Wednesday 9 June 2010

தேடிக்கொண்ட விசயங்கள் - 2

2. இயற்பியலோடு சில வார்த்தைகள்

இயற்பியல் பற்றி நினைத்துப் பார்க்கையில் எனக்குச் சொல்லித் தராத இராமமூர்த்தி ஆசிரியரும், இயற்பியல் சொல்லித் தந்த பாலசுப்பிரமணியன் ஆசிரியரும் நினைவுக்கு வருவார்கள். அறிவியலை தற்போது பல வகைகளாக பிரித்து வைத்துப் பார்த்தாலும் வேதியியல், இயற்பியல், உயிரியல் (விலங்கியல், தாவரவியல்) என இவற்றை அடிப்படையாக கொண்டு எல்லாம் விளங்கிக் கொள்ளப்பட்டன. வேதியியலும் உயிரியியலும் விளங்கிக் கொள்ளாத முடியாத விசயங்களை இந்த இயற்பியல் விளங்கிக் கொள்ள பெரும் வழி வகுத்தது எனலாம். விசை, சக்தி இவை இரண்டும் இயற்பியலை வேதியியலுக்கும் உயிரியியலுக்கும் ஆசானாக அமர்த்திக் கொள்ளச் செய்தது. தற்போது ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு எண்ணற்ற விசயங்கள் தெளிவு நிலைக்கு வந்து கொண்டு இருக்கின்றன.

'ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது' ஆற்றலானது ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுபாடு அடையுமே தவிர அழிந்து போகாது என்பதை அறிந்து கொண்டவர்கள், ஆற்றலின்  மூலம் எது என நிச்சயம் கேட்கமாட்டார்கள். அப்படி ஒருவேளை கேட்பார்களேயானால் ஆற்றலின் மூலமானது ஈர்ப்பு விசை ஆற்றல் என உறுதியாக சொல்ல முடியும். இதை எந்த கண்ணோட்டத்தில், அதாவது அறிவியல் மற்றும் உணர்வுப்பூர்வமாக, நோக்கினாலும் இந்த ஈர்ப்பு விசை ஆற்றல்தான் என்பதை அறுதியிட்டுக் கொள்ளலாம்.

ஈர்ப்பு விசை ஆற்றலுக்கு மூலமாக என்ன இருந்து இருக்க முடியும் என எண்ணிப் பார்த்தால் எதுவுமே இருந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த ஈர்ப்பு விசை ஆற்றலுடன்  இணைந்து இருந்த ஆற்றலானது  வேதிவினை ஆற்றல். அத்துடன் மூன்றாவதாக இருந்த ஆற்றலானது  இலகுவாதல் ஆற்றல். இதனால்தான் இந்த மூன்று ஆற்றல்களையும் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆற்றல் என்கிறோம்.

1. ஈர்ப்புவிசை ஆற்றல்
2. வேதிவினை ஆற்றல்
3. இலகுவாதல் ஆற்றல்

இதன் அடிப்படையில்தான் உலகம் எவ்வாறு தோன்றியிருக்கக் கூடும் என அறிவியலாளர்களால் இயல்பாக விளக்க முடிந்தது.

ஈர்ப்புவிசை ஆற்றலால்   வாயு ஒன்று அருகில் வந்தது, அழுத்தம் கொண்டது, ஈர்ப்பு விசை ஆற்றல், வேதிவினை ஆற்றலை எழுப்பி விட்டது, வேதிவினை ஆற்றல் வெடித்து சிதறியதுடன் இலகுவாதல் ஆற்றல் விழித்துக் கொண்டது. பிரபஞ்சம் இலகுவாகிக் கொண்டே இன்னும் இருக்கிறது.

இயக்கமற்று இருந்த ஈர்ப்பு விசை ஆற்றலால், இயக்க ஆற்றல் ஏற்பட்டு, வேதிவினை ஆற்றலால்  உருவானதுதான் ஒளி ஆற்றல் மற்றும் ஒலி ஆற்றல். இந்த ஒளி ஆற்றலானது, மின்சார ஆற்றலுக்கு  வழி காட்டியது. வேதிவினை ஆற்றலின் கோர வடிவமே நியூக்ளியர் ஆற்றல், இதை கருவினை ஆற்றல் என சொல்வோம்.

4. இயக்க ஆற்றல்
5. ஒளி ஆற்றல்
6. ஒலி ஆற்றல்
7. கருவினை ஆற்றல்
8. மின்சார ஆற்றல்

ஈர்ப்புவிசை ஆற்றலுக்கு  இணையாக காந்த ஆற்றலையும் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இந்த காந்த ஆற்றலானது உருவாக பல வருடங்கள் ஆனது, ஆனால் இந்த காந்த ஆற்றல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இயல்புநிலை வாழ்க்கையில் இந்த ஆற்றலானது  ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மிடம் இருந்துகொண்டு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த வெப்ப ஆற்றல்  ஒன்றே உலகம் உருவாக காரணம் என கருத வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மாசுக்களும் தூசுக்களும் ஒன்றையொன்றை கவர்ந்திழுத்துக்கொண்டன. அப்படி எல்லாம் ஒன்றாக சேர்ந்த பின்னர் வருடங்கள் செல்ல செல்ல இறுக்கம் அதிகரித்து வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

பொதுவாக எதிர்துகள் எதிர்துகளிலிருந்து விலகி ஓடும். நேர்துகள் எதிர்துகளுடன் ஒட்டிக்கொள்ளும். இப்படி இருந்தபோது ஹைட்ரஜனில் கருவில் ஏற்பட்ட மாற்றம் பெரிய கரு வினையாக அமைந்து உள்ளது. இப்படி மாற்றங்கள் உருவானபோது புதிய துகள்கள் இருந்த துகள்களிருந்து எந்த வித மாற்றம் இன்றி உருவாகத் தொடங்கி இருக்கின்றன. அதாவது ஒரு புரோட்டானிலிருந்த்து அதே நிறையுள்ள மற்றொரு புரோட்டான். இப்படி உருவானபோது எந்த ஈர்ப்பும் இல்லாத ஒரு துகளும் உருவாகத் தொடங்கி இருக்கிறது. அப்பொழுது வெளிப்பட ஆரம்பித்த வெப்ப ஆற்றல்  ஒட்டிய அனைத்தையும் பறக்கச் செய்து இருக்கிறது.

இப்படி வெப்ப ஆற்றல்  ஒரு சின்ன தனிமத்திலிருந்து பெரிய தனிமம்வரை உருவாகியதும் இதே வினை தொடர்ந்து நிகழ்ந்து இருக்கிறது. இப்படித்தான் ஒரு சூரியன் உருவாகி இருக்கிறது என்கிறார்கள்.

அப்படி உருவான சூரியன் என்னவாகிறது? சூரியக்கதிர்கள் யாவை எனத் தொடரலாம்.

4 comments:

Jey said...

விரிவாக எழுதினால் குறைந்தது 100 பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயம். தெளிவான முறையில் சுருக்கி விளக்கம் அளித்துள்ளீர்கள். நன்றி

Radhakrishnan said...

மிக்க நன்றி ஜெய். தொடர்ந்து விரிவாக எழுதும் எண்ணம் இருக்கிறது.

கையேடு said...

இங்கு சக்தி என்று Energy ஐ குறிக்கிறீர்கள் இல்லையா. ஆனால் Energy ஐ "ஆற்றல்" என்றே தமிழில் குறிக்கிறார்கள்.

Radhakrishnan said...

மிக்க நன்றி கையேடு. இதோ மாற்றம் செய்துவிடுகிறேன். தமிழ் மொழி மறந்து போவது வேதனைதான்.