Sunday 26 July 2009

ஆண்டாளுக்குக் கல்யாணம் - 2

கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் ஆண்டாளைத் தனியாக அழைத்துச் சென்றார் கோதைநாச்சியார். ''நீ இப்படி இனிமே நடந்துக்கிராதே, எனக்கு மனசெல்லாம் வலிக்குது, உனக்கு நல்லாப் படிச்சி, ஒரு நல்ல உத்தியோகத்துக்குப் போய் வாழனும்னு ஆசையே இல்லையா'' என அறிவுரை சொன்னார்.

''கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கிறேன், உத்தியோகத்துக்குப் போறேன்மா'' என்றாள் ஆண்டாள். ''ஐயோ பெருமாளே, என்ன காரியம் பண்ணிக்கிட்டு இருக்கேள், என் புள்ளைக்கு புத்திமதி சொல்லப்படாதோ'' என வேண்டிக்கொண்டார் கோதைநாச்சியார்.

''ஏன் பெருமாள்கிட்ட அப்படி வேண்டிக்கிறம்மா, என்னோட வேண்டுதலை முறியடிக்க நீ இப்படி வேண்டினா அந்த பெருமாள் உனக்கு உதவுவாரா'' என ஆண்டாள் கண்சிமிட்டிக் கொண்டே கேட்டவள் ''என்னோட வேண்டுதல் தான் ஃபர்ஸ்ட்'' என இங்குமிங்கும் ஓடினாள்.

''ஆண்டாள், ஆண்டாள் நில்லு, சரி இப்ப விளையாட நேரமில்லை, நான் சமையல் பண்ணனும்'' என்றவருக்கு ''நானும் உனக்கு உதவுறேன்மா'' என்றாள் ஆண்டாள். ''நீ படி, சமையல் வேலை நான் பார்த்துக்கிறேன்'' என்றவருக்கு ''நானும் சமைக்கிறேன்'' என அம்மா செல்லும் முன்னரே சமையல் கட்டுக்குள் போனாள் ஆண்டாள்.

''ஏங்க, நம்ம பிள்ளையை கண்டிக்கக் கூடாதா'' என்றார் கோதைநாச்சியார். அதற்கு நாராயணன் ''நான் மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்'' என்றார். ''இது என்ன கொடுமை, அப்பனும் பிள்ளையுமா சேர்ந்து இப்படி ஆடுறீங்க, இது என்ன விளையாட்டா?'' என்றார் கோதைநாச்சியார்.

''காதல் வர பருவத்தில கல்யாண ஆசை வந்துருக்கு, நான் ஆண்டாளோட சாதகத்தை எடுத்திட்டுப் போய் பார்த்துட்டு வரேன்'' என கிளம்பினார். 'பெருமாளே ஏன் தான் ஆண்டாள்னு பேரு வைச்சேனோ?' என சொல்லிக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தார்.

அங்கே ஆண்டாள் காய்கறிகள் நறுக்க ஆரம்பித்து இருந்தாள். ''இது அண்ணனுக்கு ரொம்பப் பிடிக்கும்லம்மா'' என்றாள் ஆண்டாள். ''பிடிக்கும் பிடிக்கும், கத்தரிக்காய் பிடிக்காம இருக்குமா, ஆனால் கல்யாணம் பிடிக்கும்னு சொல்ற முத பொண்ணு நீயாத்தான் இருப்ப'' என சொல்லிக்கொண்டே சமையல் வேலை செய்ய ஆரம்பித்தார்.

''என்னது சின்னப் பொண்ணோட சாதகமா இருக்கு இது. குரு பார்வை பலமா இருக்கு. இன்னும் ஆறு மாசத்தில கல்யாணம் நடக்கனும் அப்படியில்லையினா அறுபது வயசில தான் கல்யாணம், சரியான நேரத்திலதான் அந்த பெருமாள் உங்களை இங்கே அனுப்பி வைச்சிருக்கா நாராயணன்'' என்றார் ஜோதிடர்.

''நினைச்சேன், என்னடா இந்த வயசுல பொண்ணு இப்படி கல்யாணத்துக்குப் பறக்கறாளேனு'' என்றார் நாராயணன். ''மாப்பிள்ளை அமையுமா?'' என்றார் மேலும். ''அந்த பெருமாளே மணவாளானா வருவாரு பாருங்கோ'' என்றார் ஜோதிடர். 'மணவாளன்' என மனதில் சொல்லிக்கொண்ட நாராயணன் தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகன் அழகியமணவாளனைப் பற்றி கற்பனை பண்ணத் தொடங்கினார். அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தபோது சமையல் எல்லாம் தயாராக இருந்தது. கோதைநாச்சியாரிடம் விசயத்தைச் சொன்னார் நாராயணன்.

''பெருமாளே, என்ன சோதனை இது'' என சொன்ன அன்னையிடம் ''என்னம்மா'' என்றாள் ஆண்டாள். ''உனக்கு இப்பவே கல்யாணம் பண்ணித்தான் ஆகனுமாம் சோசியர் சொல்லிட்டாராம்'' என வார்த்தைகளை நழுவவிட்டார். ''நான் சொன்னா கேட்கலை, சோசியர் சொல்லித்தான் கேட்கனுமா'' என அம்மாவின் கவலையினை அதிகரித்தாள் ஆண்டாள்.

''அண்ணனும் அண்ணியும் வரப்போறாங்க, ஏன்மா உம்முனு இருக்க'' என்றபடி ஆண்டாள் வாசலை எட்டிப்பார்த்தாள்.

(தொடரும்)

2 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Radhakrishnan said...

முயற்சி செய்தேன், ஆனால் என்னால் எளிதாக இணைக்க முடியவில்லை. தங்களின் தளம் வித்தியாசமாக இருக்கிறது. முயற்சி செய்கிறேன், மிக்க நன்றி, மீண்டும் வருகை தந்தால் எனது பதிலையும் பார்வையிட்டுக் கொள்ளுங்கள் செய்திவளையம் குழுவிநர்களே.