Monday 12 July 2010

பெண்களால் ஏற்படும் பிரச்சினைகள்

குழந்தை பெற்று கொள்வது குறித்த காரணம் தேடுவதில் எனது நேரம் செலவாகி கொண்டிருந்தது. பிள்ளைகள் பெற்று கொள்வதன் அவசியம் குறித்து பலமுறை எனது மனைவியிடம் பேசியாகிவிட்டது. அனால் ஒரு முறை கூட எனது மனைவியின் மனதில் மாற்றம் ஏற்படவில்லை. குழந்தை பற்றி பலரும் கேட்க தொடங்கி இருந்தார்கள். இப்போதைக்கு வேண்டாம் என்று இருக்கிறோம் என சொன்னாலும் எங்களுக்குள் ஏதோ பிரச்சினை என பேச ஆரம்பித்தார்கள்.

 ஊர் பேச்சுதனை ஒரு காரணமாக எனது மனைவியிடம் எடுத்து சொன்னேன். அதற்கு எனது மனைவி அதனால் என்ன, நமக்கு உண்மையிலே குழந்தை பெறும் பாக்கியம் இல்லாமல் போனால் என்ன செய்து இருப்பீர்கள் என கேட்டு வைத்தார். நான் விளையாட்டாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என சொன்னேன்.  நான் விளையாட்டாகத்தான் சொன்னேன். ஆனால் எனது மனைவி அதை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ளத் தொடங்கினார். எந்த பெண்ணை கல்யாணம் செய்ய போகிறீர்கள் எனும் கேள்வி எனது மனைவியிடம் இருந்து தினமும் வந்து கொண்டிருந்தது. எனக்கு அயர்ச்சியாகிவிட்டது.

எனது அம்மாவும், அப்பாவும் ஒரு ஜோசியரிடம் எங்களை செல்லுமாறு கூறினார்கள்.  நான் முதலில் திட்டவட்டமாக மறுத்தேன். ஆனால் எனது மனைவி வாருங்கள் என என்னை வம்பாக இழுத்துக் கொண்டு போனார். அந்த ஜோசியர் எங்களை பார்த்து நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் இருக்கிறது என சொன்னார். வெறும் பார்வையில் ஒரு பெண்ணை கர்ப்பம் அடைய செய்வது எந்த உலகத்தில் சாத்தியம் எனும் எரிச்சல் எட்டிப் பார்த்தது.

அதோடு நிறுத்திக் கொள்ளாமல்  எனது மனைவியை நோக்கி ஒரு வாக்கியம் சொன்னார். இவருக்கு மற்ற பெண்களால் பிரச்சினை வரும், இவர் உங்க சொல்பேச்சுபடி நடக்கவில்லை எனில் வீட்டில் தினமும் சண்டைதான் என்றார். இதுவரை நான் எனது மனைவியிடம் சண்டை போட்டதே இல்லை. எனக்கு மற்ற பெண்களிடம் எவ்வித தொடர்பும் கிடையாது. ஜோசியர் அவ்வாறு சொன்னது எனக்கு நகைப்பை ஏற்படுத்தியது. ஜோசியரின் வீட்டில் நடக்கும் விசயத்தை எங்களுக்கும் சொல்லி இருக்கலாம் என மனதில் நினைத்துக் கொண்டேன். எனது மனைவி இந்த விசயத்தை எப்படி எடுத்துக் கொள்வார் என என்னால் அப்போது எண்ணிப் பார்க்க இயலவில்லை.

எனது வேலை இடத்தில் புதிதாக ஒரு பெண் வேலைக்கு வந்து சேர்ந்தார். பார்பதற்கு மிகவும் அழகாக இருந்தார். எனது இருக்கைக்கு அருகில் தான் அவரது இருக்கை. அவர் வேலைக்கு புதிது என்பதால் என்னிடம் அடிக்கடி வேலை குறித்து கேட்பார். அவர் குரல் மிகவும் நன்றாக இருந்தது. சில தினங்களில் என்னுடன் மிகவும் அன்புடன் பழக ஆரம்பித்தார். நானும் அவருடன் நன்றாக பழகினேன். எங்களுக்குள் ஓரிரு மாதத்தில் நல்ல நட்பு வளரத் தொடங்கியது. ஒரு முறை அலுவலக கோப்புதனை பார்வையிட்டபோது அவரது பிறந்த தினமும் எனது பிறந்த தினமும் ஒரே நாளோடு மட்டும் இல்லாமல் அதே வருடம் அதே மாதம் என இருந்தது. இதை உறுதி செய்ய வேண்டுமென அவரிடம் கேட்டபோது அது உண்மை என தெரிந்து கொண்டேன். எனக்குள் அத்தனை மகிழ்ச்சி.

அவருக்கு திருமணம் ஆகி இருக்கவில்லை என்பதையும் அவர் மூலமே அறிந்து கொண்டேன். ஒரு ஞாயிறு அன்று அவரை எனது வீட்டுக்கு வர சொல்லி இருந்தேன். அவரைப் பற்றி முதன் முறையாக எனது மனைவியிடம் சொன்னதுடன் ஞாயிறு அன்று அவர் வருவதாக சொன்னேன். அந்த பெண்ணுடன் திருமண எண்ணம் இருக்கிறதா  என கேட்டார். எனக்கு கோவம் வந்தது. எதற்கு இப்படி சந்தேகம் கொள்கிறாய் என கேட்டேன். நீங்கள் சந்தேகம் படும்படியாக நடந்து கொள்கிறீர்கள் என கோவமாக சொன்னார். முதன் முதலாக அன்றுதான் வேலை இடத்தில் இருக்கும் பெண்ணுக்காக எனது மனைவியிடம் சண்டை போட்டேன்.

அன்று இரவு இருவரும் சாப்பிடாமல் உறங்கிப் போனோம். ஜோசியரை செமத்தியாக உதைவிட வேண்டும் என எண்ணிக் கொண்டேன். காலையில் எனது மனைவி என்னிடம் பேசவே இல்லை. எனது மனைவி பேசாமல் இருப்பது இதுதான் முதல் முறை. பேச சொல்லி மிகவும் கெஞ்சினேன். அந்த பெண்ணை வரச் சொல்லவில்லை என சொன்னேன். ஆனாலும் பேசாமலே இருந்தார். எப்போதும் போல் செய்வதை சரியாகவே செய்தார். சாப்பாடு எல்லாம் நன்றாகவே இருந்தது. ஆனால் எனக்குத்தான் சரியாக சாப்பிட இயலவில்லை. வேலைக்கு கிளம்பும்போது அந்த பெண் வரட்டும் என்று மட்டும் சொன்னார். புன்னகை புரிந்தேன்.

வேலைக்கு செல்லும் வழியில் எனது மாமா மகள் என்னை தொடர்ந்து வந்தாள். அதை கவனிக்காதவாறு நான் சென்று கொண்டிருந்தேன். வேகமாக வந்த எனது மாமா மகள் கடும் கோபம் கொண்டவளாய் என்னை சரமாரியாக திட்ட ஆரம்பித்தாள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. உனக்கு என்ன ஆயிற்று என்று கேட்டேன். என்ன ஆக வேண்டும், நீங்கள் என்னை இரண்டாம் கல்யாணம் செய்ய வேண்டும் என விருப்பபட்டதாகவும், நான் வேலைக்கு செல்வதில் தடை எதுவும் இல்லை என்றும் அத்தை எனது அப்பாவிடம் இன்று காலை சொன்னார் என சொன்னதும் எனக்கு கடுமையான கோபம் வந்தது.

உன்னை கல்யாணம் பண்ண வேண்டுமென எனக்கு என்ன தலை எழுத்தா என நானும் அவளை திட்டினேன். இனிமேல் என்னுடன் பேசாதீங்க மாமா என கோபமாக சென்றுவிட்டாள். இந்த விசயத்தை அப்படியே வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் பெண்ணிடம் கொட்டினேன். இரண்டாம் கல்யாணம் பண்ணுவது தவறா என கேட்டாள். மிகவும் தவறு என்று சொன்னேன். எனக்கு அப்படியெல்லாம் தோணவில்லை, பிடித்தால் எத்தனை திருமணமும் செய்து கொள்ளலாம் என்றார். கல்யாணம் ஆகாதபோது அப்படித்தான் இருக்கும், ஆனபின்னர் வேறு நினைவு இருக்காது என்றேன். சிரித்தார். 

மாமா மகள் சொன்னதை அன்று எனது மனைவியிடம் சொன்னேன். உங்க மாமா மகளை சொல்லி வையுங்க, அப்படி ஒரு நினைப்பு இருக்கா அவளுக்கு என போன முறை பாராட்டு வாங்கிய எனது மாமா மகள் இந்த முறை நன்றாக திட்டு வாங்கினார். எனது மனைவி அன்று இரவே எனது அம்மாவுடன் பெரிய சண்டை இட்டார் . அப்படி எதாவது செய்ய நினைத்தால் உங்க குடும்பத்தை உண்டு இல்லை என பண்ணிவிடுவேன் என்றார். எனது அம்மா மிரண்டு போனார். எனது அப்பாவும் நடுங்கினார். எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. குழந்தை பெற வேண்டுமெனில் எனது மனைவி வேலைக்கு போக வேண்டும் என்கிறார் என்று அந்த சண்டையில் சொல்லி வைத்தேன். எதுனாச்சும் செஞ்சி தொலையுங்க, தனி வீடு கூட பாருங்க என எனது அப்பா மனம் உடைந்து சொன்னார். எனது மனைவியிடம் இருந்து இதை என் அப்பா எதிர்பார்க்கவில்லை. என் அம்மா மீது தவறு இருப்பதால் வேறு பேச்சு எதுவும் பேசவில்லை.

அடுத்த சில தினம் வீடு அமைதியாக இருந்தது. நான் மிகவும் கவனமாக இருக்கத் தொடங்கினேன். இந்த நிலையில்தான் என்னுடன் வேலை பார்க்கும் திருமணமாகாத பெண் ஞாயிறு வீட்டுக்கு வந்தார்.  அந்த பெண் என்னை பற்றி மிகவும் புகழ்ந்து பேசினார். சார்தான் எனக்கு எல்லாம் மேடம் என யதார்த்தமாகத்தான் சொன்னார். முகநக மட்டும் எனது மனைவி செய்ததை என்னால் அறிய முடிந்தது.  இதுவே ஜோசியரை பார்க்காமல் இருந்து இருந்தால், எனது அம்மா ஒரு புரளி கிளப்பாமல் இருந்து இருந்தால்  எனது மனைவி மிகவும் மகிழ்ந்து இருப்பார், ஆனால் ஜோசியரை பார்த்துவிட்ட காரணத்தினால் அந்த பெண்ணுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக அன்று கதைகட்டி என்னை சின்னாபின்னமாக்கிவிட்டார். எனது அம்மாவைப் போலவே நீயும் பேசுகிறாய் என சொன்னேன். எதுவும் அவர் காதில் விழுந்தபாடில்லை.

படிப்பை முடித்து இருந்த எனது மாமா மகளும், வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் பெண்ணும் எனக்கும் எனது மனைவிக்கும் இடையில் தினமும் சண்டையை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களைப்பற்றி பேசி சண்டை இழுக்காமல் எனது மனைவியால் இருக்க இயலவில்லை. இந்த நேரம் பார்த்து எனது மாமா மகளின் காதலன் அவளை நிராகரித்து தொலைத்த செய்தி எனக்கு எட்டியது. ஒரு வேலை விசயமாக மாமா மகளை பார்க்க நினைத்த நான், இந்த விசயம் கேள்விப்பட்டு மாமா மகளுக்கு ஆறுதல் சொல்ல சென்றேன். என்னைப் பார்த்ததும் அழத் தொடங்கினாள்.

அவனுக்கு கட்டாய திருமணம் பண்ணி வைச்சிட்டாங்க மாமா என என்னுடன் பேசாதீர்கள் என சொன்னவள் அந்த அழுகையின் ஊடே சொன்னாள். அவள் அழுததை பார்த்தபோது எனக்கும் அழுகை வந்தது. அந்த துன்பமான சூழலிலும், நான் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு வேலை காலி இருப்பதை அவளிடம் சொல்லி வேலையில் சேர சொன்னேன். அதோடு மட்டுமில்லாமல் நான் சொன்ன தைரியம் அவளை உறுதி உள்ளவளாக மாற்றியது. என்னிடம் அன்றொரு தினம் அவள் அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டாள். நானும் மன்னிப்பு கேட்டேன்.

இந்த வேலை விசயம் பற்றி எனது மனைவியிடம் சொன்னேன். அந்த வேலையை ஒரு பையனுக்கு வாங்கி தரவேண்டியதுதானே அதென்ன உங்க மாமா மகளுக்கு என பொரிந்தார். எனக்கு எனது மாமா மகள் மீதும், வேலை இடத்தில் இருக்கும் பெண் மீதும் அதிக மரியாதை உருவாகி இருந்தது. ஆனால் எனது மனைவியை விட்டு கொடுக்க என்னால் இயலவில்லை. எது நடந்தாலும் எனது மனைவியிடம் சொல்லிவிடுவேன். இதனால் ஜோசியர் சொன்னது போலவே இருவரால் எனது வாழ்வில் புயல் உருவாகி கொண்டு இருந்தது. அதை என்னால் தவிர்க்க இயலவில்லை. எனது மனைவியின் எச்சரிக்கையை மீறி நான் அந்த இரண்டு பெண்களுடன் நட்புடன் தான் இருந்தேன். எனது மனைவி என்னுடன் சண்டை போட்டாலும் அந்த நட்பை என்னால் தொலைக்க இயலவில்லை, என் மனைவியின் மீதான காதலும் தொலையவில்லை.

திருமணம் ஆகி சரியாக பதினைந்து மாதங்கள் பின்னர் என்னிடம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என எனது மனைவி சொன்னதும் என்னால் நம்ப இயலவில்லை. வேலைக்கு செல்ல வேண்டும் என கேட்பாய் அல்லவா என்றேன், அப்படி கேட்கமாட்டேன், எனது தவறுக்கு மாமா அத்தையிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்றார். எனது மனைவியின் இந்த மாற்றத்திற்கு எது காரணம் எனும் யோசனையுடன் சாந்தி முகூர்த்தத்திற்கு தயாராகி கொண்டிருந்தேன்.

2 comments:

ரோஸ்விக் said...

ரொம்ப கஷ்டகாலம் சாமி...

Radhakrishnan said...

நன்றி ரோஸ்விக்.