Wednesday 9 June 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 16

ஒவ்வொருவராக உள்ளே சென்று உடனே திரும்பினார்கள். ஐந்து பேரையும் பேச்சுப்போட்டியில் பேசக்கூடாது என தடைவிதித்தார் சிவநாதன். அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட இவர்கள் பேசவில்லை. அனைவரிடமும் ஒரே விசயத்தை மட்டுமே சொல்லி இருந்தார். 'தலைப்பு சரியில்லைனு உங்களை பேச அனுமதிக்கலைனு நினைக்க வேணாம், உங்க நோக்கம் சரியில்லை, எப்பவுமே நோக்கம் உயர்ந்ததாக இருக்கனும்' என அவர் சொன்னதாகவே ஐவரும் சொன்னார்கள்.

கதிரேசனுக்கு தனது நோக்கம் எப்படி சரியில்லை என அவர் சொல்லலாம் என மனது துள்ளிக்கொண்டு இருந்தது. வைஷ்ணவிக்கு அவமானமாக இருந்தது. மற்ற மூவரும் கொஞ்சமும் சட்டை செய்யாமல் வெகுவேகமாக எழுதிக்கொண்டிருந்தார்கள். என்ன எனக் கேட்டபோது நாங்கள் பேச இருக்கும் விசயத்தை அவரிடம் காட்டப்போகிறோம் என்றார்கள். கதிரேசனுக்கு நல்ல யோசனை என மனதிற்குப் பட்டது.

கல்லூரியில் விசாரித்தபோது இனிமேல் அவர் மனது மாறமாட்டார் என சொன்னார்கள். எனவே கதிரேசன் அந்த முயற்சியையே கைவிட்டான். மூவருடன் வைஷ்ணவியும் எழுதிக்கொண்டு போனாள். சிவநாதனின் பார்வைக்கு சென்றது. அதைப் படித்துப் பார்த்த அவர் கட்டுரைக்கு உபயோகப்படும் என சொல்லிவிட்டார். இறுதியில் அவர்கள் யாரும் பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என்றே அறிவுறுத்தப்பட்டார்கள்.

நோக்கம் நன்றாக இருக்க வேண்டும், கதிரேசனின் மனது ஓரிடத்தில் இல்லை. சிவநாதனை சந்திக்க அனுமதி வாங்கி அவன் மனதில் இருந்த கேள்வியை கேட்டே விட்டான். அதற்கு அவர் கதிரேசனைப் பார்த்து ''நீ அன்பே சிவம்னு மட்டும் சொல்லி இருந்தா எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனா சமண சமயம்னு எப்பச் சேர்த்தியோ அப்பவே நீ பிரச்சினை பண்றதா முடிவு பண்ணிருக்கே, எதுக்கும் பேச்சுப்போட்டியில கலந்துக்கிறவங்க எப்படி பேசறாங்கனு பார்த்துட்டு அடுத்த வருசம் முயற்சி பண்ணிப்பாரு'' என்றார்.

''சார் அன்பையும் அகிம்சையையும் போதிச்ச சமயம் அது, ஒரு ஈ எறும்புக்குக் கூட தீங்கிழைக்க நினைக்காத சமயம் அது, தமிழ் இலக்கியங்களை வளர்த்த சமயம் அது'' எனத் தொடர்ந்தவனை ''நிறுத்து'' என்றார் கோபத்துடன். கதிரேசன் நிறுத்தினான். ''அந்த காலத்தில வாழ்ந்தவன் மாதிரி பேசற, உனக்கு உண்மையிலே என்ன நடந்ததுனு தெரியுமா, கல்வெட்டு அகழ்வாராய்ச்சி இலக்கியம் எல்லாம் காரணம் காட்டப் போறியா, நீ வெளியே போ'' என சத்தமிட்டார். ''சார் அது இல்லை சார் என் நோக்கம் உயர்ந்தது சார்'' என்றான் கதிரேசன். ''நீ வெளியே போ'' என்றார் மறுபடியும். கதிரேசன் மறுபேச்சு பேசாமல் வெளியே வந்தான். நெற்றியெல்லாம் வியர்த்து இருந்தது.

மதுசூதனன், வைஷ்ணவி என யாரிடமும் பேசாமலே தினங்களை நகர்த்தினான் கதிரேசன். தேர்வும் முடிந்து ஆண்டுவிழாவும் வந்தது. விழா மிகவும் அருமையாக நடந்தது. பேச்சுப் போட்டியில் எட்டு நபர்கள் பேசினார்கள். ஒவ்வொருவரும் மிகவும் அருமையாக பேசினார்கள். அவர்கள் பேசிய விசயத்தின் மையக்கருத்து, தவறென எது இருப்பினும் அதை களைந்துவிட்டு நல்ல விசயங்களை மட்டுமே நிலைநிறுத்துவது என்றே இருந்தது. எதையும் சாடவில்லை, அலுத்துக்கொள்ளவில்லை, சலித்துக் கொள்ளவில்லை.

சிவநாதனின் உரை கதிரேசனை உலுக்கியது. அவரது உரையில் நுனிப்புல் மேய்வது போல விசயத்தை அறிந்து வைத்திருக்கும் நபர்களால் பல பிரச்சினைகள் உண்டாகிறது எனவும் எதையும் நுண்ணிய அறிவால் தெளிந்துணர்ந்த பின்னரே உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை காலம் காலமாக தொடர்ந்து செய்த பின்னரே சாத்தியமாகும் என்றவர் இன்றைய நிலையில் உடனுக்குடன் எல்லாம் செய்தியாவது பிரச்சினையே, அதை மாற்ற ஒரு எழுச்சி வேண்டும் என முடித்தார். ஆண்டு விழா முடிந்த சில தினங்களில் கோடை கால விடுமுறை வந்தது. கதிரேசன் சங்கரன்கோவில் செல்ல வேண்டும் என எண்ணிக்கொண்டே புளியம்பட்டியை அடைந்தான்.

(தொடரும்)

2 comments:

Chitra said...

அவரது உரையில் நுனிப்புல் மேய்வது போல விசயத்தை அறிந்து வைத்திருக்கும் நபர்களால் பல பிரச்சினைகள் உண்டாகிறது எனவும் எதையும் நுண்ணிய அறிவால் தெளிந்துணர்ந்த பின்னரே உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை காலம் காலமாக தொடர்ந்து செய்த பின்னரே சாத்தியமாகும் என்றவர் இன்றைய நிலையில் உடனுக்குடன் எல்லாம் செய்தியாவது பிரச்சினையே, அதை மாற்ற ஒரு எழுச்சி வேண்டும் என முடித்தார்.


....... என்ன மாதிரி விஷயங்கள் உடனே செய்தி ஆகின்றன என்றும் பார்க்க வேண்டியது இருக்கிறதே, சார்... :-)

Radhakrishnan said...

:) அதுவும் சரிதான்.