Friday 21 August 2009

சமணர்களே தமிழுக்கு முன்னோடி

சமண சமயம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் என பல குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. சமணத்தை அடியோடு அழிக்க சைவம் புறப்பட்டதாக சொல்லப்படுவதும் உண்டு. உண்மையிலேயே சமணர்கள் தான் தமிழை வளர்த்தார்களா என்றால் மிக எளிதாகச் சொல்லிவிடுவேன், எனக்குத் தெரியாது.

திருக்குறள் சமணர் நூல் என மார்தட்டிக் கொண்டிருக்கும் வீரச் சமணர்களும் உண்டு! திருக்குறள் பொது நூலா? இல்லை, அது இந்து நூல் என வாதிடுவார்கள் என்பதையும் அறிவோம். அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் திருக்குறள் இந்து நூல் என கட்டுரைகளும் கேள்வி கேட்டவர்களுக்கு பதிலும் எழுதி இருக்கிறார். உலகப் பொதுமறை நூல் எனும் திருக்குறளுக்கே இந்த கதி எனில்!

இந்திரனில் பல உண்டு என்பதையும் காரணம் காட்டி திருக்குறளில் வரும் இந்திரனே சாலுங் கரி எனும் குறளுக்கும் ஒரு விளக்கம் கொடுத்து அது சமணர் நூல் தான் என சொல்கிறார்கள்.

ஆதிபகவன் எனும் பெயர் சமணர் வணங்கும் ஆதிநாதனைத்தான் குறிக்குமாம். எழுதி வைத்தத் திருவள்ளுவர் இப்படியெல்லாமா நினைத்து இருப்பார், தனது நூலுக்கு சமண நூல் என வர்ணம் பூசுவார்கள் என!

காமத்துப்பால் எப்படி ஒரு சமணர் எழுதியிருப்பார் எனக் கேட்பவர்க்கும் ஒரு பதில் வைத்து இருக்கிறார்கள். திருத்தக்கத் தேவர் சீவகசிந்தாமணி எழுதவில்லையா? என்பதுடன் நில்லாது மேலும் சமணம் தான் முதன்முதலில் இல்லறத்தையும் துறவறத்தையும் தனியாய் பிரித்தது எனவும் தைரியமாகச் சொல்கிறார்கள். உண்மையைச் சொல்லத் தைரியம் தேவையில்லை என்பதை இப்போது நினைவில் கொள்க!

இதில் சீவகசிந்தாமணி கதை என்னை ஒருநிமிடம் 'அடடா' என்றுதான் சொல்ல வைத்தது. கதையின் நாயகன் பல தாரங்களை மணந்து கொள்கிறான், அதோடு நில்லாமல் இன்பத்தையும் சொல்வதே சீவக சிந்தாமணியின் கதை, அனைத்துமே ஆசிரியப்பா போன்ற வகையில் அமைந்திருக்கிறது என்றே நினைக்கிறேன். சில பாடல்களைப் படித்தேன், மிகவும் இரசனையுடனே எழுதியிருக்கிறார். நிச்சயம் அவரைப் பாராட்டியேத் தீரவேண்டும். முழு சீவக சிந்தாமணியைப் படித்து அப்படியே ஒரு அட்டகாசமான கதையாக எழுதிவிடலாம்.

திருத்தக்கத் தேவருக்கு விடப்பட்ட சவாலால்தான் அந்த சீவக சிந்தாமணியே எழுந்தது. ஒரு சமணருக்கு இல்லறம் பற்றி என்னத் தெரியும் எனக் கேட்க இப்படி எழுதிவைத்துவிட்டார்.

இதைவிடக் கொடுமை என்னவெனில் திருத்தக்கத் தேவரை அவரது பாடல்களையெல்லாம் கேட்டு முடித்தபின்னர் அவமானப்படுத்தி விட்டார்களாம். தன்னை சுத்தமானவர் என நிரூபிக்க சீதை அக்னியில் குதித்து கற்பை நிரூபித்தது போன்று இவரும் தனது கையை எரித்து, எழுதிய கை எரியவில்லை, கற்பினை என நிரூபித்தாராம். களங்கம் கற்பிக்கவே ஒரு கூட்டம் அன்று என்ன இன்றும் தொடர்ந்து வருகிறது. எழுதத் தெரியாது உனக்கு என்பது, எழுதினால் அனுபவமில்லாமலா எழுதினாய் என ஏளனம் செய்வது!

ஐம்பெருங்காப்பியங்கள் எல்லாம் சமணர்களின் நூல் தான் என்கிறார்கள் உறுதியுடன். நீலகேசி எனும் நூல் வேறு. இவர்கள் குறிப்பிடும் நூல்கள் பற்பல. தொலைந்த நூல்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். எப்படி தொலைந்த நூல்களின் பெயர்கள் இவர்களுக்குத் தெரியவந்தது என்பதற்கான ஆதாரம் அவர்களிடம் இருக்கும் என்றே நினைக்கிறேன். இதைப்போலத்தான் எனக்கு திருநாவுக்கரசர் எழுதிய பல பாடல்கள் காணவில்லை எனச் சொல்வது எப்படி எனவும் யோசிக்கிறேன். இத்தனை பாடல்கள் எழுதினேன் என எங்காவது திருநாவுக்கரசர் சொல்லி இருக்கிறாரா எனவும் தெரியவில்லை. இதுபோன்று பல கேள்விகளை இந்த தமிழ் எழுப்பாமல் இல்லை. திருநாவுக்கரசரை இங்கே குறிப்பிட்டது காரணம் இவர் ஒரு சமணர் என்று அடையாளம் காட்டப்பட்டதுதான்! சமணராக இருந்தபோது எழுதியவை தொலைக்கப்பட்டதா? அழிக்கப்பட்டதா என கேள்வி எழும்.

வைணவம் தமிழ் வளர்த்தது என்பதை விட ''கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்'' எனக் கேட்க எப்படி சுவையாய் இருக்கிறது. எது எப்படியோ சமணம் தமிழ் வளர்த்தது, வைணவம் தமிழ் வளர்த்தது, சைவம் தமிழ் வளர்த்தது என்றெல்லாம் சொல்லி இனிய தமிழ், பிரிவினைக்காரர்களால்தான் வளர்ந்து வந்து இருக்கிறது என நினைக்கும்போது சற்று இடைஞ்சலாகத்தான் இருக்கிறது.

திருஞானசம்பந்தர் வேண்டுமெனில் தமிழ் எனத் தன்னை அடையாளம் காட்டியிருக்கலாம், அவரைப் போல் எவரேனும் தமிழ் என்று மட்டுமே தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார்களா? தமிழ்க்கென ஒரு கடவுள் மட்டுமே இருந்திருக்க வேண்டும் என நினைத்துத்தானோ முருகன் என பின்னாளில் அடையாளம் காட்டினார்கள்?

இப்படித்தான் இலண்டன் கோவிலில் சொற்பொழிவு ஆற்ற வந்த மங்கையர்க்கரசி (கிருபானந்த வாரியாரின் மாணவி) முருகன் பற்றி பேசினார். தொகுப்பாளாராக பேசிய நான் முருகன் தமிழ்க் கடவுள் என்று சொல்லி வைக்க, அவரும் முருகன் தமிழ்க் கடவுள்னா மற்ற கடவுளெல்லாம் இங்கிலீஸ் கடவுளா எனக் கேட்டு வைத்தார்.

அதற்கு நான் மனதில் இப்படிச் சொல்லி வைத்தவர்களைத்தான் கேட்க வேண்டும், அதோடு இப்படிச் சொல்லும்படி மூளைச் சலவை செய்யப்பட்டு முட்டாளானது என் தவறு எனக் கூறிக்கொண்டேன்.

6 comments:

தேவன் said...

//எது எப்படியோ சமணம் தமிழ் வளர்த்தது, வைணவம் தமிழ் வளர்த்தது, சைவம் தமிழ் வளர்த்தது என்றெல்லாம் சொல்லி இனிய தமிழ், பிரிவினைக்காரர்களால்தான் வளர்ந்து வந்து இருக்கிறது.//

.

முதலில் வளர்ப்பதற்கு பிறப்பிக்க வேண்டும் தான் வளர்த்தேன் என்று சொல்பவர்களை பார்த்து நீங்கள் இப்படி சொல்லுங்கள்:

நீ ! முதலில் ஒரு மொழியை, அதற்குண்டான இலக்கணத்தை படைத்து அதன் பிறகு வளர்த்துக்காட்டு ! என்று நிச்சயம் அது முடிந்தால், அது அவரால் வளர்க்கப்பட்டது எனலாம்.

தமிழை யாரும் வளர்க்க வில்லை ஐயா தமிழ் தன்னை தானே வளர்த்துக் கொண்டது

உண்மை தமிழரெல்லாம் தமிழுக்கு அலங்காரம் மட்டுமே செய்தார், பொய் தமிழர் தமிழை தான் வளர்த்தேன்,
தான் வளர்த்தேன், என்று மார் தட்டி (கொண்டனர்) கொண்டிருக்கின்றனர்.



பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்
திருப்பிலே இருந்து, வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை,
நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்து, ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலேவளருகின்றாள்.


பாடல் நினைவில் இருக்கட்டும்.

கிருஷ்ண மூர்த்தி S said...

இப்படி அவசர அவசரமாகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனால் எப்படி? கொஞ்சம் நின்று, நிதானித்து ஒவ்வொரு கேள்விக்கும் விடைகிடைக்கிறதா என்று பார்க்க வேண்டாமா?

தமிழ் ஒரு மொழி, பல சமயத்தவரும் தங்கள் சமய நம்பிக்கைகளைப் பாடித் தமிழுக்கு அணிகலனாக அளித்திருக்கிறார்கள். உமறுப்புலவர் சீறாப்புராணம் பாடியிருக்கிறார். ஏசுவுக்கு மட்டும் ஒன்றுமே இல்லை என திருச் சபையே வேண்டி, இயேசு காவியம் கூட இங்கே ஒருவர் எழுதினார்.

இப்படி ஒவ்வொரு நம்பிக்கையும், தங்களை மொழியின் துணைகொண்டு இலக்கியம் படைத்தன. அந்த வரையில், சைவம் வளர்த்த தமிழ், வைணவம் வளர்த்த தமிழ் என்று சொல்லிக் கொண்டு போவதில் தவறு எதுவுமில்லையே! சமணமும், பௌத்தமும் வலுவாக இருந்த நாட்களில், இலக்கியங்கள் படைத்தன. சைவம் தலையெடுத்து, சமணர்களையும், பவுத்தரையும் ஒடுக்கி வைக்க முற்பட்டது போலவே, இலக்கியங்களையும் ஏன் செய்திருக்கக் கூடாது என்று ஒரே ஒரு வினாடி நிதானித்து எழுதியிருந்தீர்களானால் , கேள்விகளுக்கான விடை அங்கேயே இருப்பதைப் பார்க்க முடியும்.

இன்றைக்குக் காமாக்ஷி அம்மன் கோவிலாகக் காஞ்சீபுரத்தில் இருப்பது, பல்லவர் காலத்தில் பவுத்தமும், சமணமும் தழைத்தோங்கிய நாட்களில், பவுத்தர்கள் வழிபடுகிற தாரா தேவியின் கோவிலாகத் தான் இருந்ததாக, சில வரலாற்றுக் குறிப்புக்கள் சொல்கின்றன. சைவம், அசைவமாகி, தாராதேவியின் கோவிலை, காமாக்ஷி அம்மன் கோவிலாக மாற்றி விட்டதையும் கூட ஆராய்ச்சியாளர்கள் சொல்வது தான்.

தாரா காமாக்ஷி ஆனது மாதிரியே, கும்பகோணத்தில் ஒரு ஓரத்தில் வம்புதும்பு இல்லாமல் இருந்த சங்கர மடம் சத்தமே இல்லாமல் தலைமையகத்தைக் காஞ்சிபுரத்திற்கு மாற்றிக் கொண்டு, அதற்குத் தோதாக வரலாற்றுக் குறிப்புக்களையும் ஏற்படுத்திக் கொண்டதும், சைவத்தில் சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயம் தானே!

அதே மாதிரி, திருவள்ளுவரை, சைவராக்கி, சென்னை, மயிலாப்பூரில் ஒரு கோவிலையும் கட்டி, இது தான் பிறந்த ஊர், இடம், அவர் சைவம் தான் என்று சொல்லியிருக்க முடியுமே!

Radhakrishnan said...

//Kesavan said...

நீ ! முதலில் ஒரு மொழியை, அதற்குண்டான இலக்கணத்தை படைத்து அதன் பிறகு வளர்த்துக்காட்டு ! என்று நிச்சயம் அது முடிந்தால், அது அவரால் வளர்க்கப்பட்டது எனலாம்.

தமிழை யாரும் வளர்க்க வில்லை ஐயா தமிழ் தன்னை தானே வளர்த்துக் கொண்டது.//

தண்ணீர் ஊற்றாமல் மழையின் உதவியால் வளரும் காட்டு மரங்கள் அல்ல மொழி. ஒரு மொழி உருவாக்கப்பட்டதும் அதைப் பேணி காப்பதும், அதன் தொன்மை மறையாமல் வளர்ப்பதும் அம் மொழியைச் சார்ந்த, அம் மொழியின் மேல் பற்று கொண்டவர்களின் தலையாய கடமையாகும்.

ஒரு மொழியின் சிறப்பு அந்த மொழியின் மூலம் தற்கால மனிதருக்கும், வருங்கால சந்ததிக்கும் என்ன சொல்கிறோம் என்பது பொருத்தே அமைகிறது.

ஒரு மொழியை பேசுபவர்கள் எத்தனை பேர் என்பது பொருத்தே அந்த மொழியின் ஆதிக்கம் அந்த காலத்துக்கு நிலைத்து இருக்கும். ஒரு மொழியில் படைக்கப்பட்ட படைப்புகள் அந்த மொழியின் அடையாளத்தைச் சொல்ல அழியாமல் இருந்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

அருமையான பாடலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கேசவன் அவர்களே. தமிழ் எழுதிப் பேச தமிழ் வளரும்.

Radhakrishnan said...

//கிருஷ்ணமூர்த்தி said...

இப்படி ஒவ்வொரு நம்பிக்கையும், தங்களை மொழியின் துணைகொண்டு இலக்கியம் படைத்தன. அந்த வரையில், சைவம் வளர்த்த தமிழ், வைணவம் வளர்த்த தமிழ் என்று சொல்லிக் கொண்டு போவதில் தவறு எதுவுமில்லையே!

சைவம் தலையெடுத்து, சமணர்களையும், பவுத்தரையும் ஒடுக்கி வைக்க முற்பட்டது போலவே, இலக்கியங்களையும் ஏன் செய்திருக்கக் கூடாது //

நீங்கள் எழுதியிருக்கும் விசயங்களில் இருந்தே உண்மையை இருட்டடித்தே தமிழ் வளர்ந்தது என்பது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது.

வரலாற்று உண்மைகளை, இலக்கியங்களை பாதுகாத்து வருவதுதான் ஒரு மொழிக்கு அம்மொழியைச் சார்ந்தவர்கள் செய்ய வேண்டியது. ஆனால் நடந்தது என்ன? இலக்கியங்கள் வரலாற்று உண்மைகள் எல்லாம் பிரிவினைக்காரர்களால் அழிக்கப்பட்டிருக்கிறது. இதனை வலியுறுத்தவே ஆதாரங்களுடன் தான் அவர்கள் பேசக்கூடும் என எழுதினேன். இப்படி அந்த நூல்கள் அழிக்கப்பட்டு இருப்பின் இது எப்படி ஒரு மொழியை வளர்ப்பதற்குச் சமமாகும்?

முறையாகப் பாதுகாத்தும், இயற்கைச் சீற்றங்களால் ஒன்று அழிந்தால் நாம் அதுகுறித்து எதுவும் செய்ய இயலாது. ஆனால் திட்டமிட்டு ஒரு சமயத்தாருக்குப் பேரும் புகழும் கிடைக்கக் கூடாது என்ற நோக்கில் செய்யப்பட்ட செயல்களைக் கண்டிக்க வேண்டியதன் அவசியம் ஏனில்லாமல் இல்லை.

ஒரு மொழியின் வளர்ச்சியும் மாற்றமும் சேமித்து வைக்கப்பட வேண்டியவை, சேதப்படுத்தப்பட வேண்டியவை அல்ல!

வரலாற்று விசயங்களைத் திரித்துக் கூறுவதால் ஒரு மொழிக்கு எப்போதும் பெருமை சேராது, இப்படி செய்தவர்கள் மொழியை அவமானப்படுத்தியவர்கள், வளர்த்தவர்கள் அல்ல!

அருமையான விசயங்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

கிருஷ்ண மூர்த்தி S said...

/நீங்கள் எழுதியிருக்கும் விசயங்களில் இருந்தே உண்மையை இருட்டடித்தே தமிழ் வளர்ந்தது என்பது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது./

மறுபடியும் அவசரப்பட்டு, இன்னொரு முடிவுக்குப் போய் விடுகிறீர்களே!

மொழிவளர்வது என்பது வேறு, உண்மையை இருட்டடிப்புச் செய்வது என்பது வேறு!

எந்த ஒரு இடத்திலும், காலத்திலும் ஜெயித்தவனே விதிகளைத் தனக்குச் ஸௌகரியப்படி மாற்றி எழுதிக் கொள்கிறான். ஜெயிப்பவன் மாறும்போது, விதிகளும் மாற்றி எழுதப்படுகிறது. இது நான் சொல்லியிருந்த அடிப்படை விஷயம்.

சமணர்கள், பவுத்தர்கள், சடங்குமயமான வேத மதத்தை எதிர்த்து, செல்வாக்கோடு இருந்தபோது, அவர்கள் விதிகளை, அதற்கு முன்னாள் எப்படி இருந்ததோ, எனக்குத் தெரியாது, மாற்றி எழுதினார்கள், அதே மாதிரி, அல்லது அதைவிட உக்கிரத்துடன், சைவம் வளர்ந்தபோது, விதிகள் மாற்றி எழுதப்பட்டன,

இங்கே மொழி ஒரு காரணம், சாக்கு அவ்வளவுதான். உண்மையில், ஆதிக்கம் யார் கைக்கு மாறியது என்பதே இவைகளும் மாறியதற்குக் காரணம்.

கலிங்கத்துப்பரணி, மிகக்கோரமாக நடந்த யுத்தத்தை விவரிக்கிறது. தமிழைப் பழித்தவனைப் பழிதீர்த்துக் கொண்டதாகக் கவிஞன் சொல்கிறான், ஆட்சி செய்தவன் கோவில்களில் கல்வெட்டுப் பொரிக்கிறான். கங்கையும் கடாரமும் சோழர்கள் வென்றது, தமிழாசையால் அல்ல, தங்களது பொருளாதார வலுவை நிலைநாட்டிக் கொள்ள. களிங்கத்துப்போர் நடந்தது, சோழர்களுடைய கடல்வாணிகம் பாதுகாப்பான கலிங்கத்துக் கடல் துறைகளில் இருந்து நடப்பதைக் காப்பற்றிக் கொள்வதற்காக.

வரலாற்று நிகழ்வுகளை, அதன் காரணிகளை, புனைந்துரைக்கப்படும் கவிதை, இலக்கியம், இவைகளில் இருந்து பிரித்தெடுத்து, ஆய்வுக்குப் பின்னரே பேசுவது நலம்.

Radhakrishnan said...

உண்மையை இருட்டடிக்கும்போது அங்கே உண்மையாக மொழியை வளர்க்க வழி செய்தவர்கள் மறக்கப்படுகிறார்கள், மறைக்கப்படுகிறார்கள் என்பதுதானே சரி ஐயா.

பொருளாதார வலுவை நிலைநாட்டுவதோடு தாங்கள் தமிழ் மொழி பேசும் தமிழர்கள் என இவர்கள் பறைசாற்றிக்கொண்டார்கள் என்றுதானே இலக்கியமும், கல்வெட்டுகளும் பேசுகின்றன. இப்படி ஒன்றைப் பற்றிச் சொல்லும்போது அதனுடையத் தோற்றம், வளர்ச்சி, பிற இடங்களில் பரவுதல் எல்லாம் அடங்கிவிடும். அதை உரிய முறையில் சொல்லாமல் தேவைக்கேற்றபடி விதிகளை மாற்றி எழுதி வாழ்வது மொழிக்கும் அந்த மொழி சார்ந்தோர்க்கும் அழகல்ல என்பதுதான் எனது எண்ணமாக இருக்கிறது ஐயா.

இலக்கியமோ, காவியமோ அந்த காலகட்டச் சூழலை உண்மையாக பேசவேண்டும். எனது நாவலைப் படித்துப் பார்த்து விட்டு பல வருடங்கள் முன்னால் கிராமத்தில் நடந்த நிகழ்வு என ஒருவர் சொன்னபோது அப்படியெனில் இன்றைய காலம் மாறிவிட்டது என பொருளாகிறது. இன்றைய சூழலுக்கு அந்த கதைப் பொருந்தாமல் போகிறது, ஆனால் முன்னொரு நாளில் நடந்த விசயம் என எடுத்துக் கொள்ளப் படுகிறது.

இதைப்போலத்தான் எழுதப்பட்ட காவியங்களிலிருந்து உண்மைதான் நமக்கு வேண்டுமேத் தவிர அன்று ஜெயித்தவனின் எண்ணம் அல்ல. தமிழ் மொழி வளர்ச்சிக்காக எழுதப்பட்ட இலக்கண நூல் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் சமணர்கள். இதன் மூலம் ஒரு மொழி வளர்ச்சி மட்டுப்படுகிறது அல்லவா?

உண்மையுடன் கூடிய வளர்ச்சிதான் நல்ல வளர்ச்சி என்பது ஆன்றோர் வாக்கு. அது மொழி மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் பொருந்தும் என நினைக்கிறேன் ஐயா.

மேலும் தங்கள் மூலம் கற்று கொள்கிறேன் ஐயா. மிக்க நன்றி.