Tuesday 22 June 2010

அடியார்க்கெல்லாம் அடியார் 18

நீலகண்டனின் இறுதிச் சடங்கில் பலரும் கலந்து கொண்டனர். பரமேஸ்வரனும், சிவநாதனும் கலந்து கொண்டார்கள். கதிரேசனின் அன்னையும், தாத்தாவும் கலந்து கொண்டார்கள். இறுதிச் சடங்கு முடிந்த கணமே அனைவரும் அவரவர் ஊருக்குத் திரும்பினார்கள். மூன்றாம் நாள் காரியம் முடியும் வரை கதிரேசனும் அவனது அம்மாவும், தாத்தாவும் அங்கே தங்க வேண்டியதாகிவிட்டது. பார்வதிக்குத் துணையாக செல்லாயி இருந்தார். மூன்றாம் நாள் காரியம் முடிந்து புளியம்பட்டிக்கு அம்மா, தாத்தாவுடன் திரும்பினான் கதிரேசன்.

புளியம்பட்டியில் கதிரேசனிடம் எதிர்காலம் குறித்துச் சொல்லுமாறு சிலர் வீட்டிற்கு வந்து சென்றார்கள். செல்லாயிக்கு கோபமாக வந்தது. தனது மகன் சாமியார் இல்லை என சொல்லியும் வம்பாக வந்து செல்கிறார்கள் என எண்ணும்போது மனம் மிகவும் வாடியது. சில தினங்களாகவே இவ்வாறு நடக்க கதிரேசனிடம் பேசினார் செல்லாயி.

''ஏன்பா, அந்த பொண்ணு உன்னை கல்யாணம் பண்ண சம்மதிக்குமா?'' என்றார். ''அந்த தாத்தா செத்துப் போனது எனக்கு கஷ்டமா இருக்குமா, அந்த பொண்ணு சம்மதிச்சா என்ன, சம்மதிக்காட்டா என்ன, இப்ப எதுக்கும்மா அந்த பேச்சு'' என்றான் கதிரேசன். ''அதுக்கில்லைப்பா, நமக்கும் அவங்களுக்கும் ஒத்து வருமா?'' என பேச்சை நிறுத்தினார் செல்லாயி. ''வராமலே போகட்டும்மா, இப்போ எதுக்கு அந்த கவலை, பாவம் அவங்களே கவலையில இருக்காங்க, அங்கேயிருந்து இங்கே வந்ததும் ஏன்மா இந்த கவலை'' என்றான் கதிரேசன்.

செல்லாயி எழுந்து கொண்டே ''இருக்கற என் உசிருப் போயிரக்கூடாதேனுதான்ப்பா'' என்ரார். இதைக் கேட்ட கதிரேசன் ''அம்மா, ஏன்மா இப்படி உடைஞ்சி போற, நான் தான் சொல்லிட்டேன்ல, குடும்ப வாழ்க்கையிலே இருப்பேனுட்டு'' என்றான். ''அந்த பொண்ணு கிடைக்காட்டாலும்மா'' என்றார் செல்லாயி. கதிரேசன் அமைதியானான். ''சொல்லுப்பா'' என்றார் செல்லாயி. ''என்னம்மா சொல்ல சொல்ற? அந்த பொண்ணு இல்லாட்டாலும் தான்'' என்றான் கதிரேசன். வேதனையிலும் வேதனை வந்து சேர்ந்துவிடக் கூடாதென விவரமாகத்தான் சொன்னான் கதிரேசன். ஆனாலும் செல்லாயிக்கு நம்பிக்கையில்லை, மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.

விடுமுறை கழிந்து கல்லூரிக்குச் செல்லும் தினம் வந்ததும் தனது அன்னையிடம் தைரியம் சொன்னான் கதிரேசன். ''நீதான்பா என் உலகம்'' என்றார் செல்லாயி. கதிரேசனின் கண்கள் கலங்கியது. ''உன் சந்தோசம்தான்மா என் சந்தோசம், இனிமே என்னோட நடவடிக்கையில கவனமா இருப்பேன்மா, நீ கவலைப்படாதேம்மா, என்னோட நல்லதுக்குத்தானே நீ எல்லாம் செய்வ, ஊர்க்காரங்க என்னை சாமியாராப் பார்த்தாக்கூட நீ சந்தோசப்படும்மா'' என கிளம்பும் முன்னர் ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினான் கதிரேசன். ''ரொம்ப சந்தோசம்பா'' என்றார் செல்லாயி.

கல்லூரித் தொடங்கியது. நீலகண்டனின் வீட்டுப் பக்கம் செல்லும்போதெல்லாம் தன்னை அறியாமல் அங்கேயே சில நிமிடங்கள் நிற்பான் கதிரேசன். கண்களில் கண்ணீர் கொட்டும். ஆதரவில்லாமல் நின்றபோது ஆதரவு தந்தவர், அன்பு உறவுகளைத் தந்தவர். தன்னால் முடியாதபோதும் ஓரிடம் காட்டிச் சென்றவர். நீலகண்டன் தன்னிடம் கேட்ட 'சிவனை, தமிழை மறந்துட்டியோ' எனும் கேள்வி மனதைச் சுட்டுக் கொண்டே இருந்தது.

