Wednesday 26 August 2009

நுனிப்புல் - பாகம் 1 (1)

ஓம் நமோ நாராயணாய நம ஓம்
நீ என் அருகினில் இருப்பினும்
உன்னை என்னுள் உணராதவரை
உன்னை தேடுதல் ஒரு தேவை
நுனிப்புல் பாகம் - 1 தரவிறக்க

மனதெல்லாம் ஒருவிதமான சந்தோசம். சின்ன அமைதியும், சில்லென்ற காற்றும், காற்றின் ஓசையும் வாசனின் கண் இமைகளை மூடியவாறே வைத்து இருந்தன. வாசன் அந்த அற்புதமான நிகழ்வினை ரசித்தபடியே அவரது தோட்டத்தில் சாய்ந்து இருந்தான்.

வாசன் இருபத்திரண்டு வயது இளைஞன். அவனது கிராமத்தின் பெயர் குளத்தூர். இந்த அழகிய கிராமம் தமிழகத்தின் தெற்கில் அமைந்து இருந்தது. 150 வீடுகள் கொண்டதாய் தெருக்கள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டு கிராமம் மிகவும் அற்புதமாய் இருந்தது. கிராமத்தின் தெற்கில் ஒரு கோவில், வடக்கில் ஒரு கோவில், கிழக்கில் ஒரு கோவில் மற்றும் மேற்கில் ஒரு கோவில் என கோவில்கள் சூழ்ந்த கிராமம் பாதுகாப்பாக இருந்தது. நாணல் கோட்டை எனும் நகரத்தில் இருந்து தினமும் இரண்டு பேருந்துகள் ஏழு முறை ஊருக்குள் வரும். விவசாயம் ஊரின் பிராதன தொழில். 5 வகுப்புவரை கொண்ட ஒரு பள்ளி. 4 கி.மீ தொலைவில் உள்ள சோலையரசபுரத்திற்குத்தான் 12 வரை படிக்கச் செல்ல வேண்டும். மக்கள் கூடிப் பேச பொதுவாய் ஒரு திண்ணை. மரங்களும் செடிகளும் வண்ண வண்ண மலர்களும் பூத்து இருந்தன. தண்ணீர் நிரம்பிய குளம் இரண்டு இருந்தன. செம்மையான, செழிப்பான கிராமம், தெற்கில் கரிசல் மண்ணும், வடக்கில் செவந்த மண்ணும் கொண்டதாய் இனம் பிரித்து இருந்தது.

'வாசன், வாசன்' யாரோ அழைக்கின்ற சப்தம் கேட்டு, தன் தியானம் கலைத்து, வந்து நின்ற பெரியவரைப் பார்த்து வணக்கம் சொல்லியவாரே எழுந்தான் வாசன்.

''வாசன், என்ன மாலை நேர உறக்கமா?'' என்றார் பெரியவர் வினாயகம். 50 வயது மதிக்கத்தக்க பெரும் தனக்காரர், தாராள மனம் உடையவரும் கூட. திருமண பந்தம் என்ற ஒன்றை அறியாதவர். தனி மனிதனாகவே வாழ்ந்து கழித்துக் கொண்டு இருப்பவர். இவருக்கு ஒரு சகோதரர் மட்டும் உண்டு.

''வாங்க அய்யா, உட்காருங்க'' என அங்கு இருந்த கட்டிலை எடுத்துப் போட்டான் வாசன். ''இளநீர் கொண்டு வரேன்யா'' என்று வந்தவருக்கு இளநீர் வெட்டி வருவதற்காகச் சென்றான்.

''என் கேள்விக்கு பதில் இல்லையா'' என்று இளநீரை வாங்கியவாரே கேட்டார் பெரியவர். நாம் கேட்பதை கேட்போம் பதில் வந்தால் வரட்டும் என வாழும் மக்கள் உள்ள உலகில், ஒரு விசயம் கேட்டு அந்த விசயம் விவரம் அறிய ஆசைப்படுபவர் வினாயகம்.

சிரித்தான் வாசன். ''அய்யா நான் அமைதி தேடி அமர்ந்திருந்தேன், மாலை நேர உறக்கம் எல்லாம் ஒண்ணும் இல்லை அய்யா'' என்ற வாசகம் வினாயகத்திற்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
''அமைதி தேடியா?'' புருவம் ஏறிட புரியாமல் விளித்த வினாயகம் விழித்தார்.

''என்ன ஆச்சர்யமா கேட்கிறீங்க அய்யா, உங்களிடம்... என்கிட்ட எதையோ தேடுவது போலே எனக்கு தெரியுத'' வாசன் வாக்கியம் முடிக்கும் முன் இடைமறித்தார் வினாயகம். ''வாசன் என்னப்பா எல்லாம் அறிந்தவன் போலே பேசற, அமைதி தேடுறேன்னு சொல்ற, உன்கிட்ட ஏதோ எதிர்பார்க்கிறேன்னு சொல்ற... ம், உண்மைதான் வாசன், உன் தோட்டம் எல்லாம் விலைக்கு தரியா?'' தறிகெட்டு வந்து விழுந்த வார்த்தைகள்! தடுமாறிப்போனான் வாசன். தந்தையிடம் கேட்காமல் நம்மிடம் ஏன் கேட்கிறார் என சந்தேகமாய் அவரை நோக்கினான்.
''என்ன வாசன் , என்ன பதில் சொல்லப்போற, உங்க அப்பாகிட்ட சொன்னா உன்கிட்ட கேட்கச்சொல்வார்'' என விசயம் அறிய வேதனைப்பட்ட்டார் வினாயகம். நிலைகுலைந்த வாசன், ''என்ன அய்யா திடீரென என் தோட்டத்தை விலைக்கு கேட்கறீங்க'' கருத்து அறிய கவலையுற்றான்.

வினாயகம் அவனை உற்று நோக்கியவாறே ''பதில் சொல்வேன்னு பார்த்தா, என்கிட்ட வினா கேட்கிற'' என்றவாரே ''இந்த கரிசல் மண்ணை எனக்கு கொடு, அதே அளவு என் செவல நீ எடுத்துக்கோ, சம்மதமா?'' பெரியவரின் வார்த்தைகள் பெரும் புதிராகவே இருந்தன. வாசன் அமைதியாய் அடம்பிடித்தான்.

''வாசன் நீ அமைதி தேடு, நான் வேண்டாம்னு சொல்லல, அதுக்குன்னு வார்த்தை பேசாம இருந்து அமைதி காத்தேன்னு வைச்சிக்கோ அப்புறம் வெளிச்சம் உனக்கும் இல்ல, எனக்கும் இல்ல, இப்பவே இருட்டிருச்சி'' அவசரப்பட்டார் வினாயகம். வாசன் தன்னை ஆசுவாசபடுத்திகொண்டான்.

''சரி, இருங்க அய்யா, கதவை அடைச்சிட்டு வரேன், பேசிக்கிட்டே போகலாம், யோசிச்சு சொல்ற விசயத்த, யோசிக்க கூட நிமிசம் இன்றி யாசிக்கிறது என்ன தர்மமோ'' என கூறியவாரே கதவை இழுத்து சாத்தினான். கதவு சாத்தப்பட்ட வேகத்தில் காற்றுக்கு வேதனை இருப்பது சப்தத்தில் தெளிவாக தென்பட்டது.

அவர்கள் நடந்தனர். வாக்கியங்கள் பரிமாறப்பட்டன. வார்த்தைகள் விட்டுகொடுக்கப்பட்டன. வினாயகத்தின் கண்களில் பெரிய கருணை தென்பட்டது. இனி சிரமம் இல்லை என தோன்றியது அவருக்கு. ஊர் எல்லை தொடுவதற்கும் தன் உள்ளத்தில் உள்ளவற்றை வாசனிடம் கொட்டி முடிப்பதற்கும், வாசன் எதையும் சிந்தாமல் தன் எண்ணத்தில் சேகரித்து வைப்பதற்கும் மிகச் சரியாக இருந்தது.

வாசன் தன் வீடு நோக்கி நடந்தான். இருட்டுத் தெரியவில்லை. ஊரெல்லாம் ஒரே வெளிச்சமாக இருந்தது. ''வாசா தோட்டவேலை முடிஞ்சதா'' என சேட்டூர் கிராமவாசி ராஜன் கேட்டார். ''முடிஞ்சதுண்ணே, இந்த பக்கம் என்ன இன்னைக்கு'' என தானும் கேட்டு வைத்தான். ''அது இல்லப்பா, இங்க ஆட்களை வேலைக்கு கூட்டிட்டு போகலாம்னு வந்தேன், இந்த ஊரு ஆட்கள் நல்ல வேலை செய்வாங்களே அதான்'' என ஊரின் பெருமை சொன்ன அவரை பார்த்து ''பார்போம்'' என அனுப்பிவிட்டு நடந்த வாசனை நோக்கி குழந்தைகள் குதூகலித்து சத்தம் போட்டு வந்தனர்.

வாசன் தினமும் இரவு 7 மணிக்கு அங்கு கூடி விளையாடும் குழந்தைகளுக்கு கதை, கவிதை சொல்வது வழக்கம். வீடு சென்று வருவதாக சொல்லிவிட்டு அவர்களை புத்தகம் கொண்டுவந்து படிக்கச் சொல்லி நகர்ந்தான். தாய் என்ன சொல்வாளோ என யோசனை அதிகமாக இருந்தது.

(தொடரும்)

9 comments:

தேவன் said...

///புருவம் ஏறிட புரியாமல் விளித்த///> இது சரியா?

புருவம் ஏறிட புரியாமல் விழித்த > இது சரியா?

எப்படின்னு தெருஞ்சிக்கலாம் தான் கேக்குறன்.
தவறாக நினைக்க வேண்டாம்.

Radhakrishnan said...

1. விளித்தல் என்பது அழைத்தல் அல்லது சொல்வது எனப் பொருள்படும் எனக் கருதி தமிழினை மிகத் திறமையாக எழுதுகிறேன் எனும் கர்வத்துடன் அமைத்ததுதான் அந்த வாக்கியம். விளித்த வினாயகம் விழித்தார் என முடித்திருந்தேன். நீங்கள் கேட்பதில் தவறு ஏதுமில்லை ஐயா. நான் எழுதியதில் தவறு இருக்க வாய்ப்பு இருக்கிறது. எழுதியவரை சரி என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

கடுமையான விமர்சனங்களை ஏந்திய நாவல் இது, எழுதிய என்னை வெட்கப்பட வைத்துவிட்டது. மிக்க நன்றி.

2. நன்றி இன்ஃபார்மேஷன் அவர்களே.

தேவன் said...

///கடுமையான விமர்சனங்களை ஏந்திய நாவல் இது, எழுதிய என்னை வெட்கப்பட வைத்துவிட்டது.///

மன்னிக்கவும், இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது நண்பரிடம் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. நன்றி மட்டுமே சொல்லி இருக்கலாம்.

எனக்கும் ஆழத்தமிழ் தெரியாது தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.

விமர்சனங்களை கடந்தால்தான் அது நாவல்.

///விளித்தல் என்பது அழைத்தல் அல்லது சொல்வது எனப் பொருள்படும்///


இந்த தகவலுக்கு நன்றி.

Radhakrishnan said...

அப்படியே ஆகட்டும். மிக்க நன்றி கேசவன் அவர்களே.

Vidhoosh said...

அமைதியைத் துவங்கி வேகம் கூடுகிறது உங்கள் நாவலில். ரொம்ப அருமையான தமிழ்.

Vidhoosh said...

தமிழ்மணத்தில் வோட்டு போட முடியவில்லை. ஏனோ என் பதிவுகளும் அங்கே சேருவதில்லை. அதனால் தமிழ் மனத்தையே எடுத்து விடலாம் என்றிருக்கிறேன்.

தமிளிஷில் வோட்டு போட்டு விட்டேன் சார்.

-வித்யா

Radhakrishnan said...

//அமைதியைத் துவங்கி வேகம் கூடுகிறது உங்கள் நாவலில். ரொம்ப அருமையான தமிழ்.//

மிக்க நன்றி வித்யா.


//தமிழ்மணத்தில் வோட்டு போட முடியவில்லை. ஏனோ என் பதிவுகளும் அங்கே சேருவதில்லை. அதனால் தமிழ் மனத்தையே எடுத்து விடலாம் என்றிருக்கிறேன்.

தமிளிஷில் வோட்டு போட்டு விட்டேன் சார்.

-வித்யா//

அட, நேற்றுதான் தங்களின் இடுகை ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கும்போது ஏன் அந்த இடுகை இன்னமும் தமிழ்மணத்தில் இணைக்கப்படாமல் இருக்கிறது என எண்ணினேன், அனுப்பு எனும் பொத்தானை அழுத்தலாமா என எண்ணம் வர பேசாமல் விட்டுவிட்டேன். அதற்குரிய பதிலைக் கண்டதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

வாக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி வித்யா.

கோவி.கண்ணன் said...

கதை நல்லா போகிறது.

// கிராமத்தின் தெற்கில் ஒரு கோவில், வடக்கில் ஒரு கோவில், கிழக்கில் ஒரு கோவில் மற்றும் மேற்கில் ஒரு கோவில் என கோவில்கள் சூழ்ந்த கிராமம் பாதுகாப்பாக இருந்தது//

இது போன்ற வாக்கியங்களை, "கிராமம் நான்கு திசைகளிலும் கோவில்கள் அமையப் பெற்று பாதுகாப்பாக இருந்தது" என்று எழுதலாம். பக்கத்தை நீட்டிக்க எழுதியது போல் வாசிப்பவர்களை புரிய வைத்துவிடும்.

Radhakrishnan said...

மிகச் சரியாகச் சொன்னீர்கள் கோவியாரே. இனிமேல் வெளிவரும் படைப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற தவறுகளை களைந்திட வேண்டும். மிக்க நன்றி.