Wednesday 30 June 2010

காமம் - 6

கண்ணம்மா பற்றி எழுதும்போது இப்படித்தான் எழுதுகிறார் பாரதியார். இந்த பாடல்களில் இருக்கும் காதல் ஒரு சஞ்சலமாகவே பாரதிக்குத் தோணவில்லை. அது ஒரு மாபெரும் இன்பமாகவே அவருக்கு இருந்து இருக்கிறது.

1 காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே -இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே.

2 . நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி - கண்ணம்மா
தன்னையே சசியென்று
சரண மெய்தினேன்

காதல்தனை மையமாக வைத்து வேண்டும்போது மிகவும் அழகாகவே பாடுகிறார்.

பாட்டுக் கலந்திடவே - அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டு தரவேணும்.

இந்த காதல் ஆசை மோகம் எனும் கட்டுக்குள் விழுந்துவிடும் போது பாரதியார் தள்ளாடுகிறார். ஒரு விரக்தியின் நிலையில் இருந்தே மகாசக்திக்கு விண்ணப்பம் வைக்கிறார்.

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்றன்
மூச்சை நிறுத்திவிடு.

இந்த பாடலை கேட்கும்போது மோகம் அத்தனை கொடியதா? என்றே கேள்வி எழுந்துவிடுகிறது. மனைவியின் விருப்பத்திற்கோ, கணவனின் விருப்பத்திற்கோ எதிராக இருவருக்குள் ஏற்படும் கலவி கள்ளத்தனம் என்கிறது சட்டம். மனைவியானவர், கணவன் தன்னை மோசம் செய்துவிட்டார் என வழக்கு போடலாம் என்கிறது அந்த சட்டம். இதோ இப்படிப்பட்ட மோகம் மிகவும் கொடியதுதான். அவரவர் சுய விருப்பத்திற்காக காதல் இங்கே பலி கொடுக்கப்படுவதுதான் உண்மை.

ஒரு பாடலை (பாடல் கீழே தரப்பட்டு உள்ளது) எழுதிய காரணத்திற்காக மட்டுமல்ல, துறவி வேடம் கொண்ட துரோகத்தனத்திற்காக பட்டினத்தார் மேல் எனக்கு கோபம் இருந்தது  உண்டு. புத்தரை  துறவி என கருதுவதில்லை, ஒரு துரோகியாகத்தான் அவர் எனது கண்ணுக்கு தென்பட்டது உண்டு.

பட்டினத்தார் ஒரு தாம்பத்ய உறவை எத்தனை கீழ்த்தரமாக எழுதிவிட்டார் என்றுதான் தோன்றியது. தான் வாழும் வாழ்க்கை முறையை உயர்த்திப் பேசி அடுத்தவர் வாழும் முறையை தாழ்த்திப் பேசும் சராசரி மனிதரை போல்தான் அந்த பாடல் தோன்றியது. இதில் காதல் எங்கே இருக்கிறது. வெறும் காமம் என்றுதான் பார்த்து இருக்கிறார் பட்டினத்தார். அதன் காரணமாக பரிதாபம் மட்டுமே அவர் மீது மிஞ்சுகிறது.

நாப்பிளக்கப் பொய் உரைத்துனவநிதியம் தேடி
நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களை பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.

இதோ பத்திரகிரியார். என்ன விளையாடுகிறாரா? கவிதையின் வரிகளுக்கு வேண்டுமெனில் மிகவும் அட்டகாசமாக இருக்கிறது.

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?

வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம்?

கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல்
பஞ்சா மிர்தம் பருகுவதும் எக்காலம்?

இந்த பாடல் எல்லாம் வந்தவிதத்திற்கான காரணம் காதல் தொலைந்து போனதுதான். காமம்தனை முன்னிறுத்தி வாழ்ந்த மன்னர் கால வழக்கம் இவருக்கு பெரும் எரிச்சலை தந்து இருக்கலாம். ஆக, காமம் அத்தனை கொடியதா?

சூர்ப்பனகை கொண்ட காம வேட்கையை கம்பர் இப்படித்தான் விவரிக்கிறார்.

நீத்தமும் வானமும் குறுக, நெஞ்சிடைக்
கோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள
ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள்
காத்தவன் புகழ் என தேயும் கற்பினாள்

வான்தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம்
போன்றனள் புலர்ந்தனள் புழுங்கும் நெஞ்சினள்
தோன்றல்தன் சுடர் மணித் தோளில் நாட்டங்கள்
ஊன்றினள் பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள்

நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென் அன்றுஎனின் அமுதம் உண்ணினும்
பொன்றுவேன் போக்கு அரிது போன்ம் எனா
சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள்

எவர் மீதும் எப்படி வேண்டுமானாலும் ஆசை வந்து தொலையும். ஆனால் காதல் ஒரு முறையோடு வந்துதான் நிற்கும். காதல் வேறு, ஆசை வேறு. காதல் ஆசையாய் மாறாதவரை பாரதியின் மோகத்தை கொன்றுவிடு வரி அவசியமில்லை. ஆசை காதலாக மாறும்போது அங்கே நின்னை சரணடைந்தேன் என்றுதான் பாடத் தோன்றும்.

எனக்கு நின்னை சரணடைந்தேன் எனும் பாடல் மிகவும் அதிகமாகவே பிடித்து இருக்கிறது.

2 comments:

மதுரை சரவணன் said...

காதல், காமம் ஒப்பிடு அருமை. பாரதி பார்வை சுவை மிக்கது பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

நன்றி சரவணன்