ஒருநாள் சிவன் கோவிலில் வழிபட்டுக் கொண்டிருந்தான் கதிரேசன். அன்றைய தினம் மாலையில் சிவநாதனும் ஆலயத்திற்கு வந்திருந்தார். கதிரேசன் சிவநாதன் வந்ததை கவனிக்கவில்லை. அதே ஆலயத்தில் வைஷ்ணவி தனது தோழிகளுடன் வந்து இருந்தாள். வழிபட்டு முடித்த மறுகணம் கதிரேசன் பாடினான்.

''மொழியில்லா உலகத்திலே நீயும் மொழியாய் இருந்தாய்
வழியில்லா பாதைதனிலே வழியாய் வந்தாய்
ஆதியும் அந்தமும் இல்லாதவன் நீயென என்றே
சேதியும் வந்ததென்ன சொல்சிவனே.''

இந்த பாடலைக் கேட்டவுடன் சிவநாதன் கதிரேசனை நோக்கி விரைந்தார். ''பாடாதேனு சொன்ன பிறகும் நீ பாடிக்கிட்டேதான் இருக்க'' என்றார் சிவநாதன். கதிரேசன் மெளனமாக நின்றான். ''இனிமே பாடாதே'' என்றார் சிவநாதன். ''சார் என்னைத் தப்பா நினைக்காதீங்க, நான் பாடறப்போ நீங்க கேட்காம இருக்க முடியுமா, இந்த கோவிலுனு இல்லை, ரொம்ப இடத்திலே பாடிக்கிட்டே இருக்கேன்'' என்றான் கதிரேசன். சிவநாதன் கதிரேசனை முறைத்துப் பார்த்தார். ''ம் பாடு'' எனச் சொல்லிவிட்டு சிவனை நோக்கி வணங்கினார். ஆனால் அவர் இன்று எதுவும் பாடவில்லை. வணங்கியவர் கதிரேசனை நோக்கி ''ம் பாடு'' என்றார்.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


இதையெல்லாம் வைஷ்ணவியும் தோழியரும் கவனித்தார்கள். பாடி முடித்த கதிரேசனிடம் ''இந்த பாட்டு எப்படி நல்லா இருக்கு, அதுமாதிரி நல்லா பாட்டு எழுது, அப்புறம் பாடு, அரைகுறையா தெரிஞ்சி வைச்சிக்கிட்டு அதுவும் சொல்சிவனேனு ஏன் பாடுற'' என சொல்லிவிட்டு நகர்ந்தார் சிவநாதன். கதிரேசன் கண்கள் கலங்கியபடி நின்றான்.

வைஷ்ணவியும் தோழியர்களும் கதிரேசனிடம் வந்தார்கள். ''அவர் சொல்றபடி ஏன் அரைகுறையா தெரிஞ்சி வைச்சிட்டுப் பாடுற, நிறைய கத்துக்கிட்டு பாடு'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் கண்கள் கலங்கியபடியே நின்று கொண்டிருந்தான். இரவாகியும் கோவிலிலேயே இருந்தான். கோவில் நடை சாத்தப்போகிறோம் என்றார் குருக்கள். கோவிலை விட்டு வெளியேறினான் கதிரேசன்.

கோவிலின் வாசலில் வைஷ்ணவி நின்று கொண்டிருந்தாள். ''இந்தா கோவில் பிரசாதம், ஏன் அப்படியே உட்கார்ந்துட்ட, உன்னை தொந்தரவு செய்ய வேணாம்னு அங்கே உட்கார்ந்து படிச்சிட்டு இருந்தேன், விடுதிக்கு போகுற நேரம் வேற ஆகுது. என் பிரெண்ட்ஸ்கிட்ட சொல்லி அனுப்பியிருக்கேன். பாட்டு சரியில்லைனு சொல்லிட்டோம்மா, அவர் சொன்னது சரிதான், நீ பேசாம சொல்பெருமாளேனு பாடு'' என்றாள் வைஷ்ணவி. ''பிரசாதம் வாங்கியவன், அதெல்லாம் இல்லை வைஷ்ணவி, எனக்கு அதைப்பத்தியெல்லாம் கவலை இல்லை'' என்றான் கதிரேசன். ''அப்ப சரி'' என வைஷ்ணவி விடைபெற்றுச் சென்றாள். கதிரேசன் 'சொல்பெருமாளே' என சொல்லிப் பார்த்தான். 'சொல்பெருமானே'' பொருத்தமா இருக்குமோ என எண்ணினான்.

(தொடரும்)

No comments: