Tuesday 4 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 7

கோவிந்தசாமி அதே கடையில் இரண்டு மாதங்களாக வேலைப் பார்த்து வந்தார். கிராமத்தை மறந்து இருந்தார். யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. எப்படியும் புதையலை கண்டுபிடித்து விடுவது என்பதில் குறியாக இருந்தார். ஆனால் அவருக்கு காசிக்குச் செல்ல போதிய பணம் அந்த வேலையில் இருந்து சேர்க்க இயலவில்லை. ஒருமுறை மீன் பிடித்து விற்றுப்பார்த்தார். அதில் எந்த வருமானமும் கிடைக்காமல் சோர்ந்து போனார். தனது காசி ஆசையை இந்த கடையில் அடகு வைத்துவிடுவோமோ என அச்சம் கொண்டார். அப்போது அந்த கடைக்கு ஒருவர் வந்தார். அவர் கடையில் பொருள்கள் வாங்கிக்கொண்டே அந்த கடையின் முதலாளியிடம் தாங்கள் ஒரு குழுவாக காசி செல்வதாகக் குறிப்பிட்டார். இதைக்கேட்ட கோவிந்தசாமிக்கு மனம் மகிழ்ந்தது.

அந்த நபரிடம் நானும் காசி செல்ல விரும்புகிறேன் என குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட தொகை தன்னிடம் இருப்பது கண்டு மகிழ்ந்தார் கோவிந்தசாமி. அந்த கடை முதலாளி, தான் காசிக்கு எல்லாம் செல்வதில்லை. நீ வேலையைவிட்டு நின்று கொள் என சொல்லிவிட்டார். அதற்கு கோவிந்தசாமி தான் தனது வாழ்நாளில் இப்படியே வியாபாரம் செய்தே தனது எந்த ஒரு விருப்பத்தையும் நிறைவேற்றவில்லை. வேலை வேலை என்றே எனது வாழ்நாளை வீணாக்கிவிட்டேன். அதுபோல் நீங்களும் வீணாக்காமல் எங்களுடன் வாருங்கள் என சொன்னார். கடை முதலாளி கேட்கவில்லை. அந்த நபரிடம் இடம் எல்லாம் குறித்து வாங்கிக்கொண்டார் கோவிந்தசாமி.

கை ரேகை பார்க்கும் வயதானவரிடம் சொல்லிவிட்டு எட்டு பேர் கொண்ட குழுவுடன் ஒரு சிறிய வாகனத்தில் பயணத்தைத் தொடர்ந்தார். ஒரே நாளில் செல்லக்கூடிய பயணம் இரண்டு நாட்கள் ஆகும் என அந்த நபர் சொல்லி இருந்தார். அவரிடம் என்ன விசயமாகச் செல்கிறீர்கள் என கேட்டு வைத்தார் கோவிந்தசாமி. அதற்கு அந்த நபர் காசியில் ஒரு சித்தர் இருக்கிறார். அவர் எந்த பொருளையும் தங்கமாக மாற்றிவிடுவார் அதுவும் உலோகமாக இருந்தால் மிகவும் எளிதாக மாற்றுவார். இதை என் நண்பன் குறிப்பிட்டான். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை அதனால் நேராக பார்க்கச் செல்கிறேன் என்றார் அவர். கோவிந்தசாமிக்கு உற்சாகம் அதிகம் ஆகியது.

ஒவ்வொருவரும் தங்களது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டனர். தோட்டத்தில் அருகில் இருக்கும் சிவனை வேண்டிக்கொண்டார் கோவிந்தசாமி. அந்த நபர் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். என்ன புத்தகம் என கேட்டபொழுது உலோகங்களை தங்கமாக மாற்றக்கூடிய வழிமுறைகள் சொல்லும் புத்தகம் என சொன்னார். அதனை வாங்கி பார்த்தார் கோவிந்தசாமி. புத்தகம் புரியாமல் இருந்தது. இப்படி எழுதி இருக்கிறார்கள் என கேட்டார். எளிதாக புரிந்துவிட்டால் அதை ஊன்றிப்படிக்க யாரும் விரும்பமாட்டார்கள் எனவேதான் புரியாமல் இருக்கும்படி செய்கிறார்கள் என்றார் அந்த நபர். மேலும் அவர், ஒரு புத்தகம் எழுதும்போது ஒவ்வொரு கதாபாத்திரமாக சொன்னால் நன்றாக இருக்கும். மொத்தமாக அனைத்து கதாபாத்திரங்களின் பெயரையும் ஒரே இடத்தில் சொல்லிவிட்டால் மறந்து விடுவோம் என்றார். அவரது சம்பாஷனை கோவிந்தசாமிக்கு பிடித்து இருந்தது.

தாமிரத்தை தங்கமாக மாற்றும் முறை குறித்து விளக்கினார். ஆனால் கோவிந்தசாமிக்குப் புரியவில்லை. வாகனம் மெதுவாக போய்க்கொண்டிருந்தது. வெளியில் ஆடுகளும் மாடுகளும் பறவைகளும் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு இருந்தன. சின்ன தூறலும் வந்து விழுந்தது. சித்தர்கள் பற்றி கேட்டார் கோவிந்தசாமி. சித்தர்கள் அனைத்தும் அறிந்தவர்கள் என்றார் அந்த நபர். உலகத்தில் நடக்கும் செயல்களுக்கு ஒவ்வொரு குறிப்பும் இருக்கும். இப்போது நான் அங்கு கடைக்கு வரவில்லையெனில் நீ என்னுடன் வந்து இருக்க முடியாது என்றார். அப்போதுதான் நீ எதற்கு காசி செல்கிறாய் எனக் கேட்டு வைத்தார்.

கோவிந்தசாமிக்கு புதையல் பற்றி சொல்வதா வேண்டாமா என தெரியவில்லை. தன்னிடம் இருந்த அஸ்தியைக் காட்டி இதை கரைக்கச் செல்கிறேன் என்று மட்டும் அப்போது சொல்லி வைத்தார். அதற்கு அந்த நபர் அப்படியெனில் அதை நீ இதோ செல்லும் கங்கையின் துணை நதியில் கரைக்கலாமே ஏன் அவ்வளவு தூரம் வரவேண்டும் என்றார். கோவிந்தசாமி புதையல் தேடிச் செல்லும் விசயத்தை சொன்னார். அந்த நபர் தான் தங்கம் உருவாக்கும் விதம்தனை கற்றுக்கொள்ள செல்வதும், நீ தங்கம் எடுக்க செல்வதும் ஒன்றாக இருக்கிறது. இப்படி ஒன்றுபட்ட எண்ணம் கொண்டவர்கள் வாழ்வில் சந்திக்கும்போது வெற்றி உண்டாகிறது என்றார். கோவிந்தசாமி மற்ற நபர்கள் எல்லாம் யார் எனக் கேட்டார். வாகன ஓட்டுநர் முதல் எல்லாம் அந்த சித்தரை பார்க்க செல்பவர்கள் தான் என்றார். நானும் சித்தரைப் பார்க்க வருகிறேன் என சொன்னார் கோவிந்தசாமி.

வாகனம் சென்று கொண்டிருக்கும்போதே பெரும் மழை வந்து விழுந்தது. அந்த மழையானது சாலையெல்லாம் பழுது அடையச் செய்தது. மேற்கொண்டு வாகனம் செல்ல இயலாது என ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். அங்கே உணவு அருந்தினார்கள்.

ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது கடவுள் இந்த உலகத்தை பெரும் காரணத்துடனே படைத்தார். ஒவ்வொருவருக்கும் அவரது முடிவினை நிர்ணயித்து வைத்தார். எல்லாம் இறையே என்றார் அந்த நபர். கோவிந்தசாமிக்கு அவர் பேசியது புதியதாய் இருந்தது. மற்ற உலோகங்களை எல்லாம் தங்கமாக மாற்றுவது குறித்து இந்த புத்தகம் படித்து செய்யலாமே என்றார். அந்த நபர் புத்தகம் பார்த்து செய்யும் அளவுக்கு அது எளிதில்லை. அதனால்தான் கற்றுக் கொள்ள செல்கிறோம் என்றார். அப்படி கற்று விட்டால் பெரிய பணக்காரர் ஆகிவிடுவோம், மேலும் இப்படி ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டுவிட்டால் பின்னர் தங்கத்துக்கு மதிப்பு இருக்காது என்றார்.

புதையல் தனது எண்ணத்தில் ஓடியது. தன்னிடம் இருக்கும் பணம் குறைவதை அறிந்து பணம் போதாவிட்டால் பாதி வழியில் இறக்கி விடுவீர்களா என கேட்க , நீ காசியிலே இருக்க வேண்டியதுதான் என்றார் அவர். ஏன் எனக் கேட்டபொழுது அந்த சித்தர் சொல்லித்தர மாதங்கள் ஏன் வருடங்கள் கூட ஆகும் என்றார். புதையல் எடுத்துவிடுவேன் அதை வைத்து கொள்ளலாமே என சொன்னபோது அந்த நபர் உன்னிடம் இல்லாததை பிறருக்கு தருவதாக வாக்கு தராதே என்றார். இதைக்கேட்ட கோவிந்தசாமி அந்த வயதானவரை சந்தித்தீர்களா என்றார். ஆம் என்றார் அந்த நபர். கோவிந்தசாமிக்கு தலை சுற்றியது.

(தொடரும்)

4 comments:

Raju said...

வெகு சுவாரசியமாக செல்கின்றது ராதா ஸார்.

பா.ராஜாராம் said...

சரளமான நடை ராதா...உங்களை எனக்கு அறிமுகம் செய்து தந்ததில் நிறைய அன்பும் நன்றியும் தோழரே...புதையல் எங்கும் கிடைக்கிறதுதான்!

துபாய் ராஜா said...

வெகு சுவாரசியமாக செல்கின்றது ராதா ஸார்.

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்.......

Radhakrishnan said...

மிக்க நன்றி டக்ளஸ், பா.ராஜாராம் மற்றும் துபாய் ராஜா.