Wednesday 12 August 2009

பள்ளியின் பாதையில் பள்ளங்கள்

முன்னுரை:-

'கற்றவருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு' இது கல்வியறிவை மட்டும் குறிப்பது அல்ல. கல்வியறிவுடன் விவேகமான அறிவை குறிப்பிடுவதாகும். ஒருவர் எத்துனைதான் கல்வியில் சிறந்த பெயர் பெற்று இருந்தாலும் அவரது செயல்பாடுகள் சரியாக இல்லையெனில் அவர் பெற்ற கல்விக்கு சிறப்பு இல்லை. இங்கு குறிப்பிடும் பள்ளியானது ஒவ்வொருவரும் பெறும் கல்வியுடன் கூடிய அனுபவங்களேயாகும். அப்படி அனுபவங்களை பெறும் போது பள்ளங்கள் எனும் இடர்ப்பாடுகள் வரும் அதை கடந்து அனுபவத்தின் மூலம் வெற்றியாளாரக மாறுவது சிறந்ததாக கருதப்படுகிறது.

அனுபவ அறிவு:-

'ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது' ஒருவர் பெற்ற கல்வியானது எப்படி உபயோகப்படும் எனில் இருவரிடம் சுரைக்காய் ஒன்று பற்றிய விளக்கம் தந்து அதன் கீழ் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என எழுதி வைப்போம். அதில் ஒருவர் விளக்கம் படித்து சுரைக்காயை உண்டு பண்ணி சாப்பிட்டு மகிழ்பவராகவும், மற்றவர் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என சொல்லி திரிபவராகவும் கருதுவோம். அப்படிப்பட்ட சூழலில் ஒருவர் எழுத்துக்களில் மட்டுமே இருந்த விசயத்தை செயல்படுத்தி தனது சாதகமாக்கிக் கொண்டவர், மற்றொருவர் எழுத்துக்களை மட்டுமே பார்த்து அந்த பள்ளத்தில் விழுந்து முன்னேறாமல் போனவர். ஆகவே நாம் பெறும் அனுபவத்தில் நமக்கும் மற்றவருக்கும் உதவியாக இருப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.

வறுமையின் வலி:

வறுமை நிலையில் வாடும் பலர் அவரது திறமைகள் வெளிவர முடியாத சூழ்நிலையில் அகப்பட்டு தவிக்கின்றனர். அவர்கள் கல்வி கற்பதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது. அதன் காரணமாகவே அவரது வாழ்வு பிரகாசமற்று போகிறது, ஆனால் பல சாதனையாளர்கள் வறுமையெனும் பள்ளத்தில் விழுந்துவிடாது அந்த வறுமையை தனக்கு சாதகமாக்கி அதனை விரட்டியடித்த வரலாறு உண்டு.

'வறுமையை பொறுமை இழக்கச் செய்ய துணிவும் தன்னம்பிக்கை எனும் ஊன்றுகோல் வேண்டும்' இந்த வறுமை தந்த அனுபவம் 'தெருவிளக்குகளில் படித்தவர்கள் மாபெரும் மேதைகளானார்கள்' என சொல்லும் அளவிற்கு இருந்து வருகிறது.

அலட்சியபோக்கு:-

வறுமைக்கான முக்கிய காரணம் அலட்சிய போக்கு, இது மாபெரும் பள்ளமாகும். இந்த பள்ளத்தில் விழுந்து எழாதவர்கள் எந்த ஒரு பள்ளியையும் அடைவதில்லை என்பதை அறிந்து கொண்டு அலட்சியபோக்கு தீரும்பட்சத்தில் வெற்றி பெறலாம் என்பதை உணர வேண்டும்.

'எழுமின், விழிமின்' எதிலும் கண்ணும் கருத்துடன் செயல்பட்டால் எந்த ஒரு தடையும் அகன்றுவிடும். நமது முயற்சிக்கு தடையாய் இருக்கும் விசயங்களை ஒதுக்கித் தள்ளிச் செல்வதே அனுபவத்தின் ஆணிவேர்.

சுதந்திரமற்ற தன்மை:-

எந்த ஒரு விசயத்திலும் முழு சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும். வெளிநாடுகளில் வாழும் வெளிநாட்டு மனிதர்களுக்கு அவர்களது நிறம், கலாச்சாரம், பண்பாடு என்பவை அவர்களது வாழ்க்கையில் வெற்றி பெற முடியாமல் தடுக்கி விழ வைக்கும் பள்ளங்களாகும். இவைகளை தகர்த்து எறிந்து வருபவரே பள்ளியினை அடைகிறார்கள்.

கல்வி கற்பதிலும் சுதந்திரம் அவசியமானதாக இருக்கிறது. ''சுதந்திரம் நமது பிறப்புரிமை'' என்பதை உறுதியுடன் கடைபிடித்து வருதல் பள்ளியினை அடைய வழி செய்யும்.

முடிவுரை:-

பல மனிதர்களுக்கு பள்ளிக்கான பாதையே தெரிவதில்லை. பலருக்கு பள்ளியே தெரிவதில்லை. அப்படி பள்ளியும் பாதையும் தெரிந்த சிலருக்கு பள்ளம்தான் பெரிதாக தெரிகிறது, பள்ளம் மூடும் வழி தோன்றுவதில்லை. ஆனால் வெகு சிலரே பள்ளம்தனை தாண்டியதோடு நில்லாமல் பள்ளம்தனை மூடி பாதையை சரியாக்கி பள்ளியை தானும் அடைகின்றனர், மற்றவர்களை அடைய வழி செய்கின்றனர். இவர்களின் வழி நாமும் நடப்போம்.

4 comments:

Vidhoosh said...

First Class. I really enjoyed reading every line here.

-vidhya

Radhakrishnan said...

மிக்க நன்றி வித்யா அவர்களே.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான வரிகள்..இராதாகிருஷ்ணன்

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா.