Saturday 22 August 2009

அழுதபோதா அம்மா வருவாள்

பசிக்கிறது...
அழும் சத்தம்
களை எடுக்கும் அம்மாவின்
காதில் விழுமோ
மரத்தின் கிளையில்
சேலை கட்டித் தொங்கவிட்டு
தூங்கவைத்து போன அம்மா...

நிழலில் நான்...
வெயிலில் உருகி உருகி
அம்மா தினமும்
வேகும் நினைப்பு வரும்
வரும் அழுகையை அடக்கியே
அமைதியாகிப் போவேன்
ஆடாத தொட்டில்
உச்சி வெயில் அடிக்க
உறங்கியது போல இருப்பேன்
ஓடி வந்து பார்ப்பாள்
ஓரக்கண்ணால் ரசிப்பேன்
பசிக்குமே பிள்ளைக்கு என
என்னைத் தூக்கி
மார்போடு அணைக்கையில்
எனக்கு கண்ணீர் முட்டும்...

உலகத்தில் உள்ள
குழந்தைகளுக்கெல்லாம்
ஒரு தாய் இருக்கக்கூடாதோ
ஆதரவற்ற பிஞ்சுகளை
நினைத்து என் நெஞ்சு
கனத்துப் போகும்
மொழி பேசத் தெரிந்ததும்
அம்மாவிடம் இதைதான்
கேட்கவேண்டும் என இருக்கிறேன்
அம்மா இல்லாத பிஞ்சுக்கெல்லாம்
அழுதபோதாவது அம்மா வருவாளா...

4 comments:

Vidhoosh said...

கண்ணீர் வரவழைத்து விட்டது.
-வித்யா

Radhakrishnan said...

உலகில் எல்லா உயிர்களும், எல்லாமும் பெற்று இன்புற்றிருக்க இறைவனை வேண்டுவதைத் தவிர வேறு வழித் தெரியவில்லை வித்யா. மிக்க நன்றி.

தேவன் said...

என்று தணியும் என் சுதந்திர தாகம்!!!

உழைப்பவர்க்கே உலகம் சொந்தமாகட்டும் என்று எல்லாம் வல்ல இறையை பிரார்த்திப்போம்.

Radhakrishnan said...

மிகவும் அருமை கேசவன் ஐயா, அவ்வாறேப் பிரார்த்திப்போம். மிக்க நன்றி.