Saturday 24 December 2011

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? சுடர்மிகு அறிவும் சுரைக்காயும்

முன்பகுதி இங்கே. 

மரங்கள் ஓங்கி வளர்ந்து இருந்ததை கண்டு இந்த மரங்கள் எல்லாம் எவரால் நடப்பட்டன எனும் சிந்தனை கற்காலம் தாண்டிய மனிதனின் எண்ணத்தில் மலர்ந்தது. விலங்குகளை வேட்டையாடி திரிந்த மனிதன் ஓரிடத்தில் அமர இந்த தாவரங்கள் பெரிதும் உதவியாய் இருந்தன. ரோமங்களால் மூடப்பட்டு இருந்த உடலுக்கு இலைகள் எல்லாம் உடைகள் ஆயின.

இந்த தாவரங்கள் எப்படி உருவாகின? மதம் எனும் கோட்பாட்டிற்குள், மத நூல்கள் தரும் போதையில் சிக்கி கொண்டு இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது எனும் வேதாந்த கருத்தில் மனம் வைத்து சுடர்மிகு அறிவுதனை எரித்து கொண்டிருப்பது எவருக்கும் பயன் அளிக்கப் போவதில்லை. இதை இப்படி பிரித்தோம், அதை அப்படி படைத்தோம் என வியாக்கியானங்கள் எல்லாம் படிப்பதற்கு சுவையாக இருக்கும். அந்த வியாக்கியானங்களை இறைவன் எனும் ஒரு பாகுபாடற்ற தன்மைக்கு அலங்காரம் சூட்டி நம்மை நாமே அடிமைபடுத்தி கொள்வது என்பது இந்த காலகட்டத்தில் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் தவிர்க்க கூடிய தைரியம் மிக்க அறிவு எவருக்கும் அத்தனை எளிதில் வாய்ப்பதில்லை. உள்ளூர பயம் இருந்து கொண்டேதான் இருக்கும். சனிப்பெயர்ச்சி பலன்கள் என படித்து பரிகாரம் தேடும் அளவுக்கு சுடர்மிகு அறிவுடன் நாமெல்லாம் படைக்கப்பட்டு இருக்கிறோம்! படைக்கப்பட்டு? ஆம், அறிவினை முட்டாள்தனமாக உபயோகிக்க தெரிந்த விதமே பல சீரழிவுகளுக்கு காரணம்.

இந்த தாவரங்கள் எல்லாம் அப்படி அப்படி முளைத்தது அல்ல, அப்படி அப்படி பிடுங்கப்பட்டு நடப்பட்டது அல்ல. எப்பொழுதாவது இந்த தாவரங்கள் கண்டு பிரமிப்பு அடைந்தது உண்டா. இவைகளுக்கு மனம் இல்லை, பேசும் வாய்ப்பு இல்லை, நடந்து திரியும் பழக்கமும் இல்லை. ஆனால் கூட்டம் கூட்டமாக நிலப்பரப்பை அழகு படுத்தி கொண்டிருக்கும். பாறைகள் உடைபட்டு அதிலிருந்து வெளிப்பட்ட தாது பொருட்கள், மண்ணின் அமிலத்தன்மை, மண்ணில் இருக்கும் தண்ணீர், நுண்ணுயிர்கள் என்பவையே தாவர வளர்ச்சிக்கான காரணிகள். நிலத்தில் உள்ள தாது பொருட்கள் உட்கொண்டு முதலில் சிறு தாவரம் உருவாகும். அந்த தாவரத்தை பின்பற்றி மற்றொரு தாவரங்கள் உருவாகும். இப்படியாக பெரிய தாவரங்கள் உருவானதும் அங்கே ஒரு மர கூட்டத்தின் நாகரிகம் முடிவடையும். இதை அழகு தமிழில் மண் தொடர் மாற்றம் என குறிப்பிடுவார்கள். இந்த மண் தொடர் மாற்றம் என்பது இரண்டு நிலைப்படும். முதல் மண் தொடர் மாற்ற நிலை, இரண்டாம் மண் தொடர் மாற்ற நிலை. இது ஒரு சுழற்சியாகவும் தொடரலாம். பாலைவனங்களில் கூட வளரும் தன்மை கொண்ட தாவரங்களை நேரில் கண்டபோது உங்களை எவர் படைத்தது என கேட்டுவிடத்தான் தோணியது!

முதல் மண் தொடர் மாற்ற நிலையில் சில தாவர வகைகள் வரும், அதற்கு பின்னர் அந்த தாவர வகைகள் மாறி இரண்டாம் மண் தொடர் மாற்ற நிலையில் வேறு தாவர வகைகள் வரும். இந்த தாவரங்களின் பயன் மூலமே விலங்கினங்கள் உருவானது என்பது பின்னர் தான் தெரிந்தது. நிலத்து தாவரங்கள் போல நீர் தாவரங்களும் உண்டு. எந்த ஒரு அவதாரமும் தாவரமாக உருவெடுத்ததாக நமது அறிவு சிந்திக்க மறுத்துவிட்டது. சுரைக்காய்!

இப்படி தாவரங்கள் உருவானது போலவே மனிதர்களும் கூட்டம் கூட்டமாக வாழ ஆரம்பித்தார்கள். இப்படியாக நாகரிகம் என தொடங்கியது  கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றுதான் காலக்கணக்கீடு காட்டுகிறது. ஆறுகள் நாகரிகத்திற்கு வழிகாட்டியாக அமைந்து இருக்கலாம் என்பது மதிப்பீடு. மீசொபோடோமியா மற்றும் எகிப்து போன்ற இடங்களே மனிதர்கள் ஓரிடத்தில் முதலில் அமர்ந்தார்கள் என்கிறது வரலாறு. முதலில் ஒரு சிலர் சென்று அங்கே தங்குவார்கள், பின்னர் கூட்டமாக வந்து சேருவார்கள், அது கிராமம், நகரம், நாடு என பிரிந்தது என்பதுதான் நாகரிகத்தின் வெளிப்பாடு. இந்த மரங்களை எல்லாம் பார்த்த மனிதர்களுக்கு அவைகளை வைத்து விவசாயம் செய்ய இயலுமா எனும் சுடர்மிகு அறிவுதான் ஒரு நாகரிகத்தை உருவாக்கியது.

இந்த சிந்தனை எவர் விதைத்தது? தாவரங்களை உட்கொண்ட, வேட்டையாடி விலங்குகள் உண்ணும் பழக்கம் இல்லாத மனிதர்கள் ஒரு பிரிவாக உருவாகி இருக்கலாம். அவர்களின் சிந்தனையே இந்த மாபெரும் மாற்றத்திற்கு காரணம். ஒரு நண்பரிடம் விளையாட்டாக கேட்டேன், இன்னமும் விலங்குகள் கொன்று அதை சமைத்துதான் நமது உடலை வளர்க்க வேண்டுமா என! அதற்கு நண்பர் பதில் சொன்னார், மத நூலில் சொல்லப்பட்டிருக்கிறதாம், விலங்குகள் நீங்கள் உண்பதற்காகவே படைத்தோம் என! பிரமித்து போனேன்.  எந்த ஒரு எழுத்தையும், நூலையும், மத நூல் உட்பட, முழுவதும் படித்து பொருள் உணராமல் நாமாக கற்பனை செய்து பேசுவது, இட்டுகட்டி எழுதுவது, காலத்திற்கு ஏற்ப அதனை மாற்றியமைத்து கொள்வது போன்றவை மிகவும் மோசமான விளைவுகளை தரும். அதாவது இருக்கும் உண்மையை அப்படியே மாற்றி போட்டு விடும். அப்படிப்பட்ட சுடர்மிகு அறிவில் தான் நாம் ஜொலித்து கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் இருந்திருக்க கூடும் என கிடைக்கும் செய்திகளில், எழுதப்பட்ட விசயங்களில் அடிப்படையில் தான் நமது அறிவு மின்னி கொண்டிருக்கிறது.

மழை இல்லாத காலத்தில் தண்ணீருக்கு என்ன செய்வது என்பதுதான் ஆறுகளின் ஓரங்களில் மனிதர்கள் குடியேறினார்கள்.  இந்த நாகரிகம் ஒருவரை பார்த்து ஒருவர் தொடர்ந்ததா என தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையவில்லை. தற்போது ஒரே சிந்தனை உடைய மனிதர்கள் உலகெலாம் பரவி இருப்பதை போல ஆங்காங்கே குடியமர்ந்த மக்களில் இந்த சிந்தனை எழ வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை. சிந்து சமவெளி, கிரேக்க சமவெளி, சைனா சமவெளி, இன்கா, அஜ்டேக் என ஆறுகள், கடல் ஓரங்களில் உருவான நாகரிகம் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா என பார்க்கும் போது சைனாவில் உருவான நாகரிகம் வெளித் தொடர்பே இல்லாமல் தான் இருந்து வந்திருக்கிறது, அதனால் தான் இன்னமும் சைனா அதே மன நிலை கொண்ட நாடாக இருக்கிறது என்பார் சிலர். இந்த நாகரிகங்கள் வளர்ந்த சமயங்களில் அவர்களது அறிவு படம் வரைவதிலும், எழுதி வைப்பதிலும் கவனம் செலுத்தியமையே பல விசயங்களை வெளிக்கொணர்ந்தது.

இப்படியான அறிவுதனில் எப்படி இறைவன் உள்ளே வந்தார் என்பது பயம் எனும் உணர்வும், இயற்கை சக்தியை போற்றி வளர்ந்த தன்மையும் என்கிறார்கள் அறிவியல் வல்லுனர்கள். ஒரு சீரற்ற சமூக அமைப்புக்கு சீரான வழிகாட்டுதல் எப்படி தருவது என்கிற சிந்தனையில் உருவானதுதான் கோட்பாடுகளும், வாழ்க்கை நெறிமுறைகளும். அவ்வாறு நெறிபடுத்தப்பட்ட போது ஏற்பட்ட பிரிவினைகள் இன்னமும் வாழ்வினை சீரழித்து கொண்டுதானிருக்கிறது.

தொலைந்த நாகரிகங்கள் மூலம் முட்டாள்தனமான அறிவு குறித்து மேலும் அறிய முயல்வோம்.

8 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//தொலைந்த நாகரிகங்கள் மூலம் முட்டாள்தனமான அறிவு குறித்து மேலும் அறிய முயல்வோம். //

முயல்வோம்.

Radhakrishnan said...

நன்றி நண்பரே. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.

Admin said...

சுடர்மிகு அறிவும் சுரைக்காயும் சுவை..

தொலைந்த நாகரிகங்கள் மூலம் முட்டாள்தனமான அறிவு குறித்து மேலும் அறிய முயல்வோம்.

வாக்கு (TM-22)
அன்போடு அழைக்கிறேன்..

மௌனம் விளக்கிச் சொல்லும்

Unknown said...

/////இப்படியான அறிவுதனில் எப்படி இறைவன் உள்ளே வந்தார் என்பது பயம் எனும் உணர்வும், இயற்கை சக்தியை போற்றி வளர்ந்த தன்மையும் என்கிறார்கள் அறிவியல் வல்லுனர்கள். ஒரு சீரற்ற சமூக அமைப்புக்கு சீரான வழிகாட்டுதல் எப்படி தருவது என்கிற சிந்தனையில் உருவானதுதான் கோட்பாடுகளும், வாழ்க்கை நெறிமுறைகளும். அவ்வாறு நெறிபடுத்தப்பட்ட போது ஏற்பட்ட பிரிவினைகள் இன்னமும் வாழ்வினை சீரழித்து கொண்டுதானிருக்கிறது./////

பயத்தால் இறைவன் அறிவுதனில் வந்தார்.... சரி அந்த பயம் எதனால் வந்தது? அந்தப் பயத்தைத் துறந்தால் இறைவனை மறந்திடலாம் என்றும் கொள்ள முடிகிறது.... வேதாந்தம் பயத்திற்கு மூலகாரணமான வற்றை மறந்தால் இறைவனோடு ஒன்றலாம் (அத்வைதம்) / அருகில் அமரால் (துவைதம்) என்கிறது...

இயற்கை சக்தியைப் போற்றி வளர்ந்த தன்மை மற்றொருக் காரணம் இறைவன் மனித அறிவு தனில் உள்ளே வரக் காரணம்... இயற்கை என்பதை நாம் புறத்தே பூதக் கண்ணால் பார்க்கும் / ஆராயும் ஜடப் பொருள்... நாம் இயக்கம் என்கிறோமே கண்ணால் காண முடியாத அந்த அருவப் பொருளோடு இணைந்தே இருக்கும் போது... அதாவது ஜடம் என்னும் பொருளை இயக்கம் போது அது உயிரூட்டமுடம் நம்மை பரவசம் அடையச் செய்கிறது... அது விலகும் போது அந்த இயங்கிய ஜடப் பொருள் மக்கி மண்ணாகிப் போகிறது... அல்லது அறிவியல் மற்ற இயங்கும் பொருளோடு அந்த ஜடத்தை பாது காக்கிறது!.. ஜடம்+இயக்கம் (சக்தி) = நாம் காணும் வாழும் இயற்கை... கோட்பாடுகள் உருவாக்கப் பட்ட மனிதர் இடம், பொருள், காலத்தைப் பொருத்தும் மாறுகிறது அது அனைவருக்கும் போதுவாகாது அப்படி நினைத்து செயல் படும் மனிதன் சுடர்மிகு அறிவோடு இருப்பதாகவும் பொருள் கொள்ள முடியாதல்லவா! ஆனால், உண்மை அதன் தார்ப்பரியம் உய்த்து உணர வேண்டும் உணரவும் பட்டுள்ளது...

Unknown said...

///// இந்த தாவரங்கள் எப்படி உருவாகின? மதம் எனும் கோட்பாட்டிற்குள், மத நூல்கள் தரும் போதையில் சிக்கி கொண்டு இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது எனும் வேதாந்த கருத்தில் மனம் வைத்து சுடர்மிகு அறிவுதனை எரித்து கொண்டிருப்பது எவருக்கும் பயன் அளிக்கப் போவதில்லை. இதை இப்படி பிரித்தோம், அதை அப்படி படைத்தோம் என வியாக்கியானங்கள் எல்லாம் படிப்பதற்கு சுவையாக இருக்கும். அந்த வியாக்கியானங்களை இறைவன் எனும் ஒரு பாகுபாடற்ற தன்மைக்கு அலங்காரம் சூட்டி நம்மை நாமே அடிமைபடுத்தி கொள்வது என்பது இந்த காலகட்டத்தில் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் தவிர்க்க கூடிய தைரியம் மிக்க அறிவு எவருக்கும் அத்தனை எளிதில் வாய்ப்பதில்லை. உள்ளூர பயம் இருந்து கொண்டேதான் இருக்கும். சனிப்பெயர்ச்சி பலன்கள் என படித்து பரிகாரம் தேடும் அளவுக்கு சுடர்மிகு அறிவுடன் நாமெல்லாம் படைக்கப்பட்டு இருக்கிறோம்! படைக்கப்பட்டு? ஆம், அறிவினை முட்டாள்தனமாக உபயோகிக்க தெரிந்த விதமே பல சீரழிவுகளுக்கு காரணம்.////

இந்த பிரபஞ்சத் தோற்றம் பற்றிய அறிவியல் மற்றும் மதம் கூறும் கருத்துக்கள் என்ன? அவைகள் ஒத்துப் போகிறதா? முரண் படுகிறதா?.... அதைத் தொடர்ந்து தாவரங்களும் வரும் அல்லவா?..

நாகரிகம் என்பதே வரையறை கோட்பாடுகளுக்கு உட்பட்டதே... அதில் வரை முறையும் இருக்க வேண்டும் என்பது தான் அதன் அடிப்படை... மதம் நூல் தரும் போதை!? போதையா? போதனையா? இதை கற்போரும், கற்பிப்போரும் நிர்ணயிக்கிறார்கள்... முதல நூல்கள் என்ன சொல்கின்றன... அது முடிவில் எங்கே கொண்டு செல்கின்றன.... ஆரம்பப் பள்ளி எது? உயர் / மேல் நிலைப் பள்ளி எது? அதற்கு பின்பு கல்லூரி, அதற்கு மேலும் ஆராய்ச்சி என்பது எது.. இதிலே மனிதன் எந்தக் கட்டத்தில் இருக்கிறான். ஆரம்பப் பள்ளியில் இருந்துக் கொண்டே வாழ் நாள் முழுவதும் கடத்து பவன் வின்ஞாநியாவது எப்போது? அவனை விஞ்ஞாநியோடு ஒப்பிட்டுப் /அமர்த்திப் பேசலாமா?

அகப் பொருளில் ஆராய்ந்து (இயற்கையில் இருக்கும் சக்தியை உணர) உய்வது மெஞ்ஞானி... புறப் பொருளில் ஆராய்ந்து (புறப் பொருளில் இருக்கும் சக்தியை தவிர மற்றவைகளை) (ஆராய்ச்சி என்பதே ஒருமுகப் படுத்தல் தானே.. கீதையிலே சொல்லும் கர்மயோகம் தானே கவனம் சிதறாமல் ஒருமுகப் படுதல்). விஞ்ஞானியும் ஒரு மெஞ்ஞானியே... "மேரி குயூரி" ஆராய்ச்சி முடிவில் அந்த இரவில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வைப் பார்த்தால் அவரின் சுடர்மிகு அறிவு ஜோளித்ததை அவரே அப்போது உணர்ந்தாரா இல்லைப் பிறகு தான் உணர்ந்தாரா என்பது விளங்கும்.... சுடர்மிகு அறிவைக் கொண்டு ஆராயும் பொருளைப் பொறுத்து தான் நிச்சயிக்க முடியும் அவர் விஞ்ஞானியா? மேஞ்ஞானியா? என்பது விஞ்ஞானி.. அவனது தவத்தின் பலனை பெரும் வேளையில் அவன் மேஞ்ஞாநியாகவே இருக்கிறான் என்பதே அறிந்த உண்மை...

வேதாந்தம் கூறுவது அதற்கு விளக்கம் சொன்னப் பெரியவர்கள் யாவரும்... மேற்படி படைப்பின் ரகசியம் எப்படி பிரிந்தது என்பதெல்லாம் பற்றி அவசியம் அறியத் தேவை இல்லாதது.. தெரிந்தால் தவறில்லை தெரியாவிட்டாலும் அதுவும் பாதகமில்லை.. தெரியாமல் இருப்பதே இன்னும் சிறப்பு... மனது எளிதில் ஒருநிலைப் படும் என்கிறது.

இன்னும் சொன்னால், அறிவுச் சுடர் ஒளி பொங்கி அவன் பேரொளியில் கலப்பது என்பது... அப்படிக் கலந்தவன் உடனே இந்த உலக அறிவெல்லாம் பெற்றுவிட்டான் என்றும் கொள்ள லாகாது.. அது நூலறிவு.. இது வேறு... எத்தனையோ படிக்காத யோகிகள் இரும்திருக்கிரார்கள்... நான்கு வேதம் படித்த எத்தனையோ ஒளி மங்கிய அறிவுக் குருடர்களும் இருந்தும், இருக்கிறார்கள் அவர்களின் இருப்பிடம் பெரும் பாலும் மதம் என்ற அமைப்பில் தான்....

உலகில் உள்ள அனைத்தும் ஒரே விசயத்தையே போதிக்கிறது அது தான் நமது வேதாந்தமும் கூறுகிறது... எல்லோரும் விஞ்ஞானிகளாக இருந்தால் உலகில் கிறுக்கர்களின் நடமாட்டம் தான் அதிகம் இருக்கும்.. எல்லோரும் மேஞ்ஞாநிகலாக இருந்தால் உலகம் உயர்வு தாழ்வு இல்லாத சம நிலை கொள்ளும் அப்போது தான் இந்த உஅலகம் அழியும்.. அது சாத்தியம் இல்லை விஞ்ஞாம், மேஞ்ஞாம் இரண்டும் இயங்குவது ஏற்றத்தாழ்வில் தான்... சமநிலை என்பது அழிவு.. ஆனால் மந்த சம நிலைக்காகவேப் போராடுகிறான்... ஆனால் அது ஊழி காலத்தில் தான் நடை பெறும்...

இது எதிர் வாதம் இல்லை... தங்களின் நோக்கு எதைப் பற்றியது என்பதை அறியும் முன்னமே எனது புரிதலைப் பகிர்ந்துக் கொள்கிறேன் நண்பரே!...

Unknown said...

சனி பெயர்ச்சிப் பலன் என்பதெல்லாம் கூட மேலே நாம் பேசிய பயத்தின் காரணமே... (அது உண்மையா என்பது வேறு!..) ஆக, அந்த பயத்திற்கு காரணம் எதுவோ அதற்காகச் செய்பவையே... அதோடு பொதுவாக பக்தி, கோவில், வழிபாடு என்பவைகள் ஒரு போலீஸ் வேளையில் சேரப் போகின்றவன் உடர்ப் பயிற்சி செய்வதற்கும், அவன் அதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டு அதன் பின்பு போலீஸ் கல்லூரியில் பயிற்சி செயபவதற்கும் கடைசியாக அவன் செய்யப் போகும் வேலைக்கும் உள்ளத் தொடர்பு போன்றது.. பிசி என்பது வேறு.. அவனின் வேலை என்பது வேறு பயிற்சியின் போது உடல் மட்டுமே பெரிதாக வேலை செய்யும். வேலை என்னும் போது மூளையே பெரிதாக வேலை செய்யும்.. இருந்தும் இரண்டும் ஒன்றை ஓன்று தவிர்க்கமுடியாது. ,

நான் தொடர்ந்து உங்களின் ஆக்கத்தை வாசிக்க விரும்புகிறேன்... நான் குதர்க்கமாக எழுதுவதாக எண்ணினால் இதை அசட்டை செய்து விடுங்கள்.. சாதாரணமாகவே எழுதுகிறேன்..

உங்கள் பதிவிற்கும் எனது என்னத்தை பகிர்ந்துக் கொள்ள அனுமதித்ததற்கும் நன்றிகள் நண்பரே!

Radhakrishnan said...

நன்றி மதுமதி.

Radhakrishnan said...

//வேதாந்தம் பயத்திற்கு மூலகாரணமான வற்றை மறந்தால் இறைவனோடு ஒன்றலாம் (அத்வைதம்) / அருகில் அமரால் (துவைதம்) என்கிறது...//

//கோட்பாடுகள் உருவாக்கப் பட்ட மனிதர் இடம், பொருள், காலத்தைப் பொருத்தும் மாறுகிறது அது அனைவருக்கும் போதுவாகாது அப்படி நினைத்து செயல் படும் மனிதன் சுடர்மிகு அறிவோடு இருப்பதாகவும் பொருள் கொள்ள முடியாதல்லவா! //

//மதம் நூல் தரும் போதை!? போதையா? போதனையா? இதை கற்போரும், கற்பிப்போரும் நிர்ணயிக்கிறார்கள்...//

//எல்லோரும் விஞ்ஞானிகளாக இருந்தால் உலகில் கிறுக்கர்களின் நடமாட்டம் தான் அதிகம் இருக்கும்.. எல்லோரும் மேஞ்ஞாநிகலாக இருந்தால் உலகம் உயர்வு தாழ்வு இல்லாத சம நிலை கொள்ளும் அப்போது தான் இந்த உஅலகம் அழியும்..//


மிக்க நன்றி தமிழ் விரும்பி ஐயா. தங்கள் மறுமொழி கண்டு மிகவும் ரசித்தேன், பல விசயங்கள் கற்று கொள்ள வழி செய்கிறது.
த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம். நிறையவே தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறதுதான்.
பயம் இல்லாவிட்டால் பாவம் செய்வார்கள் என்பதே பொதுவான சிந்தனை.
மெஞ்ஞானி விஞ்ஞானி பற்றிய விபரமும் நன்று.
நீங்கள் மிகவும் சிறப்பாகவே எழுதுகிறீர்கள், உங்கள் கருத்தினை எந்த தயக்கம் இன்றி சொல்லவும், நான் கற்றுக்கொள்ள ஆயத்தமாகவே இருக்கிறேன். அழகிய கருத்துகள் தாங்கி வரும் எழுத்துக்களை எதிர் வாதம் என்றோ, குதர்க்கமான பேச்சு என்றோ ஒரு போதும் நினைப்பதில்லை. ஆனால் நான் அதிக முறை நண்பர்களிடம் குட்டு பட்டு இருக்கிறேன், இருப்பினும் மனதில் எழும் எண்ணங்களை பரிமாறிக் கொள்வதுண்டு. மீண்டும் மனமார்ந்த நன்றிகள் ஐயா. பல விசயங்கள் மனதில் இருக்கும், கலந்து உரையாடலாம்.