Wednesday 22 July 2009

ஆசைப்பட்டேன் - முன்னுரை

முன்னுரை
ஆசையினு எனக்குள்ள எதுவும் இல்லைனு
சொல்லிவைச்சா உண்மைக்கு மதிப்பில்லை
ஓசையில்லாம சொல்ல இது மந்திரமும் இல்லை
ஒருத்தருக்கும் புரியாத புதிரும் இல்லை

ஆசைப்படறது அசிங்கம்னு அடுத்தவருக்குச் சொல்லி
அநியாயத்துக்கு ஆசைப்படற நானும்தான் எங்க நிற்க
காசை கொடுத்தாவது ஆசையை நிறைவேத்த
வறட்டு கெளரவமும் வந்து கொல்லும்

பேசக்கூட ஆசைப்பட்டாலும் கேட்க ஆளிருக்காது
தானாப் பேசிக்கிட்டா சிரிப்பவர்களை எண்ணமுடியாது
நிசத்தை ஒருநாளும் ஆசையா வைக்கவேணாம்
பொசுங்கிப் போச்சேனு மூலையில உட்காரவேணாம்

பிறக்கறப்ப ஆசையா அழுதேனானு என்னை பெத்த
ஆத்தா வந்து சொல்லிட்டுப் போகட்டும் அவக
இறக்காம எப்பவும் என்கூட இருப்பாங்கனு என்னை
அனுப்பி வைச்ச ஆண்டவன் வந்து பேசட்டும்

சுட்டெரிக்கிற வெயிலுல வயிறு காயிற பிள்ளைக
குளிருர மாதிரி மழைக்கஞ்சி தினம் தருவாளா
பெட்டி பெட்டியாய் நோயோடு பிறக்கற புள்ளைக
சிரிச்சி மகிழுற வாழ்க்கைதான் மகமாயி கொடுப்பாளா

முகம் சுளிச்சி போகாத மனித இனம்
மண்ணுல நான் புதையற முன்னே பார்ப்பேனா
அகம் எல்லாம் தினம் மலரும்
வாடாத உள்ளம் எனக்கும் எல்லோருக்கும் கிடைக்குமா

செத்துப் போகத்தானே போறோம்னு ஆசையை
சாகடிக்கிற ஆளு இல்லை நான் சாமி
தொத்து வியாதியாட்டம் ஆளைக் கொல்லுற
ஆசையை மனசில தேக்கவும் இல்லை சாமி

உலகமெல்லாம் வறுமையில்லாம பார்க்கத்தானே கண்ணு
ஒற்றுமையை மட்டும் உணரத்தானே உசிரு
பலகாலம் எப்படியோ போச்சேனு மனசு
அடைஞ்சி போகாம ஆசை உசுப்பேத்தியிருக்கு

தோசையை இரண்டு பக்கம் சுட்டா
வயித்துக்குப் பிரச்சினையில்லை
மனுச குணம் இரண்டு ஒன்றான
உலகத்துக்குப் பிரச்சினையில்லை

எத்தனை எத்தனையோ விதவித ஆசையிருக்கு
எழுதி வைச்சிட வழியுமிருக்கு
அத்தனையும் வெளியே சொல்லி வைச்சா
ஆசை ஜெயிக்குமா சாமி?
அட இது கவிதையினு சொல்லிட்டா
ஆசை ஜெயிக்குமா சாமி!

ஆசைகள் இனி தொடரும்...

No comments: