Monday 3 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 4

எத்தனையோ வியாபாரம் செய்து இருந்தாலும் இதுவரை மீன் வியாபாரம் செய்தது இல்லை. எனவே மீன் வியாபாரம் செய்து அதில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு தனது பயணத்தைத் தொடரலாம் எனத்திட்டமிட்டார். விடுதியிலிருந்து விடைபெற்றுக்கொண்டு தன்னிடம் இருந்த பணத்தில் தூண்டில், உணவுப் பண்டங்கள் என வாங்கிக்கொண்டார். கிருஷ்ணா நதியினை நோக்கி நடந்தார். நடந்து சென்றபொழுது பேருந்தில் இவருடன் வந்த நபர் எதிர்பட்டார்.

அவரிடம் விசாரித்தபொழுது அவரது நண்பர் இடமாற்றல் ஆகிவிட்டதாகவும், அங்கிருப்பவர்களுக்கு அவர் எங்கு சென்றார் எனத் தெரியாது என கூறியதாகவும் தான் திரும்பவும் சொந்த ஊருக்குச் செல்ல நினைத்ததாக கூறினார். கோவிந்தசாமி அவரிடம் காசிக்கு வர விருப்பமா எனக் கேட்டார். ஆனால் அதற்கு முன்னர் சில வியாபாரங்கள் செய்ய வேண்டும், பணம் சேர்க்க வேண்டும் என சொன்னார். இனி தனக்கு யார் உதவப் போகிறார்கள் என எண்ணிக்கொண்ட அவர், அவரது பெயரை எழுதினால் ஒரு வரிக்கு மேல் வரும் என்பதால் சிவபாலன் என சுருக்கப் பெயரை நாம் குறித்துக் கொள்வோம், கோவிந்தசாமியுடன் வருவதாக சம்மதம் சொன்னார்.

கிருஷ்ணா நதியின் ஓரத்தில் சென்று அன்றைய தினம் எல்லாம் மீன்கள் பிடித்தார் கோவிந்தசாமி. நிறைய மீன்கள் சிக்கின. இதனை நல்ல விலைக்கு விற்று விடலாம் என சற்று தள்ளி சென்று ஒரு வியாபார தளத்தில் மீன்கள் விற்கத் தொடங்கினார். இவரது வியாபார நுணுக்கம் கண்டு சிவபாலன் ஆச்சரியம் அடைந்தார். மீன்கள் மள மளவென விற்கத் தொடங்கின. போட்ட முதல்தனை விட பலமடங்கு லாபம் வந்தது. அங்கிருந்த வியாபாரிகள் இவரை வித்தியாசமாகப் பார்த்தனர். சிவபாலன் சிலரிடம் விளக்கம் சொன்னதும் அவர்கள் எதுவும் சொல்லவில்லை.

ஏதாவது விடுதியில் தங்கலாம் என சொன்னபோது, நதியைக் கடந்தால் விவேகாநந்தசுவாமி ஆஸ்ரமம் இருக்கிறது அங்கு சென்று இன்று இரவை கழிக்கலாம் என்றார் சிவபாலன். கோவிந்தசாமியும் சரியென கூறிவிட ஆஸ்ரமம் அடைந்தார்கள். அப்பொழுது இருட்டி விட்டது. இவர்களை ஆஸ்ரமத்தில் தங்க அனுமதித்தார்கள். அந்த ஆஸ்ரமத்தில் சிறியவர் முதற்கொண்டு வயதானவர்கள் வரை இருந்தார்கள். குருகுலம் போன்ற பள்ளியும் இருந்தது. தோட்டமும் அமைத்து இருந்தார்கள். முந்நாளில் எல்லாம் வழி நெடுக சத்திரம் கட்டி வைத்திருப்பார்களாம், இது போல யாத்திரை செல்பவர்களுக்கு உணவும் ஓய்வெடுக்க இடமும் என மிக சிறப்பாக இருந்து இருக்கிறது. இப்பொழுது அது போன்ற சத்திரங்கள் காண்பது குறைவு. இது போன்ற ஆஸ்ரமங்கள் ஆங்காங்கே இருக்கும் போலும் என கோவிந்தசாமி தனது நினைவை ஓடவிட்டார்.

மறுநாள் காலையில் மீன் பிடிக்கச் சென்றார்கள். நல்ல மீன்கள் சிக்கியது, நல்ல வியாபாரமும் நடந்தது. சிவபாலன் கோவிந்தசாமியை மெச்சினார். சிவபாலனின் வயது 48 தான். காசிக்குப் போறோம் இப்படி மீன் வித்த காசுல போறொமே என்றார் சிவபாலன். செஞ்ச பாவத்தில இந்த பாவத்தையும் சேர்த்து கரைச்சிரலாம் என்றார் கோவிந்தசாமி சிரித்துக் கொண்டே. அங்கிருந்து புகைவண்டி பிடித்து சீர்டி சாய்பாபா ஆலயம் வந்தார்கள். சீர்டி சிறப்பினை கதை கதையாகச் சொன்னார் சிவபாலன். தான் சீர்டியிலே இருக்கப்போவதாக சிவபாலன் சொன்னதும் கோவிந்தசாமி ஏமாற்றத்துடன் தனது பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார். சிவபாலனின் துணை கோவிந்தசாமிக்கு மிகவும் உதவியாக இருந்தது.

கோடியலூரிலே அவரது நினைவு சுற்றியது. சில மாதங்களுக்கு முன்னர் வசந்தராஜ் தன்னிடம் அவரது மகளுக்கு வரன் பார்ப்பதாகவும், பண உதவியும் கேட்டதும் நினைவுக்கு வந்தது. இந்நேரம் தனது வீட்டில் வைத்து வரன் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து இருப்பார்கள் என எண்ணினார் கோவிந்தசாமி. இப்படி வீடும் தோட்டமும் தனது என்ற எண்ணம் தனக்கு வராமலிருக்க மிகவும் போராடினார்.

கோடியலூரில் வசந்தராஜ் மகள் கோமலாவுக்கு அரசு பேருந்து ஓட்டுநர் வரனாக அமைந்தார். திருமணத்தை கோவிந்தசாமி வரும் வரை தள்ளி வைக்கலாம் என எண்ணிய வசந்தராஜ் திருமணத்தை சற்று தள்ளி வைக்கலாம் எனக் கேட்டார். வரதட்சிணையை சரியாக பேசியவர்கள் தள்ளி வைக்க இயலாது என கூறவே கோவிந்தசாமியிடம் கேட்ட உதவித்தொகையை குறித்துக் கொண்டு எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டார் வசந்தராஜ். அடுத்தமாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கோவிந்தசாமி புவனேஸ்வரை வந்து அடைந்தார். ஒரிஸ்ஸா மாநிலம் என அறிந்துகொண்டவர் இந்த மாநிலத்தில் அதிக வெள்ளம் வரும் என நாளிதழ்களில் படித்து இருந்தார். எங்கு போவது என தெரியாமல் நின்று கொண்டிருந்தார். திடீரென மழை பலமாக விழுந்தது. தொப்பலாக நனைந்து போனார். இருமத் தொடங்கினார். இவரை அங்கே ஒரு இளைஞன் வைத்த கண் எடுக்கமால் அவர் வந்ததிலிருந்து பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் அருகிலேயே சென்று அந்த கட்டிடத்தின் கீழ் இருமலுடன் நடுங்கிக் கொண்டே நின்றார் கோவிந்தசாமி.

(தொடரும்)

4 comments:

Raju said...

வழக்கம் போல அருமை.
அடுத்த பகுதிக்காக காத்திருக்கின்றேன்.

Radhakrishnan said...

மிக்க நன்றி டக்ளஸ் அவர்களே.

sakthi said...

தொடர்கதையா???

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

ஆமாம் சக்தி அவர்களே. முன்னரே எழுதப்பட்டுவிட்டது, அதனை இங்கே புதிய நண்பர்களுக்கெனப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.