Thursday 6 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 10

அந்த நபர் தன்னிடமிருந்த வரைபடத்தை எடுத்தார். எடுத்தவர் கோவிந்தசாமியிடம் நாம் இருக்கும் இடம் காசி இரயில்வே நிலையம். இங்கிருந்து தெற்கு நோக்கிச் சற்று தொலைவு சென்றால் சித்தர் இருக்கிமிடம் வரும். அவரைப் பார்த்துவிட்டு புதையல் தேடலாம் என்றார். வரைபடத்தை பார்த்த கோவிந்தசாமி உற்சாகமானார்.

இதோ கோவில் இருக்கிறது, அதுவும் கங்கையாற்றுக்கு அருகில் என சந்தோசத்தில் சொன்னார் வரைபடத்தை சுட்டிக்காட்டி. அந்த நபரும் மிகவும் உற்சாகமானார். ஆமாம் அந்த சித்தர் இருக்குமிடத்துக்கு அருகில்தான் கோவில் இருக்கிறது, மிகவும் வசதியாக போய்விட்டது என்றார் அந்த நபர். ஆம் அந்த கோவில்தான் என எப்படி சொல்கிறீர்கள் என கேட்டார். என் மனதில் பட்டது, கோவிலை நேரில் பார்த்தால் சொல்லிவிடுவேன் என்றார் கோவிந்தசாமி.

இருவரும் காசி இரயில்வே நிலையத்தில் உணவருந்திவிட்டு நடக்கத் தொடங்கினார். எழில் கொஞ்சும் காசி. வானம் தூறலிட்டது. சில்லென்ற காற்றும், மனிதர்களும் மனதை மயக்கியது. உங்களுக்கு ஒன்று தெரியுமா, குழந்தை இல்லாதவர்கள் இங்கே வந்தால் அவர்களுக்கு குழந்தை பெறும் பாக்கியம் கிடைப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இதனை கேட்கும் மற்றவர்களுக்கும் அறிவியல் அறிந்தவர்களுக்கும் எப்படி இப்படி மக்களை முட்டாளாக்குகின்றனர் என எண்ணம் வரும், ஆனால் மனதை நம்பி வருபவர்களுக்கு, மனதில் எண்ணம் வேரூன்றி இங்கெ வந்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் எனும் விடாத நம்பிக்கை அவர்களது ஆசையை நிறைவேற்றி விடுகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை என்றார் அந்த நபர்.

கோவிந்தசாமிக்கு அவர் சொன்னது ஆச்சரியமான விசயமாக இருந்தது. கோவில் குளங்கள் எனவும் மரத்தில் தொட்டில் கட்டி விட்டுச் செல்பவர்கள் எனவும் கண்டு இருக்கிறார், தனது மகளுக்கு கூட சில வருடங்கள் குழந்தை இல்லாமல் பின்னர் கோவில் குளங்கள் எனச் சென்ற பின்னர் குழந்தை பெற்றதை நினைவு கொண்டார். அத்தருணத்தில் அந்த நபர் பல மரங்களுக்கு மருத்துவ குணம் உண்டு. நமது நாட்டில் பல கடவுள்கள் மரத்தின் கீழே தான் அமர்ந்து இருக்கிறார்கள். கடவுளைச் சுற்றி வரும்போது அந்த மரத்தையும் சுற்றி வருவதால் நமது உடல் புதுவித சக்தி பெறுகிறது என்பது உண்மை என்றார்.

கோவிந்தசாமி இத்தனை வருட வியாபாரத்தில் அறியாத பல செய்திகளை அந்த நபர் மூலம் தெரிந்து கொண்டார். அந்த நபரின் நட்பு கோவிந்தசாமிக்கு பெரும் மகிழ்வைத் தந்தது. கங்கை நதியின் ஓரத்தில் நடக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது கோவிந்தசாமி தான் இந்த ஆஸ்தியை கரைத்துவிட வேண்டும் என சொல்லி அங்கே அமர்ந்து சில சடங்குகளை அங்கிருந்த ஒருவரை அழைத்துச் செய்தார். அவர் அதுபோல் செய்பவர் போலும், அழைத்துக் கேட்டவுடன் நானே செய்வேன் என செய்து முடித்தார். கங்கை நதியில் ஆஸ்தியை கரைத்தார்.

அந்த நபர் கோவிந்தசாமியை நோக்கி இதுபோன்றச் செயல்களால் கங்கை நதி அசுத்தம் அடைகிறது என சொல்கிறார்கள். ஆனால் கங்கை நதி தன்னுடன் பல மருத்துவ மூலிகைகளுடன் வருகிறது, அவ்வாறு வரும்போது இவைகளால் கங்கை நதி அசுத்தம் அடைவதில்லை, மாறாக இந்த விசயங்கள் தூய்மையடைகின்றன. மேலும் கங்கை நதியில் குளித்தால் மோட்சம் என்றெல்லாம் சொல்வது இந்த கங்கை நதியில் உள்ள மூலிகைகள் நம்மேல் படுவதன் காரணமாகத்தான். மொத்த அசுத்தங்களை அடித்துச் செல்ல கங்கை வெள்ளமாக வருவதுமுண்டு என்றார்.

மேலும் நடந்து செல்கையில் இதோ சித்தர் இருக்கும் பகுதி என அந்த நபர் ஆனந்தம் கொண்டார். சில சந்துகளில் எல்லாம் நுழைந்து சென்றார். இடம் பரிச்சயப்பட்டவர் போல் செல்கிறாரே என கோவிந்தசாமி கேட்டார். எல்லாம் முன்னேற்பாடாக இந்த இடத்தை எல்லாம் முன்னரே அறிந்து கொண்டேன். ஏனெனில் இங்கு வந்தபின்னர் சிரமம் இருக்கக்கூடாது இல்லையா என்றார் அவர். கோவிந்தசாமி நான் கனவினை மட்டுமே நம்பி வந்தேன், எந்த முன்னேற்பாடும் இல்லை எனச் சொன்னார். சிரித்தார் அந்த நபர்.

சித்தர் இருக்கும் இடத்தை அடைந்தார்கள். ஒரு சின்ன குடிசை இருந்தது. அப்பொழுது ஒருவர் அங்கே நடந்து வந்தார். குடிசைக்கு அருகில் இருக்கும் இவர்களை வாருங்கள் என குடிசைக்குள் அழைத்துச் சென்றார். கோவிந்தசாமி தன்னுடன் வந்த நபரிடம் நாம் வருவது இவருக்கு எப்படித் தெரியும்? என்றார். சித்தர்கள் எல்லாம் அறிவார்கள், ஆனால் அறியாததுபோல் இருப்பார்கள், நமக்கு அவர்கள் அறிந்ததைப் போல் உணர வைப்பார்கள் என மெல்ல சொன்னார்.

குடிசைக்குள் நல்ல வாசனை அடித்தது. சிறு விளக்கு ஒன்றை ஏற்றி வைத்தார். இருவரையும் அமரச் சொல்லிவிட்டு குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்தார். தண்ணீர் மிகவும் சுவையாக இருந்தது. தண்ணீர் சுவையாக இருக்கிறதே என கேட்ட கோவிந்தசாமிக்கு சில மூலிகைகள் போட்டு இருப்பதாக சொன்னார் அந்த சித்தர். தண்ணீர் குடித்ததும் உடல் புத்துணர்வு பெற்றதுபோல் உணர்ந்தார் கோவிந்தசாமி.

அந்த நபர் தான் உலோகங்களை தங்கமாக மாற்றும் முறை அறிய வந்ததாகவும், கோவிந்தசாமி புதையலைத் தேடி வந்ததாகவும் சொன்னார். புதையலைத் தேடியா எனக் கேட்டார் சித்தர். ஆம் இவர் ஒரு கனவினை கண்டு இருக்கிறார், அதன்மூலம் வந்து இருக்கிறார் என்றார் அந்த நபர் மேலும். அதற்கு சித்தர் உன் மனது சொல்லும் விசயம் கேட்டு இவ்வளவு தூரம் வந்து இருக்கிறாய். உன்னை பாராட்டுகிறேன். மனது நம்மை நிச்சயம் நல்வழி நடத்திச் செல்லும், மனது சொல்லும் விசயத்தை மிகவும் உன்னிப்பாக கவனித்துச் செயல்பட வேண்டும். எந்த ஒரு சந்தேகம் வந்தாலும் மனது தீர்த்து வைத்துவிடும். தூய தெளிவான சிந்தனை என்பது எப்போதும் வேண்டும் என்றார் அந்த சித்தர். புதையலை நீ நிச்சயம் கண்டுபிடித்துவிடுவாய் என்றார் மெல்லிய புன்னகையுடன். கோவிந்தசாமிக்கு சித்தரின் பேச்சு சந்தோசம் தந்தது.

சித்தர் அந்த நபரை நோக்கி அனைத்து உலோகங்களையும் தங்கமாக மாற்றலாம். இந்த அறிவியல் எனக்கு என் தந்தை சொல்லித் தந்தது, எனது தந்தைக்கு எனது தாத்தா சொல்லித் தந்தது, இப்படியே பின்னோக்கிப் போனால் இந்த உலகம் உருவாக்கியவன் சொல்லித் தந்தது என்றார். எப்படி செய்வது என்றுதான் அறிய வேண்டும் நான் என்றார் அந்த நபர். அதற்கு சித்தர் யார் மண்ணுக்கு தங்கம் செய்து கொள்ள கற்றுத் தந்தது. ஒரு உலோகத்தில் இருந்துதான் தங்கம் உருவாகிறது. இப்படி தானாக உருவாகிக் கொள்ளும் தங்கம்தனை நாமாக உருவாக்குவது சரியில்லை அல்லவா என்றார் சித்தர்.

நீங்கள் அந்த கலை அறிந்தவர் என எனது நண்பர் கேள்விப்பட்டு இருக்கிறார் அதுதான் அந்த கலையை கற்றுக்கொள்ள வந்தேன் என்றார். சித்தர் தனது முகவாயைத் தடவிக் கொண்டார். ஒரு தனிமத்தில் குறிப்பிட்ட விசயங்கள் சேரும்போது அந்த தனிமம் அந்த தனிமமாக இருப்பதில்லை வேறொரு தனிமமாக மாறுகிறது ஆனால் அது அத்தனை எளிதாக நடப்பதில்லை. இந்த ரசாயன வினைகள் இயற்கையில் சாதாரணமாக நடந்தேறிவிடுகிறது, அதை நாமாகச் செய்தால் பல விளைவுகளை உண்டுபண்ணுகிறது. பொதுவாக பெரிய தனிமம் ஒன்றை நாம் தங்கமாக மாற்றும்போது ஆல்பா கதிர்கள் வெளியேறும். இவ்வாறு ஒவ்வொரு தனிமமாய் மாறி தங்கம் வரும். இதற்கான ரசாயனமும் மூலிகைகளும் உண்டு என்று சொன்னவர் கையில் ஒரு உலோகத்தை எடுத்தார். ஒரு பாத்திரத்தில் போட்டார். ரசாயனம் போன்ற ஒரு குடுவையையும் சில மூலிகையையும் எடுத்து வந்தார். வாருங்கள் போவோம் என அழைத்தார் சித்தர். கோவிந்தசாமிக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அந்த நபர் மிகவும் உற்சாகமானார்.

(தொடரும்)

No comments: