Thursday 20 August 2009

ஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை

ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது.


இறைவனையும், ஆன்மிகத்தையும் சம்பந்தப்படுத்தியே நமது நடைமுறைப் பழக்கவழக்கங்கள் வளரத்தொடங்கின. நாகரிகம் என நதியோரங்களில் தொடங்கியபோது இயற்கை விசயங்கள் இறைவனாக பரிமாணம் செய்து கொண்டது. இத்துடன் நிறுத்தப்பட்டிருந்தால் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் போயிருக்கும், ஆனால் நமது உள்ளுணர்வின் வெளிப்பாடாக இறைவன் இயங்கிக் கொண்டிருப்பது போன்றத் தோற்றம் தான் முரண்பாடுகள் ஏற்பட வழிவகுத்தன.


இப்பொழுது ஆன்மிகம் பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டம் வேண்டுமெனில் மேலே ஆன்மிகத்திற்கென வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்ற இறைவனுக்கு முதலிடம் தருவதும், இறைவனை முன்னிறுத்தி இச்செயல்பாடுகளைச் செய்வதும் அவசியமில்லாத ஒன்றாகும் என்பது மிகவும் தெளிவாகும்.


இவ்வாறு ஒன்றைத் தெளிவுப்படுத்திக் கொள்ளும்போது இறைவனுக்கெனச் செய்யப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் தேவையற்றவை என்பது தெள்ளத் தெளிவாகும். மேலும் ஆன்மிகமானது இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையேயானத் தொடர்பு கொள்ளும் வழி இல்லை என்பது அறியப்படும். இப்படி இறைவனை சம்பந்தப்படுத்திக் கொள்ளாத இந்த ஆன்மிக முறையை பின்பற்றும் மனிதரை ஆத்திகர் என்றோ, பின்பற்றாத மனிதரை நாத்திகர் என்றோ சொல்ல வேண்டியதில்லை.


அறிவியல் வளர்ச்சியினாலும், தனிமனித சிந்தனை வளர்ச்சியினாலும் இறைவனைப் பற்றியும், உள்ளுணர்வு பற்றியும் விழிப்புணர்வு வளரத் தொடங்கியது. மனிதர்களின் சுயநலப் போக்கினால், வெறுப்புணர்வு வளர்ந்த காரணத்தால் ஆன்மிகம் இறைவனை முன்னிறுத்தி தனது அடையாளத்தைத் தொலைக்கத் தொடங்கியது. தங்களுக்குள் வேறுபாடுகளுடன் வாழத் தொடங்கிய மனிதர்களுக்கு உண்மையான ஆன்மிகம் எதுவெனத் தெரியாமல் போனது.


ஆன்மிகம் என்பது வாழ்க்கையை முறையாக வாழும் கலை என்பதை மனதில் உறுதியுடன் நிறுத்திக் கொண்டால் சிறந்த வாழ்க்கை முறையை நம்மால் வாழ இயலும், மேலும் ஆன்மிகம் நல்வழிப்பாதையாக மனிதகுலத்திற்கு என்றும் சிறந்து விளங்கும்.


இறைவனை வணங்கினால் தான் எல்லாம் சிறப்பாக நடக்கும் என ஆன்மிகம் சொல்லவே இல்லை. நாம் சிறப்பாக, பொறுப்புடன் நடந்து கொண்டால் தான் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்றுதான் ஆன்மிகம் சொல்கிறது. மேலும் ஒருமுறை ஆன்மிகம் என்றால் என்ன என்பதை நினைவு படுத்துவோம்.


ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது.


7 comments:

Vidhoosh said...

//இறைவனை வணங்கினால் தான் எல்லாம் சிறப்பாக நடக்கும் என ஆன்மிகம் சொல்லவே இல்லை. நாம் சிறப்பாக, பொறுப்புடன் நடந்து கொண்டால் தான் எல்லாம் சிறப்பாக நடக்கும் என்றுதான் ஆன்மிகம் சொல்கிறது. மேலும் ஒருமுறை ஆன்மிகம் என்றால் என்ன என்பதை நினைவு படுத்துவோம்.//

Well said.

கோவி.கண்ணன் said...

//ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது.//

:) நன்றாக இருக்கு !

தன்னிலை அறிந்தோர்க்கு எதுவுமே தேவையற்றது. தன்னிலை அறிவதும் எளிதன்று !

Robin said...

moral sense - ஐ ஆன்மிகம் என்று நினைத்து எழுதியுள்ளீர்கள். தவறு. ஆன்மிகம் moral sense -ஐ பலப்படுத்தும். ஆனால் அதுதான் ஆன்மிகம் என்பது சரியல்ல.

Robin said...

வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்பார்கள். ஒன்றில் அதி தீவிரமாக ஒன்றை பின்பற்றுவது அல்லது ஒரேயடியாக வெறுத்து விடுவது. கடவுளை நம்புபவர்கள் பலரும் செய்யும் தவறுகளால் கடவுள் என்றாலே வேண்டாத பொருளை போல பார்க்கும் நிலை வளர்ந்து வருகிறது. மதங்கள் வேண்டாமென்ற நிலை மாறி இப்போது கடவுளே தேவையில்லை என்னும் போக்கு வளர்ந்து வருகிறது.

நிகழ்காலத்தில்... said...

//நாம் சிறப்பாக, பொறுப்புடன் நடந்து கொண்டால் தான் எல்லாம் சிறப்பாக நடக்கும்//

அருமையான விளக்கம் நண்பரே,

வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

மிக்க நன்றி வித்யா, கோவியார், ராபின் மற்றும் சிவா அவர்களே.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது. //

மிக அருமையான முத்தாய்ப்பு...என்னை வெகுநாட்களாக குடையும் கேள்வி!
நான் அசைவம் உண்பவன். எனவே" குருவிக்கு அரிசியைப் போட்டுவிட்டு"; மற்றைய உயிர்கள் மேல் அன்பு செலுத்துகிறேனெனச்
சொல்வது சுத்த பொய். இதே வேளை ஆத்மீக வாதியாக வாழ ; அன்புடையவனாக வாழ ;ஒழுக்க சீலனாக வாழ; உண்மைபேசுபவனாக வாழ; உழைத்து உண்பவனாக வாழ.. அவன் சைவ உணவுதான் உண்ண வேண்டுமா? ஆமெனில் துருவத்தில் வாழும் மக்கள், இந்தோனேசியக் காட்டுவாசிகள்; அமேசன் காட்டு வாசிகள், வேடர்கள் இவ்வுலகில் வாழத் தகுதியற்றவர்களா? அவர்களிடம் ஆத்மீகம் இல்லையா?
எனவே இந்த மற்றும் உயிர்மேல் அன்பென்பது ஒரு இடைச்செருகல்... குறிப்பாக இடைக்கால இந்தியாவில் உள்னுளைந்த சமாச்சரமோ? ஆடையே இல்லாமல் வாழ்ந்த மனிதன் ஆடைகட்டி; இப்போ மானம் காக்கிறோம்; என்று சொல்வது போல்.
அதனால் ஆத்மீகத்துக்கும் மற்றைய உயிர் கொல்லாமல் வாழ்வதற்கும்;சைவ உணவுப் பழக்க வழக்கத்துக்குமான தொடர்பு வெறும் இட்டுக்கட்டலா?
அதனால் மற்றைய உயிர்களின் மேல் அன்பு செலுத்த முடியாத; அசைவமுண்ணும் நான் ஆத்மீகத்துக்கு
உகந்தவனில்லை எனக் கருதுகிறீர்களா?
என் மனம் கத்தரிகாய்ப் பிஞ்சுக்கும்; முளைக்கீரைக்கும் உயிர் இருக்கிறது. அதையும் வெட்டி; அவித்து; பொரித்து, வறுத்து உண்பதுகூட பாவமாகத்தான் படுகிறது. ஆனால் நான் வாழ வேண்டும் எனும்
சுயநலம் என்னைத் தடுக்கிறது. அதனால் அது பாவம் இல்லை;இது பாவம் என சால்சாப்பு தேடுகிறது.
ஆத்மீகவாதிகளும், அறிவு படைத்தோரும் தமக்கு வசதியானதைக் கூறி அதையே பொது விதி ஆக்குவார்கள்.என்னைப் போன்ற பரதேசிகள் ஏற்கவேண்டும்; அல்லது சாகவேண்டும்.
அந்த பொது விதியில் தான்....ஒபாமாவுக்கு நோபல் பரிசும் கொடுத்தார்கள்.