Monday 27 July 2009

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 4

ஓடியாடி விளையாடி பள்ளிப்பருவமும் கடந்தாள் ஆண்டாள். பதினாறு வயது கடந்ததும் இனி எப்படி திருமணம் நடக்குமோ என கவலையில் நாட்களை கழித்தார் கோதைநாச்சியார். அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தனக்கு எப்பொழுது காதல் வரும் என எதிர்பார்ப்புடன் இருந்தாள் ஆண்டாள். வருடங்கள் மெல்ல உருண்டோட ஆரம்பித்தது. கல்லூரிப்பருவத்தில் நுழைந்தாள் ஆண்டாள், ஆனால் காதல் வந்தபாடில்லை.

ஒருநாள் தனது அறையில் அமர்ந்து கொண்டு ''ஏன்டி ஆண்டாள், நீ மட்டும் எப்படிடீ திருவரங்கன் மேல காதல் கொண்ட, அதுவும் அவனைப் பார்க்காம கொள்ளாம உனக்கு மட்டும் எப்படி காதல் வந்துச்சு, சொல்லேன்டி ஆண்டாள்'' என சுவரைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தாள் நம் ஆண்டாள். இதைக் கவனித்த கோதைநாச்சியார் ''காதல் வரனும்னா அதுக்கான பையனைப் பார்க்கனும், நீ குனிஞ்ச தலை நிமிராம நடக்கற, இப்ப இருக்கிற பொண்ணுக மாதிரியா இருக்க, பட்டிக்காட்டுல கூட இப்படி இருக்கமாட்டாங்கம்மா கொஞ்சம் சுடிதார் ஜீன்ஸ் டி சர்ட் னு போட்டுட்டு இரு உன்னை காதலிக்க ரொம்ப பேரு நிப்பாங்க உனக்கும் யாரை காதலிக்கனும்னு தலைப் பிய்ச்சிக்கும்மா'' என கடிந்து சொல்லிவிட்டு போனார். ''நீ காதல் கல்யாணம் பண்ணினியா? தள்ளிவிட்டாங்க, போய் விழுந்துட்ட நீ'' என்றாள் ஆண்டாள். ''அது அந்தக் காலம்'' என்றார் கோதைநாச்சியார்.

அன்றைய தினத்திலிருந்து தினமும் காதலைப் பத்தி வீட்டில் பெரிய பட்டிமன்றமே நடக்க ஆரம்பித்தது. ஆண்டாள் ஒவ்வொருமுறையும் பழங்காலம் பழங்காலம்னு சொல்லாதே என அம்மாவை பேச்சில் வென்று கொண்டே இருந்தாள், ஆனால் காதல் வந்தபாடில்லை. ''அடக்கம் ஒடுக்கம் எல்லாருக்கும்தான் நான் உன்கிட்டே ரொம்பப் பேசறேனோம்மா'' என்றாள் ஆண்டாள். ஆண்டாளை உச்சி முகர்ந்து ''நீ என்னோட உசிரும்மா'' என்றார் கோதைநாச்சியார்.

இப்படியாக கல்லூரியிலும் ஒருவருடம் ஓடியது. ஒருமுறை வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் ஒருவனைப் பார்த்தாள். அவனும் ஆண்டாளைப் பார்த்தான். மனது என்னவோ செய்தது அவளுக்கு. இதுதான் காதலா என எண்ணிக்கொண்டு நடக்க இருந்தவளை ''செத்த நிக்கிறேளா'' என்றான் அவன். ''செத்தா எங்குட்டு நிக்கிறது?'' என்றாள் ஆண்டாள். மென்மையாக சிரித்தான் அவன். ''என் பேரு பாலரங்கன்'' என்றான். ''என்ன விசயம் சொல்லுங்க'' என்றாள் ஆண்டாள். ''நீங்க எங்க குடியிருக்கேள்'' என்றான் அவன். ''உங்க மனசுலயா குடியிருக்க முடியும், அதோ செண்பகப்பூ அக்ரஹாரத்தில்தான் குடியிருக்கேன்'' என சொல்லிவிட்டு நடந்தாள் ஆண்டாள்.

முதன்முதலாக தனது அம்மாவிடம் தான் தனது காதலை சொன்னாள். ''அம்மா ஒரு பையன் என்னை காதல் பண்றான்மா'' என்றாள் ஆண்டாள். ''அது எப்படி உனக்குத் தெரியும்'' என்றாள் கோதைநாச்சியார். ''நான் காதல் பண்றேன்லம்மா அவனை'' என்றாள் ஆண்டாள். கோதைநாச்சியாருக்கு மனதில் பயமும் சந்தோசமும் நிறைந்தது.

ஆண்டாளுக்கு கோவிலின் வழியில் பாலரங்கனைப் பார்ப்பதும் ஓரிரு வார்த்தை பேசுவதுமாய் நாட்கள் கழிந்தது. ஒருநாள் உடல்நிலை சரியில்லாது போய் ஆண்டாளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதாகிவிட்டது. இதற்கு முன்னர் ஆண்டாளுக்கு இவ்வாறு உடல்நிலை சரியில்லாதபோது பல பரிசோதனைகள் செய்தவர்கள் இம்முறை கொஞ்சம் அதிகப்படியான பரிசோதனை செய்தார்கள். விசயம் கேள்விப்பட்டு பாலரங்கன் தனது பெற்றோருடன் மருத்துவமனைக்குச் சென்றான். அங்கு ஆண்டாளுக்கு சிஸ்டிக் பிப்ரோசிஸ் எனும் நோய் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதாக கேள்விபட்டதும் ஆடிப்போனான் பாலரங்கன்.

(தொடரும்)

No comments: