Thursday 27 August 2009

திரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்!

பன்னிரண்டு வயதில் எங்கள் கிராமத்தில் அமர்ந்து எழுதப்பட்ட ஒரு கதை. நானும் எனது மாமா மகனும் அந்த கதையை எட்டு காட்சிகளுடன் எழுதினோம். கதையின் தலைப்பு மறந்துவிட்டது. திரைப்பட இயக்குநர் திரு.கே.பாலசந்தர் அவர்களுக்கு அனுப்பலாம் என முடிவு செய்தோம். ஏதோ ஒரு காரணத்தினால் அந்த நினைப்பை அப்படியே விட்டுவிட்டோம். இப்பொழுது அந்த கதை எங்கே போனது எனத் தெரியாது.

எனது மாமா மகனுக்கு இசைத்துறையில் மிகவும் ஆர்வம். கவிதைகளும் நன்றாக எழுதுவான். திரைப்படத் துறையில் சேர வேண்டும் எனும் ஆர்வம் அவனுக்கு இருந்தது. எனக்கு ஒரு பாடலாசிரியாராக வேண்டும் எனும் எண்ணம் இருந்தது.

எனது அண்ணன் கிராமத்தில் இருக்கும் சாவடி எனப்படும் ஒரு இடத்தில் வேஷ்டியைக் கட்டித் தொங்கவிட்டு ஃபிலிம் ரோல் மூலம் படம் காட்டியதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் மிகவும் வித்தியாசமாக நால்வர் சேர்ந்து ஒரு கதையை எழுதி பேசி டேப்பில் பதிவு செய்து பலருக்குப் போட்டுக் காட்டினோம். பொறுமையாகக் கேட்டவர்கள் 'மிகவும் நன்றாக இருக்கிறதே' எனப் பாராட்டுத் தெரிவித்தார்கள். இதனை உற்சாகமாக எடுத்துக் கொண்டு 'ஜெராகாரா புரொடக்ஸன்ஸ்' என நாங்களாகவே பெயர் சூட்டினோம். நால்வரின் பெயரில் முதல் எழுத்து மட்டும் கொண்டது அது. அந்த பெயர் மூலர் ஒரு கதையை வெளியிடுவதாக ஊரில் கைப்பட எழுதிய சின்ன சின்ன போஸ்டர் ஒட்டினோம். ஆவலுடன் பலரும் வந்தார்கள். நன்றாக இருந்தது எனவும் சொன்னார்கள்.

இப்படியே திரைப்படத் துறையில் எப்படியாவது காலடி பதித்திட வேண்டும் எனும் ஆவலில் திரைப்பட இயக்குநர் திரு.ஆபாவாணன் அவர்களுக்கு ஆறு பாடல்களை எழுதி அனுப்பினோம். அதில் நடிகர் திரு.விஜயகாந்த் அவர்கள் எனக்கு மாமா, மற்ற மூவருக்கும் சித்தப்பா என அறிமுகப்படுத்தி எனது மாமா மகன் எழுதிட அனுப்பினோம். பதிலே வந்தபாடில்லை.

படிப்பு விசயமாக அவரவர் நாங்கள் பிரிந்து சென்றிட புரொடக்ஸன்ஸ் பண்ணாமலேயே முடங்கிப் போனது. நான் வாடாமலர் எனும் கதையை எழுதினேன். அதனை தையல் தைப்பவரிடம் கொடுத்துப் படித்து கருத்துச் சொல்லக் கேட்டதும், அவரும் ஆவலுடன் வாங்கினார். இரண்டு வாரம் கழித்துச் சென்று கேட்டதும் பேப்பர் நன்றாக இருந்தது, அதனால் அதை துணி அளவுக்கு வெட்ட உபயோகப்படுத்திக் கொண்டேன் என்றார். எனக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது. வயது மூத்தவர் என்பதால் எந்தவொரு பதிலும் பேசாமல் வந்துவிட்டேன். நகல் எடுக்கும் வழக்கமில்லாததால் ஒரு கதை காணாமலேப் போனது. சில நாட்கள் பின்னர் அவராகவே என்னிடம் வருத்தம் தெரிவித்தார். துணி உருவாக்கும் அவருக்கு ஒரு கதைப் படைப்பு பெரிதாகத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்.

நான் எழுதித் தந்ததை மேடையில் பேசி முதல் பரிசு வென்றான் நண்பன். கல்லூரியில் கவிஞனாகப் பார்க்கப்பட்டேன். ஆனால் அதெல்லாம் எத்தனை பொய் என்பது பலரின் படைப்புகளை இப்போதுப் பார்க்கும்போதும் சரி, எனது கவிதைகள், கவிதைகளே அல்ல என விமர்சனம் செய்த ஒரு இலக்கிய ஆர்வலரின் விமர்சனம் உண்மை தெரியவைத்தது. இப்போது கவிதைகள் எழுதுவதை நிறுத்தி வைத்திருக்கிறேன். முதல் கவிதைத் தொகுப்பு வெளிவரட்டும் எனும் ஆர்வம் தான்.

