Tuesday 6 July 2010

எனது மனைவி போடும் கடிவாளம்

பெண் பார்த்துவிட்ட வந்த பின்னர் எனது மனம் நிலை கொள்ளவில்லை. மனதுக்குள் எனது மனைவி வேலைக்கு செல்ல விருப்பப்படுவாளோ எனும் எண்ணம் சுற்றிக்கொண்டே இருந்தது. நானும் காரணம் தேடி தேடி அலுத்துப் போனேன். எந்த ஒரு காரணமும் சிக்கவில்லை.

சில வாரங்களிலேயே வேலையில் சென்று சேர்ந்தேன். காலையில் ஏழு மணிக்கு கிளம்பினால் சரியாக எட்டு மணிக்கெல்லாம் எனது அலுவலகம் சென்று சேர்ந்து விடுவேன். மாலை ஆறு மணி வரை அலுவலகத்தில் இருப்பேன். பின்னர் வீடு வந்து சேர சரியாக ஏழு மணி முப்பது நிமிடம் ஆகிவிடும். அலுவலகத்தில் இருக்கும்போது எனது வருங்கால மனைவிக்கு அவ்வப்போது தொலைபேசி அலைப்பு செய்து பேசுவேன். அப்போதெல்லாம் இந்த வேலை விசயம் பற்றி கேட்கத் தோணவில்லை. ஏதாவது நினைத்துவிடுவாரோ எனும் அச்சமும் இருந்தது.

அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் களைப்பு தீர குளித்துவிட்டு, நன்றாக சாப்பிட்டுவிட்டு தொலைகாட்சியில் தொடர்களை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். பெண் பார்த்துவிட்டு வந்தபின்னர்தான் இந்த தொலைகாட்சித் தொடர் எல்லாம் பார்க்கத் தொடங்கி இருக்கிறேன். எப்படியும் ஒரு காரணம் கண்டு பிடித்துவிட வேண்டும் எனும் ஆசைதான். ஆனால் சில தொடர்களில் மனைவி வேலைக்கு செல்வதை விரும்பாத கணவன் என காட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த தொடர்களில் நடிப்பவர்களுக்கு நிச்சயம் வலித்து இருக்காது, ஏனெனில் அவர்கள் செய்வது ஒரு வேலை தான். ஆனால் அவர்களைப் போல வீட்டில் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் மனதின் வலி எப்படியிருக்கும்? எனது மாமா மகள் ஞாபகம் வந்தது. தொடர் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு எனது மாமா வீட்டிற்கு சென்றேன்.

மாமா மகள் படித்துக் கொண்டிருந்தாள். எனது வேலை பற்றிய எண்ணத்தை அவளிடம் தெரிவித்தேன். வேலைக்கு போகமுடியாத‌ நிலைமை வந்தால் நான் எல்லாம் செத்துருவேன் மாமா என்றாள். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. வேலையில் சேர்ந்து கொண்டு அங்கு வேலையில் ஏற்படும் இன்னல்களை கண்டு செத்துவிடலாம் என சொன்ன சகோதரிகள் கண்ணுக்கு முன் வந்தார்கள். எனது அலுவலகத்தில் பல பெண்கள் பணிபுரிகிறார்கள். அவர்கள் எல்லாம் 'ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்' என அலுத்துக் கொள்ளாத நாட்களே கிடையாது. என் வருங்கால மனைவி வேலைக்குப் போக வேண்டும் என சொன்னால் என்ன செய்வது என கேட்டேன். அதற்கு அவள் மிக சர்வ சாதாரணமாக சொன்னாள். காரு வாங்கனும், வீடு வாங்கனும், விலையுயர்ந்த பொருள் வாங்கனும், அதுக்கெல்லாம் பணம் வேணும்னு சொல்லுங்க மாமா. இதுக்கெல்லாமா காரணம் தேடுவாங்க என்றாள். நல்ல வேளை நான் தப்பிச்சேன் என்றாள்.

அன்றிலிருந்து காரணம் தேடுவதை தவிர்த்து இருந்தேன். எங்கள் திருமணம் மிகவும் சிறப்பாகவே நடைபெற்றது. சாந்தி முகூர்த்தம் அன்று சாந்தி முகூர்த்தம் வேண்டாம் என்று சொன்னாள் எனது மனைவி. என்ன காரணம் என கேட்டேன். பிள்ளைகள் பிறந்தால் பணம் அதிகம் தேவைப்படும், அவளும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழலும் வந்து சேரும் என்றாள். அதற்காக கல்யாணம் பண்ணிய பிரம்மச்சரியாகவா வாழ்வது என்றேன். அப்படித்தான் சில காலங்கள் வாழ வேண்டும், இப்போதுதான் நீங்களும் வேலைக்கு சென்று இருக்கிறீர்கள், அதனால் சில வருடங்கள் ஆகட்டும் என்றாள். எனக்கு மிகவும் வெறுப்பாகிவிட்டது. ஒரு சராசரி மனிதன் என்பதை அன்றுதான் நான் அறிந்து கொண்டேன். கோபத்துடன் அப்படியே தூங்கியும் போனேன்.

சில நாட்கள் அவளுடன், எனது மனைவி என சொல்லாமல் இருப்பதற்கு எனது கோபம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள், தேனிலவு சுற்றுலா சென்றேன். படுபாதகியாக இருந்தாள் அவள். கருவுறாமல் இருக்க தடுப்பு சாதனம் என எதையும் உபயோகிக்கவும் கூடாது என சொல்லிவிட்டாள். கட்டை பிரம்மச்சாரியாக என்னை இருக்க வைத்தாள். எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கல்யாணம் பண்ணினோமா, அடுத்த சில வருடத்தில் அடுக்கடுக்காக பிள்ளைகள் பெற்றோமா என நினைத்திருந்த எனக்கு அவளின் செயல்பாடு அவள் மீதான வெறுப்பு கல்யாணம் பண்ணிய சில தினங்களில் ஆரம்பித்து இருந்தது.

அவள் மிகவும் கட்டுப்பாடுடன் இருந்தாள். எனக்கு ஆச்சரியமாகவும் இருக்கத்தான் செய்தது. காதல் மட்டுமே கல்யாணத்தின் வெற்றிப்படி என்றாள். கல்யாணம் என்பது நாமிருவரும் பிள்ளைகள் பெற்று கொள்ள செய்து கொள்வதல்ல என்றாள். எனக்கு இதெல்லாம் கல்யாணம் முன்னால் பேசவில்லையே என்று தோணியது. இவள் வேலைக்குப் போக வேண்டுமெனில் என்ன காரணம் சொல்லலாம் என தேடி வைத்திருந்த எனக்கு, இவள் வேலைக்குப் போகாமலிருக்க தயார் செய்து வைத்திருந்த காரணம் என்னை அலைக்கழித்தது.

சின்ன சின்ன குழந்தைகள் எல்லாம் பார்க்கும்போது மிகவும் ஏக்கமாக இருக்கும். ஒரு முறை எனது மாமா மகள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளிடம் தாம்பத்யம் இல்லாமல் நாங்கள் வாழும் விசயத்தை சொல்லிவிட்டேன். என்ன மாமா இது, உங்க இரண்டு பேருகிட்ட இருக்க அந்தரங்க விசயத்தை எல்லாம் என்கிட்ட சொல்றீங்க என்றாள். இல்லை நீ அவகிட்ட பேசிப் பாரு என்றேன். எனக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு எனது மாமா மகள் அவளிடம் பேசினாள்.

அன்று இரவு என்னிடம் எனது மனைவி, கோபம் தீர்ந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள், உங்க மாமா பொண்ணு என்கிட்ட பேசினாங்க. ரொம்ப நல்ல பொண்ணுங்க. வாழ்க்கையில் ரொம்பத் தெளிவா இருக்காங்க. வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிச்சிட்டுதான் கல்யாணம் எல்லாம், அதுவரைக்கும் காதல் தான். காதல் பண்றப்ப இந்த விசயத்தையெல்லாம் யோசிக்க வேண்டியதில்லைனு சொன்னாங்க. நாம ரெண்டு பேரும் தாலி கட்டிட்டு காதல் பண்றதா நினைச்சிக்குவோம், என்ன சொல்றீங்க என்றார் எனது மனைவி.

எனக்கு கடிவாளம் போடப்பட்டதாய் நினைத்துக் கொண்டேன். அழகான எனது மாமா மகள் மீது எனக்கு ஆசை ஒருபோதும் வந்தது இல்லை. அடுத்த பெண்கள் மீதும் எனக்கு எவ்வித ஆசை வந்ததும் இல்லை. எனது மனைவி எனும் உரிமையால் மட்டுமே எனக்கு ஆசை வந்தது. அந்த ஆசை கூட நிராகரிக்கப்படும்போது மிகவும் கோபம் வந்தது, ஆனால் நாட்கள் செல்ல செல்ல கோபம் இல்லாமல் மனைவியை அதிக அளவு நேசிக்கத் தொடங்கி இருந்தேன். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதெல்லாம் எனக்கு எழுதப்பட்டதல்ல என புரியத் தொடங்கியது.

இப்பொழுது பிள்ளைகள் பெற்று கொள்ள வேண்டும் என எப்படி எனது மனைவியை எனது வழிக்கு கொண்டு வருவது என ஒரு காரணம் தேடிக் கொண்டிருந்தேன்.

3 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

காதலென்ன கத்தரிக்காயா என்று ஒரு தொடர் T S ஸ்ரீதர் என்ற மெரீனா எழுதி நீண்ட நாட்களுக்கு முன்னாள் ஆனந்த விகடனில் வந்தது. அதன் கதாநாயகன் சுதாகர் காதலித்துத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற பிடிவாதத்தோடு! பல முயற்சிகளிலும் தோற்று, கடைசியாக ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவளும் இவனைக் காதலிப்பதாகப் பீலா விட அந்தப் பெண்ணின் தாத்தா இவர்களுக்குத் திருமணத்தை ஏற்பாடு செய்கிறார். தாலி கட்டும் முன் மணமகள் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். எல்லோரும் நினைப்பதுபோல இது ஒரு காதல் கல்யாணம் அல்ல, பெரியவர்கள் பார்த்து நிச்சயம் செய்தது தான் என்பதைப் பகிரங்கமாகச் சொல்லி விட்டு, அப்புறம் தாலி கட்டச் சொல்கிறாள்.

முதலிரவில் தன்னுடைய சபதத்தில் தோற்றுவிட்டதாகக் கலங்கிய கதாநாயகனிடம் கதாநாயகி சொல்கிறாள். ஒரு வார்த்தையை மாற்றிப் போட்டால் தோற்கவில்லை என்பதாகிவிடுமே என்று. நாயகன் எப்படி என்று ஆவலோடு கேட்க, காதலித்த பிறகுதான் கல்யாணம் என்பதை கல்யாணத்திற்குப் பிறகு காதல் என்று வைத்துக் கொண்டால் அவன் ஜெயித்துவிடுகிரானே! அவன் மனைவியைக் காதலிப்பதை யார் தடுக்க முடியும்? அது எப்படித் தோற்கும்?

இதே பாணியில் கதையை தலைகீழாக ஆரம்பித்து சுவாரசியமாகக் கொண்டு போயிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

Chitra said...

உங்கள் எழுத்து நடை, அப்படியே காட்சிகளை கண் முன் விரியச் செய்கிறது..... அருமை.

Radhakrishnan said...

ஆஹா, நன்றி கிருஷ்ணமூர்த்தி ஐயா. மிகவும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி

நன்றி சித்ரா.