Thursday 3 June 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 15


மறுதினம் கல்லூரியில் ஆண்டுவிழா அறிவித்து இருந்தார்கள். மதிய வேளையில் வைஷ்ணவி கதிரேசனைத் தேடி வந்தாள். வைஷ்ணவியைக் கண்ட கதிரேசன் முதலில் புரியாமல் விழித்தான். இத்தனை மாதங்களாய் தன்னுடன் ஒரு வார்த்தைக்கூட பேசாதவள் தன்னைத் தேடி வந்தது அவனுக்கு ஆச்சரியம் அளித்தது. வைஷ்ணவியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் கதிரேசன். அவளும் அவளை அறிமுகப்படுத்திக் கொண்டாள். 


''என்ன விசயமா திடீருனுப் பார்க்க வந்திருக்கீங்க'' என்றான் கதிரேசன். அதற்கு வைஷ்ணவி ''மதுசூதனன் எங்க காதலை உங்ககிட்ட சொன்னதா சொன்னான், அதான் இதை காலேஜ்ல எல்லாம் சொல்லிட்டு இருக்க வேணாம்னு உங்ககிட்ட நானே நேரா சொல்லிட்டுப் போக வந்தேன்'' என்றாள் வைஷ்ணவி. ''நீங்க இரண்டு பேரும் நடந்துக்கிறதுலதான் இருக்கு, நான் சொன்னாலும் சொல்லாட்டாலும் காலேஜ்க்குத் தெரிஞ்சி போயிரும்'' என்றான் கதிரேசன். ''எனக்கும் தெரியும், எங்க சீனியர் இரண்டு பேருக்கு பிரின்சிபால் கடுமையா வார்னிங் கொடுத்திருக்காரு, அதான் நீ மதுசூதனன் மாதிரி எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்காதே'' என்றவள், ''நீ சமண சமயம் பத்தி ரொம்பப் படுத்துறியாமே'' என்றாள் மேலும். ''ஓ அதையும் சொல்லிட்டானா அவன்'' என்றான் கதிரேசன். ''இன்னைக்குதான் சொன்னான், நான் பேச்சுப் போட்டியில கலந்துக்கப் போறேன், தலைப்பு கேட்காதே'' என்றாள். ''ஓ அப்படியா நானும் கலந்துக்கனும், இனிமே அவனை தொந்தரவு செய்யலை என்கிட்டயும் தலைப்பு கேட்காதே'' என்றான் கதிரேசன். 


''அவன்கிட்ட இனிமே சமண சமயம் பத்தி கேட்காதே, சமண சமயம் பத்தி எதுவும் தெரியனும்னா என்கிட்ட வந்து கேளு நான் உனக்கு சொல்றேன்'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் அதிர்ச்சியுடன் பார்த்தான். ''எங்க தங்கி இருக்கீங்க?'' என்றான் கதிரேசன். ''உங்க மாதிரி வெளியிலே வீடு எடுத்தா எங்களால தங்க முடியும், ஹாஸ்டலுலதான் தங்கி இருக்கோம், வீடு எடுத்து தங்கினா வீட்டுல, ஊருல நாலுவிதமா பேசித் தள்ளிரமாட்டாங்க'' என்றவள் ''சரி நேரமாகுது நான் சொன்னதை ஞாபகம் வைச்சிக்கோ, சாயந்திரம் பேசலாம்'' என்று கிளம்பினாள். கதிரேசனுக்கு தான் நேற்று பாடிய பாடல் மனதில் தாளமிட்டது.


''காலம் தொடங்கும் முன்னரே மங்கையும் மனதில்
கோலம் போட்டதன்காரணம் சொல்சிவனே''


சமண சமயத்தைப் பற்றி கேள் எனச் சொல்லி செல்கிறாளே. இவளை நம்பி இந்த விசயத்தைப் பற்றி பேசலாமா? பேச்சுப் போட்டியில் இதே விசயத்தைப் பேசினால் தன்னிடம் இருந்து திருடியதாக சொல்லிவிடக்கூடும் என நினைத்தான்.


அவ்வாறு எண்ணியவன் மனதில் கல்லூரியில் காதல் புரியக்கூடாதா? என்ன கொடுமை? தனி மனித சுதந்திரத்தில் அதிகம் தலையிடுகிறாரே இந்த சிவநாதன் என யோசித்தான் கதிரேசன். ஒழுக்கம் என்பது தானாக வரக்கூடியது. எதையெல்லாம் ஒழுக்கம் கெட்ட செயல் என நினைக்கிறார் அவர் என கதிரேசன் தனக்குள் பலமாக சிந்திக்க ஆரம்பித்தான். முதல் வேலையாக சமண சமயத்தைப் பற்றி விரைவில் நடக்க இருக்கும் கல்லூரி விழா பேச்சுப்போட்டியில் பேசுவது என தனது பெயரை பதிவு செய்ய சென்றான் கதிரேசன். 


தலைப்பு கேட்டார்கள். 'சமண சமயமும் அன்பே சிவமும்' என்றான். பெயரை பதிந்தவர் ''நீ போய் பிரின்சிபாலைப் பார்த்துட்டு வா'' என்றார். ''யார் யாரை பிரின்சிபாலைப் பார்க்கச் சொல்லி இருக்கீங்க'' எனக் கேட்டான் கதிரேசன். ''ம் இப்படி ஏடாகூடாம தலைப்பு வைக்கிறவங்களை'' என முறைத்தார் அவர். ''நல்ல தலைப்பு வைச்சி ஏடாகூடாம பேசினா என்ன பண்ணுவீங்க'' என திரும்பவும் கேட்டான் கதிரேசன். ''நீ விதிமுறையெல்லாம் படிக்கலையா, இந்தா நோட்டீசு'' என நீட்டியவர் ''இந்தா இந்த தலைப்பு சொன்னவனையும் தான் நான் போய் பிரின்சிபாலைப் பார்க்கச் சொல்லி இருக்கேன்'' என ஒரு தலைப்புக் காட்டினார். 'காதலும் கடவுளும் கத்தரிக்காயும்' என இருந்தது.


தலைப்பைப் பார்த்த கதிரேசன் சத்தம்போட்டு சிரிக்கத் தொடங்கிவிட்டான். ''ஒழுங்கா அவர் வீட்டுக்குப் போறதுக்குள்ள போய் பார்த்துட்டு சம்மதம் கேட்டுட்டு வா'' என சொன்னார் அவர். ''வேற தலைப்பைச் சொல்றேன்' என்றான் கதிரேசன். ''வேறு தலைப்புனாலும் பேசறது ஒன்னுதானே, போ. சும்மா போய்ட்டு பார்த்தேனு வராதே, அவரோட கையெழுத்துப் போட்டுத் தருவாரு'' என்றார் அவர். ''பேசறதுக்குக் கூடவா'' என்றான் கதிரேசன். ''தேவையில்லாம பேசிப் பேசியே இந்த தேசம் உலகம் சுக்கு நூறாக் கிடக்கு, அடுத்தவங்களுக்கு வழியை விடு'' என கதிரேசனை தள்ளினார். 


கதிரேசன் சிவநாதனைப் பார்க்கச் சென்றான். அங்கே ஐந்து பேர் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். வரிசையின் முதலில் வைஷ்ணவி நின்று கொண்டிருந்தாள். அவளிடம் சென்ற கதிரேசன் ''என்ன தலைப்பு இப்போ சொல்லு'' எனக் கேட்டான். ''வரிசைக்குப் போ மச்சான்'' என்றான் பின்னாலிருந்தவன். ''வந்து இருபது நிமிசம் ஆச்சு, 'நாமமும் திருநீரும், தலையைச் சுத்திப் போடு இதுதான் தலைப்பு' என்றாள் வைஷ்ணவி. ''வேற தலைப்பேக் கிடைக்கலையா' என தலையில் அடித்துக் கொண்டு பின்வரிசைக்கு சென்றான் கதிரேசன். முதல் வருடத்தில் சேர்ந்தவர்கள்தான் அனைவரும் எனபதை அறிந்து கொண்டான்.


சிவநாதன் அறையைவிட்டு அவரது உதவியாளர் வெளியே வந்தார். இந்த தலைப்பு வைச்சவங்க நான் சொல்ற வரிசைப்படி ஒவ்வொருத்தரா உள்ளே போங்க என வாசித்தார்.


நாமமும் திருநீரும் தலையைச் சுத்திப் போடு
காதலும் கடவுளும் கத்தரிக்காயும்
நம்ம கல்லூரி ரொம்ப மோசம்
காசுக்கு கல்வியா, லகரம் தட்டுது
சமண சமயமும் அன்பே சிவமும்


வைஷ்ணவி சிவநாதனின் அறைக்குள்ளே சென்றாள். அங்கு தைரியமாக நிற்பவர்களைக் கண்டு கதிரேசனும் தைரியம் கொண்டான். 


(தொடரும்)

2 comments:

ஹேமா said...

தொடருங்கள்.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஹேமா