Friday 14 August 2009

அறுபதாம் கல்யாணம்

'அப்பா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்து பார்க்கனும்' ஆவலுடன் நம்பெருமாள் வந்து சொன்னான்.

அப்பா, பார்த்தசாரதி, அவனை மேலும் கீழும் ஏறிட்டுப் பார்த்தார். 'அதெல்லாம் ஒண்ணும் வேணாம்பா, எதுக்கு வீண் செலவு ஆர்ப்பாட்டம் எல்லாம்' என மனதில் வேறொன்றை நினைத்தவராய்
அதைச் சொல்லாமல் தன் மகனிடம் தனது விருப்பமின்மையைச் சொன்னார்.

நம்பெருமாள் அம்மாவிடம் சென்று 'அம்மா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்யலாம்னா அப்பா வேணாம்னு சொல்றாரும்மா, நீதான் சொல்லி சம்மதம் வாங்கித் தரனும்மா' என்றான்.

அம்மா 'அதெல்லாம் எங்களுக்கு வேணாம்பா' என மறுத்தார். நம்பெருமாள் தன் மனைவியிடம் சென்று விசயத்தைச் சொன்னான். 'என்னங்க பண்றது' எனப் புரியாமல் விழித்தாள்.

வீட்டுக்கு மூத்தவனான நம்பெருமாள் தனது இரண்டு சகோதரர்களிடமும், இரண்டு சகோதரிகளிடமும் சென்று தனது விருப்பத்தையும் தாய் தந்தையர் சம்மதம் தரவில்லையென்றும் கூறினான்.

ஒருவேளை பிரபுவுக்கு கல்யாணம் ஆகட்டும்னு நினனக்கிறாங்களோ என நம்பெருமாள் தமக்கை மீனாட்சிதான் சொன்னாள்.

கடைசிப்பையன் பிரவுக்கு மட்டும்தான் திருமணம் செய்ய வேண்டிய பாக்கி. அனைவர்களுக்கும் திருமணம் பண்ணியாகிவிட்டது.

வீட்டுக்கு மூத்தவன் நம்பெருமாள் பெற்றோர்களுடனே துணையாய் வாழ்ந்து வந்தான்.

'அப்படின்னா பிரபுவுக்கு கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ணலாம்' என பிரபு காதல் புரிந்து கொண்டு இருந்த பொண்ணையே சம்மதம் பேசி மூன்றே மாதத்தில் திருமண வைபவம் நடந்தேறியது.

இம்முறை அனைவரும் சென்று பெற்றோரிடம் கேட்டனர். முடியவே முடியாது என இப்போதும் மறுத்துவிட்டனர். நம்பெருமாளுக்கோ மனது மிகவும் சங்கடமாகிப் போனது. அறுபதாம் கல்யாணம் நடக்கவே இல்லை.

வருடங்கள் உருண்டோடின. பார்த்தசாரதி இயற்கை எய்திய தினத்தன்றே அவரது மனைவி பாரிஜாதமும் இயற்கை எய்தினார்.

புருசோத்தமன் நம்பெருமாளின் நண்பன். புருசோத்தமன் தனது 7 ஆண்டுகால திருமணத்தை கேள்விக்குறியாக்கும் வண்ணம் சிற்சில காரணங்களைக் காட்டி அவனது மனைவியிடம் விவாகரத்து வாங்கப் போவதாக நம்பெருமாளிடம் வந்து சொன்னான். நம்பெருமாள் புருசோத்தமனை தனது வீட்டிற்கு அழைத்து வந்தான்.

அறுபதாம் கல்யாணம் கூட ஒருவிதத்தில் இரண்டாவது கல்யாணம் என்று செய்ய மறுத்த தனது தந்தை பார்த்தசாரதியின் படத்தின் முன்னால் அவனை நிறுத்தி தனது தந்தையின் வாழ்க்கையைச் சொல்லி 'வாழ்க்கைன்னா என்னனு புரிஞ்சிக்கோ' என்றான். புருச இலட்சணம் உணர்ந்தவனாய் புருசோத்தமன் வணங்கி நின்றான்.

முற்றும்

No comments: