Thursday 27 August 2009

நுனிப்புல் பாகம் - 1 (2)


வாசன் வீட்டின் வாசலில் ஏறியதும், ‘’என்னப்பா இவ்வளவு நேரமா? பொழுது சாயும் முன்னே வீடு வர்ரதுதானே?’’ என தாய் ராமம்மாள் வாசனை செல்லமாக கடிந்து கொன்டு, வந்ததும் வராததுமா கதை சொல்லப் போறேன்னு போகாத, சாப்பிட்டுப் போ என வார்த்தைகள் வீசினார். வாசன் நேசித்தான். ‘’சரிம்மா’’ என்றவாறே ‘’அப்பா இன்னும் வரலையாம்மா’’ என கேட்டான் வாசன். ‘’வரலைப்பா’’ என்றாள் தாய். பதிலில் ஒருவிதமன சலிப்பு தென்பட்டது.


வாசனின் தாய் 3ம் வகுப்பு வரைதான் படித்து இருந்தார். தோட்டத்து வேலை மற்றும் வீட்டு வேலையென வாழ்க்கையில் தன்னை ஒடுக்கிக் கொண்டவர். முதல் வாசன், இரண்டாவது தேவகி.

வாசன் சுருக்கம் பற்றிய கவிதை வாசிக்கலானான்.


"
ஏழு வார்த்தைகளில்

எழுதபட்ட ஒவ்வொரு திருக்குறளில்

கருத்துக்கள் பரந்துகிடக்கும்

விவரிக்கமுடியாத சுருக்கம்

நடந்து செல்லும் தூரம்

அடையும் காலம் விட

பரந்து செல்லும் தூரம்

அடையும் காலம்

விவேக விஞ்ஞானத்தின் சுருக்கம்

ஒரு மைல் கல் தொலைவில்

கத்தியும் செல்லாத சப்தம்

கடல் தாண்டி சென்றடையும்

கண்ணுக்கு உட்படாத சுருக்கம்

இலக்கணம் தாங்கிய

மரபு கவிதை

கருத்துக்கள் தாங்கிய

புதுக்கவிதை போய்

வந்த ஹைக்கூ

வார்த்தைகளின் சுருக்கம்

பதினைந்து பிள்ளைகள்

கொண்ட குடும்பம்

ஒரு பிள்ளையொடு ஒடுங்கிபோனது

நிலத்தின் சுருக்கம்

அட விரிந்து பரந்த உள்ளம்

கொண்ட மனிதன் மனது

எதனின் சுருக்கம்?"


‘’
கவிதை புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பிச்சிட்டியா’’ என அம்மா அவனை சாப்பிட வரச் சொன்னார்.


வாசனின் தந்தை வியாபரம் செய்பவர். 5வது வரை படித்து இருந்தார். தோட்டத்தில் விளையும் காய்கறி பொருட்கள் காலை மாலை என பக்கத்து கிராமத்து, நகரத்து கடைகளுக்கு விற்பனை செய்பவர். அவர் பலரை அறிந்து வைத்து இருந்ததால் வாசனை அவர் வியாபாரத்திற்கு ஒருபோதும் அனுப்புவது இல்லை. தந்தையின் பெயர் ராமமூர்த்தி.


'நான் அப்பா வந்ததும் வந்து சாப்பிட்டுக்கிறேன்மா' என வெளியே நடந்தான் வாசன். அம்மா வார்த்தைகளை இறைந்தார் 'கேளுப்பா' இது தாய், 'வரேன்மா' இது வாசன். வாசனுக்கு இன்னும் பெரியவரின் வாசகம் பெரும் யோசனையாக இருந்தது. வாசன் குழந்தைகளுக்கு ஒரு சின்ன கதை சொன்னான். கவிதையின் விரிவாக்கம் அது. மனிதாபிமானம் என்ற சொல்லின் விதை அன்று குழந்தைகளின் நெஞ்சில் விதைக்கப்பட்டது.


‘’
என்னம்மா வாசன் கதை சொல்லிட்டு இனியும் வரலையா’’ என்றவாறே ராமமூர்த்தி வீட்டினில் நுழைந்தார். வாசன் வீடு நுழையும் போதெல்லாம் ராமமூர்த்தி காத்து இருப்பதில்லை. ராமமூர்த்தி வீடு நுழையும் போதெல்லாம் வாசன் வீட்டில் இருப்பதில்லை. இது அவர்களிடையே ஒரு மாலை நேர ஒப்பந்தமாக இருக்கும்.


‘’
வரேன்னு சொல்லிட்டு சாப்பிடாம கூட வெளியில போனான், இன்னைக்கு தோட்டத்திலே இருந்து தாமதமாகத்தான் வந்தான். அது சரி, என்னங்க இன்னைக்கு வியாபரம் எப்படி’’ என்றவளிடம், ‘’இன்னைக்கு நல்ல வியாபரம்தான்’’ என கூறி பணத்தை எடுத்துப் பத்திரபடுத்தச் சொன்னதுடன் கிணற்று அடிக்கு முகம் அலம்ப சென்றார்.


வாசனின் வீடு ஊருக்கு தெற்கே இருந்தது. கிழக்கு பார்த்த வாசல். சின்னதாய் வரவேற்பு அறை. பெரியதாய் ஒரு அறை. தனித் தனி அறைகளாய் பூஜை அறை ஒன்று, சமையல் அறை ஒன்று. மாடியில் மூன்று அறைகள். வீட்டின் பின்புறம் சின்னதாய் தோட்டம். ஒரு கிணறு. வாசன் தினமும் காலையில் கிணற்றில் தன் முகம் பார்க்கும் வழக்கம் உண்டு. சலனமில்லாத நீரினை ரசிக்க ஆரம்பித்து இரவு தூங்கும்முன் வரை அமைதியினை ரசிக்க நினைப்பவன்.


வாசன் வந்தான். ‘’அப்பா இப்பதான் வந்தீர்களா, சாப்பிடலாம்பா’’ என்றான் வாசன். உணவு பரிமாறப்பட்டது. சாப்பிடும்போது ராமமூர்த்தி எப்போதும் பேசுவதில்லை. என்ன தேவையோ அதை கேட்கவே பேசுவார், மற்றபடி விவாதங்களில் ஈடுபட விரும்புவதில்லை. வாசன் இதை நன்கு அறிவான். உண்டு முடித்ததும் ‘’அப்பா வினாயகம் பெரியவர் நம்ம தோட்டத்தை விலைக்கு கேட்டார் அதாவது கரிசல எடுத்துக்கிட்டு அதே அளவுக்கு செவல எடுத்துக்க சம்மதமான்னு சொன்னார்’’. ராமமூர்த்தி தான் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும் முன்னர் தன் மகன் பேச்சைக் கேட்டதும் இவை இரண்டையும் எப்படி ஜீரணிப்பது என அயர்வுற்றார்.


‘’
வாசா நீ என்ன பதில் சொன்ன’’ என கேட்டார். தன்னை கலந்து ஆலோசித்து முடிவுதனை சொல்லவேண்டிய அவசியம் இல்லை என எண்ணினாரோ என்னவோ உணராமல் தன் மகனைக் கேட்டார். ‘’நான் உங்களைக் கேட்டு சொல்றதா சொல்லியிருக்கேன்பா' என அவனது தந்தையின் முக்கியத்துவம் சொன்னான் வாசன்.


‘’
நான் கேள்விபட்டேன் அவரு அங்கு இருக்கிற நிலத்தை எல்லாம் விலைக்கோ இல்லை மாற்றுக்கோ கேட்டுக்கிட்டு இருக்காருனு’’ என்றார் தந்தை. ‘’அவரும் கணேசன் நிலத்தை மாத்திட்டேன்னு சொன்னாருப்பா. என்ன விசயத்திற்கு இப்படி செய்றீங்கனு கேட்டேன் ஒண்ணும் பதில் இல்லை, நாளைக்கு பேசுவோம்னு போய்ட்டார். நம்ம வடக்கு நிலம் ஒட்டி இருக்க காசி நிலம் கூட தர சம்மதம்னு சொல்லிட்டதா சொன்னார்’’ வாசன் வாக்கியம் நீண்டு கொண்டே போனது. வாசன் கூறிய விசயத்தில் இருந்து இந்த நிலத்தை விற்றுவிடுவோம் என சொல்லாமல் சொல்லும் வாசகம் போல் இருந்தது.


‘’
அதான் எனக்கும் புரியலப்பா, ஏகப்பட்ட நிலம் வைச்சிருக்கார், எதுக்கு கரிசல் நிலம் வேணும்னு கேட்கிறார்னு தெரியல விவரம் சொன்னாலாவது சரி செவல் கிடைக்குதுனு விடலாம். சரி பேசிப்பாரு’’ என நிலமாற்றம்தனை சம்மதம் தந்து விட்டது போல கூறினார். ‘’என்ன சொல்றீங்க, இதே பூமியில விளையற விளைச்சல் செவல்ல விளையுமா, இது தனிமதிப்புனு சொல்வீங்களே’’ என குறுக்கே பேசிய தாய் நிலம் மாற சம்மதிக்கமாட்டாள் எனப்பட்டது வாசனுக்கு.


‘’
யோசிக்க வேண்டிய விசயம்தான் ஆனா நிலத்துக்கு நிலம் பணமும் தந்தா வேணாம்னு சொல்ல வேணாம்னு நினைக்கிறேன். உழைக்கிற உழைப்பை உண்மையாகவும் உறுதியாகவும் உழைச்சா பலைவனத்துல கூட பசுமை புரட்சி செய்யலாம்’’ என்றார் தந்தை.


‘’அப்படின்னா பெரியவர்கிட்ட நாளைக்கு பேசி எல்லாம் முடிச்சிருவோம்' என மகன் கூறியதை தந்தை ஆமோதிப்பதுக் கண்டு தாய் சின்னக் கோபம் கொண்டார். ‘’என்னங்க சிலருக்கு, அவரு கேட்டாருன்னு பணம் அதிகம் வாங்கி நிலமாத்துரது சரியில்லை, என்னதான் இருந்தாலும் அது நாம பாடுபடுற பூமி’’ தாய் விட்டுக் கொடுப்பதாய் இல்லை.


சிலருக்கு சில விசயங்கள் சரியோ தவறோப் பிடித்து விடுகிறது, மாற்றங்கள் அவசியம் எல்லை என பழைய விசயங்களில் ஊறிப்போய் புதிய விசயம் திணிக்கப்படுவதை அறவே வெறுக்கிறார்கள். இதன் அர்த்தம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.


‘’
வாசா உன் அம்மாவை நீ சம்மதிக்க வை அப்புறம் இது பத்தி பேசலாம்’’ தன்னால் பேசுவதில் ஒரு உபயோகம் இல்லை, மனைவியையும் பேசிப் புரிய வைத்து ஒரு முடிவுக்கு கொண்டுவர எண்ணமில்லாதவராக அவரது பேச்சு இருந்தது. தாய் யோசிக்கலானார்.

No comments: