Thursday 17 June 2010

இறைவன் இருக்கிறாரா? இது தேவையற்ற கேள்வி

இது ஒரு நண்பரின் ஆதங்கம்

கோவிலில் கூட்ட நெருச்சலில் மக்கள் பலியாகுகிறார்கள்.

தீ விபத்தில் சாகிறார்கள்.

சுனாமியில் தேவாலயத்தின் முன்னர் பலர் செத்து மடிகிறார்கள்.

மசூதிகளில் வெடிகுண்டு வெடிப்பில் பலர் உடல் சிதறி சாகிறார்கள்.

இவை எல்லாம் ஏன் நடக்குது, கடவுளுக்கு கண் இல்லையா? உணர்ச்சிகள் இல்லையா?

எனது விளக்கம்:

கடவுள் எங்குமே இல்லை என்றாலும் இதே நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும் என்பதை ஏன் எவரும் புரிந்து கொள்வதில்லை.

மனிதர்களின் விருப்பத்திற்கேற்ப அவரவர் துன்பமோ இன்பமோ அடைகிறார்கள் என்பதுதான் உலகநியதி.

கோவிலோ, மசூதியோ, தேவலாயமோ அங்கு கொடிய நிகழ்வுகள் நிகழ்வதால் இறைவன் இல்லை என்றாகிவிடுமா? பாவம் இறைவன், எதற்கெல்லாம் பழி சுமக்க வேண்டியிருக்கிறது.

இறைவன் எங்குமே இல்லை. இப்பொழுது மனிதர்கள் என்ன செய்வார்களாம்?

எது பாவம், எது பாவமில்லாதது என்பதற்கான வரையறை எதுவும் உள்ளதா?

கடவுள் இல்லவே இல்லை என்பதில் கூட கடவுள் சுகமாகத்தான் இருக்கிறார்.

மற்றொரு நண்பரின் ஆதங்கம்:

மற்றவர்களை ஏமாற்றுவது, நம்பிக்கை துரோகம் செய்வது, மற்றவர்களுக்கு கேடு விளைவிக்கும் வண்ணம் பொய்யுரைப்பது, என்பது எல்லாமே பாவது தான்... அவர்கள் அவர்கள் செய்த பாவத்துக்கு ஏற்ப தண்டனை வழங்கப்படும்... அது போன ஜென்மத்தில் செய்திருந்தாலும் சரி அதற்கான தண்டனை வழங்கப்படுகிறது... இதில் ஏதும் சந்தேகம் உண்டா??

எனது விளக்கம்: 

அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. இதெல்லாம் மனிதர்களை பயமுறுத்த சொல்லப்பட்டவை.

இவர்களைப் போன்றவர்களுக்கு தண்டனை நிச்சயம் வழங்கப்படும் எனில் எதற்கு சட்டம் எல்லாம்? அதுவும் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபட்ட சட்டம் என.

மனிதர்களின் வாழ்க்கைமுறையில் எதுவுமே பாவமில்லை என்கிற கோட்பாடும் உண்டு.

இந்த ஜென்மத்து விசயங்களே ஞாபகத்துக்கு இல்லை, இதில் சென்ற ஜென்மம் வேறா?

தண்டனை என்பது தவறு என வெளியில் அறியப்பட்டால்தான். அதுவும் தண்டனை பெறாமலே தப்பிக்கவும் இவ்வுலகில் மானிடர் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

அதே நண்பரின் ஆதங்கம்:

இந்த மனிதப்பிறவி என்பது இந்த ஒரு ஜன்மத்துடன் முடிவடைவது கிடையாது... நாம் போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்கள் நமக்கு அடுத்த ஜென்மங்களில் கணக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது...

இந்த உடலுக்கு மட்டுமே மரணம்.. இந்த ஆத்மாவுக்கு கிடையாது... உடலானது குழந்தை பருவத்திலிருந்து, வயோதிகப்பருவத்துக்கு சென்று பின் மரணமடைந்த பின் நம் ஆத்மா வேறொரு உடலுக்கு நம் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப செல்கிறது.. அது மனித உடலாகத் தான் இருக்க வேண்டும் என்பதும் இல்லை.. அதனால் சிறு குழந்தைகளாக இருந்தாலும் அவர்கள் போன பிறவியில் செய்த பாவத்தை அனுபவித்தே ஆக வேண்டிய கட்டாயம்... இது கொஞ்சம் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் இதுவே நிதர்சன உண்மை 

சாதாரண மனிதர்கள் சொன்னால் அதை நம்பும் நாம் கடவுளே சொல்லும் விஷயத்தை நம்பாததில் இருந்தே இந்த கலி எவ்வளவு முத்தி விட்டது என்று தெரிகிறது.

என்னை பொறுத்த வரை கடவுள் இருக்கிறார்.  பிரகலாதன் சொன்னதைப் போல் தூணிலும் இருக்கறார், துரும்பிலும் இருக்கிறார். இதை நீங்களே நிச்சயம் உணருவீர்கள் விரைவில். அவர் நிச்சயம் அனைவரையும் காப்பார். வேண்டிய நேரத்தில் தண்டனைகளும் வழங்கப்படும். என் கருத்துக்களில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையும் உள்ளது.

எனது விளக்கம்:

இதுபோன்ற வாசகங்கள் மனிதர்களின் சிந்திக்கும் தன்மையை சிதறடித்துவிடுகின்றன.

ஒவ்வொரு விசயத்தையும் அருகில் இருந்து பார்த்தது போல் எழுதப்படும்போது அதனை எளிதாக நம்பிவிடக்கூடிய மனநிலையில்தான் மனிதர்களில் பலர் இருக்கிறார்கள். உண்மையிலேயே என்ன நடக்கிறது என உங்களுக்கும் தெரியாது (உங்களுக்குத் தெரியும் என சொன்னாலும் நான் நம்பப் போவதில்லை, நம்பிக்கைகளை நான் அத்தனை எளிதாக நம்புவதில்லை) எனக்கும் தெரியாது.

நீங்கள் எழுதியதை எல்லாம் மறுத்துத்தான் ஆகவேண்டும் என்கிற எண்ணமெல்லாம் எனக்கு எதுவுமில்லை. இப்படியெல்லாம் இல்லை என நீங்கள் எழுதியதை சிந்தித்தால் கூட ஒரு பதில் இருக்கத்தான் செய்யும்.

எனக்கு மேலே சொன்னது நம்பிக்கை என்று இல்லை. அதுதான் நான் அறிந்த தத்துவம். எனது அறிவுக்கு உட்பட்ட மொழி.

கடவுள் தன்னைப் பற்றி ஒருபோதும் விளம்பரம் செய்ய சொன்னதில்லை. அவர் தம்மை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மன்றாடுவதும் இல்லை.

கடவுளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவரை பற்றி கடவுள் கவலை கொள்வதும் இல்லை.

எல்லாம் இந்த மனிதர்களின் செயல்பாடு.

கடவுள் இதுவரை எதுவுமே சொன்னதில்லை. எல்லாம் மனிதர்கள் கடவுள் சொன்னதாய் சொன்னது.

கலி முத்திவிட்டதா? அறிவியல் வளர்ச்சி அடைந்துவிட்டதா?

உண்மையான கடவுள் என சொல்லும்போது பொய்யான கடவுளும் இருக்கிறதா என சிலர் எண்ணக்கூடும்.

பிறருக்கு பிரயோசனப்படாமல் போகக்கூடும், ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருப்பார்கள் என நினைத்திருந்தால் இன்று பைபிளும் இல்லை, திருக்குரானும் இல்லை, பகவத் கீதையும் இல்லை.

கடவுளை நான் உணர வேண்டுமா? எதற்கு?

அடிப்படை நம்பிக்கையா? அப்படியெனில் அது என்னது?

அவர் காப்பாற்றவிட்டால் அவர் இல்லை என்றாகிவிடுமா? ஏனிப்படி கடவுளை கலங்கப்படுத்துகிறீர்கள்.

உலகில் எத்தனை கோடி மனிதர்கள், எத்தனை கோடி உயிரினங்கள் தெரியுமா?

அசைக்கமுடியாத நம்பிக்கை இருப்பதால் மட்டுமே ஒரு விசயம் உண்மையாகி விடமுடியாது.

இன்னொரு நண்பர்:

உலகில் நம்மை மீறிய ஒரு சக்தி இருப்பதாக ஒத்துக்கொள்கிறீர்களா? இல்லையா?

எனது  விளக்கம் 


நமக்கு உட்பட்ட சக்திதான் இவ்வுலகில் இருக்கிறது. திறமையுடையவர்கள் சக்திகளை தமது ஆளுகைக்குட்படுத்திக் கொள்கிறார்கள். திறமையில்லாதவர்கள் நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு என ஆகாயம் பார்த்து சொல்கிறார்கள்.

அதே நண்பர்:


நமக்குட்பட்ட சக்தி தான் இங்கே இருக்கின்றது. தங்களின் அறிவியல் கணக்கீட்டின்படி மனித இனம் தோன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ஏன் மனிதனால் கர்ப்ப காலத்தை குறைவாக்க முடியவில்லை. குறைந்தது 8 முதல் 9 மாதங்கள் ஏன் தேவைப்படுகின்றது?. 10 நாள் அல்லது 15 நாளில் ஒரு பரிபூரணத்தன்மையுடைய குழந்தையை உருவாக்க முடியுமா? இது நமது சக்திகுட்பட்டது தானே. விஞ்ஞானிகள் நினைத்தால் முடிக்கலாம் என்ற பதிலே வரும். அப்போ, அந்த விஞ்ஞானியின் அறிவு எப்படி விசாலமடைந்து இத்தகைய கண்டுபிடிப்புக்களைச்செய்கின்றது.

எனது  விளக்கம் 


எங்களை என்ன, வித்தைகாட்டும் மனிதர்கள் என நினைத்துவிட்டீர்களா?

அதைச் செய்யுங்க, இதைச் செய்யுங்க என்கிறீர்கள்.

இருக்கும் மக்கள் தொகை போதாதா? என்ன ஒரு வில்லங்கமான சிந்தனை.

நமது ஆளுமைக்குட்பட்டு இருக்கும் சக்தியை தங்களது திறமைக்குட்படுத்தி சாதிக்கவல்லகூடிய ஆற்றல் மனிதர்களுக்கு உண்டு. அதில் மாற்றம் ஏதுமில்லை.

எல்லாவற்றையும் இறைவன் படைத்தார் என, படைப்புகள் இல்லாத‌ கிரகங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது, இறைவனை கொச்சைப்படுத்த வேண்டாம்.

தேவை ஏற்படும்போது அதற்கான தேடல்கள் மனிதர்களிடம் இருந்து கொண்டேதான் இருக்கும். நமக்கு சக்திக்குட்பட்ட விசயங்களை வசியப்ப‌டுத்தும் திறமை வேண்டும் என்பதுதான் எனது கோட்பாடு. அந்த திறமை இல்லை என்பதற்காக நமக்கு மீறிய சக்தி என்பதில் உடன்பாடில்லை.


இதோ மற்றொரு நண்பர்


என்னைப்பொறுத்தவரை எல்லோருக்கும் கடவுள் பயம் காட்டாயம் இருக்க வேண்டும். யாம் அறியா சக்தி இருக்கிறது எனும் நம்பிக்கையே இன்று ம்னிதர்கள் இன்னும் முழுமைப்படுத்தப்பட்ட காட்டுமிராண்டிகளாகாது சற்று மனித நேயத்தோடு வாழ வழி செய்கிறது.

நம்மை மீறி எதுவ்மே இல்லை என எண்னுவோமானால் யாரும் யாருக்க்கும் பயப்படாது கட்டுபடாது வாழ வழி செய்வோம். அங்கே அக்கிரமமும் அநீதியும் மிகுதியாகும். கொள்ளைகளும் கொலைகளும் அதிகரிக்கும். இதோ கடவுள் இல்லை என சொல்ல்லிசொல்லியே ஒருத்தரையொருத்தர் விரோதிகளாக பாவித்து இன்னும் இன்னும் உலகத்தை இரத்தகட்டுக்குள்ளே கொண்டு செல்வோமென்பதே நிஜம்.

தம்மை மீறிய் சக்தி இருக்கும் எனும்நம்பிககை எல்லோருக்கும் வேண்டும்.தாம் செய்யும் தப்புக்கு தண்டனை கிடைக்கும் எனும் பயம் இருக்கணும். கடவுள் இல்லை என்போமானால் நாம் யாருக்கும் பயப்படோம்.. .

எனது விளக்கம்.

கடவுள் பயம் அவசியமற்றது.

ஒழுக்கம் என்பதன் அவசியம் ஒவ்வொருவரும் தெரிந்து இருந்தால் அது போதுமானது.

தவறு செய்தால் தண்டனை எனும் நம்பிக்கை ஒருவரை தவறு செய்வதில் இருந்து ஒன்றும் நிறுத்திவிடாது.

தவறு செய்யக்கூடாது எனும் தனிமனித கட்டுப்பாடு ஒன்றுதான் தவறுதனிலிருந்து எவரையும் காப்பாற்றும்.

மனித நேயத்தோடு வாழ்வதற்கு கடவுள் அவசியம் இல்லை. மனிதர்களின் நல்லெண்ணம் போதுமானது.

தனிமனித ஒழுக்கம் பயத்தால் வரக்கூடாது.

இறைவனே இல்லை என சொல்வோரிலும் நல்லவர் உண்டு; இறைவன் உண்டு என சொல்வோரில் தீயவரும் உண்டு.

இதற்காகத்தான் சொல்கிறேன் இறைவன் அவசியமில்லை. இறைவன் பற்றிய பயம் அவசியமில்லை.

இறைவன் பற்றிய பயம் இருப்பின் நாட்டில் சட்டங்கள் எதற்கு? வீட்டை பூட்டி வைப்பதற்கு எதற்கு?

இப்படித்தான் தனிமனித ஒழுக்கத்தை கற்பிக்காமல் இறைவனை முன்னிறுத்தி செய்ததால் இறைவன் மீதான குற்றச்சாட்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை மறுப்பதற்கில்லை.

ஆனால் இறைவன் குற்றமற்றவர்.

************************************************************************************

இப்படி இறைவன் பற்றிய வாதங்களும் பிரதிவாதங்களும் ஒரு முடிவில்லாதவைகளே. இறைவன் பற்றி அறிந்தவர் இறைவன் பற்றி பேசமாட்டார். இறைவன் விளம்பரமில்லாதவர். இறைவன் விளக்கம் அற்றவர். இறைவனை மறுத்து பேசுபவர்கள் இறைவனை பற்றி பேசுபவர்கள் எல்லாம் விளம்பர பிரியர்கள் தான்.

7 comments:

வால்பையன் said...

எப்படியோ கல்லா கட்டுனா சரி!

KATHIR = RAY said...

உண்டென்றால் உண்டு
இல்லையென்றால் இல்லை

கடவுள்

கோவி.கண்ணன் said...

பதிவில் நாத்திக வாசம் தூக்கலாக இருக்கு !
:)

ரவி said...

கடவுள் செத்து ரொம்ப நாளாச்சு. ம் !

Radhakrishnan said...

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

smart said...

இந்த பதிவில் பல இடத்தில் விவேகானந்தரின் டச் இருக்கிறது.
//கடவுள் தன்னைப் பற்றி ஒருபோதும் விளம்பரம் செய்ய சொன்னதில்லை. அவர் தம்மை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மன்றாடுவதும் இல்லை. //
இதற்காக கேட்கிறேன், கர்த்தரால் நான் நன்மை அடைந்திருக்கிறேன் அதனால் யான் பெற்ற இன்பத்தை அனைவருக்கும் பகிர்ந்து தர விளம்பரம் செய்யலாம் அல்லவா?

Radhakrishnan said...

நன்றி ஸ்மார்ட். அது தங்களின் விருப்பம். ஆனால் தனிப்பட்ட மனிதரின், ஒட்டுமொத்த மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கெல்லாம் இறைவன் செவிசாய்ப்பதில்லை.