நான் இலண்டன் வந்தபின்னர் எனது மாமா மகன் திரைப்படத் துறையில் சேர்ந்திட முயற்சி எடுத்து பின்னர் சரிவராது என கணினித் துறையில் படித்து முன்னேறி பட்டம் பெற்று லண்டன் வந்துவிட்டான். சில வருடங்கள் முன்னர் திரு.விஜயகாந்த் எனது சகோதரர் வீட்டுக்கு வந்திருந்தார். நாங்கள் அவரைப் பார்க்கச் சென்று இருந்தோம். அமைதியே உருவாக இருந்த அவ்விடத்தில் நான் எப்போதும் போல் சகஜமாகப் பேச ஆரம்பித்துவிட்டேன். அப்பொழுது திரு. விஜயகாந்திடம் சின்ன வயது சம்பவங்களைச் சொன்னேன். அது குப்பையில போய் இருக்கும் என்றார் சிரித்துக் கொண்டே. அது சரிதான். நல்ல வேளை, பாடல்கள் வெளியாகி குப்பைக்குப் போகவில்லை.

இப்படியாக திரைப்படத் துறையில் வாய்ப்புத் தேடாமலே எனது சிறுவயது மற்றொரு கனவான ஆராய்ச்சியில் என்னைச் சேர்த்துக் கொண்டேன். ஒருவேளை திரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால் சமீபத்தில் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு 'எப்படி இப்படியெல்லாம் வீணாக பணத்தைச் செலவழித்து மோசமாக படம் எடுக்கிறார்களோ' எனக் குறைபட்டுக் கொண்டது போல இல்லாமல் தரமிக்க படங்கள் எடுத்திருப்பேனா என எனக்குத் தெரியாது. பழைய பாடல்களை போலவே அர்த்தம் பொதிந்த புது பாடல்கள் என பாராட்டும்படி பாடல்கள் எழுதி இருப்பேனா எனவும் தெரியாது.

ஆனால் ஒன்று, இப்போது எழுதிக்கொண்டிருக்கும் இந்த எழுத்துத் துறையில், ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சித் துறையில் எனது பங்களிப்பு கண்டு நானே குறைபட்டுக் கொள்கிறேன் என்பதுதான் உண்மை.

4 comments:

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்

குடந்தை அன்புமணி said...

சில வலைத்தளத்தை சில பிரவுசர்களில் படிக்க முடியாமல் இருக்கும். இதனாலேயே பல வலைத்தளங்களுக்கு சென்றுவிட்டு படிக்க முடியாததால் திரும்பி இருக்கிறேன். இதற்கு தீர்வு எதுவும் உண்டா?
இது உங்களுக்கான இடுகை. thagaval.blogspot.com வலைத்தளத்திற்கு வரவும்.

Radhakrishnan said...

மிக்க நன்றி அன்புமணி ஐயா. தங்கள் தளத்திற்கு வருகை புரிந்தேன் இப்பொழுது. தங்கள் தளம் மால்வேரினால் (தமிழ்பூங்கா இணையதளத்தினால்) பாதிக்கப்பட்டுள்ளதாக குரோம் சொல்கிறது. தாங்கள் அதைச் சரி செய்தீர்களெனில் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆவண செய்ய வேண்டுகிறேன்.

Radhakrishnan said...

ஞாநி அவர்களுக்கு,

இதை ஒரு தனி இடுகையாக எழுதத்தான் எண்ணினேன். இருப்பினும் எனக்குத் தேவையற்றது என்பதால் பின்னூட்டமாகவே எழுதுகிறேன்.

//அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும். //

இப்படி அவசர அவசரமாக ஒரு படம் எடுத்து எதைச் சாதிக்க நினைத்து இருக்கிறீர்கள். ஒரு படத்தின் மூலம் சமுதாயத்தில் என்ன சாதித்துவிட முடியும் என நினைக்கிறீர்கள். இதுவரை வெளியான படங்கள், கதைகள் சாதித்தது என்ன? தனிமனிதனின் முயற்சியினால் மட்டுமே ஒவ்வொருவரும் சாதித்து காட்டி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் காரணங்கள் குறிப்பில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவைதான். அரிச்சந்திரன் நாடகம் பார்த்து திருந்தினேன் என ஒரு காந்தி தான் சொன்னார், நாடகம் பார்த்த பலர் எங்கே போனார்கள்?

ஒரே ஒரு படம் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் மாற்றுமாறு எடுங்கள், பாராட்டுகிறேன். நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி எனக்கு என்னவோ மனிதர்களை முட்டாளாக்க முயற்சிப்பதாகத்தான் படுகிறது. இருப்பினும் தங்கள் முயற்சி நன்மை பயக்குமெனின் வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.