Monday 22 February 2010

பதின்ம கால மனக் குறிப்பேடுகள் (2) - தொடர் அழைப்பு


2007ல் இந்தப் படத்தைக் காட்டி கவிதை எழுதச் சொன்னபோது எனக்கு நினைவுக்கு வந்தவன் பாண்டி.

தரையில் பம்பரம் சுற்றவிட்டால்
அதன் தலையில் அடிப்பான் பாண்டி
போன மாதம் பம்பரம் உடைந்து
புது பம்பரம் வாங்க காசு இன்றி
பாண்டி தந்த ஓசி பம்பரமும்
சுக்கு நூறாய் போன பின்னே
வண்ணம் பூசி வாங்கியாந்து
ஆணி அளவை நீட்டம் பண்ணி
அழகாத்தான் சுற்றுது என் கையில
அதுதரும் குறுகுறுப்புல உடல் கூசுது
இதை தரையில விட்டா
அதன் தலையில அடிப்பானோ பாண்டி
இதன் அழகுல மயங்கி நிற்பான் அந்த பாண்டி தோண்டி!

இந்த கவிதையை இப்பொழுது வாசிக்கும்போது கூட அந்த கிராமத்துத் தெரு கண்ணுக்குள் வெளிச்சம் காட்டித்தான் போகிறது. எத்தனை ரம்மியமான இரவுகள், தெரு விளக்குகளில் படித்தவர்களைப் பற்றி பெருமையாக பேசும் பூமி, தெரு விளக்குகளின் ரசனையில் விளையாடுபவர்களையும் பெருமையாக பேசாமல் கடவுள் பால் குடிக்கும் நேரம் என விரட்டி அடிக்கப்பட்ட காலங்கள் பதின்மத்தில் அச்சம் தருபவைதான்.

கோபக்காரனாகவே வாழ்ந்து வந்திருக்கிறேன் பதின்மத்துக்கு முன்னமும் பதின்மத்தின் பாதி வரையிலும். கவிதைகள், கதைகள், நாடகம் என எழுத்தில் மூழ்கிப்போக இந்த பதின்மத்தில் உறுதுணையாய் இருந்தது எனது மாமா மகன் ஜெயராம், சுப்புலட்சுமியின் அண்ணன். கதைகளும், கவிதைகளும் நான் எழுதிய பல கட்டுரைகளும் இந்த பதின்மத்தில் தான். கதைகளும், கவிதைகளையும் மீட்டு விட்டேன், கட்டுரைகள் வெல்லக்கட்டிக்காக மடிக்கப்பட்டதாக கடைக்கார அழகர் மாமா சொன்னபோது பெரும் இழப்பாகவே எனக்கு ஏன் அப்போது தெரிந்திருக்கவில்லை, ஆனால் இப்போது எழுதும்போது ஏதோ இனம்புரியாத வலி இருக்கத்தான் செய்கிறது. நிலையில்லாதவைகள் எனும் தலைப்பிட்டு எழுதிய கட்டுரை தாள்கள் கண் முன்னால் விரிகின்றன. அதனால்தான் வலைப்பூ ஆரம்பிக்கும்போது கூட எல்லாம் இருக்கும் வரை என்றே தலைப்பிட்டு இருந்தேன். இழப்பின் வலிதனை அதிக நேரம் நீடிக்க நான் அனுமதிப்பதில்லை.

பள்ளித் தோழர்களில் மறக்கவே முடியாத நபர்கள் என புளியம்பட்டி அழகர்சாமி, தற்கொலை செய்து கொண்ட பாம்பாட்டி கிரி, இலக்கணம் பேசிக்கொள்ளும் வரலொட்டி ரமேஷ்காந்தி, டி.ராஜேந்தரை பின்பற்றும் வரலொட்டி மோகன் என சொல்லிக்கொண்டே போகலாம். இதையும் தாண்டிய ஒரு நபர் உண்டு.

ஒருவன் எனது முகம் அவனது பாடப்புத்தகத்தில் தெரிகிறது என என்னை கலங்க வைத்தவன். அதன் காரணமாகவே அவன் என்னை வெறுக்கும்படி அவனை உதாசீனப்படுத்தினேன். பள்ளிவிட்டு பிரியும் வரை என்னிடம் அவன் பேசவில்லை, சில நண்பர்கள் சேர்ந்து அவனும் என்னைப் பார்க்க வீடு தேடி வந்தபோது, வீட்டின் வெளி வாசலிலேயே தண்ணீர் தந்து அனுப்பி வைக்குமளவுக்கு நான்  பிடிவாதக்காரன். என்னை அவன் பெண்ணாக உருவகம் செய்து காதலித்திருக்க விருப்பப்பட்டு இருக்கிறான் எனும் எச்சரிக்கை உணர்வு எனக்குள் வந்ததன் காரணம் எனக்குப் புரியாது, ஆனால் அப்போது அப்படித்தான் நடந்து கொள்ளத் தோன்றியது. வழி தவறிப் போகாமல் வலி ஏற்றுக்கொண்டதும் பதின்மத்தில் தான். வழி தவறிப் போனாலும் வலியின்றி இருந்ததும் பதின்மத்தில் தான்.

இந்த பதின்மத்தில் எனது தாய், தந்தையிடம், உற்றார், உறவினரிடம் கற்றுக்கொண்டதை விட சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரியாதவனாகவே இருந்திருக்கிறேன், கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்துபவனாகவே வாழ்ந்திருக்கிறேன். சொன்ன வேலைகள் எதையும் செய்வதில்லை, ஒரு சோம்பேறியாகவே வாழப் பழகியிருந்திருக்கிறேன், எனக்குத் தெரிந்ததெல்லாம் விளையாட்டு, சாப்பாடு. பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என இந்த பதின்மத்தில் கற்றுக்கொண்டதில்லை, அது பழக்கத்திலும் வந்திருந்ததும் இல்லை.

விளையாட்டுத்தனமாகவே வாழ்ந்திருந்த அந்த பதின்ம காலங்கள் வினையாகப் போய்விடாமல் தடுத்தாட்கொள்ளப்பட்டிருக்கிறேன், எங்கெங்கு வளைந்து விட வேண்டுமோ அங்கங்கே வளைந்து இருக்கிறேன், ஒடிந்து விடும் நிலை வந்தபோதெல்லாம் தாங்கப்பட்டு காக்கப்பட்டு இருக்கிறேன். அந்த பதின்ம காலங்கள் தந்த பாடத்தினால் இப்போதெல்லாம் பதின்ம காலங்களில் இருப்போரை எச்சரிக்கையுடனே இருக்கச் சொல்கிறேன். ஒருவேளை தாங்குபவர்களும், காப்போர்களும் இல்லாமலேப் போய்விடக்கூடும்.

தெகா அவர்களுக்கு நன்றி கூறி இவர்களைத் தொடர அழைக்கிறேன்.

சுந்தரா

ஷக்திபிரபா

சித்ரா

சிவா 

சங்கவி

ஜோ அமல் ராயன் ஃபெர்னாண்டோ 

(நிறைவு பெற்றது)




7 comments:

Thekkikattan|தெகா said...

வெ. இரா, இரண்டு பகுதிகளா பிரிச்சு கோர்வையா சொல்லி எங்களுக்கு உங்கள பத்தி அறிஞ்சிக்க கொடுத்தது, அருமையா இருக்கு. அதிலும் அந்த பம்பரக் கவிதை என்னய அப்படியே அந்த சூழலுக்கு தூக்கிட்டுப் போயிருச்சு, ஆணி நீட்டி வைக்கிற நுட்ப உலகத்திக்குள்ளர, செம.

//சொன்ன வேலைகள் எதையும் செய்வதில்லை, ஒரு சோம்பேறியாகவே வாழப் பழகியிருந்திருக்கிறேன், எனக்குத் தெரிந்ததெல்லாம் விளையாட்டு, சாப்பாடு.//

யாரு சொன்னா நீங்க கிடைச்ச சுதந்திரத்தை சரியா பயன் படுத்திக்கிடலைன்னு, மிகச் சரியா செஞ்சிருக்கீங்க... அந்த வயசில செமையா இருக்கும் பசியும், வெளி விளையாட்டும் அதத்தானே ரசிச்சு, லயிச்சு செஞ்சிருக்கீங்க.

//ஒருவேளை தாங்குபவர்களும், காப்போர்களும் இல்லாமலேப் போய்விடக்கூடும்.//

இதுவும் புரியுது என்ன சொல்ல வாரீங்கன்னு.

புலவன் புலிகேசி said...

நல்ல பல அனுபவங்கள்...

Radhakrishnan said...

மிக்க நன்றி தெகா அவர்களே, மிக்க நன்றி புலிகேசி.

ஹேமா said...

நினைவலைகளாக இப்போ சொன்னாலும் இன்று பக்குவப்பட்ட எழுத்துக்கள்.

நிகழ்காலத்தில்... said...

பதின்ம கால அனுபவங்களை தொடராக அழைத்தமைக்கு நன்றி நண்பரே

பகிர்ந்துகொள்கிறேன்..

மீண்டும் ஒருமுறை என்மீது தாங்கள் கொண்ட அன்பிற்கு நன்றியும் வாழ்த்துகளும்...

Radhakrishnan said...

மிக்க நன்றி ஹேமா, சிவா.

சுந்தரா said...

அனுபவப்பக்கங்கள் இரண்டுமே அருமை ரங்கன்.

விரைவில் நானும் எழுதுகிறேன்.

அழைப்புக்கு நன்றி!