Friday 7 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 11

உற்சாகமான அந்த நபர் தான் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்திற்கு இன்று பலன் கிடைத்துவிட்டது என்றார். சித்தர் மெல்லியதாய் புன்னகைத்துக் கொண்டே தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வமும், வெற்றியடைந்து விடவேண்டும் எனும் முயற்சியும் மட்டுமல்லாது தோற்றுவிடுவோம் என்கிற எச்சரிக்கையும் அவசியம் அப்பொழுதுதான் ஒரு விசயத்தில் உண்மையான வெற்றி காணமுடியும். ஒரு விசயத்தில் நமது முழு கவனமும் இருக்கும்போது சுற்றி நடக்கும் விசயங்களிலும் நமது கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்றார். இருவரும் கேட்டுக் கொண்டார்கள்.

தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில் சித்தர்கள், முனிவர்கள் ஏன் எல்லாம் துறந்து விடுகிறார்கள் எனக் கேட்டார் கோவிந்தசாமி. சித்தர் நின்றார். என்னை என்னவாக நினைக்கிறீர்கள் என திருப்பிக் கேட்டார் சித்தர். நீங்கள் சித்தர் என்றார் கோவிந்தசாமி. எனக்கு மனைவியும் உண்டு, பிள்ளைகளும் உண்டு என சொல்லிக்கொண்டு நடந்தார் சித்தர். அந்த நபருக்கே ஆச்சரியமாக இருந்தது. யாரும் எதையும் துறக்கத் தேவையில்லை என இளந்துறவி ஒருவர் எழுதிய கவிதையினை சொன்னார்.

''உங்கள் கண்களுக்கு
பொம்மைகளுடன் விளையாடும் வயதுதான் எனக்கு
என் மனதில்
பொம்மைகளை தூரம் தள்ளிவைக்கும் பக்குவம் எனக்கு

எவரும் துறக்கச் சொல்லி துறப்பதில்லை
வேண்டியே வெறுத்து எதுவும் ஒதுக்குவதில்லை
பொருட்கள் வேண்டி சிறக்கும் நீங்கள்
பொறுப்புடன் வளர்கிறேன் வந்து பாருங்கள்

புன்னகை ஏந்தியே பூஜிக்கின்றேன்
புரியும் வாழ்க்கையதை
பள்ளி தொடாமல் பயில்கின்றேன்
இறை உணர்வினால் மட்டுமே உயிர் சுமக்கின்றேன்
சுமக்கும் உயிரை அவனுக்கே சமர்ப்பிக்கின்றேன்

உங்கள் வாழ்க்கைக்கு நான் வருவதில்லை
எந்தன் வாழ்க்கையில் உங்களுக்கு சுகமில்லை
பொன்னும் பொருளும் பேணியும் - அன்பிற்கு
எந்தன் வாசல் தொட்டு வணங்கிச் செல்வீர்

என்றும் துறந்து விடாத ஒன்றில்
எந்தன் மனதின் பற்று வைத்தே மகிழ்கின்றேன்
துறந்துவிடும் விசயத்தில் பற்று வைத்திடும் உங்களுக்கு
நானா தெரிகிறேன் துறவியாய்?''

இல்லறத்தில் இருந்துகொண்டே இறைவனை காண்பதுதான் நல்லறம் என சிரித்தார். ஒரு கட்டிடத்தை அடைந்தார்கள். கதவை திறந்து உள்ளே சென்று விளக்கு ஏற்றினார் சித்தர். உள் அறையில் தரையானது வெறும் மணல் தரையாக்வே இருந்தது. ஆழமாக தோண்டினார். பாத்திரத்தை உலோகத்துடன் உள்ளே வைத்தார். ரசாயன குடுவையை உள்ளே மெதுவாக வைத்தார். மூலிகைகளையும் சேர்த்துப் போட்டார். ஒரு சிறிய கல் எடுத்தவர் ரசாயன குடுவை மீது போட்டார். குடுவை உடையும் சப்தம் கேட்டது. வேகமாக மணலை அள்ளி மூடினார். மூன்று நாட்கள் கழித்து வந்து பார்ப்போம் என உள் அறையை மூடிவிட்டு வந்தார்.

உலோகம், ரசாயனம், மூலிகை பெயர் கேட்டார் அந்த நபர். காரீயம், பாதரசம், தங்க மூலிகைகள் என்றார் சித்தர். அந்த நபர் அவசர அவசரமாக எழுதினார். நீங்கள் புதையலைத் தேடிவிட்டு என்னை வந்து பாருங்கள் என கதவை மூடிவிட்டு நடந்தார் சித்தர்.

(தொடரும்)

No comments: