Monday 3 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 5

அருகில் இருந்த அறை ஒன்றில் தனது ஆடைகளை மாற்றிக்கொண்டார் கோவிந்தசாமி. அஸ்தி பையைத் திறந்துப் பார்த்தார். பாலீதின் பையில் போடப்பட்டு இருந்தது. மனம் நிம்மதி ஆனது. ஆனால் காய்ச்சல் அடிப்பது போல் இருந்தது. ஒரு காபி குடித்தால் தேவலாம் என காபி அருந்தினார். அந்த இளைஞன் இன்னமும் இவரையே பார்த்துக்கொண்டிருந்தான். மழை விட்டு இருந்தது.

அவனருகே வந்த அவர், காசிக்கு எளிதாகச் செல்லும் வழி எது எனக் கேட்டார். அந்த இளைஞன் கரக்பூர் மார்க்கமாகச் சென்றால் எளிதாகச் செல்லலாம் என சொன்னான். இருமிக்கொண்டே இருந்தார் கோவிந்தசாமி. கோவிந்தசாமிக்கு தான் கேட்டது தமிழ்மொழிதானா என வியந்தார். தம்பி நீங்க தமிழா என்று கேட்டார். ஆம் என்றான் இளைஞன். தனது பெயர் தமிழ்பாண்டே என அறிமுகப்படுத்திக்கொண்டான். கோவிந்தசாமிக்கு காய்ச்சல் அதிகமானது.

அதிக அலைச்சலும், தூக்கமின்மையும் அவருக்கு சற்று அசெளகரியத்தைத் தந்து இருந்தது. பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தார் கோவிந்தசாமி. அவரது மயக்கத்தைத் தெளிவித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் தமிழ்பாண்டே. மருத்துவர் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என சொன்னதும் கோவிந்தசாமியை தனது வீடு இருக்கும் நீலகந்த நகருக்கு அழைத்துச் சென்றான்.

புதிய நபருடன் தன் மகன் வருவதைக் கண்ட தனலட்சுமி முகர்ஜி யார் என கேட்டார். தமிழ்க்காரர், காசி செல்கிறார் சுகமில்லை என சொல்லி ஒரு அறை ஏற்பாடு செய்யச் சொன்னான். இன்று ஓய்வெடுத்துச் செல்லட்டும் என சொன்னவனை தனியாய் அழைத்து நாளை உனது தந்தைக்கு திதி நாள், அந்த விசேசம் செய்ய வேண்டும், நீ இந்த தருணத்தில் இப்படி ஒருவரை அழைத்து வந்து இருக்கிறாயே என கடிந்து கொண்டார். போகச் சொல்லிவிடலாம் என்றான் தமிழ்பாண்டே. ஆனால் தாய் இருக்கட்டும் என அனுமதி அளித்தார்.

கோவிந்தசாமி அன்று அங்கேயே தங்கினார். காலையில் கிளம்பலாம் என இருந்தவருக்கு காய்ச்சல் இன்னும் இருந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் செல்வது நல்லதல்ல என இருந்தாலும் இப்படி இங்கே தங்குவது சரியாகாது என நினைத்துக்கொண்டு கிளம்ப எத்தனித்தார். தமிழ்பாண்டே உடல்நலம் சரியானவுடன் செல்லலாம் என தடுத்துவிட்டான். அவனது தந்தையின் திதி நிகழ்வில் கலந்து கொண்டார் கோவிந்தசாமி. மனம் புதையலிலும் காசியிலும் நின்றது.

அன்றைய தினமும் அங்கேயே தங்க வேண்டி வந்தது. காய்ச்சலும் இருமலும் ஓரளவுக்கு சரியானது போல் இருந்தது. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கரக்பூர் நோக்கி பயணமானார் கோவிந்தசாமி. கரக்பூரில் இறங்கி காசி இரயிலுக்குச் செல்லும் வழியில் ஐந்து பேர் இவரை சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவர்களை கண்ட அதிர்ச்சியில் கோவிந்தசாமி உடல் வெடவெட என ஆடத் தொடங்கியது.

(தொடரும்)

No comments: