Tuesday 21 July 2009

நீல நிறம்

தனலட்சுமி தான் பள்ளியில் படித்தபோது அவளுக்குள் எழுந்த ஆச்சரியமான ஒரு கேள்வியை சக தோழிகளிடம் கேட்டு வைத்தாள்.

‘’ வானமும் கடலும் ஏன் நீலநிறமா இருக்கு’’

பதில் தெரியாத தோழிகள் பல்லைக் காட்டிச் சிரித்துவிட்டுப் போனார்கள். கிருஷ்ண பக்தையான தனலட்சுமி அந்தக் கேள்விக்கான பதில் தேடும் தேடல் பகவான் கிருஷ்ணனை மீண்டும் உன்னிப்பாக பார்த்தபோது மீண்டும் எழுந்தது. அம்மாவிடம் ஓடிச் சென்று கேட்டாள்.

‘’ஏம்மா கிருஷ்ணர் நீலநிறத்தில் இருக்காரு’’

‘’அவர் தெய்வம், அதான் அந்த நிறத்தில இருக்காரு’’ அம்மா சொன்ன பதிலில் தனலட்சுமிக்கு உடன்பாடில்லை. மத்த தெய்வம் எல்லாம் ஏன் நீலநிறத்தில் இல்லை என்கிற கேள்வியும் உடன் எழுந்து உட்கார்ந்து கொண்டது. தனது பாட்டியிடம் சென்று கேட்டாள். பாட்டி ஆலகால விஷம் உண்ட சிவனைப் பற்றிச் சொன்னார்.

‘’சிவபெருமான், குடிச்ச விஷம் தொண்டை வரைக்கும் போய் நின்னுக்கிச்சி, அதான் நீலகண்டன் அப்படினு அவருக்கு ஒரு பேரு இருக்கு’’ என பாட்டி சொன்னதும் கொஞ்சம் பயந்துதான் போனாள் தனலட்சுமி. விஷம் என்ன திடப்பொருளா, உள்ளிறங்காமல் சிக்கிக்கொண்டு நிற்பதற்கு? என ஒரு கேள்வியும் அவளுக்குள் உடன் எழுந்தது.

இராமாயணம், மகாபாரதம் எல்லாம் தொலைகாட்சியில் பார்த்தபோது நீல நிறத்தில் அரிதாரம் பூசித் தோன்றி தேவர்களாக நடித்தவர்களைப் பார்த்து ஆச்சரியத்துடன் நீல நிறம் மிகவும் பிரபலம் போல என நினைத்துக் கொண்டாள்.

பருவங்கள் தாண்டியதும் ‘நீலப்படம்’ பற்றி கேள்விப்பட்டு முகம் சுழித்தாள். ‘இப்படியுமா இழவு நடத்துவாங்க, எதுக்கு இதுக்குப் போய் நீலத்தைத் தொடர்பு படுத்துறாங்க’ என சக தோழிகளிடம் பேசிக்கொண்டாள். அப்பொழுதுதான் ஊரில் நடந்த முறைகேடான உறவு முறைகள் எல்லாம் அவளுக்குத் தெரிய வந்தது. ஒருவரையொருவர் ஏமாற்றி வாழும் வாழ்க்கையினைக் கண்டு மிகவும் மிரண்டு போனாள். ஆண்கள் என்றாலே ஒருவித வெறுப்பு மெதுவாக ஏற்படத் தொடங்கியிருந்தது.

கல்லூரிப் பருவத்தில் வந்தபோது நீலநிறம் பற்றிய அறிவியல் விசயங்களைத் தெரிந்து கொண்டாள் தனலட்சுமி. புற ஊதாக் கதிர்கள், அக ஊதாக் கதிர்கள் என படித்து அதனை வானத்துடனும், கடலுடனும் சேர்த்தபோது ‘சாமிதான் ரிஃபலக்ட் கொடுக்காருனு இருந்துட்டேன்’ என நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

கல்லூரியில் படித்தபோது நீலகேசவனுடன் பழக்கம் ஆரம்பித்தது. ‘நீலப்படம்’ முதற்கொண்டு எல்லா விபரங்களையும் அவனிடமே தைரியமாக பேசினாள், நீலகேசவனும் சங்கோஜப்படாமல் அனைத்தையும் தனக்குத் தெரிந்தவரை அறிவியல் பூர்வமாக விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தான். கிருஷ்ணர், சிவபெருமான் பற்றி கேட்டபோது அறிவியல் விளக்கம் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருந்தான்.

இதன் காரணமாக, தெய்வம்னு என்னதான் இருந்தாலும் நீலநிறக் கண்ணன் எப்படி சாத்தியம் என்றே யோசிக்க ஆரம்பித்துவிட்டாள் தனலட்சுமி. ஊரில் ஒருநாள் ‘டேய் பாலகிருஷ்ணனை பாம்பு கடிச்சி அவன் உடம்பெல்லாம் நீலம் பாஞ்சிருச்சிடா, ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிருக்காங்க, உயிர் பிழைப்பானோத் தெரியலைடா’ என வீட்டு வாசலோரம் கத்திக்கொண்டு சென்ற குரலைக் கேட்டுத் திடுக்கிட்டாள் தனலட்சுமி. பாம்பு கடிச்சா நீலநிறம், விஷம் ஏறினா நீலநிறம்? யோசித்தாள்.

சிவப்பு இரத்தம் ஏன் எனும் அறிவியல் அறிந்தவள் இந்த விசயம் குறித்துத் தேட ஆரம்பித்தாள். கல்லூரி படிப்பு, வேலை ஆவலில் நீலநிறம் சற்று பின் தங்கிப் போயிருந்தது.

நீலகேசவனைத் திருமணம் புரிந்தாள் தனலட்சுமி. சில வருடங்கள் ஆகியும் குழந்தைப் பிறக்கவில்லை. ஒரு வருடம் கழித்து கருவுற்றாள். கருவுற்ற சந்தோசத்தை நினைத்து, இந்த நிலைக்காக தான் எத்தனை அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது என நினைத்து மனம் கலங்கினாள். கண்ணன் நீலநிறமாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என நினைத்துக் கொள்ள நீலநிறம் பற்றிய தேடல் ஆரம்பித்துவிட்டது மீண்டும்.

நீலகேசவனிடம் கேட்டு வைக்க நீலகேசவன் ‘அந்த காலத்தில அப்படி இருந்து இருப்பாங்க, நாம என்ன பார்க்கவா செஞ்சோம்’ என கேள்விக்குப் பதிலாகச் சொல்லி வைத்தான்.

வாந்தி தனலட்சுமியை வதட்டிக்கொண்டிருந்தது. தாயாகி விட வேண்டும் எனும் ஆவலில் அனைத்தையும் பொறுத்துக் கொண்டாள். நீலகேசவன் துணையாய் நின்றான். ஸ்கேன் எடுத்துப் பார்த்து படம் வாங்கிய போது கலர்ப்படம் தரமாட்டாங்களா என தனலட்சுமி அப்பாவியாகக் கேட்டு வைத்தாள். ‘’கவலைப்படாதே புள்ளை உன்னைப் போல சிவப்பாத்தான் பொறக்கும்’’ என நீலகேசவன் சொல்லி வைத்தான்.

கல்யாணத்துக்கு வராமல் சண்டை போட்டவர்கள் எல்லாம் வளைகாப்புக்கு வந்து சேர்ந்து இருந்தார்கள். குழந்தைப் பிறக்கப்போகும் தேதியும் குறித்தார்கள். இடுப்பு வலி என ஆஸ்பத்திரியில் தனலட்சுமியைச் சேர்த்தார்கள். பல மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் தனலட்சுமி சுகப்பிரசவமாக ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். குழந்தையைப் பார்த்த மருத்துவர்கள் அலறினார்கள்.

‘’குழந்தைக்கு உடலுல நீலம் பாய்ஞ்சிருக்கே’’ என இங்கும் அங்கும் ஓடினார்கள். இதைக்கேட்ட தனலட்சுமி மயங்கினாள். குழந்தைக்கு இரத்தப் பரிசோதனை செய்துப் பார்த்துவிட்டு எல்லாம் நார்மலாகத்தான் இருக்கிறது என விட்டுவிட்டார்கள், அதற்குள் ஊரில் எல்லாம் கிருஷ்ணர் பிறந்துட்டார் என சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் வேண்டின கிருஷ்ணனே எனக்கு மகனாகப் பிறந்துட்டார் என தனலட்சுமி பூரிப்பு அடைந்தாள். சில மாதங்கள் ஓடியது. குழந்தையை அதிசயமாக அனைவரும் பார்க்க வந்தார்கள். எங்க வீட்டுல வந்து ‘வெண்ணை’ திருட வாடா என அவனை அழைத்தார்கள். ‘’இன்னொரு போர் நடத்தி வைப்பியாடா’’ எனக் கேட்டும் சென்றார்கள்.

நீலகேசவன் பரபரப்புடன் வீட்டுக்குள் நுழைந்தான். தனலட்சுமி இந்தா நீ கேட்ட கேள்விக்குப் பதில் என ஒரு ஆங்கில நாளிதழைக் காமித்தான்.

‘’நீல நிற உடல் கொண்ட மனிதர்கள் 1950 வரை அமெரிக்காவில் உள்ள நீல நகரத்தில் வசித்து வந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் ஹீமோகுளோபினில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் ஒரு மரபணுவில் ஏற்பட்ட மாற்றம் ஆகும். இவர்கள் இவர்களுக்குள்ளேயே திருமணம் நடந்து முடித்துக்கொண்டதால் நீலநிறக் குழந்தைகள் பெற்று அத்தகைய சமூகமாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்’’

இதைப்படித்ததும் தனலட்சுமி நீலநிறத்துக்கான காரணம் அறிந்து கொண்டாள், ‘’நம்ம பிள்ளையையும் செக்கப் செய்யனும், ஆனா நமக்கு எப்படி’’ என்றாள். ‘’எங்க தாத்தாவுக்கு தாத்தா ஒருத்தர் நீலநிறமாத்தான் இருந்தாராம், அதனாலதான் எனக்கு கூட நீலகேசவனு பேரு’’ என்றான் நீலகேசவன்.

முற்றும்.

8 comments:

Anonymous said...

வித்யாசமா இருக்கு கதை. :)

Radhakrishnan said...

மிக்க நன்றி சின்ன அம்மிணி அவர்களே.

Thekkikattan|தெகா said...

//’எங்க தாத்தாவுக்கு தாத்தா ஒருத்தர் நீலநிறமாத்தான் இருந்தாராம், அதனாலதான் எனக்கு கூட நீலகேசவனு பேரு’’ //

ஹா ஹா... ஒரு சிறுகதைக்குள்ளர அறிவியல் விசயத்தை சொருகி கொடுத்திட்டீங்க, நல்லாருக்கு!

இருந்தாலும், நீலகேசவன் கடைசி வரைக்கும் தாத்தாவுக்கு தாத்தா "நீலமா"த்தான் இருந்தாருன்னு காட்டிக்கவே இல்லையே - இப்படி கவுத்துப்புட்டாரே :-)

Radhakrishnan said...

Thekkikattan|தெகா said...
//’எங்க தாத்தாவுக்கு தாத்தா ஒருத்தர் நீலநிறமாத்தான் இருந்தாராம், அதனாலதான் எனக்கு கூட நீலகேசவனு பேரு’’ //

//ஹா ஹா... ஒரு சிறுகதைக்குள்ளர அறிவியல் விசயத்தை சொருகி கொடுத்திட்டீங்க, நல்லாருக்கு!

இருந்தாலும், நீலகேசவன் கடைசி வரைக்கும் தாத்தாவுக்கு தாத்தா "நீலமா"த்தான் இருந்தாருன்னு காட்டிக்கவே இல்லையே - இப்படி கவுத்துப்புட்டாரே :-)//

ஆஹா மிகவும் அருமை தெகா அவர்களே. முதலில் எழுதியபோது 'பல கேள்விகளுக்கு வார்த்தைகளில் பதில் கிடைப்பதில்லை' அப்படினுதான் முடிச்சிருந்தேன். இதுமாதிரி வாக்கியங்கள் குழப்பத்தைத் தரும்னு கதையே இப்ப இருக்கிறமாதிரி நிறுத்திட்டேன்.

உண்மையிலேயே நீலகேசவனின் தாத்தாவுக்கு தாத்தா நீல நிறம் எல்லாம் இல்லை, நீலகேசவன் கதைவிட்டுட்டார். இந்த மரபணு மாற்றம் எப்பொழுது வேண்டுமெனிலும் எவ்வாறும் நடக்கலாமாம். இதையெல்லாம் சொன்னா எளிதாகப் புரியாதுனுதான் கதைக்கு சம்பந்தமா கதை எழுதிட்டேன். :)

மிக்க நன்றி தெகா அவர்களே.

Thekkikattan|தெகா said...

//இந்த மரபணு மாற்றம் எப்பொழுது வேண்டுமெனிலும் எவ்வாறும் நடக்கலாமாம்.//

mutation... in mitocis and meiosis level (just like albinos in human...) ?

Radhakrishnan said...

ஆஹா அருமை! மரபணு மாற்றத்தை எளிதாகப் புரியும்படி என்னால் சொல்ல இயலாது என நான் எழுதியிருக்க வேண்டும். தவறு நேர்ந்துவிட்டது.

உண்மையிலேயே இந்த மரபணு மாற்றம் பற்றி பார்த்தீர்களேயானால் மரபணுக்கள் தங்களைத் தாங்களே சரிசெய்து கொண்டே இருக்கின்றன, மேலும் சில மாற்றங்கள் புரியும்படியாகவும் இல்லை. இதைப்பற்றி நன்றாகப் படித்து ஒரு கட்டுரை எழுதிவிட வாய்ப்பு தந்து இருக்கிறீர்கள், மிக்க நன்றி தெகா அவர்களே.

Thekkikattan|தெகா said...

எழுதுங்க... எழுதுங்க மெதுவா. திரு வெ. ராதாகிருஷ்ணன் எனக்கு "இயற்கை நேசி" என்ற தளம் ஒன்றும் உள்ளது கவனித்தீர்களா?

நீங்க இப்பொழுது எந்த ஏரியாவில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் - சைட்டோலஜி?

Radhakrishnan said...

ஓ மிகவும் நல்லது தெகா அவர்களே, விரைவில் பார்த்துவிடுகிறேன். தற்போது பார்மகாலஜியும் வேதியியலும் இணைந்த துறையில் இருக்கிறேன்.