Sunday 20 June 2010

நுனிப்புல் (பாகம் 2) 8


8. கேசவன் பூங்கோதை


வீட்டுக்குள் அனைவரும் வந்து அமர்ந்தனர். கேசவனின் தாய் மோகனா கேட்டார்.


‘’வீட்டுல அம்மா அப்பா இல்லையா’’ 


‘’கல்யாணம் முடிஞ்சதும் சோலையரசபுரம் போய்ட்டாங்க, என்ன விசயமுனு தெரியலை’’ 


அனைவருக்கும் பலகாரங்களும், இனிப்பும் எடுத்து வைத்து உபசரித்தான். அத்தை கமலாவை வரச் சொல்லுமாறு பழனியிடம் சொல்லி அனுப்பினான் வாசன். குளிர்பானங்கள் கேட்டவர்களுக்கு கடையில் வாங்கி வைத்திருந்த குளிர்பானங்கள் தந்தான். அத்தை கமலா வந்ததும் மற்றவர்களுக்கு காபி போட்டுக் கொடுத்தார்கள். பூங்கோதையின் தந்தை கோபாலிடம் வாசன் பேசினான்.


‘’நாளைக்கு திருமலைக்கு கிளம்பறீங்களா’’ 


‘’ஆமாம்பா, அங்க இரண்டு நாளு இவங்களை தங்க வைச்சிட்டு அனுப்பி வைக்கலாம்னு இருக்கோம், நீங்க கூட திருவில்லிபுத்தூருக்கு ஏதோ செடி விசயமா வரதா விநாயகம் சொன்னாரு, வந்தா எங்க வீட்டுல தாராளமா தங்கலாம்பா’’ 


‘’ஆமா அப்பா, பெரியவர் விருப்பப்பட்டா உங்க வீட்டில தங்கிக்கிறோம், மலைப்பகுதியெல்லாம் போகனும்’’ 


கேசவன் வாசனிடம் அவர்களுடன் வரச் சொன்னான். அதற்கு வாசன் ஏதோ சில விசயங்களை எல்லாம் சரி பண்ணனும் அதுக்காக புதன்கிழமை கிளம்பலாம்னு சொல்லி இருக்கார் பெரியவர் என்று சொன்னதும் சரி என கேசவன் சம்மதித்தான். பார்த்தசாரதியும் விஷ்ணுப்பிரியனும் பேசிக் கொண்டிருந்தார்கள். வாசன் அவர்களைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். கமலா வாசனிடம் தனியாய் அழைத்து கேட்டார்.


‘’அம்மா சேலை எதுவும் எடுத்து வைச்சிருக்காங்களா, இருந்தா கொடு தம்பி, பொண்ணுக்குத் தரனும்’’ 


‘’தெரியலை அத்தை, அப்படி எதுவும் கொடுக்கனுமா’’ 


‘’இருந்தா பாரு, இல்லைனா பரவாயில்லை’’ 


வாசன் தேடிப் பார்த்து ஒரு சேலையை கொண்டு வந்து தந்தான்.


சேலையுடன் வெற்றிலை பாக்கு எல்லாம் வைத்து கமலா பூங்கோதையிடம் தந்தார். பூங்கோதை அதனை வாங்கிக் கொண்டு கமலாவின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். பார்த்தசாரதி வாசனிடம் பேச வேண்டும் என அழைத்தார். நிலைமையை புரிந்து கொண்ட வாசன் பார்த்தசாரதியை பூஜையறைக்குள் அழைத்துச் சென்றான். விஷ்ணுப்பிரியனும் உடன் சென்றார். பார்த்தசாரதி பேசினார்.


‘’குழந்தை விசயத்தை வெளியில் சொல்லிட வேண்டாம்னு சொன்னேன், பூசாரி தாயாக நிற்கிறீயேனு சொல்றார், இதோ இப்படி துண்டு காகிதத்தில எழுதி வேற யார்கிட்டயோ கொடுத்து இருக்க’’ 


வாசன் அமைதியாய் எதுவும் பேசாமல் நின்றான். 


‘’இந்த கல்யாணம் எந்த பிரச்சினை இல்லாம நடந்துருச்சு, இனியும் பிரச்சினை இல்லாம இருக்கனும்னு நினைச்சா நீயே பிரச்சினை கொண்டு வந்துருவ போலிருக்கே வாசன்’’ 


வாசன் மீண்டும் அமைதியாகவே இருந்தான். விஷ்ணுப்பிரியன் குறுக்கிட்டார்.


‘’பதில் சொல்லுங்க வாசன்’’ 


வாசன் சற்றும் கூட யோசிக்காமல் விஷ்ணுப்பிரியன் சொன்ன விசயத்தை அப்படியே பார்த்தசாரதியிடம் சொன்னான். அதிர்ச்சி அடைந்தவர் தடுமாறினார்.


‘’விஷ்ணு, என்ன காரியம் பண்ணிட்ட’’ 


‘’பார்த்தா’’ 


‘’இனிமே இதுபற்றி என்கிட்ட எதுவும் பேசாத விஷ்ணு, இப்படி அநியாயமா என்னை ஏமாத்தி இப்படி அவசர கல்யாணம் பண்ண வைச்சிட்ட’’ 


வாசன் உடனடியாக சுதாரித்துக் கொண்டான்.


‘’நீங்க இப்படி பேசிக்கிட்டு இருந்தா பிரச்சினை பெரிசாயிரும், வாங்க வெளியில போவோம்’’ 


வாசன் தீபம் ஏற்றி தீபாராதனை காட்டினான். பார்த்தசாரதியின் உடல் நடுங்கியது. அவரது குரல் உடைந்தது.


‘’என்னை ஏமாத்திட்டல்ல, ஒரு நல்ல குடும்ப உறவு கிடைச்சதுனு விடறேன் ஆனா விஷ்ணு’’


வாசன் பார்த்தசாரதியினை சமாதனப்படுத்தினான். பார்த்தசாரதியின் முகம் வாடியது. கனவு ஒன்று நொறுங்கிப் போவதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் தவித்தார். வாசனது வீட்டிலிருந்து விரைவாக பார்த்தசாரதி வெளியேறினார். அனைவரும் அவரை பின் தொடர்ந்து வெளியேறினார்கள். விடைபெற்றுக் கொண்ட பார்த்தசாரதியால் ஜோதியிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. கேசவனது வீட்டினை அடைந்ததும் ஜோதியிடம் விபரம் சொன்னார். ஜோதி சந்தோசப்பட்டாள். அந்த சந்தோசத்தை சுபாவிடம் தெரிவித்தாள். சுபா விஷ்ணுப்பிரியனைத் தேடினாள். 


‘’அதெல்லாம் இல்லை, உடனே சோதனை செய்ய வேண்டும், கரு உள்ளேதான் இருக்கும் எப்படியும் இரண்டு வாரத்தில தெரிஞ்சிரும், விஷ்ணு விளையாடறார் நேத்துல இருந்தே ஒரு மாதிரிதான் இருந்தார், வரட்டும்...’’ 


அதைக்கேட்டுக்கொண்டே விஷ்ணுப்பிரியன் உள்ளே வந்தார்.


‘’சோதனை பயனளிக்காது, தேவையில்லை, நான் கருவை உருவாக்கவே இல்லை’’ 


சுபாவிற்கு பயங்கர கோபம் வந்தது. மனதை அடக்கிக் கொண்டவள் சுவரை நோக்கிய வண்ணம் நின்றாள். ஜோதி சுபாவினை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். பார்த்தசாரதி அங்கிருந்த மேசையில் தனது தலையை கவிழ்த்துக் கொண்டார். விஷ்ணுப்பிரியன் அடுத்த கட்ட திட்டமாக கேசவனுக்கும் பூங்கோதைக்கும் இந்த விசயம் சொல்வது என வாசன் குறுக்கிடும் முன்னர் அவசரமாக செயல்பட்டார். அவர்கள் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என கேசவனிடம் சொல்ல வேண்டும் என முடிவெடுத்தவர் கேசவனை உடனே சந்தித்தார். முழுவிபரங்களும் சொன்னார்.


‘’எதுக்கு இத்தனை சிரமம்’’ 


‘’முயற்சி பண்ணினது வழி கிடைக்கல, அதனால திருமண விசயத்தை நிறுத்த வேண்டாம்னு சொல்லாம விட்டுட்டேன்’’ கேசவன் சற்று அதிர்ச்சி அடைந்தான், வாசனிடம் பேச வேண்டும் என கிளம்பினான். விஷ்ணுப்பிரியன் தடுத்தார். 


‘’எதுக்கு இப்போ வீண் பிரச்சினை வாசனுக்கும் தெரியும், சொல்லிட்டேன் உங்களுக்கு திருமணம் ஆயிருச்சி புது வாழ்க்கை தொடங்குங்க நீங்களே குழந்தை பெத்துக்கோங்க’’ 


அப்பொழுது பூங்கோதை வந்தாள். விஷ்ணுப்பிரியன் விலகிச் சென்றார். பூங்கோதையிடம் கேசவன் நடந்ததை சொன்னான். கேசவன் மேல் மெதுவாக சாய்ந்தாள் பூங்கோதை.


‘’ம் இருந்துட்டுப் போகட்டும் என்னை உங்களைப் பிடிச்சிருக்கு தானே, உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நாம குழந்தைப் பெத்துக்கிரலாம்’’ 


‘’அப்படின்னா நீ அந்த குழந்தைய சுமக்காம போனதுக்கு வருத்தப்படலையா’’ 


‘’அந்த குழந்தையை சுமக்கனும்னு முழு மனசா இருந்து செஞ்சேன், உங்களை பார்க்கறவரைக்கும், கல்யாணம் கூட வேணாம்னுதான் சொன்னேன் ஆனா கல்யாணம் வரைக்கும் வரவைச்சி இப்ப இவர் இப்படி சொன்னா நாம பிரியனுமா’’ 


கேசவன் பூங்கோதையை கட்டிப்பிடித்துக் கொண்டான். அவர்களுக்காக அலங்கரிக்கப்பட்டு இருந்த அறையினுள் அந்த இனிய பொழுதினிலே நுழைந்தனர். இருவரும் மனம் விட்டு எதிர்கால வாழ்க்கையைப் பற்றி பேசினார்கள். கேசவன் பூங்கோதையின் மேல் உயிரை வைத்தான். பூங்கோதை கேசவன் மேல் தனது உயிரை வைத்தாள். அறையின் கதவு பூட்டிக்கொண்டது. 


அதே வேளையில் வாசன் விஷ்ணுப்பிரியனின் செயல்கள் குறித்தும், மாதவி வரைந்து தந்த படம் குறித்தும் தீவிர யோசனையில் இறங்கினான். கேசவனிடம் சொல்லிவிட வேண்டும் என எண்ணி இருந்தவனுக்கு சோலையரசபுரம் தர்மலிங்கத்திடம் இருந்து வந்த தொலைபேசியால் யாரிடமும் சொல்லாமல் வீட்டினைப் பூட்டிவிட்டு சோலையரசபுரத்திற்கு விரைவாக சென்றான். அங்கு அவனுக்காக சோதிட சாஸ்திரி நம்பெருமாள் காத்துக் கொண்டிருந்தார். 


(தொடரும்)

3 comments:

Chitra said...

கதாபாத்திரங்களின் மன நிலைகளை, காட்சியின் தன்மைகளோடு சொல்லி இருப்பத்து நல்லா இருக்குதுங்க, சார்.

மங்குனி அமைச்சர் said...

நல்லா இருக்கு

Radhakrishnan said...

நன்றி சித்ரா, அமைச்சர்.