Thursday 20 August 2009

எழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா?!

Robin said...

moral sense - ஐ ஆன்மிகம் என்று நினைத்து எழுதியுள்ளீர்கள். தவறு. ஆன்மிகம் moral sense -ஐ பலப்படுத்தும். ஆனால் அதுதான் ஆன்மிகம் என்பது சரியல்ல.

Robin said...

வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்பார்கள். ஒன்றில் அதி தீவிரமாக ஒன்றை பின்பற்றுவது அல்லது ஒரேயடியாக வெறுத்து விடுவது. கடவுளை நம்புபவர்கள் பலரும் செய்யும் தவறுகளால் கடவுள் என்றாலே வேண்டாத பொருளை போல பார்க்கும் நிலை வளர்ந்து வருகிறது. மதங்கள் வேண்டாமென்ற நிலை மாறி இப்போது கடவுளே தேவையில்லை என்னும் போக்கு வளர்ந்து வருகிறது.


சம்பந்தபட்ட பதிவு: http://ellaam-irukkum-varai.blogspot.com/2009/08/blog-post_20.html

----------------------------------------

மிக்க நன்றி ராபின். நீங்கள் இவ்வாறு எழுதிய பின்னர் எனக்குள் இருந்த ஆன்மிகம் குறித்த தெளிவான பார்வை சற்று மங்கலாக முயற்சித்தது. ஆனால் மீண்டும் சிந்தித்த பின்னர் மிகவும் தெளிவாகத்தான் தெரிந்தது. இவ்வுலகிற்கு இறைவன் அவசியமில்லை. நாம் செய்யும் செயல்களுக்கு எல்லாம் பொறுப்பேற்றுக் கொள்ள ஒரு இறைவன் அல்ல ஓராயிரம் இறைவன் இருந்தாலும் இந்த உலகம் தாங்காது. நமது செயல்களுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும். எனது பாவங்களை, புண்ணியங்களை ஏற்றுக்கொள்ள இறைவன் யார்? இதையெல்லாம் இறைவன் செய்ய வேண்டும் என இறைவனை நான் பணித்தேனா? இது அவரின் கடமை என என்னைக் கேட்காமல் இறைவன் செய்ய முற்படுகிறாரா? இதில் ஒன்றை தீவிரமாகப் பின்பற்றுவது, அல்லது ஒரேயடியாக வெறுத்துவிடுவது எனக் கருத வேண்டாம். இறைவன் அவசியமில்லை எனச் சொல்வதற்கும் இறைவனை வெறுத்து ஒதுக்குவதற்கும் வேறுபாடு உண்டு. உங்கள் பின்னூட்டம் பார்த்தபின்னர் ஆன்மிகம் என்றால் என்ன எனத் தேடியதில் ஆன்மிகம் குறித்து எழுத்தாளர் திரு. ஜெயமோகனின் பதிவில் இருந்து சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.


தன் தளத்தில் ஆன்மிகம் என்பது ஓர் இருத்தல், நிகழ்தல் மட்டுமே. அதற்கடுத்த தளத்தில் அது ஒரு தேடல். இரு வகையிலும் அதில் நெறி என ஏதுமில்லை. ஆன்மிகம் என்றால் ‘சாராம்சவாதம்’ என்று பொதுவான பொருள். அதன்படி ஒவ்வொரு பொருளுக்கும், இருப்புக்கும் சாராம்சமான ஒன்று அதில் உள்ளது. நாம் அறிவது அச்சாராம்சத்தின் ஒரு தோற்றத்தை மட்டுமே. ஆகவே நாம் காண்பவை முழுமையான உண்மைகளல்ல, காண்பவற்றுக்கு அப்பால் முழுஉண்மை வேறு ஒன்று உள்ளது என்பதே ஆன்மிகத்தின் தொடக்கம்.


ஆன்மிகம் என்றால் இறைவாதம் அல்ல. ஆன்மிக வாதிகளில் ஒருபெரும்சாரார் சாராம்சமாக தாங்கள் உருவகிப்பதை இறைசக்தியாக உருவகம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆன்மிகம் என்றால் கடவுள்வழிபாடோ பக்தியோ மட்டுமல்ல. ஆன்மிகம் என்பது மதம் அல்ல. மதம் தன்னை மரபார்ந்த நம்பிக்கைகள் குறியீடுகள் சடங்குகள் மூலமே நடைமுறை வாழ்க்கையில் பொருத்திக் கொள்கிறது. உதாரணம் நீத்தார்சடங்கு என்பது புராதனமான ஒரு நடைமுறை மட்டுமே. அதை மதம் தனக்குரிய பொருள் அளித்து தனது வழிமுறைகளில் ஒன்றாக ஆக்குகிறது. பல நம்பிக்கைகளிலும் குறியீடுகளிலும் சடங்குகளிலும் இவ்வாறு மதம் மூலம் ஏற்றப்பட்ட ஆன்மிக அடிப்படை இருக்கக் கூடும். ஆனால் ஆன்மிகம் என்பது அவை ஏதும் அல்ல.


நாம் வாழும் இப்பிரபஞ்சம் நம் எளிய அனுபவங்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட மாபெரும் சாராம்சம் கொண்டது என்ற உணர்விலிருந்து எழுவதே ஆன்மிகத் தேடல். இதன் பின் ஒரு நோக்கம் அல்லது இலக்கு செயல்படுகிறது என உணர்வதே ஆன்மிகம். அதன் விதிகளை அறியமுயல்தலே ஆன்மிகத்தேடல்.


நான் உள்ளுணர்வை மேலும் நம்பும் படைப்பாளி. ஆகவே ஆன்மிகவாதி.


முழு பதிவினையும் படித்திட http://jeyamohan.in/?p=118


பெரும்பாலனவர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் சொன்னால் உலகம் சரியென்று ஏற்கும் எனச் சொல்ல வரவில்லை. ஒவ்வொருவரின் பார்வையும் ஆன்மிகம் குறித்து வேறுபட்டிருக்கக் கூடும். இறைவனை எதற்கெடுத்தாலும் காரணம் காட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாத சாதாரண மனிதனே நான்.

6 comments:

நிகழ்காலத்தில்... said...

//இவ்வுலகிற்கு இறைவன் அவசியமில்லை. நாம் செய்யும் செயல்களுக்கு எல்லாம் பொறுப்பேற்றுக் கொள்ள ஒரு இறைவன் அல்ல ஓராயிரம் இறைவன் இருந்தாலும் இந்த உலகம் தாங்காது.//

சரியானதே; முதலில் இறைவனை நம்மைப் போல் பார்ப்பது மாற வேண்டும், இறை என்பது ஆற்றல், ஒழுங்கு அதை உணர்த்தவே இத்தனை இறைவன்கள்,

இறையை பிடிக்க இறைவன்கள் கருவிகள், அல்லது இறையை பிடித்தபின் அதன் வெளிப்பாடுகள் இறைவன் என்றால் அது சரி, அங்கு அன்பும் கருணையும் அதுவாய் மலரும், வலிந்து காட்ட வேண்டிய அவசியம் இல்லாது பொங்கி வரும்.

ஆனால் நாம் இறைவனைப் பிடித்து தொங்குவது மட்டுமே செய்கிறோம், அதனாலேயே தற்கால ஆன்மீகம் மதிப்பிழந்து போகிறது.

நிகழ்காலத்தில்... said...

//ஆகவே நாம் காண்பவை முழுமையான உண்மைகளல்ல, காண்பவற்றுக்கு அப்பால் முழுஉண்மை வேறு ஒன்று உள்ளது என்பதே ஆன்மிகத்தின் தொடக்கம். //

//ஆன்மிகம் என்றால் கடவுள்வழிபாடோ பக்தியோ மட்டுமல்ல. ஆன்மிகம் என்பது மதம் அல்ல//

\\நாம் வாழும் இப்பிரபஞ்சம் நம் எளிய அனுபவங்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட மாபெரும் சாராம்சம் கொண்டது என்ற உணர்விலிருந்து எழுவதே ஆன்மிகத் தேடல். இதன் பின் ஒரு நோக்கம் அல்லது இலக்கு செயல்படுகிறது என உணர்வதே ஆன்மிகம். அதன் விதிகளை அறியமுயல்தலே ஆன்மிகத்தேடல். \\

துண்டு துண்டாய் பார்த்தாலும் மொத்தம் இறை இவ்வளவுதான்

பொருத்தமான கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி

வாழ்த்துக்கள்

Robin said...

//ஆகவே நாம் காண்பவை முழுமையான உண்மைகளல்ல, காண்பவற்றுக்கு அப்பால் முழுஉண்மை வேறு ஒன்று உள்ளது என்பதே ஆன்மிகத்தின் தொடக்கம்.//

அந்த முழு உண்மையை தான் கடவுள் என்கிறேன்.

//ஆன்மிகம் என்றால் கடவுள்வழிபாடோ பக்தியோ மட்டுமல்ல.// ஏன் இவரால்
'மட்டுமல்ல' என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்? ஆன்மிகம் என்றால் கடவுள்வழிபாடோ பக்தியோ அல்ல என்று ஏன் சொல்லவில்லை?

//மதம் ஆன்மிகத்துக்கான பாதையாக இருக்கலாமே ஒழிய மெய்யான ஆன்மிகம் மதத்தை மீறியதும் மதத்தின் வரையறைகளுக்கு நேர் எதிரானதுமாகும்.// மெய்யான ஆன்மிகம் மதத்தின் வரையறைகளுக்கு நேர் எதிரானது என்றால் மதம் எப்படி ஆன்மீகத்துக்கான பாதையாக இருக்க முடியும்?

//ஆன்மிகத்தின் வழிமுறை ஒவ்வொருவரிலும் மாறுபடுகிறது. ஒருவருக்கு மதவழிபாடு அதன் வழிமுறையாகலாம். ஒருவருக்கு தியானம். ஒருவருக்கு தூய ஞானம்.// தியானத்திற்கும் பிரார்த்தனைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டுமே மனதை ஒருநிலைபடுத்துவதுதான். தியானம் நாத்திகவாதிகள் கண்டுபிடித்ததல்ல என்பதை நினைவில் கொள்ளவும். இரண்டும் இறைவனுடன் தொடர்பு கொள்ள உதவும்.
தூய தியானம் என்றால் என்ன? ஒரு வேலை மெய் ஞானம் என்பது பதிலாக இருந்தால் மீண்டும் மதத்திற்குள்தான் நீங்கள் வரவேண்டியிருக்கும்.

// நான் உள்ளுணர்வை மேலும் நம்பும் படைப்பாளி. ஆகவே ஆன்மிகவாதி. எனது ஆன்மிகத்தேடல் இலக்கியத்தின் வழியாக நிகழ்கிறது.// ஊமை சென்னாய் போன்ற ஆபாச கதைகளை எழுதுவதன்மூலம் என்ன ஆன்மீகத்தேடலை நடத்த முடியும்?

Robin said...

//நாம் வாழும் இப்பிரபஞ்சம் நம் எளிய அனுபவங்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட மாபெரும் சாராம்சம் கொண்டது என்ற உணர்விலிருந்து எழுவதே ஆன்மிகத் தேடல். இதன் பின் ஒரு நோக்கம் அல்லது இலக்கு செயல்படுகிறது என உணர்வதே ஆன்மிகம். அதன் விதிகளை அறியமுயல்தலே ஆன்மிகத்தேடல். // இதன் பின் செயல்படுவதுதான் இறை சக்தி.

//இவ்வுலகிற்கு இறைவன் அவசியமில்லை.// இவ்வுலகத்தை படைத்ததே இறைவன் என்ற ஒப்பற்ற சக்திதான். தன்னுடைய சந்தோஷத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்ய நினைப்பவர்களுக்கு இறை நம்பிக்கை ஒரு தடை. இறைவன் இல்லை என்று தானும் நம்பி மற்றவர்களையும் நம்ப வைத்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உங்களை போன்றவர்கள் இப்படி நினைப்பது தவறு.

//நமது செயல்களுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும். // நமக்கு free will கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நமது செயல்களுக்கு நாம்தான் பொறுப்பு.

//எனது பாவங்களை, புண்ணியங்களை ஏற்றுக்கொள்ள இறைவன் யார்? // இறைவன் என்பவர் இந்த பிரபஞ்சத்தை படைத்தவர். மனிதர்களையும் சேர்த்துத்தான். இறைவன் படைப்பாளி என்றால் நாமெல்லாம் படைப்புகள். படைப்பாளிக்கு படைப்பு மேல் உரிமை இல்லையா?

//இறைவனை எதற்கெடுத்தாலும் காரணம் காட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாத சாதாரண மனிதனே நான். // இறைவனை எதற்கெடுத்தாலும் காரணம் காட்டுவதை நானும் ஏற்றுக் கொள்ளவில்லை. நானும் உங்களை போல சாதரண மனிதனே: தொடர்ந்து தேடலில் இருப்பவன்.

நிகழ்காலத்தில்... said...

ராபின் அவர்களின் கருத்து சாரம்சம் சரிதான்.

\\இவ்வுலகத்தை படைத்ததே இறைவன் என்ற ஒப்பற்ற சக்திதான்\\
\\இறைவன் என்பவர் இந்த பிரபஞ்சத்தை படைத்தவர். மனிதர்களையும் சேர்த்துத்தான்\\

சொல்லும் முறைதான் பல யூகங்களுக்கு இடமளித்து விடுகிறது.

படைத்தான் என்றவுடன் எதைவைத்து படைத்தான், எங்கிருந்து படைத்தான் போன்ற நண்பர்களின் கேள்விகணைகள் கிளம்பி விடுகின்றன. உடனே உருவ வழிபாட்டை குறை சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.

நாம் சொல்லும் விதத்தை கொஞ்சம் சரி செய்ய வேண்டுமே தவிர அவர்களை குறைபட்டுக் கொள்ள முடியாது.

இறை மலர்வதும், விரிவதும் அதன் இயல்பு என நான் கருதுகிறேன். அதன்படி பூமியும், பிரபஞ்சமும் இறையின் விரிவாகவே பார்க்கிறேன்.

ராபின் கருத்துடன் ஒத்த கருத்துதான் இதுவும், சொல்லப்பட்ட விதம் சற்றே மாறுகிறது. அவ்வளவுதான்.

ராபினுக்கு வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

ராபின் மற்றும் சிவா அவர்களின் கருத்துகள் மேலும் சிந்திக்க வைக்கக் கூடியதாக இருக்கின்றன.

மிக்க நன்றி ராபின் மற்றும் சிவா அவர்களே.