Tuesday 22 June 2010

எங்கம்மாவுக்கு கல்யாணம்

இருபத்தி மூன்று வயதுடைய இளம்பெண் என்னிடம் இப்படித்தான் வந்து சொன்னாள். ''எங்கம்மாவுக்கு அடுத்த வாரம் திங்கள் கிழமை கல்யாணம், நீங்க அவசியம் வந்துருங்க''. இதை என்னிடம் அவள் சொன்னபோது அவளிடத்தில் எந்தவித தயக்கமும் இல்லை. கூச்சமும் இல்லை. எனக்குத்தான் வெட்கமாக இருந்தது.

அதோடு அவள் நிறுத்தவில்லை, அவள் தனது தாயின் திருமணத்திற்கு எல்லா ஏற்பாடுகளையும் தானே முன்னின்று செய்யப் போகிறேன் என சொன்னபோது எனக்கு மிகவும் சங்கடமாகத்தான் இருந்தது. ஒரே ஒரு புன்னகை. ''ம், வருகிறோம்'' என்றுமட்டும் சொன்னேன்.

 எனக்குள் எத்தனையோ கேள்விகள். எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது. இருந்தாலும் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கையை அமைத்து கொள்வதில் என்ன தடை இருந்துவிடப் போகிறது?.

பிடிக்காமல்  வாழ்ந்து கழிக்கும் நாட்களைவிட, பிடித்து கழிக்கும் நாட்கள் அதிகம் இருப்பின் அதுவே வாழ்க்கையின் வெற்றி. ஆனால் நாம் வாழ்க்கையில் எப்படியெல்லாம் நம்மை சமாதானப்படுத்திக் கொள்கிறோம். பிடித்த விசயங்கள் என நாம் செய்வது மிகவும் குறைவு. பிடிக்காத விசயங்கள் எனினும் அதை நாம் செய்வது மிகவும் அதிகம்.

ஒருவனுக்கு  ஒருத்தி எனும் கோட்பாடு நன்றாகத்தான் இருக்கிறது. விவாகரத்து பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் மனதில் ரணங்களுடன் எதற்கு எவரும் வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும். எதிலும் ஒரு திருப்தியில்லாத தன்மை இருப்பதன் அடிப்படை காரணம் எது.

புரிந்து  கொள்ளல், ஒருவரின் கருத்தோடு மற்றவர் ஒத்துப் போதல் என்பது ஏன் சாத்தியமில்லை. பிடிக்காவிட்டாலும் வாழ்ந்து கழித்துவிட்ட நமது முன்னோர்கள் நமக்கு சொன்னது குடும்ப உறவு விட்டுப் போகக் கூடாது என்பதுதான். இதற்காக மொத்தமாக வலி சுமந்து வாழும் வாழ்க்கை எதற்கு?

வாழ்க்கையில் நிம்மதி என்பதன் அளவுகோல் வேறுபடுகிறது. இந்த வேறுபாட்டினால் மனம் வெறுத்து வாழ்பவர்கள் அதிகம்தான். தனக்காக வாழ்பவர்கள் வாழ்க்கையில் மிகவும் கவனமாகவே இருக்கிறார்கள். பிறருக்காக வாழ நினைப்பவர்கள் வாழ்க்கையில் இன்னல்கள் சுமக்கிறார்கள்.


மறுமணம் என்பது மறுக்கப்பட வேண்டிய விசயமல்ல. எனினும் திருமணங்கள் தோற்றுப்போவதன் அடிப்படை காரணம் அறிந்து கொள்ளல் அவசியமாகிறது. எது எப்படி இருப்பினும்  நமது சந்ததியினரும் எங்கம்மாவுக்கு கல்யாணம் என சொல்லாமல் இருக்கும் காலம் எக்காலமோ?

5 comments:

Thamizhan said...

உடைகளை மாற்றிக் கொள்ளும் நாம் நம் உள்ளங்களையும் உயர்த்திக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையின் உண்மையே மகிழ்ச்சிதான்.
அந்த மகிழ்ச்சி முறையாக வாழும் ஒருவருக்குப் பல காரணங்களால் கிடைக்காமல் போய்விடும்போது மாற்ற வேண்டியவற்றை மாற்றித்தான் ஆக வேண்டியுள்ளது.
பல காரணங்களுக்காக ஆணோ,பெண்ணோ மறுமணம் செய்து கொள்ள வேண்டியுள்ளது.
அதுவே விதவைத் தாயாகக் கூட இருக்கலாம்.

நமது எண்ணங்களில் உயர்வு பெறுவோம்.

பிரேமா மகள் said...

இதில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அந்த பெண்ணுக்கு ஒரு துணை தேவைதானே... நீங்கள் ஏன் திருமணம்த்தை உடல் தேவையோடு பொருத்தி பார்க்கிறீர்கள்?

Chitra said...

வாழ்க்கையில் நிம்மதி என்பதன் அளவுகோல் வேறுபடுகிறது. இந்த வேறுபாட்டினால் மனம் வெறுத்து வாழ்பவர்கள் அதிகம்தான். தனக்காக வாழ்பவர்கள் வாழ்க்கையில் மிகவும் கவனமாகவே இருக்கிறார்கள். பிறருக்காக வாழ நினைப்பவர்கள் வாழ்க்கையில் இன்னல்கள் சுமக்கிறார்கள்.

...... Maybe true. But, பல நேரங்களில், கணவன் அல்லது மனைவி - பொறுமை என்ற பேரில் - maybe for the fear of the society too - இன்னல்களை சுமந்து கொண்டு கஷ்டப்படுறாங்க.... அப்படி செய்யவில்லை என்றால், தவறு என்று அவர்கள் மேல் முத்திரை குத்தப் படுகின்றது.... எத்தனை வீடுகளில், குழந்தைகளும் - கணவன் -மனைவி சண்டைகளில் பலி ஆகி கொண்டு, தினமும் கண்ணீர் வடித்து கொண்டு இருக்கிறார்கள்.....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// பிடித்த விசயங்கள் என நாம் செய்வது மிகவும் குறைவு. பிடிக்காத விசயங்கள் எனினும் அதை நாம் செய்வது மிகவும் அதிகம் //

இந்த அவல வாழ்க்கை எதற்கு?
அதை விட அந்தப் பெண் '' என் அம்மாவுக்கு கல்யாணம் '' என்று மகிழ்ச்சியுடன் சொன்னதில் எந்தத் தப்பும் இல்லை.

Radhakrishnan said...

@ தமிழன். மிகவும் சரிதான். நமது எண்ணங்களில் நாம் உயர்வு பெறுவோம். சமுதாயத்தின் பார்வை மாறட்டும்.

@ பிரேமா மகள். நிச்சயம் ஒரு துணை தேவைதான். மறுக்கவில்லை. திருமணத்தை உடல் தேவையோடு நான் பொருத்திப் பார்க்கவில்லை. அப்படி மட்டுமே இருந்திருந்தால் நிச்சயம் அந்த பெண்ணோ அல்லது ஆணோ திருமணம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இப்படியெல்லாம் பழக்கப்படாத எனக்கு வெட்கமாகவும், சங்கடமாகவும் இருப்பதில் தவறு இல்லை என்றே தோன்றுகிறது. காலப்போக்கில் எல்லாம் பழகிப்போகும் தான்.

@சித்ரா. ஆம் உண்மை தான். கல்யாணம் பண்ணிவிட்டோமே என காலம் தள்ளுவதைவிட்டுவிட்டு வாழும் வாழ்க்கையை செம்மைபடுத்துதல் அவசியமே.

@ஜெஸ்வந்தி. ஆம், அந்த பெண் சொன்னதில் எந்த தவறும் இல்லை. நான் வாழ்ந்த சமூகம், நான் பழகிய சமூகம் வேறு என்பதால் எனக்கு சற்று சங்கடமாக இருந்தது என்னவோ உண்மை.


அனைவருக்கும் நன்றி.