Sunday 16 August 2009

ஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்

முன்னுரை:

பொட்டுக்கடலை வாங்கி நடந்து சென்ற காலம் எல்லாம் தாண்டி இப்பொழுது வாகன வசதிகள் வந்ததைப் பார்த்து நடந்து செல்ல மனமின்றி, வாகனமும் வாங்க வழியின்றி தவிக்கும் மனித வர்க்கம் வருத்தம் அடையச் செய்கிறது. இவர்களின் நிலைக்கு என்னதான் விடிவு எனில் இவர்களும் உழைத்து முன்னேறி வாகனம் வாங்குவதுதான்.

செங்கல் பேருந்து, வரப்பு வாகனம்:

வயதான பலர் தங்கள் வாழ்க்கையில் சிறுவயதில் மணலில் செங்கல் வைத்து பேருந்து ஓட்டி விளையாடிய கதையும், வரப்புகளில் வாகனம் ஓட்டுவது போல் ஓட்டி மகிழ்ந்திருந்த காலத்தையும் சொல்வார்கள். இன்றைய சூழலில் சாலையில் ஊர்ந்து செல்லத் தெரியாமல் பறந்து செல்லும் வாகனங்கள் ஆக்கிரமித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டன.

கிராமத்து மனிதர்களின் செங்கல் பேருந்து கனவு எல்லாம் கலைந்து போய்விட்டது. வீட்டிற்கு ஒரு வாகனம் இருக்க வேண்டும் எனும் நினைவு வந்து சேர்ந்துவிட்டது. இதன் காரணமாக வீணான மன உளைச்சலுக்கு இவர்கள் ஆட்படுகிறார்கள்.

உலக சந்தை:

பொருளாதார தாராளமயமாக்குதல் கொள்கையால் இன்று உலகப் பொருளாதாரம் நமது வீட்டின் வாசலில் வந்து நின்று வேடிக்கைப் பார்க்கிறது, வேதனை தருவதாய் இருக்கிறது. உலக நாடுகளில் மட்டும் உற்பத்தியாகிக் கொண்டு இருந்த வாகனங்கள் இன்று நமது உள்ளூரிலேயே உற்பத்தி பண்ணக்கூடிய வாய்ப்பை பெற்றும் அதை வாங்கக்கூடிய மனிதர்கள் எண்ணிக்கையும் வியப்பைத் தருகிறது. எனினும் சாதாரண மனிதர்கள் இந்த வாகனத்தைப் பார்த்து கை அசைத்து செல்லும் மகிழ்ச்சியை மட்டுமே அடைகிறார்கள் என்பது மிகவும் வருத்தம் தரக்கூடியது. நமது பொருளாதாரத்திற்கு ஏற்ப நமது வாழ்க்கைத் தரம் அமைந்து விட்டால் அது சிறப்பாக இருக்கும், இல்லையெனில் வாழ்க்கை மிகவும் கேள்விக்குறியாக மாறிவிடும். இன்றைய வாகனங்கள் அத்தகைய சூழலைத்தான் இன்று உருவாக்கி வருகிறது.

மிதிவண்டி, மாட்டுவண்டி எல்லாம் மறந்து போய்விட்டது. இன்றைய தேதியில் டாடாவினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய வாகனம் அனைவரது பார்வையையும் வெகுவாக கவர்ந்து இழுத்து இருக்கிறது, கவலையையும் அதிகரித்து இருக்கிறது.

தொழில்நுட்பம்:

வெளிநாட்டு வாகனங்களில் இருக்கும் தொழில்நுட்பங்கள் நமது நாட்டு வாகனங்களில் இல்லாது இருப்பது, வாகனம் வைத்து இருப்பவரையும் யோசிக்க வைக்கிறது. அதே வேளையில் அத்தகைய வாகனங்கள் அதிக மதிப்புள்ளதாக இருப்பதால் வாங்குவது எளிதாக இல்லை. இதனை போக்க அதிக தொழில்நுட்பம் உள்ள வாகனங்களை நாம் குறைந்த விலைக்கு உருவாக்குவதுதான் வழி.

முடிவுரை:

'மனமிருந்தால் மார்க்கமுண்டு' 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என இருப்பதை வைத்து நிம்மதியாக வாழ்வதோடு மட்டுமின்றி மேலும் பல முன்னேற்றத்தை அடைய முயற்சி செய்தால் இன்று இருக்கும் ஆற்றாமை ஓடிவிடும், அருகில் செல்லும் புது ரக வாகனங்களில் அமர்ந்து செல்லலாம்.

No comments: