Tuesday 15 June 2010

மேற்குத் தெருவில் ஒரு வீடு

எனது தாத்தா (என் அப்பாவின் அப்பா) மிகவும் தெய்வ பக்தி உடையவராக திகழ்ந்தவராம். எவரேனும் உழைக்க அழைக்கமாட்டார்களா என ஏர் பூட்டி ஊரின் மந்தையில் காத்திருப்பாராம். அதன் காரணமாகவே அவருக்கு ஏட்டுப்பிள்ளை என்றொரு பட்டப்பெயர் உண்டு.

அவ்வாறு மிகவும் கடினமாக உழைத்து செல்வம் பெருக்கியவர். ஊரின் மேற்குத் தெருவில் ஒரு வீடு ஒன்றினை அவர் கட்டி இருந்தார். எவரேனும் ஊருக்குள் வந்து உணவு கேட்டால் 'மேற்குத் தெருவுக்குப் போ' அங்கே உனக்கு அன்னம் அளிப்பார்கள் என ஊரில் உள்ளோர்கள் சொல்வதுண்டாம்.

அது போலவே, எவரேனும் பசி என வந்தால் அவர்களுக்கு மறக்காமல் அன்னமிட வேண்டும் என்பது எனது தாத்தா வைத்திருந்த கொள்கையாம், அதனை வீட்டில் இருப்போர்களிடமும் சொல்லி தவறாமல் கடைபிடிக்க செய்து வருவாராம்.

கார்த்திகை விரதம்தனை எப்போதும் கடைபிடித்து வருவாராம். எனது துரதிருஷ்டம் எனக்கு என் தாத்தாவை பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எங்கள் வீட்டில் கார்த்திகை விரதம் தொடர்ந்து செய்து வந்தார்கள், அதில் நான் கலந்து இருக்கிறேன். அப்போது வேறு எவரேனும் வந்து சாப்பிட்டு செல்வார்கள். இன்று கூட என் தந்தை கார்த்திகை மாதம் வந்தால் திருப்பரங்குன்றம் செல்லாமல் வீடு போகமாட்டார்.

இப்படி வாழ்ந்து வந்த தாத்தா ஒருமுறை கார்த்திகை விரதம் அன்று விரதம் விட தயாராக இருந்திருக்கிறார். அப்போது ஒருவர் ஊரின் பாதையில் 'படித்தவர்கள் முட்டாள், படிக்காதவர்கள் முட்டாள்' என சொல்லிக்கொண்டே 'எனக்கு ஒரு இலை மேற்குத் தெரு வீட்டில் போடப்பட்டிருக்கிறது' என வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

இவரைப் பார்த்ததும் 'வாங்க, சாப்பிடுங்க, ஒரு இலை போட்டிருக்கேன்' என என் தாத்தா அவரை அழைத்து யார் எவர் என எந்த கேள்வியும் கேட்காமல் அமரச் செய்து சாப்பிட சொல்லி இருக்கிறார். பொதுவாக கிராமத்தில் வீட்டின் வெளியில் தான் கை கழுவுவதற்கு பாத்திரம் வைத்திருப்பார்கள். சாப்பிட்டு முடித்த அவர் நன்றி சொல்லிவிட்டு வெளியில் கை கழுவ வந்திருக்கிறார். வெளியில் சென்றவர் அப்படியே சென்றுவிட்டார்.

இறைவன் தான் வந்திருக்கிறார் என என் தாத்தாவுக்கு தெரிந்திருக்கிறது, என் தந்தையும் அதை அவ்வாறே நம்புகிறார். இதை என் தந்தை என்னிடம் சொல்லும்போது எனக்குள் எத்தனையோ கேள்விகள். கால சூழல் என்னை அவ்வாறு கேள்வி கேட்க தூண்டுகிறது. என் எண்ணப்படியே அது இறைவனாக இருந்திடாவிட்டாலும் ஒரு மனிதர் வயிறார உண்டு சென்றிருக்கிறார் என நினைக்கும்போது என் கண்கள் கலங்குகின்றன. பிறருக்கு பசியெடுக்கும்போது அவர்களுக்கு உணவு அளிக்கும் எனது தாத்தா எனக்கு இறை உணர்வை எனது கலங்கிய கண்களில் விதைத்துதான் செல்கிறார்.

மேலும் ஒரு நிகழ்வை மேற்குத் தெரு வீட்டில் நடந்ததாக நினைவு கூர்கிறார் என் தந்தை. கிராமத்தில் பேய் விரட்டுவதற்கு 'உடுக்கு' அடிப்பார்கள். இந்த பேய் எல்லாம் உண்மைதானா என்பதெல்லாம் இங்கே கொஞ்சம் மறக்கப்பட வேண்டிய கேள்வி. ஏனெனில் நான் பேய் என்பதையெல்லாம் கொஞ்சம் கூட நம்புவதில்லை. வீட்டில் ஒருவருக்கு சுகமில்லாமல் போக அவருக்கு பேய் பிடித்திருக்கிறது என உடுக்கு அடிக்க வருகிறார் ஊரில் உள்ள ஒரு சாமி. என் தந்தை சாமி இருக்கும் வீடு, உடுக்கு அடிக்கக் கூடாது என தடுக்கிறார். ஆனால் வந்தவரோ அதையும் மீறி உடுக்கு அடிக்க உட்காருகிறார். என் தந்தையும் கண்கள் மூடி அமர்கிறார். உடுக்கு அடிக்க முயன்றவர் அடிக்க முடியாமல் திணறுகிறார். எனது தந்தையின் கைகள் நரம்புகள் முறுக்கேறி கொண்டதாகவும் தன்னில் ஒரு மாற்றம் நிகழ்ந்ததாகவும் கூறுகிறார்.

முயற்சித்துப் பார்த்த அந்த உடுக்கு அடிப்பவர் என் தந்தையை வணங்கிவிட்டு வீட்டில் சாமி இருக்கிறது என சொல்லிவிட்டு செல்கிறார். அந்த வீட்டை விட்டு தன் உயிரைக் கூட காக்க வேண்டும் எனும் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் என் தாய் கடைசி வரை அந்த வீட்டிலேயே இருந்து மரித்துப் போன விதம் தனை நினைக்கும் போது இறை உணர்வு கலக்கமடையச் செய்கிறது.

இப்பொழுது நான் எப்போதாவதுதான் அந்த மேற்குத் தெரு வீட்டிற்குச் செல்கிறேன். அன்னமிட என் அன்னை கூட இல்லாததை இப்பொழுது நினைக்கும்போது கண்களில் கண்ணீர் கொட்டுகிறது, இறை உணர்வை தொலைத்துத்தான் விட்டேன்.

5 comments:

Chitra said...

கண்களை கலங்க வைத்து விட்டீர்கள்.

sathishsangkavi.blogspot.com said...

அருமையான தாத்தா, அருமையான பகிர்வு..

Paleo God said...

நெகிழ்ச்சி அடைய வைத்துவிட்டீர்கள்.

இங்கே சென்றால் பசியாற உணவு கிடைக்கும் என்பது எவ்வளவு பெரிய மனித நேயம்!

//இப்பொழுது நான் எப்போதாவதுதான் அந்த மேற்குத் தெரு வீட்டிற்குச் செல்கிறேன். அன்னமிட என் அன்னை கூட இல்லாததை இப்பொழுது நினைக்கும்போது கண்களில் கண்ணீர் கொட்டுகிறது, //

வெற்றிடத்தில் மனம் பேச்சற்றுப்போகிறது! :(

vasu balaji said...

நெஞ்சை நிறைத்துக் கரைக்கும் அனுபவம். சிறப்பான வெளிப்பாடு.

Radhakrishnan said...

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.