Sunday 30 August 2009

இலங்கை மாநகரம்

இதிகாச காலத்திலேயே
இன்னலுக்கு உட்பட்ட நகரம்
நாட்கள் பறந்த பின்னரும்
தொடரும் இன்னல்கள்

நிறமெல்லாம் ஒன்று தான்
நிலமெல்லாம் ஒன்று தான்
வினையேன் வந்து தொலைந்தது
வேறுபட்ட மொழி கொண்டதாலா
வேற்றுமை கண்ட இனத்தினாலா
புத்தர் தந்த எண்ணத்தில்
அன்பும் கருனையும்
தொலைந்து போனதாலா
கண்ணீர் விட்டு கதறுகின்றேன்
காக்கும் கடவுள் அவதரிப்பாராக.

தென்றல் சுதந்திரமாய்
உலாவிடும் தூய நகரம்
தீங்கினை நினையாது
தென்னை காய்த்து குலுங்கும்
கடலின் அலைகள் முத்தமிட்டு
கரையினை கட்டி தழுவிடும்
காதலர்களின் தலைநகரம்

புன்னகை சிந்தி
விருந்தோம்பலின் வெளிச்சமாய்
விளங்கிடும் புண்ணிய நகரம்
எல்லாம் கனவாய் இருக்கிறது
நேற்றைய தினமெல்லாம்
கனவாய் போகுமெனில்
இன்றைய தினமும்
இந்நகரத்தில் கனவாய் போகாதா

பூஞ்சோலையாய் இருந்த பூமியில்
பூக்களை கருக செய்வதும்
உரிமையுள்ள பங்கினை வேண்டி
உரக்க குரல் தரும்
உணர்வுகளை உரைய வைப்பதும்
கல்லிலும் மண்ணிலும் கட்டி புரண்டு
நிலவின் நிழலில்
கதைகள் கதைத்து
கனவெல்லாம் வளர்த்து
வாழ்ந்த நல்ல உள்ளங்களை
செந்நீர் வடிக்க செய்வதும்
இருக்கும் இனிய இடம் விட்டு
இன்னல் தரும் இடம் நோக்கி
விடை காணும் மனிதருக்கு
இது விதியா
அறிவில்லார் தரும் நீதியா.

அமைதி ஒரு நாள் வரும்
ஆயுதம் ஏந்தி
அவதியுரும் நாள் தொலையும்
அன்புடன் கதைத்து
ஆராத துயரம் தீரும்
கண்கள் காணும் வேற்றுமை
கடலில் கரைந்து போகும்

கரும்புகையில்லா வானத்தில்
மேகங்கள் கவிதை பாடி செல்லும்
மரத்தின் கிளையில் கனிகள்
பறவைகளுக்கு காத்து நிற்கும்
வளரும் பயிர்களுக்கு
வீரமிக்க செயல்கள் சொல்லி
வலிமையை கற்பிக்கும்
வாழ்வு நோக்கி
இன்னலையெல்லம் தாங்கி நின்று
இன்பத்தை இரு கைகளால்
அணைக்க வேண்டி
கண்ணீர் துடைக்க வழியின்றி
கலங்கி நிற்கும்
இலங்கை மாநகரம்
அமைதியின் வழியில்
சிறந்து விளங்கும்
உயிர் பெற்றதின் அர்த்தம் விளங்கும்.

------
எழுதிய ஆண்டு 2006!!!

5 comments:

தங்க முகுந்தன் said...

இலங்கை மாநகரம் பற்றி
இனிய நற்தமிழால் வரைந்த
இயல்பான கவிதைதனை வாசித்து
இடுகின்றேன் இதய நன்றியுடன்!

வளர்க உங்கள் கவிதையும் தமிழும்!

கிருஷ்ண மூர்த்தி S said...

கிளர்ந்தெழும் உணர்வுகள் அடங்கின பிறகு
வளர்ந்திடும் அமைதியின் பாசக் கரங்களிலே
அழிந்தது முடிந்தது எனப் புலம்பாமல்
இழிந்ததன் காரணம் நம்மிடம் தான்
என்பதை உணரும் வேளை வரும்
கண்ணீர் விடுவதை நிறுத்திக் காரியமாற்றும்
உறுதியும் அங்கே கூட வரும்
விடுதலை எவரோ தருவதல்ல
கும்பல்கள் கூச்சலில் விளைவதல்ல
நடந்ததை மாற்றும் வல்லமை இல்லை
நடப்பதைச் சரியாய்ச் செய்யும் வரை
நேற்றைய கதையைப் பேசுதல் பயனில்லை.

இந்தத் தருணம் செய்கிற காரியம்
எந்தவோர் இழுக்கையும் அகற்றிவிடும்
நொந்ததைப் பேசும் நிலைவிடுத்து
வந்ததும் இனி வருவதும் எதிர்கொள்ளும்
இலக்கினைக் கொள்க! இனிது வாழ்க!

Radhakrishnan said...

1. நன்றி கவிதைக்கு மிக்க நன்றி தங்க முகந்தன் அவர்களே.

2. //நேற்றைய கதையைப் பேசுதல் பயனில்லை//
நல்லதொரு வரி.

//நொந்ததைப் பேசும் நிலைவிடுத்து
வந்ததும் இனி வருவதும் எதிர்கொள்ளும் இலக்கினைக் கொள்க, இனிது வாழ்க//

மிகவும் பிரமாதம் ஐயா. ஆனால் சோகமே வாழ்க்கையாகிப் போனவர்களுக்கு என்ன பதில் சொல்ல இயலும் எவராலும்?! எழ, எழ விழவைக்கும் வீணர்களின் மத்தியில் அழுவதைத் தவிர வேறு வழியில்லையே ஐயா!

//இழிந்ததன் காரணம் நம்மிடம் தான்
என்பதை உணரும் வேளை வரும்//

இது எல்லா நேரங்களிலும் பொருந்தி வராது ஐயா! தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதெல்லாம் நம்மை தைரியப்படுத்திக் கொள்ள சொன்ன வரிகளேயன்றி அவை சத்திய வாக்கு அல்ல. ஒதுங்கி நிற்கும் நம்மை ஒரு பேருந்து வந்து இடிக்கும்போது 'நீ ஏன் அங்கு சென்று நின்றாய்? என நம்மைக் கேட்டால் என்ன சொல்வது? அது போன்ற நிலைதான் இலங்கையிலும்!

கார்த்திக் said...

அருமையான பகிர்வு..

Radhakrishnan said...

மிக்க நன்றி கார்த்திக் அவர்களே.