Monday 10 August 2009

கை ரேகை

விக்னேஷ் பையோ இன்பார்மடிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான். தேர்வு முடிந்து கோடை விடுமுறைக்கு தனது கிராமத்திற்கு உற்சாகமாகத்தான் கிளம்பினான் விக்னேஷ். ஆனால் கல்லூரியைவிட்டு கிளம்பும் முன்னர் அவனது நண்பன் ஜவகர் அவன் காதலிக்கும் ஜவகர்மதியை தான் திருமணம் செய்து கொள்ள முடியுமா என கை ரேகை பார்க்கும் நிபுணரிடம் செல்ல இருந்தவன் விக்னேஷைத் துணைக்கு அழைத்தான். விக்னேஷ் மறுப்பு சொல்லமுடியாமல் ஜவகருடன் சென்றான்.

கை ரேகை நிபுணர் ஜவகரின் கையைப் பார்த்து நல்ல யோகக்காரன் என கூறினார். நினைச்சது எல்லாம் நடக்கும் என சொன்னார். ஜவகர் தனது மனதில் இருக்கும் கேள்விக்கு பதில் சொல்லமாட்டாரா என அவர் சொன்ன பல விசயங்கள் பற்றி சற்று கூட கவலைப்படாதவனாக ம்ம் என சொல்லிக் கொண்டே இருந்தான். விக்னேஷ் ஆச்சரியத்துடன் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான். பொறுமை இழக்கும் தருவாய்க்குப் போனான் ஜவகர். கை ரேகை நிபுணர் ஜவகரை பார்த்து உனக்கு காதல் திருமணம் தான். நீ யாரை காதலிக்கிறியோ அந்த பொண்ணு தான் உன்னோட மனைவி. இனிமே நல்லா படிச்சி முன்னுக்கு வா. காதலியை பத்தி நீ கவலைப்பட வேணாம் என்றார். ஜவகர் சந்தோசத்தில் துள்ளி குதித்தான்.

''டேய் விக்னேஷ் நீயும் பாருடா''

''வேணாம்டா''

''இவனுக்கும் பாத்து சொல்லுங்க''

''கொடுப்பா கையை பாக்கலாம்''

''இல்லை வேண்டாம்ங்க''

''நான் நம்பிக்கை இல்லாதவங்களுக்கு பாக்கிறது இல்லை. எதிலயும் ஒரு நம்பிக்கை வேணும். அந்த நம்பிக்கைக்கு ஏத்தவாரு உழைக்கனும். இப்போ என்னை நம்பி நீங்க வரப்ப, உங்க நம்பிக்கையை நான் தப்பா உபயோகிச்சா அது என்னோட தொழிலுக்கு நான் செய்ற அவமரியாதை, அவருக்கு நம்பிக்கை வரட்டும் நான் சொல்ரேன்''

''எனக்கு நம்பிக்கை இருக்குங்க ஆனா இப்ப வேணாம்''

ஜவகரும் விக்னேஷும் கிளம்பி சென்றனர். ஜவகர் ஜவகர்மதியை காணும் ஆவலுடன் சென்றான். ஜவகர்மதியும் ஜவகருக்கு காத்து இருந்தாள். விக்னேஷ் இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்கையில் மாலையாகி போனது. கை ரேகை நிபுணர் ஆயுள் ரேகை பற்றி சொன்னது மனதில் குடைந்து கொண்டிருந்தது. கிளம்பிய உற்சாகம் வடிந்து போனது. தனது வலது கையையே பார்த்துக் கொண்டிருந்தான். காலை எழுந்ததும் அப்படியேதான் செய்தான்.

''என்னடா நேத்து வந்ததிலிருந்து வெறும் கையை அப்படி முறைச்சி பாத்துட்டே இருக்கேடா''

''ஆயுள் ரேகை ஒட்டாம பாதியிலே நிக்குதேம்மா, குறை மாசத்துல என்னை பெத்துட்டியோ''

''எல்லாரையும் போல பத்து மாசம்னு சொல்லமாட்டேன்டா, ஒன்பது மாசம் தான் உன்னை சுமந்தேன்டா, அதுக்கு மேல சுமக்கவும் முடியாதுடா, இதை குறை மாசம்னு சொல்லுவியாடா''

''இதோ பாரும்மா ஆயுள் ரேகை ஒட்டாம பாதியில நிக்குது''

''கொடுடா பாப்போம்''

''ஜோசியக்காரனை பாத்தியாடா''

''ஜவகர் பாத்தான்மா அப்போ கேட்டுட்டே இருந்தேன் ஆயுள் ரேகை நல்லா இருக்கு. வெட்டு பட்டு பிரிஞ்சி இருந்தாத்தான் பிரச்சினைனு சொன்னாரும்மா''

''சரிடா இதுக்கு எல்லாம் கவலைப் படாதேடா அம்மா நான் இருக்கேன்டா என் உயிரை கொடுத்து உன்னை காப்பாத்துவேன்டா''

''என்னம்மா நீ வசனம் எல்லாம் பேசற, நானே வருத்தத்தில இருக்கேன்''

''பட்டுக்கோட்டை பாட்டு எல்லாம் கேட்கறதில்லையாடா நீ, இப்போ அந்த பாட்டெல்லாம் கேட்க உனக்கு எங்க நேரம் இருக்குடா''

''அம்மா எனக்கும் வசனம் தெரியும் உழைக்கும் கரத்தில் ரேகை இருப்பதில்லை அழிந்துவிடும்னு''

''அப்புறம் என்னடா படுவா லீவுக்கு வந்துட்டு இப்படி உம்னு இருக்கேடா, யாரையாச்சும் லவ் பண்றியேடா''

''அதுக்குத்தான் ரொம்ப குறைச்சல் இங்கே, நான் அவரைப் போய் பாத்துட்டு வந்துரட்டா''

''இருடா நானும் வரேன், உங்க அப்பா வராரானு ஒரு வார்த்தை கேட்டுட்டு போவோம்டா''

மூவரும் கிளம்பினார்கள். கை ரேகை நிபுணரிடம் வரிசையில் ஆட்கள் காத்து இருந்தார்கள். விக்னேஷ் வரிசையில் அமர்ந்து இருந்தான். விக்னேஷ் முறை வந்தது. விக்னேஷை அடையாளம் தெரியவில்லை அவருக்கு. விக்னேஷ் அறிமுகப்படுத்திக் கொண்டான். எத்தனையோ பேர் வராங்க ஞாபகம் வைச்சிக்கிற முடியறதுல என விக்னேஷ் கையை பாத்தார். கண்கள் கலங்கியது அவருக்கு. வெளிக் காட்டிக் கொள்ளாமல் படிப்பு பணம் என எல்லா பலன்கள் சொன்னார்.

விக்னேஷ் ஆயுள் ரேகை பற்றி கேட்டான். சரியாக்கிருவோம் பரிகாரம் இருக்கு அதை உங்க அம்மா அப்பாகிட்ட சொல்றேன் என கூறினார். விக்னேஷ் வெளியில் சென்றதும் அவனது பெற்றோரிடம் பையனை மருத்துவமனைக்கு கூப்பிட்டு ஒரு செக் அப் பண்ணிருங்களேன் என்றார். அந்த கருமாரியம்மா துணை இருப்பா.

விக்னேஷை அழைத்து ரத்த பரிசோதனை செய்தார்கள். ரத்தத்தில் லுகூமியா இருக்கிறது எனவும் அது அபாயகரமானது எனவும் கூறினார்கள். இதற்கு மருந்து எலும்பு மஞ்ஞை மாற்று சிகிச்சை என சொன்னார்கள். உடனே விக்னேஷ் தாயின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டது. இருவரின் திசு அமைப்பு சரியாய் இருக்கவே சிகிச்சை முறைக்கு உட்படுத்தபட்டான் விக்னேஷ். பணம் அதிகம் செலவானது. சிகிச்சைக்கு சில மாதங்கள் ஆனது. கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. ஆறு மாதங்கள் பின்னர் விக்னேஷ் பழைய நிலைக்கு திரும்பினான்.

