Thursday 13 August 2009

அழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்

முன்னுரை:-

'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாதிருத்தல் வேண்டும்'

நல்லதொரு சிந்தனையும் எண்ணமும் உடைய மனிதர்களே நமக்கு எந்த ஒரு தருணத்திலும் துணையாக இருப்பார்கள். எண்ணமும் செயலும் வெவ்வேறாக உடையவர்கள் நமக்கு பெரும் துன்பம் இழைப்பவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்ட மனிதர்களை அடையாளங்கண்டு வாழ்க்கையை செம்மையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

இதயமும் இதழும்:

இதயம் ஒன்று எண்ணித் துடிக்க
இதழ் ஒன்றை சொல்லி சிரிக்க
மனிதன் போடும் போர்வையில்
புனிதம் மூச்சிரைத்துப் போனது

என்பான் ஒரு கவிஞன். முதன்முதலில் கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் இதயம் தான் எல்லா விசயத்தையும் நடத்தி வைக்கிறது என சொன்னார். அதன் காரணமாகவே இதயம், மூளையை விட அதிக அந்தஸ்து பெறத் தொடங்கியது. காவியங்களும், காதல் வேள்விகளும் இதயத்தை அடிப்படையாக வைத்தே புனையப்பட்டன. இதயம் நமது உறுப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதில் இதழ்கள் பெறும் பங்கு வகித்தன. இதழ்கள் புன்னகையை வெளிப்படுத்துவதுன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பெற்றுக்கொண்டன. இதன் மூலம் இதயத்தை உரசுவது போன்ற உணர்வு, காதலர்கள் தரும் இதழ்கள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் ஏற்படுத்தும் என அறியாமை உணர்வு ஏற்பட்டது.

கருணைக்கும் கொண்ட வெறுப்புக்கும் இதயம் பங்கெடுத்துக்கொண்டது. தான் துடித்துக் கொண்டிருப்பது போதாதென மனிதர்களின் சொல்லாட்சியால் இதயம் மேலும் துடித்து துவண்டது. இதழ்களோ வர்ணம் பூசிக்கொண்டன.

அக முக:

நட்பினை பற்றி குறிப்பிடும்போது முகம் மட்டும் சிரிக்கும் நட்பானது நட்பில்லை, நெஞ்சத்திலிருந்து சிரிப்பதுதான் நட்பு என திருவள்ளுவரின் திருக்குறளிலிருந்தும் நாம் இதயம் பற்றி அறியலாம். மேலும் இதயத்திலிருந்து சொல்கிறேன் என இதயத்தில் கை வைத்து பேசுவதும் வழக்கமாகிவிட்டது. அப்படிப்பட்ட இதயம் எப்படி இருக்க வேண்டும்? மிகவும் சுகாதாரமாக, சுறுசுறுப்பாக, உண்மையின் சொரூபமாக இருக்க வேண்டும். எப்பொழுது அப்படி இருக்கும்? அன்பே உருவாக இருந்தால் இதயம் அந்த நிலையில் இருக்கும்.

இன்றைய நிலை எப்படி இருக்கிறது? எப்பொழுது யாரை வீழ்த்தலாம் எனும் வியாபார நோக்கம். இந்த நிலையில் இதயமானது அழுத்தம் கொள்கிறது என்பதை அறிபவர்கள் குறைவு. அழுத்தம் கொண்டே இதயம் அழுகிப்போய் விடுகிறது. இவர்கள் இதயத்தில் எதிரிகளாக பாவித்துக்கொண்டவர்களை, இதழ்கள் மூலம் நண்பர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால் பெரும்பாலான நல்ல இதயங்கள் இந்த இதழ்களை உண்மையென நம்பிவிடுவது காலத்தின் கொடுமையாகும். இந்த நல்ல இதயங்களின் செயல்பாடுகள் அழுகிப்போன இதயத்தை சீர்திருத்த முயற்சித்தாலும் முடிவதில்லை. மாறாக அந்த இதழ்களை நம்பி உறவு கொண்டது மூலம் இந்த நல்ல இதயங்கள் பாழ்பட்டு போகின்றன.

இதனை தடுப்பது எவ்வாறு? இப்படிப்பட்ட அழுகிய இதயங்களை உடையவர்களை இனம் கண்டு கொள்ள வேண்டும். பிறர் துன்பப்படும்போது இவர்களது செயல்பாடுகளை நாம் கவனித்தால் நாம் இவர்களை இனம் பிரித்துக் கொள்ள முடியும். ''சேரும் இடம் அறிந்து சேர்'' என்பதை நாம் அறிய வேண்டும்.

மகாபாரதமும் இராமாயணமும் சொல்ல வந்தது இந்த அழுகிய இதயங்களையும் நகைக்கும் இதழ்களையும் பற்றித்தான். அத்தனை பெரும் காவியம் சொல்லியும் நம்மிடத்தில் இன்னும் இதுபோன்ற மனநிலை உடையவர்கள் வாழ்வது நமக்கு பெரும் அவமானமாகும். அவர்களிடத்தில் சிக்கிக் கொள்ளாது நாம் அவர்களை திருத்த வழி செய்ய வேண்டும்.

முடிவுரை:

'இன்னா செய்தாரை ஒறுத்தல்' என்பதற்கேற்ப நாம் அனைவரையும் சமமாக பாவித்து தீங்கில் கிடந்து உழல்பவரை காப்பாற்றி இதயமும் இதழ்களும் நகைக்கச் செய்வது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். இதழ்கள் மட்டும் நகைக்கிறது என ஒதுக்கி விடுதல் சமுதாய சீரழிவினை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும்.

2 comments:

Vidhoosh said...

:) 'சேரும் இடம் அறிந்து சேர்''

good posting. sorry i am not able to comment in tamil in your webpage.:(

Radhakrishnan said...

மிக்க நன்றி வித்யா, என்னப் பிரச்சினையென்றுத் தெரியவில்லை.

நான் கூகிள் குரோம் உபயோகித்து, இ-கலப்பை மூலம் எழுதி வருகிறேன்.