Wednesday 29 July 2009

பகவத் கீதையைத் தீண்டியபோது - 2 (தர்மம், அதர்மம்)

தர்மமும் அதர்மமும்:

பகவான் கிருஷ்ணர் எதனை தர்மம் என்கிறார்? எதனை அதர்மம் என்கிறார்? அதர்மம் தலைதூக்கும்போது வருகிறேன் என்கிறார்? அதர்மத்திற்கு என்ன வரையறை வைத்து உள்ளார்?

பிறரை துன்புறுத்தும் தீயவர்களை அழிக்கவும் வருவதாக சொல்கிறார். யார் யாரை துன்புறுத்துகிறார்கள்? எது துன்பம் எனச் சொல்கிறார் கிருஷ்ணர்? துன்பத்தின் வரையறை என எதை வைத்து உள்ளார்? அவனையே நினைத்துக் கொண்டு இருக்க வருமோ இன்னல்? கலக்கம் கொள்ள வைப்பவனும் அவனே, கலக்கம் கலைய வைப்பவனும் அவனே என்று இருக்கும்போது எதற்கு இதுபோன்று பேசுகிறான்?

தர்மம் என்பது பற்றியும், அதர்மம் என்பது பற்றியும் அறியத்தரப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் என்பதில் எப்படி மனிதன் உட்படாமல் போனான்? இறைவனை உணர்ந்து கொள்ளும் நிலை கொண்டமையாலா? இல்லை, மனிதன் தவிர்த்து அனைத்தும் இறை உணரும் தன்மை அற்றதலா?

தர்மம் என்பது வரையறுக்கப்படாத விதியாக இருக்கும்பட்சத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அதன் நிலையானது மாறும். தர்மம் என்பது பொதுவான ஒன்று. அதனை அவர் அவருக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டால் அது தர்மம் ஆகாது, அதே வேளையில் தர்மத்தை கடைப்பிடிக்கவில்லை என்பதற்காக அது அதர்மமும் ஆகாது. இதில் ஒரு முக்கியமான விசயம் என்னவெனில் தர்மம் என்பதை யாருமே இதுவரை அறிந்தது இல்லை, அறியத்தரப்பட்டதும் இல்லை. அவரவர் தனக்கேற்றப்படி வகுத்துக் கொண்டதால்தான் தர்மம் தள்ளாடுகிறது. இறைவன் என்ற ஒரு உண்மையானது எப்படி இருட்டடிக்கப்பட்டு உள்ளதோ அதே போல்தான் இந்த தர்மமும். எப்பொழுது ஒருவர் உண்மையை உணர்கிறாரோ அவர் தர்மம்தனை உணர்வார் என்பது மட்டுமே உண்மை.

ஒரு உயிர், நல்லுயிராய் வாழ வழி வகுக்க வேண்டிய உண்மைதான் உண்மையாகச் சொல்லப்படவில்லை எனவே எது தர்மம் என்பது எனக்கு இதுவரைக்கும் தெரியாது. தர்மம் எதுவென தெரியாத பட்சத்தில் அதர்மம் எப்படித் தெரியும்?

இப்பொழுது தர்மம் என்பது ஒன்றே என தர்மம், அதர்மம் எனும் இருநிலைகளை ஒன்றாய் சொன்னதால் பின்னர் ஏன் அதர்மம்தனை பிரித்து வைத்து பார்க்கிறான் அவன்? தர்மமும் அதர்மும் ஒன்றே என்றல்லவா சொல்ல வேண்டும்!

தர்மம், அதர்மத்தைப் பிரித்து உணர, உண்மையாக இருக்கச் சொல்கிறான்! உண்மை நிலை என்னவென்று உணராத/உணர தடையாய் இருக்கும் அரக்க எண்ணங்களை எரிக்கச் சொல்கிறான்! அனைத்தும் அதன் அதன் பொருட்டு நன்றாகவே உள்ளது, தர்மமாக உள்ளது என்னும் பட்சத்தில் இது சற்று இடர்ப்பாடான விசயம்தான்.

உண்மைதான் இறைவன், உண்மைதான் தர்மம்
உண்மை ஒழுங்காக உரைக்கப்படவில்லை என்பதே அதர்மம்!

3 comments:

கோவி.கண்ணன் said...

காமம், குரோதம்(வெறுப்பு/பகை), லோபம்(பகிர்ந்து கொள்ளாத), மோகம் (பேராசை), அகங்காரம் (தான் என்ற செருக்கு) என்று சொல்லப்படும் பஞ்சமா பாதகங்கள் தான் அதர்மம் என்று இந்து 'தர்மத்தில்' சொல்லப்படுகிறது. இவை ஐந்தையும் மையப்படுத்தி முறையே இராமயணம் மகாபாரதக் கதைகள் எழுதப்பட்டன, அந்த அதர்மத்தை அழிக்க கண்ணன் வந்ததாகக் கதைகளில் சொல்கிறார்கள்.

மேலே சொல்லப்பட்ட பஞ்சமாபாதகங்கள் இன்றைக்கு மலிந்து இருக்கிறதா இல்லையான்னு நீங்க தான் சொல்லனும். அதற்காக கோவியார் அவதாரமெல்லாம் செய்யமாட்டார்.

பிறர் மீது சுயநலமற்ற அன்பு, ஈகை இவையே தருமம் எனப்படுகிறது !

Radhakrishnan said...

அவை பஞ்சமாபாதகங்கள் எனச் சொல்வதே தவறாகத்தான் கருதப்படுகிறது. இதுகுறித்து பின்னர் எழுதும் எழுத்தில் வராது போனால் தனியாக எழுதுகிறேன்.

சுயநலமற்ற அன்பு, ஈகை என இவை தர்மம் என சொன்னால் இரத்தல் அதர்மம் எனக் கருதப்படும். தர்மம் செய்வதாய் நாம் நினைக்க இன்னொருவர் அதர்மத்திற்கு நாம் துணைபோகிறோம் அல்லவா?

vasantruban said...

vasantruban.blogspot.com/searc h/label/GITA

hers u can download in mp3 format