கல்லூரி முதல்வர் நன்றாக படிக்கும் விக்னேஷை மீதி மாதங்களில் இருந்து தொடர்ந்து படிக்க அனுமதி கொடுத்தார். அம்மா மீண்டும் தனக்கு வாழ்வு தந்தது குறித்து பூரித்துப் போனான் விக்னேஷ். சில வருடங்கள் ஓடியது. கல்லூரி படிப்பு முடிந்தது. தேர்வில் வெற்றி பெற்றான் விக்னேஷ். ஜவகரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து இருந்தான். நல்ல வேலையும் கிடைத்தது. ஜவகர் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் சொன்னார்கள். ஜவகர்மதிக்கும் நல்ல வேலை கிடைத்து இருந்தது.

ஜவகரும் விக்னேஷும் கை ரேகை நிபுணரை பார்க்க சென்றார்கள். ஜவகர் உற்சாகத்துடன் எல்லாம் கூறினான். கை ரேகை நிபுணர் சிரித்தார். நீ ஃபெயில் ஆயிருந்தா இந்நேரம் என்ன ஆகி இருக்கும்னு யோசிச்சியா, அந்த பொண்ணு ஃபெயில் ஆயிருந்தா என்ன ஆயிருந்திருக்கும்! அதை அதை சரியா செஞ்சா அது அது நல்லா நடக்கும், நல்லாத்தான் நடக்கனும் ரொம்ப சந்தோசம் என்றார்.

விக்னேஷ் சிரித்துக் கொண்டே ஆயுள் ரேகை வளர்ந்துருச்சு இப்போ, என கை ரேகை காட்டினான். நிபுணர், எல்லாம் கரு மாரியம்மா துணை இருப்பா என்றார்.

விக்னேஷ் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தனது முதல் சம்பளத்தில் நிறைய பொருட்கள் வாங்கி சென்றான். தான் நினைத்த ஒரு நல அமைப்புக்கு சிறு தொகை எழுதினான். வீடு வந்து சேர்ந்ததும் அம்மா அவனை அன்புடன் பார்த்தார்.

''என்னடா ரேகை எல்லாம் கையில காணோம்டா''

தனது கையில் நிரம்பியிருந்த பொருட்களை கீழே போட்டுவிட்டு அம்மாவை கட்டிபிடித்துக் கொண்டான் விக்னேஷ்.

முற்றும்

பின்குறிப்பு:
ஜோசியமும் கை ரேகையும் சொன்னது நடந்துவிட்டால் நிஜமாக இருக்க வாய்ப்புண்டு என கருத இடம் அளிக்கிறது. இது ஒரு அற்புதமான கலை. கற்றுத் தெரிந்தவர்களிடம் செல்பவர்கள் வளம் பெறுகிறார்கள், கற்றறியாதவர்களிடம் செல்பவர்கள் ஏமாறுகிறார்கள்.

இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என நினைத்தால், ம்ம் இருக்கட்டும். என்னைப் பொருத்தவரை இது ஒரு அழகிய விளையாட்டு, மனதுடன் விளையாடும் ஒரு உன்னத விளையாட்டு. இதனால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு எனது அனுதாபங்கள், இதனால் முன்னேற்றம் அடைந்தவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

'வாழ்க்கையே நம்பிக்கைதானே' என சொல்பவர்கள் இனிமேல் அப்படி சொல்லாமல் இருக்கத் தலைப்படுவார்களேயானால் இந்த கை ரேகையை அழித்துவிடுவோம். மிக்க நன்றி.

2 comments:

சரவணன் said...

///கை ரேகை நிபுணர் ஜவகரின் கையைப் பார்த்து நல்ல யோகக்காரன் என கூறினார்.///

அவர் இருந்த இடம் எப்படி இருந்தது? அவர் தோற்றம் எப்படி? ஆள் கறுப்பா, சிவப்பா, வயது என்ன? உடை என்ன?

தலை வழுக்கையா, நீள முடியா, சுருட்டை முடியா, தலைப்பாகையா, நரைத்த முடியா?

இதெல்லாம் சொல்லுங்களேன்... படிக்கும்போதே எங்க மனசுக்குள்ள படம் ஓடனும்! ட்ரை பண்ணுங்க... பெஸ்ட்

Radhakrishnan said...

மிக்க நன்றி சரவணன், எழுதும் நுணுக்கத்தை அறியத் தந்தமைக்கு மீண்டும் நன்றிகள். கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி விடலாம்.