Monday 17 August 2009

'தோன்றாப் பெருமையனே'

இறைவன் உலகில் தோன்றவே இல்லை என்பது சத்திய வாக்கு. அதெப்படி உனக்குத் தெரியும் எனக் கேட்டால் இதை நிரூபிக்க புதிய செய்முறைப் பயிற்சி ஒன்றை எழுதி அதை விளக்கிக் கொண்டிருக்கமுடியாது. ஒன்றை விளக்க முடியாது போனால் அதைப் பற்றி விவரித்துக் கொண்டிருப்பதால் என்ன பயன்? அதுவும் அந்த விளக்கம் முழுவதையும் விளக்க முடியாது இருக்குமானால் அதனால் என்ன பயன்?

இப்படி நினைத்து இருந்தால் எந்த ஒரு விசயத்தையும் அறிந்து கொள்ள இயலாது. கண்கள் குருடாகும் வரை வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அறிவியலாளார் ஒருவரை உலகம் நினைவுப் படுத்திக் கொண்டிருக்காது.

இறைவனுக்குப் பிறப்பு இல்லை, இறப்பு இல்லை. இதுதான் உண்மை. இதில் கிருஷ்ணரின் பிறந்ததினம் என வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அப்படியெனில் கிருஷ்ணர் கடவுள் இல்லை என்றாகிவிடுகிறது. ஆம், கிருஷ்ணர் இறைவன் இல்லை. அப்படியெனில் சிவனின் திருவிளையாடல்கள் என பலவும், அவரது குழந்தைகள் குமரன், விநாயகர், அவரது குடும்பம் எனப் பேசப்படுவதால் அவரும் இறைவன் இல்லை என்றாகிவிடுகிறது. அவர்கள் மனிதர்கள், அவ்வளவே. ஆனால் நம்மில் பலரால் அவர்களை மனிதர்கள் என ஏற்றுக்கொள்ள முடிவதில்லை, காரணம் நமக்குள் விதைக்கப்பட்ட நம்பிக்கை. எப்படி நமது பெற்றோர்கள், மூதாதையர்கள் இறந்தபின்னும் வழிகாட்டும் தெய்வங்களாக இருக்கிறார்கள் என எண்ணுகிறோமோ அதைப் போலவே இவர்களும் தெய்வங்களாகப் போற்றப்படுகின்றனர்.

இதனால் தான் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வானை எனச் சொல்லி வானுறையில் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார் வள்ளுவர். ஆக, வையத்துள் இறைவன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் என்பது இல்லை என்பதாலேயே மனிதர்கள் மற்றும் விலங்குகள், தாவரங்கள் உருவாகின. இதில் மனிதனின் சிந்தனை அதிகமாகி இறைவனுக்கு ஒருத் தோற்றம் கற்பிக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது. அதன் விளைவாக வாழ்வாங்கு வாழ்ந்தாரை வையத்துள்ளே தெய்வமாகப் போற்றினர். அதன்படி சிவன், முருகன், கிருஷ்ணர் இஷ்ட தெய்வங்கள், குல தெய்வங்கள், ஊர் தேவதைகள் என எல்லாரும் அடங்குவர்.

இதில் ஹரியும் சிவனும் ஒன்று எனச் சொல்வாரும் உளர். ஆனால் இருவரும் வெவ்வேறு. எப்பொழுது ஒன்று தன்னை தனியாகக் காட்டிக்கொள்கிறதோ அப்பொழுது அது அதன் தனித்தன்மையைக் காட்ட வேண்டும்.

மேடு, பள்ளங்கள், உயர்வு, தாழ்வு உள்ள பூமி ஒரு குறிப்பிட்ட தொலைவு மேல் சென்று பார்த்தால் எல்லாம் சமமாகத்தான் தெரியும், ஆனால் சமமில்லை என்பதை உற்று நோக்கினால்தான் புரியும். அதிகமாக உற்று நோக்கினால் அதிலும் வித்தியாசம் இருக்காது. இதை உணர்த்தவே ஹரியும் சிவனும் ஒன்று எனக் கொண்டார்கள். இப்படி தோன்றாமலே இருக்கும் இறைவனுக்குத் தோற்றம் கொடுத்து அதிலும் இறைத்தூதர்கள் என பறைசாற்றிக்கொண்டு வாழ்ந்த மனிதர்கள் தங்களை சாதாரண மனிதர்கள் எனச் சொல்லாமல் சென்றது பெரும் குழப்பத்தை விளைவிக்கக் காரணம் ஆனது.

குழப்பமில்லாமல் இருக்க, எது குழப்பம் தருகிறதோ அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதுதான் முறை. ஆனால் தெளிவு கிடைக்கும் என்கிற எண்ணத்தில் தெளிவான ஒன்றை குழப்பிக் கொண்டிருப்பதில் நாம் மிகவும் முன்னேறிவிட்டோம். அதன்காரணமாகவே தோன்றாப் பெருமையனின் பெருமைகளை திருவிளையாடல்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அழிவில்லாதவனை அழிந்து பின் வருவதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இந்த தோன்றாப் பெருமையனே என எழுதிய மாணிக்கவாசகரிடம் இதுபற்றிக் கேட்டால் அதற்கு வேறு விளக்கமும் கிடைக்கும், ஏனெனில் அவரே சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருள்வது நீயே என்கிறார். இப்படி இறைவனின் மேல் கொண்டுள்ள பற்றால் எழுதப்பட்ட பல விசயங்கள் இறைவனை கேலிக்குரியப் பொருளாய் பார்க்கும்படி செய்தது எவரின் தவறு எனத் தெரியவில்லை.

இறைவன் தோற்றமில்லாதவன், பிறப்பில்லாதவன், தொடக்கமில்லாதவன், முடிவில்லாதவன், எனச் சொல்லி இன்னபிற கதைகள் சொல்லும்போது தெளிவு பிறப்பதில்லை மாறாக எதுதான் இறைவன் என்கிற கேள்வி எழுந்து விடுவதைத் தவிர்க்க முடியாது.

எனவே இனிவரும் சந்ததிகளுக்காவது எவரேனும் ஒருவர் தான் நினைத்ததை, எண்ணியதைச் சொல்லாமல் உண்மையை உரைப்பாரேயானால் இந்த உலகத்துக்கு ஒரு விடை சொல்ல முடியாத கேள்விக்குப் பதில் கிடைக்கும்.

'கண்டவர் விண்டில்லை; விண்டவர் கண்டில்லை' எனச் சொல்லும் நிலை ஏற்படாது. இப்படி இதைச் சொன்னவருக்கு எப்படி இந்த ரகசியம் தெரிந்தது என்பது ஆச்சரியம் தான்.

2 comments:

ஊர்சுற்றி said...

நல்லா எழுதி இருக்கியள். நல்லா குழப்பியும் இருக்கியள்.
உண்டா இல்லையா?

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா. சந்தேகமே வேண்டாம், உண்டு.