாளம் அவர்களுக்குக் கிடைத்து விடுகிறது. அவர்கள் சொல்ல வருவதை எவரும் கவனிப்பதில்லை, மேலும் அவர்கள் தங்களுக்கான அடையாளங்களைத்தான் முன்னுரிமைப் படுத்தத் தலைப்படுகின்றனர் எனும் நிலை வந்து சேருகிறது.

இவ்வாறு நிலையிருக்க மனிதன் தான் செய்யும் சமயச் சடங்குகளைத் தானாக விட்டுவிடும் சூழல் ஏற்படாதவரை, இதனால் எந்த பயனும் இல்லை என்று தெரியாதவரை மூடப்பழக்க வழக்கங்கள் என நாம் சொன்னால் நாமும் மூடப்பழக்க வழக்கத்தில் தான் இருக்கிறோம் என அவர்கள் நினைப்பதற்கு மிகவும் ஏதுவாகிப்போகின்றது. மேலும் இச் சடங்குகளால், இவ்வாறு செயல்படுவதன் மூலம் பயன் இருப்பதாகத்தானே இன்னும் பலர் நினைக்கிறார்கள், அவர்கள் பகுத்தறிந்து கொண்டு செயல்படுவதாகத்தானே படுகிறது இங்கே! அவ்வாறு பகுத்தறிந்து செயல்படுவதால் அந்தப் பகுத்தறிவும் ஒரு மூடப்பழக்கமாகிவிடாது?!

புகைப்பிடித்தல் உடலுக்கு கேடு, ஆம் உடலுக்குத்தான் கேடு என புகையாமல் நிறுத்துவதில்லை பலர். ‘குடி குடியைக் கெடுக்கும்’ஆம் அதற்காக மதுக்கடைகளை மூடிவிடுவதில்லை பலர். இதனால்தான் எழுதி இருந்தேன் எதனை வேண்டுமெனிலும் தடைசெய்ய சட்டம் கொண்டு வரலாம், ஆனால் மனக்கடையை யார் மூடுவது என?

இதனைப் பகுத்தறிந்து சரியெனத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் இந்த தீயப் பழக்க வழக்கங்களை யார் கண்டிப்பது? சாதி ஒழிக்க வேண்டும் என தன் சாதி வளர்ப்பது, ஒதுக்கப்பட்ட சமுதாயம் என அடுத்தவர்களை ஒடுக்கி வைப்பது என இப்படி எத்தனையோ விசயங்களைப் பகுத்தறிந்து தீயப்பழக்கங்கள் எனத் தெரிந்தும் நல்லது எனத் தொடர்ந்து செயலாற்றி வரும் மனித சமுதாயத்தில் பகுத்தறிவு மூடப்பழக்கவழக்கமாகவும், ஒருவித தீயப்பழக்க வழக்கமாகவும் இருக்கிறது என உறுதியாகச் சொல்லலாம்.

எனவே அடையாளத்தை நாம் உடைக்கத் தயாராக இருந்தால் எல்லாம் உடைந்து உருக்குலைந்து போய்விடும். ஆனால் அடையாளமும் வேண்டும், அதற்கான உரிமையும் வேண்டும் என இருந்தால், ஒன்றையொன்றை எதிர்த்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான், களைவதற்கு எத்தனை யுகங்கள் ஆனாலும் முடியாது.

பகுத்தறிவுடன் தீயது எனில் அதைக் களைவதுதான் சிறப்பு, வெறுமனே எதிர்ப்பது அல்ல! இங்கேதான் பிரச்சினை எழுகிறது, ஒருவருக்குத் தீயதாகத் தெரிவது மற்றவருக்கு நல்லதாகத் தெரிகிறதே. மற்றவருக்கு நல்லதாகத் தெரிவது தீயதாகத் தெரிகிறதே!

No comments: