Sunday 28 February 2010

இளந்துறவி



உங்கள் கண்களுக்கு 
பொம்மைகளுடன் விளையாடும் வயதுதான் எனக்கு 
என் மனதில் 
பொம்மைகளை தூரம் தள்ளிவைக்கும் பக்குவம் எனக்கு 

எவரும் துறக்கச் சொல்லி துறப்பதில்லை 
வேண்டியே வெறுத்து எதுவும் ஒதுக்குவதில்லை 
பொருட்கள் வேண்டி சிறக்கும் நீங்கள் 
பொறுப்புடன் வளர்கிறேன் வந்து பாருங்கள் 

புன்னகை ஏந்தியே பூஜிக்கின்றேன் 
புரியும் வாழ்க்கையதை 
பள்ளி தொடாமல் பயில்கின்றேன் 
இறை உணர்வினால் மட்டுமே உயிர் சுமக்கின்றேன் 
சுமக்கும் உயிரை அவனுக்கே சமர்ப்பிக்கின்றேன் 

உங்கள் வாழ்க்கைக்கு நான் வருவதில்லை 
எந்தன் வாழ்க்கையில் உங்களுக்கு சுகமில்லை 
பொன்னும் பொருளும் பேணியும் 
எந்தன் வாசல் தொட்டு வணங்கிச் செல்வீர் 

என்றும் துறந்து விடாத ஒன்றில் 
எந்தன் மனதின் பற்று வைத்தே மகிழ்கின்றேன் 
துறந்துவிடும் விசயத்தில் பற்று வைத்திடும் உங்களுக்கு 
நானா தெரிகிறேன் துறவியாய்?

Friday 26 February 2010

மக்கா சோளம்


மெல்லத்தான் ஓடிப்போய் 
வாழைப்பழம்னு கையில் எடுத்தே 
தோலை உரிக்கும் வேகத்தில் 
இழுத்துப் பார்க்க 


முத்தாய் ஒன்று வந்தது 
என்னவென்று ருசித்துப் பார்க்க 
இனிப்பாய் இருந்தது 


ஒவ்வொரு முத்தாய் 
விழுங்கிக் கொண்டே 
வாழைப்பழம் அல்லாது இருக்கும் 
இந்த மஞ்சள் வெயில் முத்துக்கு 
பெயர் என யோசித்து நிற்கையில் 


வழியில் நடந்த இருவரில் ஒருவர் 
'இங்க பாருடா மக்கா 
உன் ஆளு மக்காசோளம் திங்குது' 

கேட்டவுடன் மனதுக்குள் 
சொல்லிக் கொண்டேன் 
நான் உங்க முன்னோர்தான் மக்கா! 


இனி எனக்கு வாழைப்பழமும் 
தேங்காய் சிதறலும் வேண்டாம் 
மக்காசோளம் ஒன்றே போதும். 

Thursday 25 February 2010

சாதி சனம்



எங்க ஊர் கதை கேட்டு 
சிரிக்கும் எங்க சனம் 
எங்க ஊர் கதை கேட்க 
திரளும் உங்க சனம் 

பாறையிலும் ஈரம் பார்க்கும் 
எங்க சனம் 
ஈரத்தையும் காய வைக்கும் 
உங்க சனம் 

ஆண் பெண் பேதம் சொல்லும் 
எங்க சனம் 
அப்படின்னா என்னனு கேட்கும் 
உங்க சனம் 

சுகாதார நலக்கேடு புரியாத 
எங்க சனம் 
முகம் சுளிச்சிக்கிட்டுப் போகும் 
உங்க சனம் 

சாலை விதிகள் வேணாமென்னும் 
எங்க சனம் 
சகிச்சிக்கிட்டுப் போறதை கண்மிரளும் 
உங்க சனம் 

உழைப்பும் பேச்சும் உருவாக்கினது 
எங்க சனம் 
அதை எடுத்து உபயோக்கிறது 
உங்க சனம் 

சாதிச்சி பலவரலாறை வைச்சிருக்கு 
எங்க சனம் 
சந்தோசமா வந்து அனுபவிக்குது 
உங்க் சனம் 

எங்க சனம் உங்க சனம் 
என் பேச்சும்தான் புரியுமோ 
எப்போ ஆகும் ஒரு சனம்!

அடுத்தவங்க பார்க்கிறாங்க - நன்றி மருத்துவர் ருத்ரன்

//சமுதாயம் என்பது என்ன? யார் அந்த நாலு பேர்? உறவினரா, உற்றாரா, ஊரில் பழக்கமானவர்களா, உழைக்கும் தளத்தில் உடன் இருப்பவர்களா? காணாதும் வாழ்வில் அறியாதும் சுற்றி இருக்கும் அநாமதேயங்களா? யார்தான் அந்த முக்கியமான நாலு பேர்? அவர்கள் சொல்படித்தான் நடக்கிறோமா அல்லது அவர்கள் ஏதும் சொல்லிவிடக்கூடாதே என்று நடந்துகொள்கிறோமா?//  படிக்க

தனிப்பட்ட பதிவாகவே எழுதிவிட விழைகின்றேன், இருப்பினும் இது குறித்து ஒரு சில வரிகளில் சொல்லிவிடலாம் என்ற நோக்கத்துடனே இங்கேயே எழுதுகிறேன் என்றுதான் எழுத ஆரம்பித்தேன், பதில் நீண்டு கொண்டே சென்றதால் ஒரு தனிப்பதிவாகவே இங்கே வெளியிடுகிறேன். அவரது மற்ற இரு கேள்விகளுக்கும் அவரது தளத்திலேயே பதிவிட்டுவிட்டேன். அவை வெளிவந்ததும் இங்கே ஒரு கேள்விக்கான பதிலை மட்டும் இணைத்துவிடுகிறேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது அவருடைய கேள்விகள்.

1. சமுதாயம் என்பது ஒரு கூட்டமைப்பு. நமது செயல்பாடுகள் மட்டுமே இந்த சமுதாய கூட்டமைப்பில் ஒரு அங்கத்தினராக நம்மை கொண்டு சேர்க்கும். நமது வேலை உண்டு, நமக்கு என்ன செய்ய வேண்டும், நமது பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என சமுதாய சூழலில் சிக்காமல் செயலாற்றும்போது சமுதாயத்தில் நாம் சிக்கிக்கொள்வதில்லை. அவரவர் வேலை அவரவருக்கு என்கிற கோட்பாடு நமக்கு இருக்கும் பட்சத்தில் சமுதாயத்தில் நம்மால் ஒரு பெரும் தாக்கம் கொண்டு வர இயலாது. மணிக்கணக்கில் நின்றாவது நமக்கு வேண்டுமென்பதை சாதித்துக்கொள்வோம், இதுகுறித்து ஆதங்கப்படுவதுடன் நிறுத்திக்கொள்வோம். போராட்டம் எல்லாம் செய்ய மாட்டோம் எனில் அங்கே நமது சமுதாய பங்களிப்பு குறைந்துவிடுகிறது.

2. அந்த நான்கு பேர்கள், தாய், தந்தை, இறைவன், இறைவனற்ற, அதாவது மனசாட்சியாகிய நமது மன எண்ணங்கள், மற்றும் நல்லாசிரியர், அதாவது நமக்கு நல்வழிகளென பகுத்தறிந்து சொல்பவர்கள்.

இதில் முதல் இருவரும் அன்பை முன்னிறுத்தி அவர்கள் மனதில் எது சரியென நமக்குப்படுமோ அதைச் சொல்லக்கூடியவர்கள். நமது சரி என்பதெல்லாம் பலரிடம் இரண்டாம் பட்சமே, மேலும் அன்பின் காரணத்தால் உனக்கு எது சரியென எது படுதோ அதைச் செய் என நாம் நன்றாக இருக்க வேண்டும் எனும் உயரிய நோக்கம் மட்டுமே உடையவர்கள்.

மூன்றாவது நாம், இங்கேதான் ஒரு தனிமனிதரின் சுயசிந்தனை, சுயசெயல்பாடு மிகவும் அவசியமாகிறது. எந்த சூழலில் எப்படி செயலாற்றவேண்டும் என்கிற பக்குவமும், செயல்பாடும் தீர ஆராய்ந்து வரவேண்டும், அப்படி வரும்போது தவறு களையப்பட்டு விடும், இது தேவையா, அது தேவையா? என்கிற ஒரு அலசல் பல விசயங்களில் தேவையின்றி பேசுவதை, செயல்படுவதை குறைத்துவிடும்.

கடைசியாக ஆம், நல்லாசிரியர்கள், நாம் நன்றாக கற்றுக்கொள்ளும் மாணவனாகவே இங்கே செயல்பட வேண்டும். ஒருவர் சொல்கிறார் என்பதை நன்கு ஆராய்ந்து செய்ய வேண்டும். நமக்கென சிலர் இருப்பார்கள், ஆங்கிலத்தில் 'வெல் விஷ்ஷர்ஸ்' என சொல்வார்கள். நமக்கு நன்மை தீமை என நேரும்போதெல்லாம் நம்பிக்கை கொடுத்து தூக்கி விடுவார்கள், திருமணமானவர்களுக்கு இதில் மனைவியோ கணவனோ பெரும் பங்கு வகிக்கக்கூடியவர்களாக இருப்பது மிகவும் அவசியமாகும். நண்பர்கள், அநாமதேயங்கள், உற்றார், உறவினர்களும் இதில் சேர்த்தி எனில் வாழ்க்கை சகல செளகரியங்கள் கொண்டதாகும்.

3. வாழ்க்கைச் சூழலானது மிகவும் அசெளகரியங்களையும், செளகரியங்களையும் கொண்டது. பிறர் சொல்கிறார்களே என நாம் நடந்து கொள்வது என்பது அந்த சூழலில் பிறர் மனம் வருந்தக்கூடாதே எனும் எண்ணம் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது.

 நம்மை நாம் நன்றாக கவனித்துப் பார்த்தோமெனில் 'காம்ப்ரமைஸ்' செய்து கொண்டு வாழும் ஒரு சமூக அங்கத்தினராகவே நாம் இருக்கிறோம். நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தியாவதில்லை, அப்பொழுது ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிடுவதை தவிர்க்க இயலாது.

இப்பொழுது தாய், தந்தை, நமது மனசாட்சி, நல்லாசிரியர்கள் என அவர்கள் சொல்வது எல்லாமே ஒன்றாக இருக்கும் பட்சத்தில் எந்த பிரச்சினையும் நடந்து கொள்வதில் இருக்காது, அதே வேளையில் ஒன்றுக்கொன்று முரணாகப் போகும்போது வேறுபாடுகள் முளைத்து குழப்பம் விளைகின்றது, அந்த குழப்பத்திற்கான தீர்வு காணும்போது ஒரு தெளிந்த மனமே அதாவது மனசாட்சி, மனதில் எழும் எண்ணங்கள், ஒரு முடிவாக அமைந்து விடுகிறது.

தவறு எனத் தெரிந்தும், சரி என நமது மனம் கட்டுப்பட்டு விடுகிறது. பிற பெண்களுடன் தகாத உறவு, ஆண்களுடன் தகாத உறவு, சமூக ஒழுக்கீனங்கள், திருடுதல், கொள்ளையடித்தல், ஏமாற்றிப் பிழைத்தல், மக்களை புறக்கணிக்கும் அரசு, மக்கள் உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் அரசு என்பன போன்றவைகள் எல்லாம் அவரவர் மனதில் அவையெல்லாம் சரியெனத் தோன்றுவதும் மேலும் ஒரு தவறுக்கு அடிமைப்படும் அந்த எண்ணங்களும் ஆகும். எனவே நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் தீர்மானித்துக்கொள்ள வேண்டும், இருப்பினும் பல சங்கடங்கள் இருக்கின்றன. நால்வர் சொல்வதை மட்டுமேக் கேட்டு நடப்பதைக் காட்டிலும் எது நன்மை பயக்கும் என செயல்பாடுகளை வாழும் காலங்களில் மாற்றியமைத்தல் மிகவும் சிறப்பு.

எவருமே தவறாகப் போக வேண்டுமென முடிவு எடுப்பதில்லை. ஒரு விசயத்தில் எடுக்கப்படும் முடிவானது, அல்லது நாம் நடந்து கொள்ளும் விதமானது சரியாகவேப் போக வேண்டும் என்கிற எண்ணம் எல்லோரிடத்திலும் உண்டு. பொதுவாகப் பார்த்தால் அடுத்தவங்க பார்க்கிறாங்க என நம்மை நாம் வழிநடத்தினாலும், பல நேரங்களில் நமக்கு எது சரியெனத் தோன்றுகிறதோ அதைச் செய்து விடுகிறோம், அது தவறாகவே இருந்தாலும் சரி, ஒழுக்கம் கெட்ட செயலாக இருந்தாலும் சரி.

நன்றி மருத்துவர் அவர்களே.

நட்ட நடுச்சாலையில் படுத்துறங்கும் தாய்



காலமெல்லாம் உழைச்சே பழக்கப்பட்டு போச்சு
கண்ணுக்கு கண்ணா வளர்த்த புள்ளைகள
கரையேத்தி வைச்சதும் நிம்மதினு ஆச்சு

ஆத்தா என்கூட வந்திருனு 
ஆளாளுக்கு கூப்புடுறாங்க
சோத்த சும்மா தின்னா
சுகப்படுமோ இந்த உடம்பு

எனக்காக என் தெய்வம்
கட்டி கொடுத்த ஓட்டுவீடு
விட்டுப் பிரிய மனசில்லை
என் உசிரு அங்கேதானிருக்கு

எனக்குத் தேவையோ கால்வயிறு கஞ்சி
கட்டிக்கிட்டு இருக்க ஓரிரு புடவை
நோயில்லாம என்னைப் பாத்துக்கிரும்
நான் நோன்பு இருக்கும் காளியாத்தா

உழைச்ச களைப்பில 
உறக்கமது கண்ணை சுத்தும்
உட்கார்ந்துக்கிட்டே சாப்பிட்டா
கண்ணு உறக்கத்தை கத்தும்

இன்னைக்கும் என்னைத் தேடி
என்வீட்டுக்கு நாலுபேரு வருவாக
ஆக்கிப் போடனும் அவக பசியாற

பெத்த புள்ளைகள குத்தம் சொல்லும்
ஒத்த தாயி இந்த ஊரிலிருந்தா காட்டு
செத்தாக்கூட காத்து நிற்பா
அந்த சிவனுக்கும் நான்தான் தாயி!

Wednesday 24 February 2010

யோகாசன நிலையில் சிறுவன்



உற்சாகம் தொலைத்த
முகத்தை தடவிட கைகள் மட்டும்
போதாதென கால்களும் துணை வருகிறது
அகப்பட்டு தவிக்கிறது


வெறுத்து ஒதுக்கப்பட்ட
வேதனை போக்கி வாழ்வில் சிறக்க
யோக நிலையை மனம் நாடியது
தாகம் எடுக்கிறது


எதிர்கால இரைச்சலில்
இன்றைய தினத்தை மனதில் வைத்தே
இனிமை நினைவுகள் வெளிவர துடிக்கிறது
இந்நிலை இறுதியாகிறது


உடல் வளைத்து
உள்ளம் உறுதியாக்கிட தினமும் பயின்று
வெளிச்சென்று பார்க்கையில் மனம் நோகும்
மனிதர்கள் புன்னகைப்பதில்லை


ஆழ்ந்த சிந்தனையிது
கண்கள் காட்டிவிடும் தீராத தீட்சண்யம்
கலைகள் கொண்டுவரும் தீராத மகிழ்ச்சி
கவலையை துடைத்துவிடு.

Tuesday 23 February 2010

செருப்புத் தொழிலாளி



அன்னைக்கே பள்ளிக்கூடம் போகச் சொன்ன
அப்பாட்ட அவரோட தொழிலுதான்
செய்வேனு நானும் அடம்பிடிச்சி
வந்த படிப்பையும் வரவிடாம நானும் செய்ய


படிச்சி வேலைக்குப் போற மகராசருக்கு
குனிஞ்சி காலணி துடைக்க நேரமிருக்காது
வெயிலுக்கு காலு வெந்து போகுமுனு
அறுந்து போன காலணியை தூக்கி எறிய
வறுமையில இருக்கறவகளுக்கு மனமிருக்காது


பெத்த பிள்ளைகளை படிக்கவைச்சி வேலைக்கனுப்பி
சொத்துனு இருக்கும் குலத்தொழிலை விடமனசில்ல
ஒருத்தரோ ரெண்டுபேரோ வந்து போகும்
கடையில்லாத கடையில எனக்கிருக்கும் இந்த
பெரும் நிம்மதி உங்களுக்கிருக்கா?!

இந்தத் தொடர்கதையே ரஜினிக்காகத்தான்

ரஜினியைப் பற்றி எவரேனும் அவதூறு வார்த்தைகள் சொன்னால் ஏனோ மனதில் ஒரு இனம் புரியாத கோபம் வந்து போகிறது. ரஜினியின் அமைதியைப் பார்த்து நானும் கற்றுக்கொள்ள வேண்டியது எத்தனையோ இருக்கிறது, ஒவ்வொரு மூலையிலும் எவரேனும் ஒருவர் ரஜினியைத் திட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். இதுகுறித்து ரஜினிக்குத் தெரியும்.

 ஊரார் பேச்சுக்கெல்லாம் செவி கொடுத்துக் கொண்டிருப்பவன் வாழ்க்கையில் முன்னேறுவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல, தனது செயல்களில், எண்ணங்களில் உறுதியாக இருப்பவன் எவனோ அவனே வாழ்க்கையின் சாதனையாளனாகிறான். ஒருவன் சாதனையாளனாவதற்கு வெகுவாக காரணமாக இருப்பவர்கள் மிக மிகச் சாதாரண மனிதர்களே என்பதை எந்தவொரு சாதாரண மனிதனும் புரிந்து கொண்டிருப்பதில்லை.

நூறு பேர் சேர்ந்தால் தான் ஒரு கூட்டம், அதில் ஒருவன் தனித்துத் தெரிவான் எனில் அவனே தலைவன் என்கிற நிலைதான் உண்டு. தனித்துத் தெரியப்படுபவனை தலையில் வைத்து ஆடுபவர்கள் மீதமிருக்கும் தொண்ணூற்றி ஒன்பது பேரும். இந்த தொண்ணூற்றி ஒன்பது பேரும் அந்த தனி ஒருவனால் பின் வரும் காலத்தில் பயமுறுத்தப்படுவார்கள். இதைப் போன்றே பயத்தினால் மட்டுமே பதுங்கி வாழும் வாழ்க்கையைப் பழகிப் போவோர்களே இந்த சாதாரண மனிதர்கள். மனதில் எழும் குமுறல்களை பேச்சுகளாலும், எழுத்துகளாலும் மட்டுமே இவர்களால் வெளிக்காட்ட முடியும்.  இவர்களால் எந்தவொரு ஆதாயமும் இல்லை, எந்தவொரு புரட்சியும் ஏற்பட போவதில்லை. மொத்தமாகக் கத்தும் கொள்ளைக்காரர்கள் இவர்கள், இவர்களில் நானும் ஒருவன்.

தனக்கென்று ஒரு கொள்கையும் இல்லாதவர்கள், கூட்டம் கூட்டமாக சேர்ந்து கும்மாளம் போடுபவர்கள், பொதுநல அக்கறை என கொஞ்சம் கூட இல்லாதவர்கள், இவர்களுக்கெல்லாம் கத்த மட்டுமேத் தெரியும், கற்றுக்கொள்ளத் தெரியாது. அப்படிப்பட்ட ஏக்கங்களுடன் வாழும் பல சாதாரண மனிதர்களிடமும் ஒருவித எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது.

ரஜினி ஒரு கட்சி ஆரம்பிக்கமாட்டாரா, அதனால் சகல மக்களும் நலம் பெற்று விடமாட்டார்களா என ரஜினி ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்புகள் இருப்பது போல பல சாதாரண மனிதர்களுக்கும் இருக்கிறது. தவறு ஆட்சியாளர்களிடம் இல்லை, மக்களிடமும்  இருக்கிறது, அதாவது தவறை ஊக்குவிக்கும் இந்த சாதாரண மக்கள் ஆட்சியாளர்களைத் தவறச் செய்கிறார்கள். நான் ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு எனும் ஒரு தொடர்கதையை ஆரம்பித்தபோது நண்பர் ஒருவர் நகைச்சுவையாகவே சொன்னார் 'அங்கே எல்லாம் ஆட்டோ இல்லையா' என.

சாதாரண மனிதர்கள் வாழ்க்கையில் இருக்கும் அடித்தட்டு பிரச்சினைகளைச் சரிசெய்யவும், தனது குடும்பத்தின் பொருளாதார நிலையை சரி செய்யவும் என அவர்களுக்கு நேரம் சரியாகிப் போகிறது, இந்த இளைஞர்கள் பற்றி என்ன எழுதுவது! பொறுப்பற்ற சமுதாயத்தின் பொறுப்பற்றவர்களில் இவர்கள் தான் பெரும் பங்கு வகிக்கிறார்கள். இளைஞர் சமுதாயம் என்னென்ன சாதித்திருக்கிறார்கள் என்று மட்டும் கொதித்து எழுந்து விடாதீர்கள். குப்பை குப்பையாகத்தான் இருக்கிறது, அதுவும் அதிகப்பட்ட குப்பையாய்.

ஒரு கதை எழுதுவதைக் கூட எத்தனை விசயங்களை நினைத்து கதாபாத்திரத்தை ஏற்படுத்தி வருகையில் ஒரு கட்சி ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்வது என்பது அத்தனை எளிய காரியமா? ரஜினியே கட்சி ஆரம்பித்து ஆட்சி பீடத்தில் அமர்ந்துவிட்டால் சாதாரண மக்களின் துயரம் நீங்கிவிடுமா? மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஆனால் நாம் அவ்வாறு செயல்பட இயலாது, ஏனெனில் அன்றாடத் தேவைகள் நமக்கு எது சரியோ அதுவே போதும் என்றுதான் நிலையில் இருப்போம், நான் அப்படித்தான் இருந்தேன், இருக்கிறேன்.

ரஜினி ஆனந்த விகடனோ, குமுதமோ ஒன்றில் பல வருடங்கள் முன்னர் மிகவும் அழகாக பேட்டி கொடுத்திருந்தார், மக்களிடம் மாற்றம் வர வேண்டும் என. யார் அதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறார்கள். ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும் அதில் நாமும் குளிர் காய வேண்டும் என்றுதானே பலர் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதையெல்லாம் மனதில் வைத்துத் தொடங்கியதுதான் ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு. இந்த தொடர்கதையை எப்படியெல்லாம் கொண்டு போக வேண்டும் என மனதில் முழுத் திட்டமும் தீட்டி வைத்திருக்கிறேன். ஏனெனில் சிறு வயது முதல் நான் கண்ட கனவுகளில் ஒன்று அது.

ரஜினி கட்சி ஆரம்பிக்க நினைத்தால் இன்னும் நன்றாக யோசிக்கட்டும், பிரபலமானவர்கள், சாதனையாளர்கள் மட்டுமே கட்சி ஆரம்பித்தால் தான் நாடு சுபிட்சம் பெறுமா? இதோ எனது கிராமத்தில், எனது நகரில், எனது மாநிலத்தில், எனது நாட்டில் தனித்தே பொதுநல காரியங்கள் செய்து கொண்டிருக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒன்று கூடட்டும், ஒரு கட்சி ஆரம்பிக்கட்டும், நம்மில் மாற்றம் ஏற்படட்டும், நாடு சுபிட்சம் பெறும். அவர்களைக் கண்டு தயவுசெய்து பொருமிவிடாதீர்கள்.

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு

அத்தியாயம் 1   அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4 அத்தியாயம் 5

மகாத்மா துயில் கொள்ளும் இடம்



இன்னும் கூட எனக்கு அதிசயமாய் இருக்கும்
உன்னால் எப்படி முடிந்தது

பிரிவைப் பற்றி சிந்திக்கும் மனிதரிடம்
உறவின் பெருமையை வளர்த்தது எப்படி

வாடிய பயிரை கண்டு வாடியவர் போலே
ஆடை இல்லா மனிதர் கண்டு அகம் 
கண்ணீர் வடித்தது ஆடை துறந்தாய்

அரிச்சந்திரன் பார்த்ததால் உண்மை தத்துவம் 
உணர்ந்ததாய் உலகுக்கு சொன்னாய்

இங்கிலாந்து வந்தா பாரிஷ்டர் பட்டம் பெற்றாய்

கால் கடுக்க நடக்கவும்
ஒத்துழைப்பின்றி உணவின்றி போராடவும்
உன்னால் மட்டும் எப்படி முடிந்தது

முதலில் கடிகாரமும் கையில் தடியும்
உன் படம் பார்த்துதான் உன்னைத் தெரியும்

சத்திய சோதனை படித்த பிறகே
இறந்தும் நீ இருக்கிறாய் எனப் புரியும்

அகிம்சை வழியில் சுதந்திரம் வாங்கி தந்து
சுடப்பட்டு நீ கிடைக்கையில்
நீ வாழ்ந்த காலங்களில் நான்
பிறந்து இருக்க கூடாதா

என் உயிர் தந்து இன்னும் வாழ்ந்து இருப்பேன்

உன் உயிர் சமாதியினில் வருகையில்
ஒன்றை மட்டும் எனக்குள் கேட்பென்

இறந்த பின்னும் வாழும் வாழ்க்கை வேண்டும்
இந்தியா என்றும் சிறந்திட வேண்டும்.

Monday 22 February 2010

பதின்ம கால மனக் குறிப்பேடுகள் (2) - தொடர் அழைப்பு


2007ல் இந்தப் படத்தைக் காட்டி கவிதை எழுதச் சொன்னபோது எனக்கு நினைவுக்கு வந்தவன் பாண்டி.

தரையில் பம்பரம் சுற்றவிட்டால்
அதன் தலையில் அடிப்பான் பாண்டி
போன மாதம் பம்பரம் உடைந்து
புது பம்பரம் வாங்க காசு இன்றி
பாண்டி தந்த ஓசி பம்பரமும்
சுக்கு நூறாய் போன பின்னே
வண்ணம் பூசி வாங்கியாந்து
ஆணி அளவை நீட்டம் பண்ணி
அழகாத்தான் சுற்றுது என் கையில
அதுதரும் குறுகுறுப்புல உடல் கூசுது
இதை தரையில விட்டா
அதன் தலையில அடிப்பானோ பாண்டி
இதன் அழகுல மயங்கி நிற்பான் அந்த பாண்டி தோண்டி!

இந்த கவிதையை இப்பொழுது வாசிக்கும்போது கூட அந்த கிராமத்துத் தெரு கண்ணுக்குள் வெளிச்சம் காட்டித்தான் போகிறது. எத்தனை ரம்மியமான இரவுகள், தெரு விளக்குகளில் படித்தவர்களைப் பற்றி பெருமையாக பேசும் பூமி, தெரு விளக்குகளின் ரசனையில் விளையாடுபவர்களையும் பெருமையாக பேசாமல் கடவுள் பால் குடிக்கும் நேரம் என விரட்டி அடிக்கப்பட்ட காலங்கள் பதின்மத்தில் அச்சம் தருபவைதான்.

கோபக்காரனாகவே வாழ்ந்து வந்திருக்கிறேன் பதின்மத்துக்கு முன்னமும் பதின்மத்தின் பாதி வரையிலும். கவிதைகள், கதைகள், நாடகம் என எழுத்தில் மூழ்கிப்போக இந்த பதின்மத்தில் உறுதுணையாய் இருந்தது எனது மாமா மகன் ஜெயராம், சுப்புலட்சுமியின் அண்ணன். கதைகளும், கவிதைகளும் நான் எழுதிய பல கட்டுரைகளும் இந்த பதின்மத்தில் தான். கதைகளும், கவிதைகளையும் மீட்டு விட்டேன், கட்டுரைகள் வெல்லக்கட்டிக்காக மடிக்கப்பட்டதாக கடைக்கார அழகர் மாமா சொன்னபோது பெரும் இழப்பாகவே எனக்கு ஏன் அப்போது தெரிந்திருக்கவில்லை, ஆனால் இப்போது எழுதும்போது ஏதோ இனம்புரியாத வலி இருக்கத்தான் செய்கிறது. நிலையில்லாதவைகள் எனும் தலைப்பிட்டு எழுதிய கட்டுரை தாள்கள் கண் முன்னால் விரிகின்றன. அதனால்தான் வலைப்பூ ஆரம்பிக்கும்போது கூட எல்லாம் இருக்கும் வரை என்றே தலைப்பிட்டு இருந்தேன். இழப்பின் வலிதனை அதிக நேரம் நீடிக்க நான் அனுமதிப்பதில்லை.

பள்ளித் தோழர்களில் மறக்கவே முடியாத நபர்கள் என புளியம்பட்டி அழகர்சாமி, தற்கொலை செய்து கொண்ட பாம்பாட்டி கிரி, இலக்கணம் பேசிக்கொள்ளும் வரலொட்டி ரமேஷ்காந்தி, டி.ராஜேந்தரை பின்பற்றும் வரலொட்டி மோகன் என சொல்லிக்கொண்டே போகலாம். இதையும் தாண்டிய ஒரு நபர் உண்டு.

ஒருவன் எனது முகம் அவனது பாடப்புத்தகத்தில் தெரிகிறது என என்னை கலங்க வைத்தவன். அதன் காரணமாகவே அவன் என்னை வெறுக்கும்படி அவனை உதாசீனப்படுத்தினேன். பள்ளிவிட்டு பிரியும் வரை என்னிடம் அவன் பேசவில்லை, சில நண்பர்கள் சேர்ந்து அவனும் என்னைப் பார்க்க வீடு தேடி வந்தபோது, வீட்டின் வெளி வாசலிலேயே தண்ணீர் தந்து அனுப்பி வைக்குமளவுக்கு நான்  பிடிவாதக்காரன். என்னை அவன் பெண்ணாக உருவகம் செய்து காதலித்திருக்க விருப்பப்பட்டு இருக்கிறான் எனும் எச்சரிக்கை உணர்வு எனக்குள் வந்ததன் காரணம் எனக்குப் புரியாது, ஆனால் அப்போது அப்படித்தான் நடந்து கொள்ளத் தோன்றியது. வழி தவறிப் போகாமல் வலி ஏற்றுக்கொண்டதும் பதின்மத்தில் தான். வழி தவறிப் போனாலும் வலியின்றி இருந்ததும் பதின்மத்தில் தான்.

இந்த பதின்மத்தில் எனது தாய், தந்தையிடம், உற்றார், உறவினரிடம் கற்றுக்கொண்டதை விட சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரியாதவனாகவே இருந்திருக்கிறேன், கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்துபவனாகவே வாழ்ந்திருக்கிறேன். சொன்ன வேலைகள் எதையும் செய்வதில்லை, ஒரு சோம்பேறியாகவே வாழப் பழகியிருந்திருக்கிறேன், எனக்குத் தெரிந்ததெல்லாம் விளையாட்டு, சாப்பாடு. பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என இந்த பதின்மத்தில் கற்றுக்கொண்டதில்லை, அது பழக்கத்திலும் வந்திருந்ததும் இல்லை.

விளையாட்டுத்தனமாகவே வாழ்ந்திருந்த அந்த பதின்ம காலங்கள் வினையாகப் போய்விடாமல் தடுத்தாட்கொள்ளப்பட்டிருக்கிறேன், எங்கெங்கு வளைந்து விட வேண்டுமோ அங்கங்கே வளைந்து இருக்கிறேன், ஒடிந்து விடும் நிலை வந்தபோதெல்லாம் தாங்கப்பட்டு காக்கப்பட்டு இருக்கிறேன். அந்த பதின்ம காலங்கள் தந்த பாடத்தினால் இப்போதெல்லாம் பதின்ம காலங்களில் இருப்போரை எச்சரிக்கையுடனே இருக்கச் சொல்கிறேன். ஒருவேளை தாங்குபவர்களும், காப்போர்களும் இல்லாமலேப் போய்விடக்கூடும்.

தெகா அவர்களுக்கு நன்றி கூறி இவர்களைத் தொடர அழைக்கிறேன்.

சுந்தரா

ஷக்திபிரபா

சித்ரா

சிவா 

சங்கவி

ஜோ அமல் ராயன் ஃபெர்னாண்டோ 

(நிறைவு பெற்றது)




பதின்ம கால மனக் குறிப்பேடுகள் (1) - தொடர் அழைப்பு

நண்பர் தெகா அவர்களின் தொடர் அழைப்பிற்கு எனது நன்றிகள். பதின்ம காலம் என்றதும், என்னவெல்லாம் நினைவுக்கு வந்து சேரும் என எண்ணிக் கொண்டபோது தனியாக எங்கேனும் அமர்ந்து அழுதுவிடலாமா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. எனது அந்த பதின்ம காலங்கள் எனக்குத் திரும்பவும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் எனது மகனின் பதின்ம காலங்கள் எப்படியெல்லாம் இருந்துவிடப் போகிறது என்பதை ரசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

காலத்தை மிகவும் கவனத்துடன் சரிபார்த்துக் கொள்கையில் எனது பதின்ம காலங்கள் நடைபெற்ற ஆண்டுகள் எனப் பார்த்தால் 1987லிருந்து 1993வரை எனக் கொள்ளலாம். 1987ல் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். 1993ல் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தேன்.

தடுமாற்றங்களும், ஏமாற்றங்களும் பலவீனங்களும், பலங்களும், வெற்றிகளும், தோல்விகளும் நிறைந்துதான் அந்த காலகட்டங்கள் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. இதனை ஒரு குறிப்பேடுகளில் எழுதி வைத்திருந்தாலாவது எதனையும் மறக்காமல், மறைக்காமல் அப்படியே எழுதி வைத்துவிட முடியும். இப்பொழுது மனதில் எதுவெல்லாம் நினைவுக்கு வருகிறதோ அதை மட்டுமே தொகுத்திட விழைகிறேன்.

எனது சகோதரர் ஒருவர் கவிதை, தத்துவம் என குறிப்பேடுகளில் எழுதி வருவார், அதைப் பார்த்ததும் நானும் எழுத வேண்டும் எனும் ஆர்வத்தில் எங்கள் பக்கத்து ஊரில் இருக்கும் ஒலிபெருக்கி நிறுவனமான கே.ஜி.சேகர் 90 சக்தி 80 என மதிப்பிட்டது உண்டு. திருவள்ளுவர் பஸ் 80, பாண்டியன் பஸ் 60 என மதிப்பீடு போட்டது உண்டு. விளையாட்டாகவே எதையும் செய்யும் பழக்கம் அதிகமாகவே உண்டு. இப்படி எழுதியதைப் பார்த்ததும் திட்டு வாங்கிய தினம் முதல் குறிப்பேடு அவசியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது, இன்று வரை.

எனது பதின்மகாலத் தொடக்கத்தில் நான் மட்டும் தனியாகப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றாகிப் போனது.  என்னுடன் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது, ஏழாம் வகுப்பு முடித்ததும் சென்னை சென்றுவிட்ட வாசு, ஸ்ரீராம், அழகியநல்லூருக்குப் பயணித்துவிட்ட ரமேஷ். எனது நண்பர்கள். அன்று விலகியதைப் போலவே இன்றும் ஏனோ வெகு தூரத்தில் விலகி நிற்கிறோம். ஆனால் இவர்களை என்னால் ஒருபோதும் மறக்க இயல்வதில்லை, மனதில் ஓரத்தில் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

எனக்கு மிகவும் பிடித்தமான சுப்புலட்சுமி, கவிதா. இவர்கள் உடன்பிறவா சகோதரிகளின் மகள்கள் .மனதின் ஓரத்தில் இவர்களுக்கென ஒரு தனி இடம் எப்போதும் உண்டு.

பதின்ம காலத்தில் அதிகம் பழகியது கவிதாவுடன் மட்டுமே. தட்டாங்கல்லு, பல்லாங்குழி, தாயம் என எங்கள் ஊருக்கு கவிதா வரும்போதெல்லாம் கவிதாவுடன் சேர்ந்து விளையாடுவது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

எவரையேனும் திருமணம் பண்ணுவதாக இருந்தால் காதலித்துத்தான் திருமணம் பண்ணிக்கொள்வேன் என என்னிடம் கவிதா சொன்ன வார்த்தைகள் என்றைக்கும் மறக்காது, அதுபோலவே மண வாழ்க்கையும் அமைத்துக்கொண்டாள். அடுத்த வருடம் பதின்ம காலங்களின் தொடக்கம்.

சுப்பு பாட்டி வீட்டில் இருந்து படித்ததால் விடுமுறைக்கு மட்டுமே வந்து போவாள், ஆனால் அவளது படிப்புத் திறமை, பேச்சுத் திறமை இன்றும் மனதில் நினைவுதனை விட்டு நீங்கா சுகங்கள்.

பதின்ம காலத்தில் நடந்த பல நிகழ்வுகள் என்னை உலுக்குகின்றன. காமிக்ஸ் புத்தகக் கடை போட்டு பத்து பைசாவுக்கும், இருபது பைசாவுக்குமாய் வாடகைக்கு விட்ட ஸ்ரீதர், வீட்டினில் திட்டுகள் வாங்கினாலும் எங்களுடன் கிரிக்கெட் விளையாட வந்த கொண்டப்பன், வயது அதிகம் என பாராமல் எங்களுடன் கிரிக்கெட் விளையாடிய ரங்கசாமி, அழகர்சாமி என ஒரு கூட்டம். இவர்களை எல்லாம் பார்த்துப் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது, கொண்டப்பனைத் தவிர.

களத்து மேட்டுகளிலும், தோட்டத்து வரப்புகளிலும் மணலில் உருண்டு விளையாடியபோது உடனிருந்த கண்ணன், கோலிக்குண்டு, பம்பரம், செதுக்கு முத்து விளையாட்டில் சூரனான பாண்டி, நட்புடன் பழகும் முருகேசன், சமீபத்தில் துர்மரணமடைந்த பெருமாள்... பதின்ம காலம் ஒரு தீராத ஏக்கத்தை ஏற்படுத்துகிறது, பாண்டியை நினைத்து சமீபத்தில் ஒரு கவிதை எழுதியது உண்டு. என்னால் இவர்களை மறக்க முடியாது, ஆனால் விலகிப்போய்விட்டேனே என நினைக்கும்போது  கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொள்கிறது.

இப்போதைக்கு இங்கே நிறுத்துகிறேன்... இன்னும் தொடர்வேன். என்னுடன் சேர்ந்து நீங்களும் எனக்காக அழுது விடுங்கள்.

Thursday 18 February 2010

எதற்காக எழுதுகிறீர்கள்?

எழுத்தாளர்கள் அல்லாத ஒவ்வொருவருக்கும் சொந்த அலுவல்கள் இருக்கின்றன, அதற்கெல்லாம் நேரம் ஒதுக்கிய பின்னர் எழுத்துக்கும், வாசிப்பதற்கும் என நேரம் ஒதுக்கி ஒருவர் பதிவு இடுவது என்பது வாசிப்பது என்பது அத்தனை எளிதானதும் அல்ல. விசயங்கள் அறிய வேண்டியிருக்கிறது, சரியான முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுத வேண்டியிருக்கிறது. சொந்த படைப்புகள், பிறர் தந்த படைப்புகள் என்பது பதிவிடும் ஒவ்வொருவருக்கும் அவரவர் மனநிலையில் உயரிய ஒன்றுதான். 

மேலும் பதிவுகளிடும் பதிவாளர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் தேவைப்படுகிறது என்பது பொதுவாக ஒப்புக்கொண்ட வாதமாக இருந்தாலும் எழுதுபவர் எப்பொழுதுமே தன்னை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும், ஏனெனில் உற்சாகம் என்பது பிறர் மூலம் வந்தால், பிறர் இல்லாத பட்சத்தில் உற்சாகம் தொலைந்து போய்விடும். எழுதும் எழுத்து என்றாவது எங்காவது எப்படியாவது பயன் அளிக்கும் என்ற திடகாத்திரமான நம்பிக்கை ஒன்றே தொடர்ந்து எழுத்துப் பணியில் ஒருவரை இருக்க வைக்கும். 

ஒரு பதிவரின் கருத்துக்கு மாற்று கருத்துத் தெரிவிக்கும்போது அந்த பதிவரின் சிந்தனைக்கு எதிர்மறையான சிந்தனை ஒன்று எழுந்துவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு எழும்போது தனது சிந்தனையை அந்த பதிவர் சரியே என நிரூபிக்கும் நிலைக்கும், எதிர்மறை சிந்தனையாளர் தனது சிந்தனையை சரியே என நிரூபிக்கும் நிலை ஏற்படும் பட்சத்தில் மாற்றுக் கருத்து என்பது மறைந்து கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆனால் எழுதுகின்ற பதிவர்கள் மனநிலையில் 'அட அவருடைய கருத்தும் பரவாயில்லையே, ஆனா நம்ம கருத்து இது' என எண்ணம் எழும்போது அங்கே கருத்து வேறுபாடுத் தோன்றாது. ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் என எண்ணம் எழும். 

மாற்றுக் கருத்துக்கும், கருத்து வேறுபாடுக்கும் என்ன வித்தியாசம் எனில் ஒருவர் கொண்ட கருத்தினில் வேறுபாட்டு நிலையை எடுத்துக் கொண்டு எழுதியவரின் நிலையை சந்தேகிப்பது, எழுதியவரை குற்றம் சொல்வது என தனிமனிதரின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிடுவது போன்ற நிலையை கருத்து வேறுபாடு உருவாக்கிவிடும். ஆனால் மாற்றுக் கருத்து என வரும்போது அங்கே அத்தகைய சூழ்நிலை தவிர்க்கப்பட்டு விடுகிறது. தனிமனிதரின் செயல்பாடுகள் குறித்து எந்த கேள்விக்குறியும் எழுவதில்லை. 

பொதுவாக எதனையும் சொந்தப் பிரச்சினையாக நினைக்கும்போது செயல்பாடுகள் குறித்து வருத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நமது எண்ணத்துக்கு எப்படி மற்றொருவர் மாறிப் போகலாம் என எண்ணம் எழும்போது அங்கே எப்படியாவது நமது எண்ணமே சரி என்கிற தோற்றத்தை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். 

ஒரு கருத்தினை எடுத்துக்கொள்ளும் விதம் பொருத்தே ஒவ்வொருவரின் எண்ண ஓட்டம் அமைகிறது. மாற்றுக் கருத்து உட்பட. ஆனால் இவர்னா இப்படித்தான் என்கிற மனப்பக்குவம் ஒவ்வொரு பதிவரிடமும் இயற்கையாகவேத் தோன்றுவதால், குறிப்பிட்ட பதிவர் என்ன எழுதினாலும் அந்த எழுத்தின் தன்மைக்கு ஒரு முலாம் பூசப்பட்டு காட்சி அளிப்பதை எவராலும் மறுக்க இயலாது. 

எழுத்துகள் 

சாம்ராஜ்யங்கள் கட்டவும் அழிக்கவும் உதவின,
விடுதலை வேட்கையைத் தூண்டின, 
பாலியல் எண்ணங்களை பரவசப்படுத்தின, 
எதிரிகளை உருவாக்கின,
நண்பர்களை கொண்டு வந்து சேர்த்தன,
வரலாறை திரித்தும் திரிக்காமலும் பேசின, 
கற்பனைகளை, மந்திரங்களை பிரபலமாக்கின
ஆராய்ச்சிகளுக்கு அடித்தளம் போட்டன
இறைத்தூதர்களுக்கும் ஒரு மொழியாகின
மனதின் பிம்பங்களாயின
மரணமில்லா நிலையும் பெற்றன

இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்?  

Tuesday 16 February 2010

காதல் தினம் பேட்டி

1,
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

கற்பெனும் உறுதி நிலையில் பெண்ணிருந்தால் பெண்ணைவிட மேலானது ஏது..?

கூடுதலான இடங்களிலும், சமூகத்திலும் கற்பு என்பது பெண்ணுக்குரிய ஒன்றாகவே காட்டப் பட்டு வருகின்றது, ஆணிற்கும் கற்பொழுக்கம் அவசியம் என்பதனை எவ்வாறு வலியுறுத்தலாம்...?
இதையெல்லாம் வலியுறுத்த வேண்டிய அவசியம் கிடையாது, கற்காலத்திலா இருக்கிறோம்! பொற்காலம் கண்டிட விரைந்து கொண்டிருக்கையில் கற்பு பற்றிய எண்ணம் அவரவர் மனதில் ஆழப் பதிந்திருக்க வேண்டும். ஒரு விசயத்தைச் செய்யும் முன்னர், இது எவ்விதத்தில் சரியாக இருக்கும் என சிந்திக்கும் மனம் நிச்சயம் தவறிப் போகாது. தவறு செய்யும்போது இது தவறு ஏன் எவருக்குமேத் தோன்றுவதில்லை, செய்துவிட்டு அடடா தவறு செய்துவிட்டோம் என வருந்துவதில் ஒரு லாபமுமில்லை.

மனதின் விகாரங்கள் எல்லாம் அவரவர் உணர்ந்து அழித்துக்கொள்ள வேண்டியவை. கற்புடன் இருக்க வேண்டும் என சொன்னால் எள்ளி நகையாடும் கூட்டமே அதிகம், ஏனெனில் ஆண்களில் எவரும் ராமன் இல்லை எனும் சொல்வழக்கு கடுமையாகவே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. பத்தினிப் பெண்கள் என பெரிய பட்டம் எல்லாம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இருப்பினும் உலகில் எவர்தான் தவறு செய்யவில்லை என்கிற கண்ணோட்டம் அதிகமாகவே இருக்கிறது. எந்த ஒரு பெண்ணும் ஆணும் அவரவர் சம்மதத்துடன் உடல் உறவு வைத்துக்கொண்டால் அது தவறில்லை என்றே சமூகம் அறிவுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. விபச்சாரம் செய்வது தவறில்லை, அந்த விபச்சாரத்தை ஊக்குவிப்பவர்கள் தவறில்லை என சொல்லிவிட்டு கற்பு பற்றி பேசுவது எல்லாம் ஒரு சாரருக்கேச் சரியாக வரும். இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் வாழ்க்கை என தீர்மானம் செய்வதெல்லாம் அவரவர் தீர்மானித்து வாழ்வது. எனக்கு வலிக்கும்போது மட்டுமே அழுவேன் என வாழும் சமூகம் இது.

எத்தனை கதைகள் தான் எழுதி வைப்பது! எத்தனை மனிதர்களின் வாழ்க்கைதான் உதாரணத்துக்கு இருப்பது. கற்பு நெறி தவறாமல் வாழ்வது அனைத்து உயிர்களின் மொத்தக் கடமை, ஆனால் கடமை தவறுவதில் நமக்கு ஈடு இணை ஏதுமில்லை. எனவே ஆண்களுக்கு கற்பு அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டியதில்லை, அவரவர் உணர்ந்து செயல்பட்டால் அதுவே கோடி புண்ணியம் ஆகும்.


2,காதல், காமம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது என்கின்றார்கள், இது பற்றிய தங்கள் விளக்கம் என்னவாக இருக்கும்..?


இது குறித்து புதிய தொடர் எழுதி வருகிறேன், அது நமது மன்றத்தில் இலக்கியப் பகுதியில் இருக்கிறது. சுருங்கச் சொன்னால் காதல் வேறு; காமம் வேறு. காமத்தை காதல் கொச்சைப்படுத்தாது, காதலை காமம் கொச்சைப்படுத்தும். மேற்கொண்டு விபரங்கள் தெரிய வேண்டுமெனில் இலக்கியப் பகுதியில் ஒருமுறை வலம் வாருங்கள்.


3, காதல் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான அன்பைக் குறிக்கும் சொல்தானா..? அல்லது காதல் என்றால் என்ன என்பதற்கு சிறு விளக்கம் தரமுடியுமா..?

காதல் புரிந்து கொள்ளும். இதுதான் நான் தரும் விளக்கம். காதலுக்காக உயிர்த் தியாகம், காதல் தியாகம் என்றெல்லாம் சொன்னபோது, அடடா தவறே இல்லாத காதலைக் கூட, தவறாகப் பார்க்கிறதே சமூகம், தவறான விசயத்தை விதைக்கிறார்களே என்கிற எண்ணமே காதல் புரிந்து கொள்ளும் என எண்ண வைத்தது. காதல் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. இது அன்பை குறித்தச் சொல் அல்ல. புரிந்துணர்வினை குறித்தச் சொல். காதல் காலமில்லாதபோதும் இருந்தது, காலம் வந்தபோதும் தொடர்கிறது.



4,ஆணுக்குப் பெண் சமம் (நீ பாதி நான் பாதி என்பது போல்) இது எந்தளவு சாத்தியமாக இருக்கின்றது ...?

ஏன் மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்! எதற்கெடுத்தாலும் ஒரு அளவுகோல். இந்த வாழ்க்கையை ஏன் அளந்து வைத்துக் கொண்டு வாழப் பார்க்கிறார்கள். ஆண் இனத்தை அடிமைப்படுத்தும் பெண் இனம், பெண் இனத்தை அடிமைப்படுத்தும் ஆண் இனம் என எவர் கற்றுக்கொடுத்தார்கள். ஆணும் பெண்ணும் ஒருபோதும் சமமில்லை, வீணாக சங்கங்கள் அமைத்து வேடிக்கை மனிதர்களாக வாழ்வதை எப்போது தவிர்க்கப் போகிறார்கள். நான் எவருக்கும் சமம் இல்லை. நான் எவருக்கும் சமமாகவும் இருக்கவும் முடியாது. என்னளவில் நிறைய வேறுபாடுகள் உண்டு. அவரவர் உரிமைகளை அவரவர் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

ஒரு தாய் தனது அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான பாசத்தை ஊட்டி வளர்க்க இயலாது. ஆனால் வார்த்தை நயங்களுக்காக ஒரு தாய் அனைவரையும் ஒன்றாகவேப் பாவிக்கிறார் என சொல்லிக்கொள்ளலாம். ஒரு ஆசிரியர் எல்லா மாணவர்களையும் சமமாக நடத்த முடியாது, ஆனால் சமமாகவே நடத்துகிறார் என மேடை போட்டு பேசலாம். வாழ்க்கையின் நியாய தர்மங்களை, நிதர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எப்போதுதான் நமக்கு வரப்போகிறதோ, அது எனக்கேத் தெரியாது.

உள்ளிருக்கும் மனம் ஒன்று, வெளி நடத்தையில் ஆடும் மனம் ஒன்று என வாழும் மனிதர்கள் உள்ள உலகமிது. இதில் எல்லோரும் சமம், ஆணும் பெண்ணும் சமம், நீயும் நானும் சமம் என பேதம் இல்லாமல் வார்த்தைக்காகச் சொல்லி சமாதனமாகிப் போவோர்கள் அதிகமுண்டு, ஆனால் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருப்போர்களை எவருமே உணர்ந்து கொள்ள இயலாது, சமமாக பாவிக்கவும் முடியாது. ஒருங்கிணைந்த சமூகம் சாத்தியமில்லை என்பதல்ல என் மொழி, சாத்தியத்திலும் சத்தியமில்லை என்கிறது என் மொழி.


5,உங்கள் காதல் அனுபவத்தில், மறக்க முடியாத சம்பவம் ஏதும் எம்முடன் பகிர்ந்து கொள்ளலாமா..? (பெற்றோர் நிட்சயித்த திருமணம் எனில் திருமணத்தின் பின்னான அனுபவம் ஒன்று)

:) முதன் முதலில் தொலைபேசியிலும், கடிதத்தின் மூலமும் பழகிக்கொண்ட காதலியை நேரில் பார்த்த சம்பவமே மறக்க முடியாத சம்பவம் எனச் சொல்லும்போது அடுத்தடுத்த நிகழ்வுகள் என கிட்டத்தட்ட 15 வருட வாழ்க்கையும் மறக்க முடியாத சம்பவங்களாகவே ஞாபகத்துக்கு வருகிறது.

Friday 12 February 2010

காதல் மட்டும்

விலகிப் போய்விட மனமிருந்தும்
உன்னையேச் சுற்றி வருவேன்
நான் விலகுவதாக நீ
அறிந்தபோது என்னையே நீ
சுற்றிச் சுற்றி வருவாய்
உன்னைச் சுற்றி நானும்
என்னைச் சுற்றி நீயும்
நமக்குள் இருப்பது
காதல் மட்டும்
அந்த காதல் எப்போதும் 
ஆகாது தரைமட்டம். 



.........................
.........................
...........................
..........................


சொல்லாத வார்த்தைகளிலும்
சொல்லப்பட்ட வார்த்தைகளிலும்
எஞ்சியிருக்கும் காதல் மட்டும். 


Thursday 11 February 2010

காமம் - 3

காமம் 1  காமம் 2  படிக்க.

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.  (நன்றி 



1997 ல்,  முதன் முதலில் திருப்பாவை மனப்பாடம் செய்ய ஆரம்பித்த காலம் அது. திருப்பாவையை மனனம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏன் வந்தது எனத்  தெரியாது.  முப்பது பாடல்களையும் மனனத்தில் வைத்திருந்தேன். காலையில் எழுந்ததும் வழக்கம் போல பத்தியும், சூடமும் ஏற்றி வைத்து சில நிமிடங்களாவது இறை வணக்கம் செலுத்தாமல் கல்லூரிக்கு சொல்லித் தர செல்வதில்லை. 

இந்த பாடலை இன்று பாடினாலோ, கேட்டாலோ  கூட கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும். பல பாடல்கள் மறந்து போயின. ஆனால் இன்னும் மனதில் ஒரு ஆசை இருக்கிறது,  எப்படியாவது என்னை மீண்டும் தேடி எடுத்து விடவேண்டும் என. 

'மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்' எனச்  சொல்லும்போதே வாழ்க்கை இன்ன பிற ஆசைகளுக்கு அடிமையாகிவிடுமோ எனும் அச்சம் எழத்தான் செய்கிறது. அப்படி அடிமையாவதன் பொருட்டு கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் கோலோச்சத் தொடங்கிவிடுகின்றன.  சாந்த நிலையை அடைய வேண்டிய மனம் தள்ளாடி திரிகிறது.  காமம் அத்தனை மோசமானதா? இறைவன் மேல் வைக்கப்படும் காமம் மட்டும் என்ன தனிச் சிறப்பு உடையதா? 

காமம் ஒரு உணர்வு. அது பக்குவப்படுத்தப்படாத வரைக்கும் அந்த காமத்தினால் சீரழியும் மனிதர்களை எதுவும் செய்ய இயலாது. பக்குவப்படுத்தப்பட்ட காமம் காதலுக்கு பெருமை சேர்க்கும், ஒரு போதும் சிறுமை சேர்க்காது. பக்குவப்படுத்தப்பட்ட காமம் வாழ்க்கைக்கே பெருமை சேர்க்கும். பேரின்பத் தழுவல்களில் இறைவனை பற்றி சொல்லும் போது கூட இப்படித்தான் எழுத முடிகிறது. 

உணர்வுகளினை உறுப்புகளில் உலர வைத்து
திணறும்படி இச்சைதனை பரப்பி வைத்து
ஒதுக்கித் தள்ளி உன்னிடம் ஒட்டிக்கொள்ள
பதுக்கிய உணர்வு எவ்விதம்

இதே  வரிகளை வேறு கண்ணோட்டத்தில் நினைத்துப்  பார்க்கிறேன். உலகமெல்லாம் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உள்ளத்தில் உணர்வுகள் கிளறப்படுகின்றன. இப்போது உணர்வுகளினை கட்டுப்பாடுக்குள் வைத்திருப்பது என்பது அவரவர் மன வலிமையை பொறுத்தே அமைந்து விடுகிறது. தவறில்லை என நினைத்து செயல்புரிவோர்கள் பற்றி எதுவும் சொல்ல இயலாது. 'இதிலென்ன இருக்கு' என விளையாடும் மனிதர்களை பற்றி எதுவுமே எழுதவும் முடியாது. 

இந்த காமம் பற்றி மகாத்மா காந்தி தனது சுயசரிதையில் எழுதியதைப் படித்தபோது மனதில் பெரும் கலக்கம் ஏற்படத்தான் செய்தது.  மனைவியைத்  துன்புறுத்தும் கணவர்களில் ஒருவராகத்தான் காந்தி எனது கண்ணுக்கு தெரிந்தார். மகாத்மா எனப் போற்றபடுவதால் அவர் தவறே இழைத்து இருக்கமாட்டார் என்றெல்லாம் நான் நினைத்து இருக்கவில்லை ஆனால் அவரது வாழ்க்கை முறை என்னை ஆச்சரியப்படுத்தியது. சக உயிரை அடிமைப்படுத்தும் எண்ணமும், மிரட்டி உருட்டி வைக்கும் கொடுமையும் இன்றும் உலக அளவில் பெரும்பாலும் நடந்து வருவது கண்டு மனதில் ஏற்பட்ட கலக்கமே அது. இந்த காமம் எந்த வகையில் சேர்க்கப்படும்? 

மனித இனத்தில் இனப்பெருக்கம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்தால் உருவாவது என்பதுதான் அறிவியல் தொழில்நுட்பம் முன்னேறாதவரைக்கும் இருந்த நிலை. இன்றைய சூழல் எத்தனையோ மாறிவிட்டது. ஆண் மற்றொரு ஆண் மீது கொள்ளும் காமம், பெண் மற்றொரு பெண் மீது கொள்ளும் காமம் என  சமுதாயம் எந்த நிலையையும்  ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துக்கு வந்துவிட்டது.  எப்படிப்பட்ட காமமும் சரிதான் என ஏற்றுக்கொள்ளும் சமுதாயமாகத்தானா மாறிவிடப் போகிறது? 

'மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்'

Wednesday 10 February 2010

கிராம வளர்ச்சி


செந்தாமரைக்குளத்திற்கு பொடிநடையாக வந்து சேர்ந்தான் சீராளன். எந்த ஒரு வாகன வசதியும் இல்லாத ஊர் அது. தரிசாக கிடக்கும் நிலங்களையும், சற்று காய்ந்து வற்றிக் கொண்டிருந்த கண்மாய்களையும் கடந்து வந்தான். ஊருக்கு வரும் வழியில் ஒருத்தரையும் அவன் கண்டிருக்கவில்லை. ஊருக்குள் வந்தவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஊரெல்லாம் ஒரே அமைதியாக இருந்தது.

Monday 8 February 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (9)

அந்த நிறுத்தத்திற்குப் பின்னர் சேலத்தை சிரமமில்லாமல் அடைந்தோம். சரியாக மணி ஒன்பது ஆகி இருந்தது. அந்த அண்ணன் எங்களுக்காகக் காத்திருந்தார். பிறரை மதிக்கும் பண்பு, உபசரிப்பு என எனது கண்களில் அவர் உயர்ந்து தெரிந்தார்.

Sunday 7 February 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (8)

தினா அழைத்துச் சென்றது ஆஞ்சநேயர் ஆலயம். முன்னரே தான் செல்ல வேண்டி நினைத்திருந்ததால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதாகக் கூறினார். ஆலயத்திற்குச் சென்றதும் உயரமான ஆஞ்சநேயர் சிலை கண்டு பிரமித்துப் போனேன், ஆனால் அதையும் தாண்டி நடந்த விசயம்தான் என்னை யோசிக்க வைத்தது.