Monday 17 August 2009

உருவமில்லா இறைவன்!

இறைவனுக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை, அதாவது தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. உருவமற்றவன் எனவும் இறைவனைச் சொல்வார்கள். ஆனால் சொல்ல வந்ததை எல்லாரும் ஏற்கும் வண்ணம் எவராலும் சொல்ல இயலுவதில்லை என்பதைவிட என்னால் சொல்ல இயலுவதில்லை. பிறர் சொல்ல வருவதென்ன என என்னாலும் புரிந்து கொள்ள இயலுவதில்லை. இறைவனுக்கு உருவம் உண்டா? இல்லையா? உருவம் இருந்தால் என்ன, இல்லாது போனால் என்ன என பேசாமல் இருந்து விடலாம். இதைத் தெரிந்து கொள்வதால் எவர்க்கு லாபம் என நினைத்தால் இருக்கவே இருக்கிறது உருவ வழிபாடுகள். உருவ வழிபாடு இல்லையெனில் கோவில்கள் அவசியமற்றுப் போய்விடும். பின்னர் பக்தர்கள் தேவை பூர்த்தியடையாது. ஆக உருவம் ஒரு பெரிய விசயம் தான்.

கோவில்கள் தேவையில்லை என்பதை உணர்த்தும் வண்ணம் பூசலை நாயினார் கதையும் உண்டு. என்னவொரு பிரச்சினை, எல்லாரும் பூசலை நாயினார் ஆகிவிட முடியுமா?! சரி, உருவம் இருக்கா? இல்லையா? உருவம் இல்லை என்றே சொல்வேன் நான். ஏனெனில் எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். ஆனால் உருவம் இருப்பதாகத்தான் பலரும் சொல்கிறார்கள், பின்பற்றி வருகிறார்கள். இதில் இறைவனே இல்லை எனச் சொல்பவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?. எதுவும் இல்லை என்பதற்கும், உண்டு ஆனால் இல்லை என்பதில் இருக்கும் வித்தியாசம் போலத்தான்.

சரி, விசயத்துக்கு வருவோம்,

இறைவனை சோதி வடிவானவன் என சொல்லும்போதே உருவம் வந்து விடுகிறது!

அலகில் சோதியன் எனச் சொன்னாலும் உருவம் இருக்கிறது ஆனால் அளக்கமுடியாது எனும்போது உருவம் தலைதூக்குகிறது.

தீ க்கு உருவம் இல்லை, ஒளிக்கு உருவம் இல்லை என கொள்வது தகுமா? இதுதான் இன்னதுதான் உருவம் என வகுத்தது நாம். கண்ணுக்குத் தெரியாத காற்றுக்கும் உருவம் உண்டு. அதனால் தான் உருவமுமாய் அருவமுமாய். சாதாரண கண்களுக்குத் தெரியாத உருவத்தையே அருவம் என கொள்ளலாமே தவிர மொத்தமாகவே உருவமற்றது என கொள்ள இயலாது.

அறிவியல் விளக்கப்படி சடப்பொருளுக்கு உருவம் உண்டு. தண்ணீருக்கு தான் கொள்ளும் பாத்திரத்தின்,இடத்தின், உருவம் உண்டு ஆனால் வாயுவுக்கு உருவம் இல்லை. வாயுவுக்கு உருவம் இல்லை என சொன்னதன் காரணம் ஒரு சின்ன விசயத்தை ஒப்புமைப்படுத்திச் சொல்லமுடியாததே. அதே வாயுவை ஒரு குடுவையில் அடக்கி வைத்தால் அதன் உருவம் வராதா? வராது என்று சொல்கிறதா அறிவியல்?

மனிதன் என்றால் இப்படிப்பட்ட உருவம் என இருப்பதைப் போன்றே ஒவ்வொன்றுக்கும் ஒரு உருவம் உண்டு. வெறுமைக்கும் உருவம் உண்டு.

விளக்குதலும் விளங்குதலும் காலம் காலமாகவே பிரச்சினையாக உள்ளது. நான் விளங்கிக்கொண்ட முறை சரியென நான் சொன்னால் உலகம் மெத்த சரி என சொல்லிவிடுமா? ஒவ்வொருடைய விளக்கமும், விளங்கிக்கொள்தலும் அதனதன் உண்மை நிலையை ஒளித்து வைத்துவிடுவது மறுக்க இயலாத விசயம்.

சில கருத்துகள் ஏற்புடையவனாகவும், ஏற்புடையதற்றதாகவும் இருப்பது உலக இயல்பு. ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள முயலும்போது இதுபோன்று நிகழ்ந்துவிடுகின்றன. என்னைப் பொருத்தவரை ஒருவரின் பார்வையில் ஒரு விசயம் எப்படி அறியப்படுகிறது என்பதை உற்று நோக்குவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. என்னைப் பொருத்தவரை இறைவன் உருவமில்லாமல் தான் இருக்கிறான். இருப்பினும் உருவமில்லா இறைவனுக்கு உருவம் தந்த பெருமை நம்மைத்தான் சேரும்.

அடுத்து 'தோன்றாப் பெருமையனே' எனும் பெருமை கொண்ட இறைவனுக்குத் தோற்றம் தந்தது எங்ஙனம் என்பதைப் பார்ப்போம்.

3 comments:

நிகழ்காலத்தில்... said...

\\என்னைப் பொருத்தவரை ஒருவரின் பார்வையில் ஒரு விசயம் எப்படி அறியப்படுகிறது என்பதை உற்று நோக்குவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது.\\

உண்மைதான். ஒருவேளை நாம் அறிந்தது சரியான கோணமா என சரிபார்க்கவும் உதவும்.


\\அடுத்து 'தோன்றாப் பெருமையனே' எனும் பெருமை கொண்ட இறைவனுக்குத் தோற்றம் தந்தது எங்ஙனம் என்பதைப் பார்ப்போம். \\

வரவேற்கிறேன்...

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா. இறைவன் பற்றி முழு உண்மையைத் தெரிய வழியின்றிப் போய்விட்டது எனக்கு. வழி தேடும் வழி தெரிந்தால் சந்தோசம் கொள்வேன்.

Radhakrishnan said...

இணைத்துவிட்டேன் ராம் அவர்களே. மிக்க நன்றி. ஆனால் அனைத்துத் திரட்டிகளிலும் என் இடுகையை இணைக்க இயலுமா எனத் தெரியவில்லை.